படைப்புகள்

நிலாவின் எழுத்தில் அமைந்த ஈழப் படைப்புகள்

ஈழமதை மீட்டெடுப்போம்

வித்துகளை விதைத்துவிட்ட
விடையறியா விடைத்திங்களில்
முத்துகளை முடிந்து வைத்து
மூச்சடைக்க காத்திருக்கோம்..

பிஞ்சுத் தளிரும் முது மரமும்
கன்றுடன் பசுவும் காக்கா குருவிகளும்
மொத்தமாய் மண்ணில் புதைத்துவி்ட்ட
இத்திங்களில் நெருப்பாய் கொதிக்கின்றோம் ..

தமிழீழ மண்ணாண்ட பண்பட்ட மாமன்னன்
பின்சென்ற குழந்தைகளும் வீரப் புலியாகி
கடைசிவரை களம்கண்டு கருகித்தான் போனார்கள்-இதில்
காணாமல் போனோரும் மீளா உயிர்களன்றோ..

தமிழீழம் போனதால் தலையும் தான் போனதுவோ
நிலையற்ற மாந்தர்களால் முக்காடு போட்டுக்கொண்டு
வழிநடத்த யாருமின்றி வழித்தடங்கள் வழுக்கிவிட
குப்புற விழுந்து குப்பைக்குள் வாழ்கின்றோம்..

இன அழிவு ஒரு பக்கம் மொழியழிவு மறுபக்கம்
மாந்தவியல் காத்துநின்ற பண்பாடும் கலங்கிநிற்க
வேலியே பயிரைமேய வினைகொண்டு நிற்றிடவே
ஒட்டு மொத்த வலுத்திறட்டி தெருவோரம் நடக்கின்றோம்….

பாடுபட்டு உழைந்த இனம் பாதியிலே நிற்கிறது
கேடுகெட்ட எண்ணங்களில் சிக்கிச் சிதைகிறது
ஆலமரமொன்று அடியோடு நழுவியதால்
ஆளும் திறனற்று ஏதிலியாய் போனோமே …

மாண்டு போகக் கூடாதென
ஆளுக்கொரு பக்கமாய்
இழுத்திழுத்துப் பிடிக்கின்றோம்
கையறு நிலையிலும் – எம்மால்
இழுத்தணைக்க முடியவில்லை ..

உயிரிருக்கு உடலிருக்கு
உங்களை நினைக்கும் மனமிருக்கு
உச்சம் வரை முயற்சி செய்வோம்
ஈழமதை மீட்டெடுப்போம் .. !!!

ஈழம் மெல்ல மலரட்டும்

வன்னி மண்ணின் வற்றாத கண்ணீர்
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஓட
நந்திகடலலை கதறி அழுத ஒலி
மூவாயிரம் ஆண்டுக்கு எதிரொலிக்கும் பாரீர் ..

கொட்டிய குண்டில் அள்ளியே எடுத்தோம்
எத்தனை ஆயிரம் சதைத்துண்டு அறியோம்
உண்டு களித்து உவகையில் மிதந்த
கொலைவெறி கூட்டத்தில் எத்தனை நாடுகளடா…

ஐயகோ முறையோ ..
அருந்தமிழ் வாழ்ந்த மண்ணிற்கிது அறமோ
என்னடா கேட்டோம் .. அட நேயமற்ற கொடுங்கோலா..
உன்னிடம் அப்படி என்னதான் கேட்டோம்..

உரிய மண்ணில் விடுதலையாய் இருக்க நீ
விட்டுவிடு என்று தானே இத்தனை உயிரை
மொத்தமாய் கொடுத்து உன்னிடம் நின்றோம் சண்டைக்கு ..

என்னடா தப்பு ? இதில் என்னடா தப்பு ..

கொட்டிய குண்டில் அழிந்தது ஒரு பாதி
பண்பாட்டுச் சிதறலில் அழியுது மறுபாதி
கைகளை இழந்து வாயைச் சுமப்பவராய்
வீரப்பேச்சுகளை நாக்கொண்டு தொடுக்கிறோமே ..

எத்தனை ஆண்டுப் போராட்டம்
ஆடிப்போனது நம் தமிழரினம்
ஏனென்றா கேட்கிறாய் .. அட
காட்டிக்கொடுப்பதும் நாமாகிப் போனோமே ..

நீறுபூத்த நெருப்பாய்
நொருங்கிப் போய் நிற்குதே.
நடுத்தெருவில் எம்மினம்
நடுங்கிப் போய்த் திக்குதே ..

வானத்து நல்லோரே இடித்து முழக்குங்கள்
கொட்டுகின்ற மழையினில் குருதி வழியட்டும்
ஒட்டு மொத்த தமிழினமும் தூய்மைப் படட்டும்
அதன்பின்னால் ஈழம் மெல்ல மலரட்டும் ..!

 

நிலா துளிவானொலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button