
துயர்மீளாத்தமிழீழமக்களே !துவளாத எமதீழமக்களே!
துன்பமான பொழுதுகளிலும் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கும் இரக்கமற்ற எம்மினமக்களே !
எல்லாருக்குமாக உயிரைக்கொடைகொடுத்த எம்மறவர்களின் குரலாய்மாறி உம்மிடம் பேசுகிறோம்.
எவ்விடர் எம்மைத்தாக்கவரினும் அசையாநெஞ்சுரங்கொண்டு தடுதாட்கொண்ட மறத்தமிழினம் எம்மினம் . எமக்கெதுவுமே முற்றுப்புள்ளியன்று . ஒவ்வோரசைவும் எமக்குத்தொடக்கப்புள்ளிதான் . ஈழமதையிழந்துவிட நாமென்ன அழிந்தாபோனோம் ? எமக்கான விடுதலையை இன்னொருவன்தரும்வரை காத்துநிற்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களா நாங்கள் ?
கொஞ்சம் பின்நோக்கிப்பார்ப்போம் வாருங்கள் . எமதீழத்தில் எத்தனையெத்தனை துயரங்கள் குடிபுகுந்தன . எத்தனையெத்தனை கொடுமைகளரங்கேறின . இத்தனையையும் எதிர்கொண்டு தாங்கிப்பிடித்து தூக்கிநிறுத்தியவர்கள் யார் ? வேற்றினத்தவனா? அன்றேல் வேற்றுநாட்டுக்காரனா? நாம்தானே . அது நாம்தானே . எவனிடம் கேட்கப்போகிறோம் எம்மண்ணைக்கொடு என்று , எவனிடம் கேட்கப்போகின்றோம் எம்மினவழிவிற்கான சொங்கோலைத்தாவென்று . எவனாவது கொடுக்கத்தான் முடியுமா எம்மீழமண்ணை . அது எம்மண். எம்மினத் தலைவன் அம்மண்ணில் தன்னொடுசேர்த்து மூன்றுதலைமுறையை மண்ணில் விதைத்திருக்கிறான் . எவ்வரலாருரைக்கும் இப்படிப்பட்ட பெருமறத்தை. கொஞ்சநஞ்சமா மண்ணின் விடிவிற்காய் கொடையாகிப்போனவுயிர்கள் . ஏன் ? எதற்காக இத்தனை உயிரும் முழுமையாய்ப்புதைந்தது ? “தமிழீழத்தைத்தமிழன் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டான்” என்ற அசைக்கமுடியா நம்பிக்கையின் விதைகளல்லவா இவர்கள் . எளிய அன்றாட வாழ்வியலைக்கூட போராடியல்லவா வாழ்கின்றோம் ? அப்படியானால் போராடத்தான் வேண்டும் . வடிவம் ஒரேமாதிரியே இருக்க வேண்டுமென்ற தேவையில்லை . அதன்வடிவம் எப்படிவேண்டுமானாலும்மாறலாம் . ஆனால் ,போராடியே ஆகவேண்டும் . ஏனென்றால் தமிழீழக்கனவோடு உயிரீகஞ்செய்த எம்மறவர்களின் பெருவிருப்பிற்காக . அவர்கள் எம்மைநம்பி விட்டுவிட்டுப்போன தமிழீழவிடுதலைக்காற்றை உயிர்ப்பித்துக்கொடுத்தால் மட்டுமே அவ்வுயிர்கள் ஈடேற்றமடையும் . அதுவரை கல்லறைகளில் அவர்களும் விழித்தபடியே படுத்திடுப்பார்கள் .
விணாய்ப்போன விடியாமக்கள் எல்லாயினத்திலுமுளர் . எம்மினத்திலும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை . அவர்களை விட்டுத்தள்ளி மற்றோரெல்லாம் ஒன்றிணைந்து போராடுவோம் . உயிரெடுத்து உயிர்கொடுத்துப்போராடுவது மட்டுமா போராட்டம் ? இல்லை இல்லை இளந்தளிர்கள் உளவுறுதியோடு பல்கலைகளையுங்கற்று அறிவின் பெருவலுக்கொண்டு போராடவதும் போராட்டந்தான் . வளர்த்தெடுப்போம் மிகவும் பாதுகாப்பாக வருங்கால எம்பிஞ்சுச்செடிகளை . பயன்பெறுவோம் விரைவில் .
நன்றி .
வாழ்க தமிழ்.



