ஈழம்சொல்விளக்கம்பிறமொழி/தமிழ்

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” : தூயதமிழில் இச்சொல்லியம் எவ்வாறமையும் எனக்காண்க!

மாற்றியமைக்கப்படவேண்டிய செற்றொடரொன்று மக்கள் பார்வைக்கு.

பிழையற மொழிபகர்தல் அம்மொழிக்கானோரின் அடிப்படையுரிமைகளிலொன்று என்பதற்கிணங்கி  இப்பதிவை இங்கிணைக்கிறோம் .  

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

முதலில் இச்சொற்குறித்து நாம்காண்போம்.

தமிழருக்கு தமிழீழமே தணியாத விடாய்/வேட்கை (தாகம்) என்ற பொருளேற்ற முழக்கங்கள் முதன்முதலில் ஒலித்த இடங்கள்:

  • “தமிழீழம் தமிழர் தாகம்” -பத்தொன்பதாம்நாள் ஒன்பதாம் திங்கள் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் ‘உணர்ச்சிப்பாவலர்’ என அழைக்கப்படும் காசி ஆனந்தன் அவர்களால் கூறப்பட்டது .
  • “புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்” எழுபதாம் ஆண்டுகளின் இறுதியில் அம்பகாமம் பண்ணைப்பயிற்சி இடைத்தங்குமிடத்தில் தமிழீழத்தேயத்தலைவரால் கூறப்பட்டது .
  • “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” – ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாம் ஆண்டின் இறுதியில் வன்னியில் துண்டுகொடுத்த அரசியல்துறைப்போராளியின் கடிதத்தின் இறுதிச்சொல்லியமாக இருந்ததென்று அறியக்கூடியதாகவுள்ளது .

முதன்மையான எடுத்துக்காட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ளேன் . அதையும் தாண்டி இச்சொல் ஒவ்வோர் ஈழத்தமிழனின் உதடுகளும் அழுத்திச்சொன்ன சொல்லியமென்று அனைவரும் அறிவீர் .

இதில் என்ன மாற்றம் செய்யவேண்டும்?! ஏன் மாற்றவேண்டும்?!

புலிகளின் என்ற பெயர் இருப்பதால் இவற்றைப்பயன்படுத்த எக்காலத்திலும் தடையேற்படலாம் என்பதை இக்காலத்தில் நீங்கள் உணர்ந்திருக்கலாம் . புலிகள் என்பதை மாமறவர் என்று மாற்றிவிடலாம் . புலிகளாக இருந்தோர் எல்லாரும் மறச்சாவை ஏற்றோர். இவர்களுக்கான ஏக்கமே தமிழீழத்தாயகம் எனும் அடிப்படையில் இச்சொல்லைப்பயன்படுத்தலாம் .

“மாவீரன்” என்பதில் உள்ள “வீரன்” எனும் சொல் தமிழா இல்லையா எனும் அறுதியான ஆய்வுகளைத்தமிழ்கூறும்நல்லுலகு வழங்கவில்லை என்பதனால் தனித்தமிழ்ச்சொல்லென ஐயமற்று எம்மிடமிருக்கும் சொல்லான“மாமறவர்” என்ற சொல்லைப்பயன்படுத்தலாம் .

மறவர்களின் என்று எழுதலாமே என்று கேட்போருக்காக :

மறவன்” என்ப ஆண்பால் ஒருமைச்சொல் ; “மறத்தி” என்ப பெண்பால் ஒருமைச்சொல் ; “மறவர்” என்பதே பலர்பால் பன்மைச்சொல்லாகும் . “மறவர்” எனும்போது அனைவரும் அடங்கிடுவர் . மறவர்கள் என்பது ஏற்புடமையற்ற இலக்கணம் .

அடுத்து…
தாகம்” . இங்கு குறிப்பிடப்படும் “தாகம்” எனும் சொல்லும் தமிழ்ச்சொல்லென அறியமுடியவில்லை . இதற்கான ஐயமற்ற தமிழ்ச்சொல் “விடாய்” என்பதாகும். பொருள் கெடாமல் சொற்றொடர்களை மாற்றலாம் என்பதற்கிணங்க ..

புலிகளின் வேட்கை தமிழீழத்தாயகம்” என்று அமைக்கலாம்.

(மாமறவர்களான கல்லறை ஈகர்களின் கனவே தமிழீழம் . அவர்கள் தமிழீழக்கனவிற்காகவே இன்னுயிர்களை ஈகம் செய்தனர்).

எத்தனையோ எதிராற்றல்களை எதிர்கொண்டே சரியானவற்றை விதைக்க முடியும் . மாற்றவேண்டும் என்பது எமது எண்ணமன்று . தமிழைத்தவறின்றிக்கொடுக்க இவற்றையும் மாற்றவேண்டியுள்ளது என்பது தேவைமட்டுமே .

தலைவர் இருந்திருந்தால் எம்மைப்போன்றோர்க்கான பணியிடம் அங்கேயே அமைந்திருக்கும் . இப்பொழுது சரியான ஒவ்வொன்றையும் செய்வதற்கு யாருடன் போராடுவதென்று தெரியாமல் தலையைக்கொடுக்கும் ஆட்டின் நிலையே நம்நிலையும். தலைபோயினும் தமிழிற்காகப்போகட்டும்.

ஏதோவொரு காலத்தில் இதைப்பற்றிய ஆய்வை கண்டிப்பாகத்தமிழ் வையம் எதிர்கொள்ளும் . அப்பொழுது நற்றமிழில் ஒரு சொல்லியமமைக்க இச்சொல்லியம் பயன்பட்டு , தூயதமிழிற்கான அடிப்படைத்தேவையை உணரச்செய்யலாம் .

“புலிகளின் வேட்கை தமிழீழத்தாயகம்”“மாமறவர் வேட்கை தமிழீழத்தாயகம்”

நன்றி.
வாழ்க தமிழ்!

எழுத்து : துளி

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button