ஆனையிறவுப்படைத்தளம் தமிழர் படைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள்{இருபத்திரண்டு/நான்கு/ஈராயிரம்}.
ஓயாத அலைகள் மூன்று.

ஆனையிறவுப்படைத்தளத்தாக்குதல் இலங்கை படைத்துறையினரின் ஆனையிறவு நிலப்பபறிப்பிற்கெதிராக ஈராயிரமாம் ஆண்டு மூன்றாந்திங்கள் இருபத்தாறாம்நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரமளவில் தமிழீழ விடுதலைப்புலியுனரால் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். ஓயாதவலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப்படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலியினரினால் கைப்பற்றப்பட்டது. முப்பத்தைந்து நாளின் பின்னர் தமிழீழவிடுதலைப்புலியினர் முழுக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப்படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் கூடுதலான இலங்கை படையினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியே தமிழீழவிடுதலைப்புலியினரின் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலியினரின் படகுகளில் ஆயிரத்து இருநூறு வரையிலான தமிழீழவிடுதலைப்போராளியினர் தாளையடி பாசறை மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச்செல்லும் சூழலிற்குத்தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப்பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.
குடாரப்பு தரையிறக்கச்சண்டை.
ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச்சொல்லப்படவேண்டிய வெற்றிகளில் இது முதன்மையானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான நூண்ணிய வளத்துடனும் ஒரு மரபுவழித்தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுதன்மையான படைத்துறைத்தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிப்படையினால் மீட்கப்பட்டது.
அறைகூவல்களையேற்று சண்டை செய்யக்கூடாதென்பது கரந்தடிப்(கொரில்லா) போராளிகளுக்கான பொதுநெறி.
ஓயாதவலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு, மேற்குப்போன்ற முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப்பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப்பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்கவிருந்தது.
இருபத்தாறாம்நாள் மூன்றாந்திங்கள் ஈராயிரமாம் ஆண்டன்று மாலை வெற்றிலைக்கேணிக்கடற்கரையில் போராளியினர் அணிவகுத்து நிற்கிறனர். வரலாற்று முதன்மை வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியல் வெற்றியடைவொன்றை நிகழ்த்த அவர்கள் அணியமாகி நின்றனர். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகவலுவான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப்பகுதியில் புலிப்படையின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத்தளத்துக்கான முதன்மை வழங்கு பாதையான கண்டித்தெருவை குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளியினர் ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத்தடுக்க எதிரி எல்லாவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைவலுவோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் பல்குழாய்கள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிப்படைப்படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் வன்முறைத்தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிகவும் இடரான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலியினர் அந்தப்பொறுப்பை ஏற்றுத்திறம்படச்செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரச்செல்வில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு எட்டுமணி முப்பது மணித்துளிக்கு கடலில் சண்டை தொடங்கியது. பதினாறு டோறா பெருவெடிகுழாய்ப்படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத்தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சிதைவும் ஏற்படாவண்ணம் கடற்புலியினர் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளை தூக்கிச்சென்ற ஏழு வழங்கல் படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத்தரையிறக்கின. தரையிறங்கிய அணியினர் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து விடியற்காலைக்குள் கண்டித்தெருவை குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலியணியினர் பளையிலிருந்த பல்குழல் உந்துகணைத்தளத்தைக்கைப்பற்றி பதினொரு பல்குழல் உந்துகணைகளைச்செயலிழக்கச்செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணியினரையும் கேணல் பால்ராச் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித்தளபதி துர்க்கா, மாலதி படையணித்தளபதி விதுசா, சாள்சு் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் இராயசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத்தலைமைதாங்கிக்களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச்செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இவ்வகையான முயற்சிகள் புலிப்படையின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லாரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித்தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப்போராளியினர் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வழங்கலைக்கூடச்செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதிரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத்தரையிறக்க அணியை முற்றாக அழிக்கமுடியுமென்று எதிரி நம்பினான். புலிப்படையுடன் போரிடும் வலுவுள்ள முதன்மையான அணிகள் அங்கிருந்ததும், முதன்மையான போர்த்தளபதியினர் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அத்தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிப்படையின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப்பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வழங்கல் கைகூடாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வழங்கலை ஏற்படுத்தவேண்டுமென்பதே நிலை. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக்கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப்பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் போர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டித்தெருவை குறுக்கறுத்திருந்த புலியணியினரை முற்றாக அழிக்க வீறுகொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வழங்கலை ஏற்படுத்த புலியணியினர் கடுமையான சண்டை செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகவலுவான படைத்தளங்களைக்கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிப்படை.
அதுவரை சரியான வழங்கலில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத்தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆற்றுப்படுத்திக்கொண்டது. அணிகள் நேராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிப்பாதையைக்குறுக்கறுத்திருக்கும் புலியினரை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினான். கவசவூர்திகள், பல்குழல் எறிகணைதாங்கிகள் (ஆட்லறிகள்), படையணிகள் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தினான். மிகக்கொடுச்சினங்கொண்டு தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ப்போரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல ஊர்திகள் அழிக்கப்பட்டன; சிதைப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான பல்குழல்ச்சூட்டை நடத்துவது எதிரிக்கு எளிதாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றோர் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசஊர்திகள் தெருவோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு கொடூரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிப்படையுனர். ஆனையிறவுத்தளம் முற்றாகக்கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாள்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத்தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராச் தலைமையிலான புலியணியினர்.
வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத்தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் நூற்றிருபது மில்லிமீட்டர் கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிப்படை.
தரையிறங்கிய சிலநாள்களுக்குள் ஆனையிறவைக்கைப்பற்றும் முயற்சியொன்றைப்புலியினர் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாள்களில் வேறொரு திட்டத்தைப்போட்டு மிக எளிதாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிப்படையினர். இயக்கச்சியைக்கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத்தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய பல்குழலெறிகணைகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத மும்முரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழரிடம் வந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிப்பாதை முகமாலை வரை – கிழக்குக்கடற்கரையாகப்பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்திற்கும் அடித்தளமாக இருந்தது அத்தரையிறக்கம்தான்.
சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச்செய்ய முனையாது. ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றாறில் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து படையினர் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருதிங்களுக்கு மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச்சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
பளை பல்குழைதாங்கித்தகர்ப்பு.
இருபத்தாறு , மூற்று , ஈராயிரம் அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளோர். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் கமுக்கமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் கையிலிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத்தரையிறக்கம் நடைபெறவிருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணியினைக்காவியபடி கடற்புலிப்படைப்படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.
குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக்கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய பல்குழல் தாங்கித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு போரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேயர் வருமனின் தலைமையில் அவ்வணி பளை பல்குழல் தாங்கித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். குறிவைத்த இடம்வரை வெற்றிகரமாக, சலசலப்பின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் முழுமையாக பதினொருபேர் இருந்தனர்.
குறிப்பிட்ட பல்குழல்தாங்கி ஊர்தித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வருமனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை எளிதாக குறிவைத்த இடம்வரை நகர்த்த முடிந்தது. பல்குழல்தாங்கி ஊர்தித்தளம் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டனர். இனி சண்டையைத்தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து இருபத்தைந்து மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத்தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேயர் சுதாயினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.
சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உச்சகட்ட தாக்குதலைத்தொடுத்துக்கொண்டு காவரணைக்கைப்பற்றுகிறது. மின்னல்விடைவில் கடுகதித்தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் கணிப்பிடவில்லை. பல்குழல்தாங்கி ஊர்தித்தளத்தைப்பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான படையினரும் சண்டை தொடங்கிய மறுமணித்துளியே ஓட்டமெடுத்துவிட்டனர். பல்குழல்தாங்கி ஊர்தித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்தது.
பல்குழல்தாங்கிகள் முழுமையாகக்கைப்பற்றப்பட்டன. முழுமையாக பதினொரு பல்குழல் உந்துகணைகள் இருந்தன. ஓடிய எதிரி வலுவைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி பல்குழல் உந்துகளைச்செயலிழக்கச்செய்யத்தொடங்கினார். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேயர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு பல்குழல் உந்துகணைகளை செயலிழக்கச்செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத்திரும்பினர். பல்குழல் உந்துகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் பல்குழல் உந்துகணைத்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.
தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள்ளால் கமுக்கமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.
பளை பல்குழல் தாங்கித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட நேரம் தேவைப்பட்டது.
குடாரப்பில் தரங்கி நீரேரியை கடக்கும் பிரிகேடியர் பால்ராச் , ஏனைய போராளிகள்…..
தாக்குதலின் பின்னணி.
குடாரப்புத்தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மூன்றாம்திங்கள் இருபத்தாறாம் நாள், ஈராயிமாம் ஆண்டு ய மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணிநேரங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப்புலிப்போராளியினர்.
குடாரப்புத் தரையிறக்கச்சண்டை – குடாரப்பு பகுதியில் மாலை எட்டுமணி முப்பது மணித்துளியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட சண்டையில் பதினாறு டோறாப் பல்குழல்தாங்கிப்படகுகள் கொண்ட இலங்கை படைத்துறையினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப்புலியினருக்கு இழப்பேதும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.
குடாரப்புத்தரையிறக்கத்தின் போது முதல் மறச்சாவைத்தழுவிய மாமறவர் விதைத்த தூய்மையாக்கப்பட்ட இடம்….
elephant ltte pass landingelephant pass landing heros
கண்டிப்பாதையில் நிலை கொள்ளல் – குடாரப்புப்பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப்புலிப்போராளியினர் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டிப்பாதையில் நிலை கொண்டனர். இக்கண்டி பாதையினூடாகவே ஆனையிறவுப்படைத்தளத்திற்கான முகன்மையான வழங்கல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.பளை பல்குழல் உந்துகணைத்தள உள்நுழைவு – கண்டிப்பாதையில் தமிழீழ விடுதலைப்புலிப்போராளியினர் நிலை கொண்டிருக்கும் வேளை பளை பல்குழல் உந்துகணை தாங்கித்தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த பதினொரு பல்குழல் உந்துகணைகளைச்செயல் இழக்கச்செய்தனர்.
தமிழீழ விடுதலிப்புலியினரின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான பன்னிரண்டு கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை படைத்துறைப்படை பாசறைகள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் பலர் ஆனையிறவின் பல இடங்களில் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.
இலங்கைப்படையின்ர் மும்முரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப்புலிப்போராளியினரை எதிர்நோக்கிய கடும் தாக்குதல் இலங்கை படைத்துறையால் மேற்கொள்ளப்பட்டது. தாங்கிகள், கவச ஊர்திகள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப்புலியினர் மேற்கொண்டனர்.
பால்ராச்உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலி அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராச் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப்படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
உடுத்துறை வழியான தரைவழி வழங்கல் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி பாசறைகளில் தமிழீழ விடுதலைப்புலியினரால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி வழங்கல் மூன்றாந்திங்கள் இருபத்தெட்டாம் நாள் ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி வழங்களின் போது தமிழீழ விடுதலைப்புலியினரின் எல்லைப்படையினரும் பங்காற்றினர்.
காமினி கெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப்புலியினரைத்
தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கைப்படைத்துறையால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத்தள்ளப்பட்டதும் ஆனையிறவுப்படைத்தளத்தில் ஐம்பத்துமூன்றாம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி பெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.
ஆனையிறவு படைத்தளத்தில் வெற்றியில் தமிழீழ தேசியக்கொடியை தாக்குதல் ஒருங்கிணைப்புத்தளபதி கேணல் பானு அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஆனையிறவுப்படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப்படைத் தரப்பினரின் வழங்கல்ககளைத்தடுத்தவாறே ஆனையிறவுப்படைத்தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப்புலியினர். குடாரப்புத்தரையிறக்கத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து முப்பத்து நான்காம் நாள்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் நுணுக்கங்களால் நான்காம் அதங்கள் இருபத்திரண்டாம் நாள் ஆனையிறவுப்படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலியினரிடம் வீழ்ந்தது.
நன்றி .
வாழ்க தமிழ்.



