இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௪௫. பெரியாரைத்துணைக்கோடல்.

குறள் – ௪௱௪௧ (அச்சில் உள்ளவாறு).

“அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.”

மூத்த = முதிர்ந்த.
கேண்மை = உறவு.
திறன் = தகுதி.

“அறனறிந்து மூத்த அறிவுடையார் திறனறிந்து கேண்மை தேர்ந்து கொளல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அறத்தினை அறிந்து முதிர்ந்த அறிவுடையாரது தகுதிகளை அறிந்து அவர்தம் உறவினை தேர்ந்துக்கொள்க” என்பதாம்.

’மூத்தவறிவுடையார்’ என்பதன்கண் ‘மூத்த’ என்பது பெயரடை. பெயரடை பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.”

குறள் – ௪௱௪௨ (அச்சில் உள்ளவாறு).

“உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.”

நோய் = துன்பம்.
உறாஅமை = அடையாமை.
பெற்றியார் = இயல்பினார்.
பேணி = போற்றி.

“அடைந்த துன்பங்களை நீக்கி, அத்தகு துன்பங்கள் வருமுன்னர் காக்கும் இயல்பினாரைப்போற்றிக்கொள்க” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘பெற்றியார்ப்பேணி’ என்பது ‘பெற்றியாரைப்பேணி’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வலி மிகாது.

‘நோய்’ என்பது ‘உற்றநோய்நீக்கி’ எனவும் ‘நோயுறாஅமை’ எனவும் சென்று பொருந்தும். மேலும் ‘நீக்கி’ என்னும் வினையெச்சம் ‘உறாமை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மை வடிவம் —
“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார் பேணிக் கொளல்.”

குறள் – ௪௱௪௩ (அச்சில் உள்ளவாறு).

“அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.”

பெரியார் = ஆன்றோர்.
அரிது = அருமை.
பேணி = போற்றி.
தமர் = உற்றார்.
தமரா = தமராக என்னும் சொல்லின் கடையெழுத்து குறைந்தது.

“பெரியாரைப்பேணி தமராக கொளல் அரியவற்றுளெல்லாம் அரிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஆன்றோரைப்போற்றி தமக்கு உற்றாராக கொள்ளுதல் அருமைவாய்ந்த செயல்களுளெல்லாம் அருமையானதே” என்பதாம்.

‘எல்லாம்’ என்னும் முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘பேணி’ என்னும் வினையெச்சம் ‘தமர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணி தமராக் கொளல்.”

குறள் – ௪௱௪௪ (அச்சில் உள்ளவாறு).

“தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.”

தம்மின் = தம்மினும், தம்மைவிட.
தமரா(க) = உற்றாராக.
ஒழுகுதல் = வாழ்தல்.
வன்மை = வலிமை.
தலை = தலைமையானது.

“தம்மினும் பெரியாரை தமக்கு உற்றாராக ஏற்று வாழ்தல் வலிமையெல்லாவற்றுள்ளும் தலைமையானது” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாம் தலை.”

குறள் – ௪௱௪௫ (அச்சில் உள்ளவாறு).

“சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.”

சூழ்வார் = அமைச்சர்.
கண்ணாக = விழிகளாக.
ஒழுகலான் = நடத்தலான்.
சூழ்ந்து = ஆராய்ந்து.
கொளல் = (துணயாக) கொள்க.

“மன்னவன் சூழ்வார்கண்ணாக ஒழுகலான் சூழ்வாரைச்சூழ்ந்து கொளல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“மன்னவன் அமைச்சரையே தனது விழிகளாக எண்ணி நடப்பதால் தனக்கு துணையாகும் அமைச்சரை ஆய்ந்து கொள்க” என்பதாம்.

‘கண்ணாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.”

குறள் – ௪௱௪௬ (அச்சில் உள்ளவாறு).

“தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லாரைச்
செற்றார் செயக்கிடந்த தில்.”

தக்கார் = தகுதியுடையவர்.
இனத்தனாய் = சார்பினனாய்.
ஒழுகுதல் = வாழ்தல்.

“தகுதிவாய்ந்தவர்களைச்சார்ந்து தானும் நன்னெறியில் நடக்க வல்லார்க்கு பகைவர் செய்யக்கூடிய தீமை இல்லை“ என்பதாம்.

‘தான்’ என்னும் திரிபில்மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.

‘வல்லானை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘செற்றார்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.

‘கிடந்ததில்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. புணர்த்துதவற்கு விதியிருப்பதால் புணர்ந்தேயாக வேண்டுமென்ற விதியில்லை. இப்புணர்ச்சியில் ’இல்’ என்னும் குறிப்புவினைமுற்று வேற்றுமைவுருபாக மயங்குதல் காண்க. மயங்குபுணர்ச்சி என்பது ‘இல்(லை)’.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“தக்கா ரினத்தனாய் தானொழுக வல்லாரை
செற்றார் செயக்கிடந்தது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௪௱௪௭ (அச்சில் உள்ளவாறு).

“இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.”

இடிக்கும் = கடிந்து கூறும்.
தகைமை = தகுதி, வல்லமை.

“தன்னிடம் குற்றங்கண்டபோது கடிந்துகூறி திருத்துவோரை தமக்கு துணையாக கொண்டொழுகுவாரை யாரே கெடுக்க வல்லார்; யாருமில்லை” என்பதாம்.

‘ஆள்வாரை’ என்பது வினையாலணையும்பெயர். ‘துணையாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையொடுமட்டுமே புணரும்; பெயருடன்‌ புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.”

குறள் – ௪௱௪௮ (அச்சில் உள்ளவாறு).

“இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.”

இடிப்பார் = கடிந்து கூறுவோர்.
ஏமரா = காவலற்ற.
இல்லானும் = இல்லையாயினும்.
கெடும் = கெடுவான்.

“தான் தவறுசெய்கையில் கடிந்துகூறி திருத்துவோரை துணையராக இல்லாத காவலற்ற மன்னன் தன்னைக்கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடுவான்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

‘ஏமரா மன்னன்’ என்பதில் ‘எமரா’ என்பது பெயரடை. பெயரடை பெயரைத்தழுவும். ‘இல்லாத வேமரா’ என்பது பொருளற்ற மயங்குபுணர்ச்சி. ‘இடிப்பாரையில்லாத’ என்றயிடத்தில் விட்டிசைக்க பொருள் சிறக்கும். புணர்ச்சி பொருளுக்கானது. மயங்குபுணர்ச்சிக்கு மொழியில் இடமில்லை.

‘கெடுப்பார்’ என்பது திரிபுபெறாத வினையாலணையும்பெயர். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.”

குறள் – ௪௱௪௯ (அச்சில் உள்ளவாறு).

“முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.”

முதல் = முதலீடு.
ஊதியம் = வருவாய்.
மதலை = பற்றுக்கோடு, துணையர்.
சார்பு = உறவு.
நிலை= நிலைத்தல்.

“முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்சார்பிலார்க்கு நிலை இல்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க

“முதலீடு இல்லாதவர்க்கு ஊதியம் இல்லை. (அதுபோல) பற்றுக்கோடாம் துணையரின் உறவிலார்க்கு நிலைத்தல் இல்லை” என்பதாம்.

‘முதலிலார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘ஊதியம்’ என்னும் வினைசாராது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘ஊதியமில்லை’ என்பதன்கண் வந்த நிலைமொழியீற்றுமகரம் கெடுவதில்லை. ஒலியாயெழுத்து தமிழில் இல்லை. எனவே மகரமெய் ஒலிக்க ஒலித்தால் புணர்ச்சி தானே நீங்கும்.

செம்மைவடிவம் —
“முதலிலார்க்கு* ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௪௱௫௰ (அச்சில் உள்ளவாறு).

“பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.”

பல்லார் = பலர்.
பத்தடுத்த = பதின்மடங்குக்கும்மேல்.
தொடர் = தொடர்பு.
கைவிடல் = நீங்குதல், இழத்தல்.

“பலரது பகையைத்தேடிக்கொள்வதிலும் பதின்மடங்குக்கும்மேல் தீமையைவுடையது நல்லோரது தொடர்பினைக்கைவிடல்”

‘பகைகொளலின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘கொளல்’ என்னும் தொழிற்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button