
குறள் – ௲௧ (அச்சில் உள்ளவாறு).
“வைத்தான்வாய் சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.”
வாய் = வாயில்
சான்ற = நிறைந்த.
செயக்கிடந்தது = செய்கின்றது.
இல் = இல்லை.
“வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான். அஃதுண்ணான். செயக்கிடந்தது இல் செத்தான்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வாயில் நிறைந்த பெருஞ்செல்வத்தை ஈட்டினான். அதனைப்பயன்படுத்தான். நன்மையாக செய்தது ஏதுமில்லை. செத்தான்” என்பதாம்.
‘அஃது’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது.
‘கிடந்ததில்’ என்பதன் ஈற்றில் நின்ற ‘இல் (இல்லை)’ என்னும் குறிப்புவினைமுற்று புணர்ச்சியால் வேற்றுமைவுருபாகவும் மயங்கும். பொருள் மயங்குமானால் புணரா.
செம்மைவடிவம் —
“வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது* இல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨ (அச்சில் உள்ளவாறு).
“பொருளானா மெல்லாமென் றீயா திவறு
மருளானா மாணாப் பிறப்பு.”
பொருளான் = செல்வத்தால்.
ஆம் = ஆகும்.
ஈயாது = கொடாது.
இவறும் = இறுகப்பற்றும்.
மருளான் ஆம் = மயக்கத்தால் ஆகும்.
மாணா = இழிந்த.
பிறப்பு = பிறவி.
“எல்லாம் செல்வத்தால் ஆமென்று ஈயாது இவறும் மருளால் மாணாப்பிறப்பு ஆம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எல்லாம் செல்வத்தால் நடக்குமென்று பிறர்க்குக்கொடாது இறுகப்பற்றும் மயக்கத்தால் இழிந்த பிறவி ஆகும்” என்பதாம்
பொருளானாம், மருளானாம் என்பனவற்றின் ஈற்றில் ‘ஆம் (ஆகும்)’ என்னும் வினைமுற்று நிற்கின்றது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘எல்லாம்’ என்னும் என்னும் முற்றுச்சொல்லுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இவறும்’ என்னும் வினையெச்சம் ‘மருள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘மருளான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘மருள்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளானாம் எல்லாமென்று* ஈயா திவறும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩ (அச்சில் உள்ளவாறு).
“ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை.”
ஈட்டம் = ஈட்டியதை.
இவறி = இறுகப்பற்றி.
இசை = புகழ்.
வேண்டா = விரும்பா.
தோற்றம் = பிறத்தல்.
நிலக்கு = புவிக்கு.
பொறை = சுமை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஈட்டியதைக்கொடாது இறுகப்பற்றி புகழையும் விரும்பா ஆடவர் பிறத்தல் புவிக்கு சுமை” என்பதாம்.
‘இவறி’ என்னும் வினையெச்சம் ‘இசை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வேண்டா’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தோற்றம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது
‘நிலக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘பொறை’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“ஈட்ட மிவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்கு பொறை.”
குறள் – ௲௪ (அச்சில் உள்ளவாறு).
“எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா
னச்சப் படாஅ தவன்.”
எச்சம் = எஞ்சியிருப்பது.
நச்சப்படாஅதவன் → நச்சப்படாதவன் = விரும்பப்படாதவன்.
கொல்லோ = அசைச்சொல்.
“ஒருவரால் நச்சப்படாஅதவன் எச்சமென்று என்னெண்ணும் கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவராலும் விரும்பப்படாதவன் தன்வாழ்விலும் வாழ்வுக்குப்பின்னும் எஞ்சுவது யாதென்று எண்ணுவான்”
என்பதாம்.
‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘எச்சம்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கொல்லோ’ என்னும் அசைச்சொல் ‘என்னெண்ணும்’ என்ற வினாவுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஒருவரால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘ஒருவர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“எச்சமென்று* என்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௫ (அச்சில் உள்ளவாறு).
“கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினு மில்.”
கொடுப்பதூஉம் → கொடுப்பதும் = பிறர்க்குக்கொடுப்பதும்.
துய்ப்பதூஉம் → துய்ப்பதும் = தான் துய்த்தலும், நுகர்தலும்.
அடுக்கிய கோடி = கோடியின் மடங்கு.
இல் = இல்லை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிறர்க்குக்கொடுப்பதும் தானே நுகர்தலும் இல்லார்க்கு கோடியின் மடங்கு செல்வம் உண்டாயினும் அது யார்க்கும் இல்லை” என்பதாம்.
அளபெடுத்த சொற்கள் விட்டிசைத்து தத்தம் பொருளைச்சிறப்பிக்கும்.
‘இல்லார்க்கு’ என்னுஞ்சொல் ‘துய்ப்பதூஉம்’ என்னும் சொல்லுடன் உறவாகும். ‘அடுக்கிய’ என்பது ‘கோடி’ என்னும் பெயருக்கு அடையாகும். உறவாகுஞ்சொற்கள் தழுவுஞ்சொற்கள் எனப்படும். தழுவுஞ்சொற்களே புணரும்.
‘அடுக்கியகோடி’ என்பது அடைபெற்ற எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘உண்டாயினும்’ என்பது உண்டாகாது என்னும் எதிர்மறைப்பொருளில் வந்த எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு* அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௬ (அச்சில் உள்ளவாறு).
“ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்.”
ஏதம் = கேடு, துன்பம், நோய். துவ்வான் = துய்க்கான், நுகரான்.
தக்கார் = தகுதியுடையார்க்கு.
இயல்பு = குணம், பண்பு.
“தான் துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான்பெருஞ்செல்வம் ஏதம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘தான்’ என்பது எழுவாயாகும் மறுப்பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
“தானும் நுகரான் தகுதியுடையார்க்கு ஒன்றுகொடுக்கும் பண்பும் இல்லாதானது பெருஞ்செல்வம் கேடு” என்பதாம்.
‘பெருஞ்செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘துவ்வான்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தக்கார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘ஒன்று’ என்னும் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஒன்றீதல்’ என்பது ‘ஒன்றீயும்’ என்னும் பொருளது. இவ்விடத்து விட்டிசைக்க பொருள் சிறக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.
செம்மை வடிவம் —
“ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கு*ஒன்
றீதல் இயல்பிலா தான்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௭ (அச்சில் உள்ளவாறு).
“அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம்
பெற்றா டமியண்மூத் தற்று.”
அற்றார் = வறியர், இல்லாதார்.
ஆற்றாதான் = கொடாதான்.
மிகநலம்பெற்றாள் = மிகுபேரழகுப்பெண்.
தமியள் = துணையில்லாள் (திருமணம் ஆகாதாள்).
மூத்து = முதுமையுற்று, இளமை கழிந்து.
அற்று = போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“இல்லாதார்க்கு ஒன்றனைக்கொடாதானது செல்வம் மிகுபேரழகுப்பெண் துணையில்லது இளமைநீங்கி முதுமையுற்றதுபோல்” என்பதாம்.
‘அற்றார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘ஒன்று’ என்னும் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘மிகநலம்பெற்றாள்’ என்பது அடைபெற்ற எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. மேலும் ‘செல்வம்’ என்பது ‘ஆற்றாதான்செல்வம்’ எனத்தொகையாகும்.
‘தமியள்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அற்றார்க்கு*ஒன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௮ (அச்சில் உள்ளவாறு).
“நச்சப் படாதவன் செல்வ நடுவூரு
ணச்சு மரம்பழுத் தற்று.”
நச்சப்படாதவன் = விரும்பப்படாதவன்.
நச்சுமரம் = நஞ்சுமரம்.
பழுத்தற்று = பழுத்ததுபோல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“விரும்பப்படாதவனது செல்வம் ஊரின் நடுவில் நஞ்சுமரம் பழுத்ததுபோல். ஒருவர்க்கும் பயனில்லை” என்பதாம்.
‘செல்வம்’ என்பது ‘நச்சப்படாதவன்செல்வம்’ என தொகையாகி நெடுந்தொரெழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது. ‘செல்வநடுவூருள்’ என்பது பொருளற்ற புணர்ச்சி. இயல்புப்பொருள்தரும் ‘செல்வம்’ என்னும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘நடுவூருள்’ என்பதன்கண் வந்த ‘உள்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘ஊர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.”
குறள் – ௲௯ (அச்சில் உள்ளவாறு).
“அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்.”
ஒரீஇ = விலக்கி, செய்யாது.
தற்செற்று = தன்னை வருத்தி.
அறம்நோக்காது = அறங்கருதாது.
ஒண்பொருள் = பெருஞ்செல்வம்.
“அன்பொரீஇ தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் பிறர் கொள்வார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அன்பினை விலக்கி தன்னை வருத்தி அறத்தினைக்கருதாது தேடிய பெருஞ்செல்வத்தினை பிறர் எடுத்துக்கொள்வார்” என்பதாம்.
‘ஒரீஇ’ என்னும் வினையெச்சம் ‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘தற்செற்று’ என்பது ‘தன்னை வருத்தி’ என்னும் விரியின் தொகையாகும். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும். இடைவெளியின்மையும் ஒருசொன்னீர்மையும் தொகையை அறிவிக்கும்.
‘செற்று’ என்னும் வினையெச்சம் ‘அறம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஈட்டிய’ என்னும் பெயரெச்சம் ‘நோக்காது’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. ஒண்பொருள் என்பதனை அவாவி தழுவும்.
‘ஈட்டிய ஒண்பொருள்’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“அன்பொரீஇ தன்செற்று* அறநோக்காது* ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.”
*குற்றியலுகரங்களாகிய றுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௰ (அச்சில் உள்ளவாறு).
“சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.”
சீருடை = செம்மையுடைய.
சிறுதுனி = குறுங்கால வறுமை.
மாரி = மேகம்.
வறம் = வறட்சி.
கூர்ந்த = மிகுந்த.
அனையதுடைத்து = ஒத்த தன்மையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“செம்மையுடைய செல்வர் அடையும் குறுங்கால வறுமை மேகம் நீரின்றி வறண்ட தன்மையது” என்பதாம்.
‘சீருடை செல்வர்’ என்பது ‘சீருடைய செல்வர்’ என்னும் பெயரெச்சத்தொடராகும். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“சீருடை செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




