குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௰௬. பொறையுடைமை.

குறள் – ௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு.)
“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.”
“அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல் தம்மை இகழ்வாரைப்பொறுத்தல் தலை” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘தாங்கும்’ என்பது ‘செய்யும்’ எனும் வாய்பாட்டுப்பெயரெச்சம். தாங்கும் எனும் பெயரெச்சத்தின் மகரயீறு நீங்கினால் ‘தாங்கு’ எனும் வினைப்பகுதியாகி ‘தாங்குநிலம்’ எனும் வினைத்தொகையாகும். இப்பெயரெச்சம் ‘நிலம்’ எனும் பெயருடன் மகரம் நீங்காது இயல்பாய் புணரும்.
‘போல’ எனும் உவமவுருபு ‘நிலம்’ எனும் பெயர்ச்சொல்லை இடனாக கொண்டு புணர்ந்தபின் மற்றுமொரு சொல்லுடன் புணர்ந்தால் தம் உவமப்பொருளை இழக்கும். உவமவுருபுகள் விட்டிசைக்குமேயன்றி எதனுடனும் புணராது.
‘தம்’ என்பது மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொல் தனித்துநின்று வேற்றுமைவுருபுகளை ஏற்குமேயன்றி வருமொழியாகி புணராது.
தம்மை என்பது இரண்டாம்வேற்றுமை ஐயுருபேற்ற சொல். ஐயுருபு ‘இகழ்வார்’ எனும் வினையாலணையும் பெயருடன் புணராது.
‘இகழ்வார்’ என்பதில் இரண்டாம்வேற்றுமைவுருபு தொகுகிறது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
‘பொறுத்தல் தலை’ என்பது தோன்றாயெழுவாய்த்தொடர். ‘தலை’ எனும் பெயர்ப்பயனிலை புணராது தனித்து நிற்கும்.
செம்மைவடிவம் —
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை.”
குறள் – ௱௫௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று.”
இறப்பு = விதிமீறிய குற்றம்.
“இறப்பினை பொறுத்தல் என்றும் நன்று. அதனை மறத்தல் அதனினும் நன்று“ எனவிரித்து அவ்வாறே கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘நன்று’ என்பது ஈரிடத்தும் சென்று பொருந்தும்.
‘என்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
ஒரு புணர்மொழி பிரிந்து பொருள்தராது. புணர்மொழியிலிருந்து ஒரு சொல் பிரிந்து வேறோரிடத்து சென்று பொருந்தி பொருள்தருமாயின் புணர்ச்சி இறந்துவிடும். அது புணர்த்தக்கூடாத தழுவாப்புணர்ச்சியாம். பொறுத்தலிறப்பினை என்பது ‘இறப்பினை பொறுத்தல்’ என்றே நின்று பொருள்தரும்.
‘அதன்’ எனும் சுட்டுச்சொல் எதனுடனும் புணராது.
‘அதனினும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.”
குறள் – ௱௫௰௩. (அச்சில் உள்ளவாறு.)
“இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.”
மடவார் = மிகைசெய்தார் (மிகை = குற்றம்).
ஒரால் = நீங்குதல், தவிர்த்தல்.
“இன்மையுளின்மை விருந்தொரால். வன்மையுள் வன்மை மடவார்பொறை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வறுமையில் வறுமை விருந்தினரை தவிர்த்தல். அதுபோல் வலிமையில் வலிமை மிகைசெய்தாரைப்பொறுத்தல்” என்பதாம்.
‘மடவார்ப்பொறை’ என்பதற்கு ‘மிகைசெய்தாரைப்பொறுத்தல்’ என்கிறார் பரிமேலழகனார். இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது. ‘மடவார்பொறை’ எனவாகும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை.”
குறள் – ௱௫௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.”
‘வேண்டின்’ என்பது ‘இன்’ விகுதிபெற்ற வினையெச்சம். வினையெச்சம் ‘பொறை’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.”
குறள் -௱௫௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.”
ஒன்றாக = ஒரு பொருளாக.
ஒன்று, பொன் என்பன பெயர்ச்சொற்கள். இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற ஒறுத்தாரை, பொறுத்தாரை எனும் திரிபுற்றபெயர்ச்சொற்கள் +வேற்றுமைவுருபுகளால் வேறுபட்ட சொற்கள்) வினையொடு மட்டுமே புணரும்; பெயருடனன்று.
‘போல்’ எனும் உவமவுருபு விகாரப்புணர்ச்சியை அடையாது. உவமவுருபுகள் எதனுடனும் புணராது.
“பொறுத்தாரை பொன்போல் பொதிந்து வைப்பர். ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன்போல் பொதிந்து .”
குறள் – ௱௫௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”
‘ஒறுத்தார்க்கு’ எனும் குவ்வுருபேற்ற பெயர்ச்சொல் விளங்கித்தோன்றுமாறு அவ்விடத்தில் விட்டிசைக்கவேண்டும்.
அவ்வாறே ‘பொறுத்தார்க்கு’ என்பதும். இவ்விருசொற்கள் இக்குறளின் பொருள்பொதிசொற்கள். புணர்த்தியதில் தவறில்லை. புணர்த்தினால் குறளின் உணர்ச்சி கெடுகிறது..
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“ஒறுத்தார்க்கு* ஒருநாளை யின்பம் பொறுத்தார்க்கு*
பொன்றுந் துணையும் புகழ்.”
*குற்றியலுகரமாம் குகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.
குறள் – ௱௫௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.”
தற்பிறர் = தன்னிடத்து பிறர்.
திறனல்ல = செய்யத்தகாத குற்றம்.
நோ = துன்பம்.
“செய்யத்தகாத குற்றங்களை தன்னிடத்து பிறர் செய்யினும் அத்துன்பத்தினால் மனம் நொந்து அவர்பால் அறனல்ல செய்யாமை நன்று” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘தன்’ என்பதும் ‘பிறர்’ என்பதும் மறுபெயர்ச்சொற்கள். மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது. எனினும் ‘இடத்து’‘ ’ என்ற ஏழன்வேற்றுமைவுருபு தொகுவது விகாரப்புணர்ச்சியால் பெறப்பட்டது.
‘செய்யினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். உம்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘நொந்து’ என்பதும் வினையெச்சம். வினையெச்சம் ‘அறன்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து*
அறனல்ல செய்யாமை நன்று.”
*குற்றியலுகரமாம் துகரம் மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகுபெறாது.
குறள் – ௱௫௰௮. (அச்சில் உள்ளவாறு.)
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.”
மிகுதி = விதிமீறிய செயல்.
மிக்கவை = அல்லவை.
“மனச்செருக்கால் தங்கண் தீயவற்றை செய்தாரை தாம் தம்முடைய பொறையான் வென்று விடுக“ என்பது பரிமேலழகனார் உரை.
‘செய்தாரைத் தாந்தந் தகுதியான்’ என்பதில் வந்த ‘தாம்’ என்பது மறுபெயர்ச்சொல்லாகும். ‘தாம்’ என்னும் மறுபெயர்ச்சொல் வேற்றுமைவுருபினை ஏற்காது நிற்கும் திரிபில்மறுபெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம்தந்
தகுதியான் வென்று விடல்.”
குறள் – ௱௫௰௯. (அச்சில் உள்ளவாறு.)
“துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச்சொ னோற்கிற் பவர்.”
இறந்தார்= நெறிகடந்தார்.
நோற்கிப்பவர் = பொறுப்பவர்.
“இறந்தார்வாய் இன்னாச்சொல்லை நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மையுடையவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘துறந்தாரின்’ என்பதில் ஒப்புப்பொருளில் வந்த இன்னுருபு புணர்ந்து தனது பணியை முடித்தது. மீளவும் தூய்மையெனும் பெயர்க்கு முன்னொட்டாகாது.
‘உடையர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இறந்தார்வாய்’ என்பதில் வரும் ‘வாய்’ ஏழாம்வேற்றுமைவுருபு. ‘இன்னாச்சொல்’ என்பது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொல். வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயர்ச்சொற்களுடனே ஏழாம்வேற்றுமை புணரும்.
செம்மைவடிவம் —
“துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொ னோற்கிற் பவர்.”
குறள் – ௱௬௰. (அச்சில் உள்ளவாறு.)
“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.”
“உண்ணாது நோற்பார் பெரியர். (அவரும்) பிறர்சொல்லும் இன்னாச்சொல்லை நோற்பாரின் பின்” என்றவாறு .ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘சொல்லும்’ என்பது வினையெச்சம். இவ்வினையெச்சம் ‘இன்னாச்சொல்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பின்’ என்பது பெயர்ச்சொல். வினைச்சொற்களைச்சாராது தன்னளவில் பொருள்தரும் பெயர்ச்சொற்களுடன் ஏழாம்வேற்றுமை புணராது. வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயர்ச்சொற்களுடனே ஏழாம்வேற்றுமை புணரும்.
செம்மைவடிவம் —
“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரின் பின்.”
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.




