
குறள் – ௫௱௫௨ (அச்சில் உள்ளவாறு).
“கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.”
கொடிதே = கொடுமையே (கொடியவனே).
அலை = வருத்துதல், அலைத்தல்.
அல்லவை= முறையற்றவை.
நெறியற்றவை.
ஒழுகும் = செய்யும்.
வேந்து = வேந்தன்.
“அல்லவைமேற்கொண்டு அலைசெய்தொழுகும் வேந்தன் கொலைமேற்கொண்டாரின் கொடிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெறியற்றவைகளைச்செய்து குடிகளை வருத்தும் வேந்தன் கொலைபுரிவோரினும் கொடியவனே” என்பதாம்.
‘கொண்டாரில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘கொண்டார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கொடிதே’ என்னும் தேற்றேகாரச்சொல் எதனுடனும் புணராது. தேற்றேகாரம் எதனுடனும் புணராது. மேலும் ‘கொடிதே’ என்பது பயனிலையாய் முற்றுப்பொருளைத்தருகிறது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘கொண்டு’ என்னும் வினையெச்சம் ‘அல்லவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கொலைமேற் கொண்டாரின் கொடிதே அலைமேற்கொண்டு*
அல்லவை செய்தொழுகும் வேந்து.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௫௨ (அச்சில் உள்ளவாறு).
“வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு.”
வேல் = கொலைக்கருவி.
இடு = கொடு.
வேலொடு நின்றான் = ஆறலைக்கள்வன்.
கோல் = ஆட்சியுரிமை.
கோலொடு நின்றான் = அரசன்.
இரவு = (பொருளை) கேட்டல்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“வேலொடு நின்ற ஆறலைக்கள்வர் வழிச்செல்வாரிடம் கொடு என்றதுபோலும் ஆட்சிவுரிமையுடைய அரசன் குடிகளிடம் பொருள்கேட்டல்” என்பதாம்.
‘வேலொடு நின்றான்’ என்பது தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘போலும்’ என்னும் உவமைச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றா னிரவு.”
குறள் – ௫௱௫௩ (அச்சில் உள்ளவாறு).
“நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
னாடொறு நாடு கெடும்.”
நாடொறும் → நாள்தோறும் = ஒவ்வொரு நாளும்.
நாடி = ஆராய்ந்து.
முறை = நெறி.
கெடும் = சீரழியும்.
“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவனாடு நாடொறும் கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து நெறிகளைச்செய்யாத மன்னவனது நாடு ஒவ்வொரு நாளும் சீரழியும்” என்பதாம்.
‘நாடொறும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘மன்னவனாடொறும்’ என்பது தழுவாப்புணர்ச்சி. ‘மன்னவன்’ என்பது ‘நாடு’ என்பதைத்தழுவி ‘மன்னவனது நாடு’ என பொருள்தரும். தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”
குறள் – ௫௱௫௪ (அச்சில் உள்ளவாறு).
“கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு.”
கூழ் = பொன், பொருள்.
குடி = மக்கள்.
ஒருங்கு = ஒருசேர.
கோல் = செங்கோல்.
கோடி = முறைதவறி.
சூழாது = கூடி ஆராயாது.
அரசு = அரசன்.
“சூழாது கோல்கோடி செய்யும் அரசு கூழும் குடியும் ஒருங்கிழக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அரசவையைக்கூட்டி ஆராயாது செங்கோல்முறைதவறி செய்யும் அரசன் பொருளையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. எனவே ‘குடியும்’ என்பது புணராது.
‘இழக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
வினையெச்சங்கள் தம்முள் புணருமானாலும் வெவ்வேறு வினைகள் புணராது பிரிந்தே நிற்கும். எனவே ‘கோடிச்சூழாது’ எனப்புணராது. கோடி, சூழாது என்பன வெவ்வேறு வினைகள்.
‘செய்யுமரசு’ என்பதன்கண் வந்த ‘செய்யும்’ என்னும் பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடி
சூழாது செய்யும் அரசு.”
குறள் – ௫௱௫௫ (அச்சில் உள்ளவாறு).
“அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”
அல்லற்பட்டு = துன்பப்பட்டு.
அன்றே = அதுவே.
தேய்க்கும் = அழிக்கும்.
படை = கருவி.
வினையெச்சங்கள் தம்முள் புணருமென்றாலும் வேறுவேறு வினைகளைக்குறிப்பின் புணராது தனித்திருப்பது அவ்வினைகளின் உணர்ச்சியை உணர்த்தும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“அரசனின் நெறியின்மையால் குடிகள் துன்புற்று அத்துன்பத்தால் பொறுக்கமுடியாமல் அழுத கண்ணீரன்றே அவனது செல்வத்தை அழிக்கும் கருவி” என்பதாம்.
செம்மைவடிவம் —
“அல்லற்பட்டு* ஆற்றாது* அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௫௱௫௬ (அச்சில் உள்ளவாறு).
“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.”
மன்னுதல் = நிலைத்தல்.
செங்கோன்மை = முறைதவறாமை, நெறிபிறழாமை.
இன்றேல் = இல்லாயின்.
மன்னாவாம் = நிலைக்காது.
ஒளி = புகழ், மேன்மை.
“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேன் மன்னர்க்கொளி மன்னாவாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மன்னர்க்கு நிலைத்தலைத்தருவது நெறிபிறழாமை. அஃது இல்லையாயின் மன்னர்க்கு புகழ்/மேன்மை நிலைக்காது” என்பதாம்.
‘செங்கோன்மை’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘மன்னாவாம்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேன்
மன்னாவாம் மன்னர்க் கொளி.”
குறள் – ௫௱௫௭ (அச்சில் உள்ளவாறு).
“துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.”
துளி = மழை.
ஞாலம் = உலகம்.
எற்று = எத்தகையது.
அற்றே = அத்தன்மையதே.
அளியின்மை = அருளின்மை.
உயிர்க்கு = குடிகட்கு.
“ஞாலத்திற்கு துளியின்மை எற்று. அற்றே வாழும் உயிர்க்கு வேந்தனருளின்மை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஞாலத்திற்கு மழையின்மை எத்தகையதோ அத்தகையதே வாழும் குடிகளுக்கு வேந்தனது அருளின்மை” என்பதாம்.
‘எற்று’ என்னும் வினா வருமொழியாகி புணராது தனித்துநின்று வினாப்பொருளைத்தரும்.
செம்மைவடிவம் —
“துளியின்மை ஞாலத்திற்கு* எற்று*அற்றே வேந்த
னளியின்மை வாழும் உயிர்க்கு.”
*குற்றியலுகரங்களாகிய குகரமும் றுகரமும் அலகுபெறா.
குறள் – ௫௱௫௮ (அச்சில் உள்ளவாறு).
“இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.”
இன்மை = வறுமை.
இன்னாது = கொடிது.
உடைமை = பொருளுடைமை. கோற்கீழ்ப்படின் = ஆட்சிக்கு உட்படின்.
“முறைசெய்யா மன்னவன்கோற்கீழ்ப்படின் இன்மையின் உடைமை இன்னாதது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெறிபிறழ்ந்த மன்னவனது ஆட்சிக்குட்பட்டு வாழும் வறியாரின் துன்பத்தினும் பொருளுடையாரின் துன்பம் கொடிது” என்பதாம்.
‘இன்மையின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘இன்மை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இன்னாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இன்மையின் இன்னாது* உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௫௯ (அச்சில் உள்ளவாறு).
“முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.”
முறை = நெறி.
கோடி = பிறழ்ந்து.
உறைகோடி = காலந்தவறி.
வானம் = மழை.
ஒல்லாது = செய்யாது.
பெயல் = பெய்தல்.
“மன்னவன் முறைகோடிச்செய்யின் உறைகோடி வானம் பெயல் ஒல்லாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மன்னவன் நெறிபிறழ்ந்து செய்யின் பருவமழை தவறும்; வானம் பொழிதலைச்செய்யாது. பருவத்தே பெய்யும் மழை தவறும்” என்பதாம்.
‘இது நிகழ இது நிகழும்’ என்னும் பொருள்தரும் ‘செய்யின்’ காலமாற்றத்தைக்குறிக்கும் எதிர்காலக்காரணப்பொருள்வினையெச்சம் எதனுடனும் புணராது.
‘உறைகோடியொல்லாது’ என்பது தழுவாப்புணர்ச்சி. இது ‘பருவம் தவறாது’ என்னும் பொருள்தரும். ‘ஒல்லாது’ என்னும் வினைமுற்று ‘பெயல் ஒல்லாது’ என வேறிடம் சென்று பொருந்தி பொருள்தரும். வேறிடஞ்சென்று பொருந்தி பொருள்தரும். தழுவுஞ்சொற்களே புணரும். மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.
செம்மைவடிவம் —
“முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.”
குறள் – ௫௱௬௰ (அச்சில் உள்ளவாறு).
“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.”
ஆ = பசு.
குன்றும் = குறையும்.
அறுதொழிலோர் = அறுவகைத்தொழில்புரிவோர்.
நூன்மறப்பர். = கற்பதும் செய்வதும் மறப்பர்.
காவலன் = காப்பவன் (மன்னன்).
காவான் = காவல் செய்யான்.
எனின் = என்றால்.
“காவலன் காவானெனின் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மன்னன் குடிகளை காவல் செய்யாவிடில் பசுக்கள் தரும் பயன்கள் குறையும்; அறுவகைத்தொழிலைப்புரிவோர் தத்தம் தொழிலைக்கற்பதும் செய்வதும் மறப்பர்” என்பதாம்.
‘குன்றும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




