
குறள் – ௯௱௪௰௧ (அச்சில் உள்ளவாறு).
“மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.”
மிகினும் = மிகுந்தாலும்.
நோய் = உடல்நலக்கேடு, துன்பம்.
நூலோர் = மருத்துவர்.
வளி முதலா மூன்று = காற்று, சூடு, கோழை ஆகிய மூன்று. வாயு, பித்தம், கபம் என்பது பிறமொழிவழக்கு.
எண்ணிய = எண்ணப்பட்ட.
“நூலோர் எண்ணிய வளிமுதலா மூன்று மிகினுங் குறையினும் நோய்செய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘நோய்க்கூறுகளை அறிந்த மருத்துவர் வகுத்த காற்று, சூடு, கோழை ஆகிய மூன்றும் மிகுந்தாலும் குறைந்தாலும் உடல்நலம் கெடும்” என்பதாம்.
எண்ணும்மைகள் பொருண்மயங்காவண்ணம் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மை ‘குறையினும்’ என்பது புணராது.
‘செய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘முதலாக’ என்பதன் கடைக்குறை ‘முதலா’ என்பது. ‘ஆக’ என்னும் விளக்கயிடைச்சொல் முதல் என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“மிகினுங் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.”
குறள் – ௯௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.”
யாக்கை = உடல், உடம்பு.
அருந்தியது = உண்டது.
அற்றது = செரித்தது.
போற்றி = ஆய்ந்தறிந்து.
உணின் = உண்டால்.
“அருந்தியது அற்றது போற்றியுணின் யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உண்டது செரித்ததை ஆய்ந்தறிந்து உண்டால் உடம்புக்கு மருந்தென்பது வேண்டா” என்பதாம்.
‘யாக்கைக்கு’ என்னுமிடத்தில் ஒரு கருத்து முடிகிறது. பொருண்முடிவினைத்தருமிடங்கள் புணரா.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் புணர்ச்சியைப்பிரித்து பொருளறிய வேண்டுமாயின் புணர்த்த வேண்டா. மேலும் இருவேறு வினைகளான அருந்தல், அற்றல் ஆகியன புணராது தனித்துநின்று தத்தம் வினையை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு* அருந்தியது*
அற்றது போற்றி யுணின்.”
*குற்றியலுகரங்களான குகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௯௱௪௰௩ (அச்சில் உள்ளவாறு).
“அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு.”
அற்றாலளவு → அற்ற அளவு (ஆல் என்பது அசைச்சொல்) = செரித்த அளவு.
நெடிது = நெடுங்காலம்.
உய்க்கும் = வாழும்.
ஆறு = வழி.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘அற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“செரித்த அளவறிந்து உண்க. அவ்வாறு உண்ணல் உடம்பினைப்பெற்றான் நெடுங்காலம் வாழும் வழி” என்பதாம்.
‘உண்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அஃதுடம்பு’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘அஃது’ என்பது உண்க என்னும் வினையைச்சுட்டி நிற்கின்றது. ‘உடம்பு’ என்பது ‘பெற்றான்’ என்னும் வினைமுற்றை அவாவுகிறது.
‘உடம்புபெற்றான்’ என்பது நெடுந்தொடரெழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நெடிதுய்க்கும்’ என்பது அடைபெற்ற செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“அற்றால் அளவறிந் துண்க அஃது*உடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௯௱௪௰௪ (அச்சில் உள்ளவாறு).
“அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.”
அற்றது = செரித்தது.
மாறல்ல = பொருந்தாத, மாறுபடாத.
துய்க்க = உண்க.
துவரப்பசித்து = மிகப்பசித்து.
“அற்றதறிந்து துவரப்பசித்து மாறல்ல கடைப்பிடித்து துய்க்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செரித்ததை அறிந்து மிகப்பசித்து மாறுபடாத உணவுகளைத்தேர்ந்து உண்க” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௯௱௪௰௫ (அச்சில் உள்ளவாறு).
“மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை யுயிர்க்கு.”
மாறுபாடில்லாத = பொருந்தாத, மாறுபடாத.
உண்டி = உணவு.
மறுத்து = உள்ளத்தின் விருப்பத்தை மறுத்து.
ஊறுபாடு = நோய், நலக்கேடு.
“மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் உயிர்க்கு ஊறுபாடில்லை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உடலுக்கு மாறுபடாத உணவுகளை உள்ளம் விரும்பும் அளவினை மறுத்து உடம்பின் அளவினைக்கருதி உண்டால் உயிர்க்கு நோய்த்துன்பம் இல்லை” என்பதாம்.
‘மாறுபாடில்லாத உண்டி’ என்பது பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘உண்ணின்’ என்னும் வினையெச்சம் ‘ஊறுபாடு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இல்லை’ என்பது வினைமுற்று. ‘இல்லையுயிர்க்கு’ என்பது முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு.”
குறள் – ௯௱௪௰௬ (அச்சில் உள்ளவாறு).
“இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்கும்
கழிபே ரிரையான்க ணோய்.”
இழிவு = நீக்கம்.
இழிவறிந்து = நீக்கமறிந்து.
நிற்கும் = நிலைக்கும்.
கழிபேரிரையான் = பேருண்டியான். நோய் = துன்பம், உடல்நலக்கேடு.
“இழிவறிந்துண்பான்கண் இன்பம்போல்
கழிபேரிரையான்கண் நோய் நிற்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நீக்கவேண்டியதை அறிந்து நீக்கி உண்பவனிடத்து இன்பம்போல பேருண்டியானிடத்து நோய் நிலைக்கும்” என்பதாம்.
‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘உண்பான்’, ‘இரையான்’ ஆகிய பெயர்களுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழிகளுடன் புணராது.
‘போல்’ என்னும் உவமவுருபு ‘இன்பம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.”
குறள் – ௯௱௪௰௭ (அச்சில் உள்ளவாறு).
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.”
தீயளவு →தீயும் அளவு = செரிக்கும் அளவு.
அன்றி = மேலும்.
தெரியான் = அறியான்.
அளவின்றி = எல்லையின்றி.
படும் = நேரும்.
“தீயளவு தெரியான் அன்றி பெரிதுண்ணின் நோய் அளவின்றிப்படும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செரித்த அளவினை அறியான். மேலும் பெரிது உண்டால் எல்லையில்லா அளவு நோய்வாய்ப்படுவான்” என்பதாம்.
‘அன்றி’ என்னுஞ்சொல் ‘பெரிதுண்ணின்’ என்னுஞ்சொல்லுடன் புணரும். பொருள்பொருந்துஞ்சொற்களே புணரும்.
‘உண்ணின்’ என்னும் வினையெச்சம் ‘நோய்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘நோய்‘ என்பது எழுவாயாம் தன்மையது. எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தீயளவு* அன்றி தெரியான் பெரிதுண்ணின்
நோய் அளவின்றிப் படும்.”
*முற்றியலுகரமாகிய வுகரம் அலகுபெறாது.
குறள் – ௯௱௪௰௮ (அச்சில் உள்ளவாறு).
“நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
நோய் = உடல்நலக்கேடு.
நாடி = ஆராய்ந்து.
நோய்முதல் = நோயின் அடிப்படை.
தணிக்கும் = போக்கும், தீர்க்கும்.
வாய் = வழி.
வாய்ப்ப = பொருந்த.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உடல்நலக்கேட்டினையும் அதற்கான அடிப்படைக்காரணத்தையும் ஆராய்ந்து அந்நோயைப்போக்கும் வழிகளைக்கண்டு பொருந்த செய்க“ என்பதாம்.
‘நாடி’ என்னும் வினையெச்சம் ‘அது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“நோய்நாடி நோய்முத னாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
குறள் – ௯௱௪௰௯ (அச்சில் உள்ளவாறு).
“உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்.”
உற்றான் = நோயுற்றான்.
நோயுற்றானளவு = நோயுற்றானது உடலளவு.
பிணியளவு = நோயின் வலிமை.
காலம் = நோயின் காலம்.
கற்றான் = மருத்துவன்.
கருதி = ஆராய்ந்து.
செயல் = செய்க.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நோயுற்றானது உடலளவினையும், நோயின் வலிமையையும், நோயின் காலத்தையும் மருத்துவன் ஆராய்ந்து மருத்துவம் செய்க” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘காலமும்’ என்பது புணராது.
செம்மைவடிவம் —
“உற்றா னளவும் பிணியளவுங் காலமும்
கற்றான் கருதிச் செயல்.”
குறள் – ௯௱௫௰ (அச்சில் உள்ளவாறு).
“உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.”
உற்றவன் = நோயுற்றவன்.
தீர்ப்பான் = நோய்தீர்ப்பான், மருத்துவன்.
உழைச்செல்வான் = மருத்துவ உதவியாள்.
அப்பால் = அவ்வியல்.
நாற்கூற்றே = நான்கு பகுதியை உடையது.
மருந்து = மருத்துவம்.
“உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வானென்று அப்பால் மருந்து நாற்கூற்றே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நோயுற்றவன், மருத்துவன், மருந்து, மருத்துவ உதவியாள் ஆகியன மருத்துவமென்னும் அவ்வியலின் நான்கு பிரிவுகள்” என்பதாம்.
இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் மற்றொரு பெயர்ச்சொல்லுக்கு வருமொழியாகி புணராது. மருந்து, உழைச்செல்வான் ஆகிய இரண்டும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள்.
‘என்று’ என்னும் இடைச்சொல் ‘உழைச்செல்வான்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அவ்வியல்’ எனப்பொருள்படும் ‘அப்பால்’ என்னும் சுட்டுப்பெயர்ச்சொல் இயல்புப்பொருளைத்தருகிறது. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உற்றவன் தீர்ப்பான் மருந்து*உழைச் செல்வானென்று*
அப்பால்நாற் கூற்றே மருந்து.”
*குற்றியலுகரங்களாகிய துகரமும் றுகரமும் அலகுபெறா.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




