இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு- ௫௯. ஒற்றாடல்.

குறள் – ௫௱௮௰௧ (அச்சில் உள்ளவாறு).

“ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.”

ஒற்றும் = உளவும்.
உரைசான்ற நூலும் = நெறிகளை விளக்கும் நூலும்.
தெற்று = தெளிவு.

“ஒற்றும் உரைசான்ற நூலும் இவ்விரண்டும் மன்னவன்கண் தெற்றென்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உளவும் நெறிகளை விளக்கும் நூலும் ஆகிய இவ்விரண்டும் மன்னவனிடத்து தெளிவாக வேண்டும்” என்பதாம்.

எண்ணும்மைகள் தம்முள் புணரும்; பிறவற்றுடன் புணராது. எனவே ‘நூலும்’ என்னுஞ்சொல் புணராது.

‘இரண்டும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஒற்று முரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.”

 

குறள் – ௫௱௮௰௨ (அச்சில் உள்ளவாறு).

“எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.”

எஞ்ஞான்றும் = எப்போதும்.
வல் = விரைந்து.

“எல்லார்க்கும் நிகழ்பவையெல்லாம் எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன்றொழில்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எல்லார்க்கும் நிகழ்வனயெல்லாம் எப்போதும் விரைந்தறிதல் வேந்தனது தொழில்” என்பதாம்.

‘எல்லார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.

‘நிகழ்வனவற்றை’ எனவிரியும் ‘நிகழ்பவை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபு தொக்குநிற்குஞ்சொல் எஞ்ஞான்றும் என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமைவுருபு வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.”

 

குறள் – ௫௱௮௰௩ (அச்சில் உள்ளவாறு).

“ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.”

ஒற்றினால் = உளவினால்.
ஒற்றி = உளவறிந்து.
பொருள் = உண்மை.
கொற்றம் = வெற்றி.
கொளக்கிடந்த = அடையக்கூடிய.
இல் = இல்லை.

“ஒற்றினால் ஒற்றி பொருடெரியா மன்னவன் கொளக்கிடந்த கொற்றம் இல்(லை)” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“உளவினால் உளவறிந்து உண்மையை அறியாத மன்னவன் அடையக்கூடிய வெற்றி எதுவுமில்லை” என்பதாம்.

‘ஒற்றினால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியைபெற்று ‘ஒற்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஒற்றி’ என்னும் வினையெச்சம் ‘பொருள்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘கொற்றம்’ என்னுஞ்சொல் ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் சென்றுகூடும். வேறோரிடஞ்சென்று பொருந்தி பொருள்தருஞ்சொற்கள் புணராது.

‘கிடந்ததில்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்று ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபாக மயங்குகிறது. புணர்ச்சியைப்பிரித்து பொருளுணர்வதாயின் புணர்த்தவேண்டா. பொருள்மயங்குபுணர்ச்சி மொழியில் இல்லை.

செம்மைவடிவம் —
“ஒற்றினால் ஒற்றி பொருடெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது* இல்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௮௰௪ (அச்சில் உள்ளவாறு).

“வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று.”

வினைசெய்வார் = அரசுப்பணிகளைச்செய்வார்.
வேண்டாதார் = விரும்பாதார், பகைவர்.
ஒற்று = உளவு.

“வினைசெய்வார், தஞ்சுற்றம், வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘ஆங்கு’ என்பது ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்து ‘என்று’ என்னும் இடைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘அனைவரையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘ஆராய்வது’ என்னும் வினையெச்சம் ‘ஒற்று’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்கு*
அனைவரையும் ஆராய்வது* ஒற்று.”

*குற்றியலுகரங்களாகிய குகரமும் துகரமும் அலகுபெறா.

 

குறள் – ௫௱௮௰௫ (அச்சில் உள்ளவாறு).

“கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
உகாஅமை வல்லதே வொற்று.”

கடாஅ = வினவா.
கடாஅவுரு= வினவாத தோற்றம், ஐயப்படாத வடிவம்.
கண்ணஞ்சாது = நோக்குவாரின் கண்களுக்கு அஞ்சாது. தம்கண்ணில் அச்சம் தோன்றாது.
யாண்டும் = எவ்விடத்தும், எவ்வகையிலும்.
உகு → உகுத்தல் = உதிர்த்தல், வெளிப்படுத்தல்.
உகாஅமை → உகாமை = உள்ளதை வெளியிடாமை.
ஒற்று = ஒற்றன், உளவாளி.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“(ஐயப்பட்டு) வினவ இயலாத தோற்றத்தொடு காண்பார்க்கு அஞ்சாது எவ்விடத்தும், எவ்வகையிலும் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமை வல்லவனே ஒற்றன்” என்பதாம்.

‘கண்ணஞ்சாது’ என்னும் வினையெச்சம் ‘யாண்டும்’ என்னும் இடப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘யாண்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘வல்லதே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கடாஅ வுருவொடு கண்ணஞ்சாது* யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௮௰௬ (அச்சில் உள்ளவாறு).

“துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.”

துறந்தார் = பற்றற்றார்.
படிவம் = கோலம், வடிவம், நிலை.
இறந்து = முடிவு.
இறந்தாராய்ந்து = இறுதிவரை ஆராய்ந்து.
சோர்வு = தளர்வு, மறதி.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“தன்செயல்களில் பற்றற்றார்போன்றவராகி முடிவுவரை ஆராய்ந்து எதனைச்செய்தாலும் அதனில் தளர்விலன் ஒற்றன்” என்பதாம்.

‘படிவத்தராகி’ என்னும் வினையெச்சம் ‘இறுதி’ என்னும் பொருள்தரும் ‘இறந்து’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘ஆராய்ந்து’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘இலது’ என்னும் குறிப்புவினைமுற்று இயல்புப்பொருள்தரும் ‘ஒற்று’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘என்செயினும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து*
என்செயினும் சோர்விலது* ஒற்று.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௮௰௭ (அச்சில் உள்ளவாறு).

“மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று.”

கேட்க = அறிய.
வற்றாகி = (விருப்பம்) இல்லாராகி.
ஐயப்பாடு = ஐயம்.
இல்லதே = இல்லாததே.
ஒற்று = ஒற்றன்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“வெளிப்படாதவற்றை அறியும் விருப்பமிலராக தோற்றி, அறிந்தவற்றில் ஐயமில்லாதவனே ஒற்றன்” என்பதாம்.

‘வற்றாகி’ என்னும் வினையெச்சம் ‘அறிந்தவை’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘அறிந்தவையையப்பாடு’ என்பது ‘அறிந்தவைகளில் ஐயப்பாடு’ எனவிரியும். ஏழாம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும். ‘ஐயப்பாடு’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது.

‘இல்லதே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று.”

 

குறள் – ௫௱௮௰௮ (அச்சில் உள்ளவாறு).

“ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.”

ஒற்று = ஒற்றன்
ஒற்றி = உளவறிந்து.
கொளல் = ஏற்றல்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஒற்றனொருவனால் உளவறிந்து சொல்லப்பட்ட பொருளையும் மற்றொரு ஒற்றனால் உளவறிந்து சொல்லப்பட்ட பொருளையும் அறிக” என்பதாம்.

‘ஒற்று’ என்பது ‘ஒற்றன்’ என்னும் எழுவாயாம். திரிபில்பெயர்ச்சொல்லான எழுவாய் எதனுடனும் புணராது.

‘பொருளையும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது .

‘ஒற்றினால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ என்னும் சாரியை பெற்று ‘ஒற்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஒற்று*ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோ
ரொற்றினால் ஒற்றிக் கொளல்.”

*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱௮௰௯ (அச்சில் உள்ளவாறு).

“ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.”

ஒற்று = ஒற்றன்.
உணராமை = அறியாமை, அறியவொண்ணாது.
தொக்க = தொகுத்து.
தேறப்படும் = துணியப்படும், தெளியப்படும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“ஒற்றர்களை ஒருவரையொருவர் அறியவாறு கையாள்க. அத்துடன் மூன்று‌ ஒற்றர்களால் ஒற்றி அறியப்பட்ட பொருளை தொகுத்துத்தெளியவேண்டும்” என்பதாம்.

‘உணராமை’ என்பது எதிர்மறைப்பண்புப்பெயர். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘ஆள்க’ என்பது ஏவல்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.”

 

குறள் – ௫௱௯௰ (அச்சில் உள்ளவாறு).

“சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை.”

சிறப்பு = பரிசு, பாராட்டு.
அறிய = பிறரறிய.
ஒற்றின்கண் = ஒற்றனுக்கு.
புறப்படுத்தான் = வெளிப்படுத்தியது.
மறை = மறைக்கவேண்டும் பொருள்.

“ஒற்றின்கண் சிறப்பு அறிய செய்யற்க செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒற்றனுக்கு செய்யும் சிறப்புகளை பலரறிய செய்யற்க. அவ்வாறு செய்தால் மறைபொருளை வெளிப்படுத்தியதாகும்” என்பதாம்.

‘சிறப்பறிய’ என்பது தழுவாப்புணர்ச்சி. ‘அறிய’ என்னும் வினையெச்சம் ‘செய்யற்க’ என்னும் வினைமுற்றை அவாவும்/ தழுவும். ‘சிறப்பு’ என்னும் பெயர்ச்சொல் ‘ஒற்றின்கண்’ என்னும் வேற்றுமைவிரியைத்தழுவும். தழுவுஞ்சொற்களே புணரும். வேறோரிடஞ்சென்று பொருந்தி பொருள்தருஞ்சொற்கள் புணராது.

‘அறிய’ என்னும் வினையெச்சம் ‘ஒற்று’ (ஒற்றன்) என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘ஒற்றின்கண்’ என்னுஞ்சொல்லில் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியைபெற்று ‘ஒற்று’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘செய்யின்’ என்னும் எதிர்காலக்காரணப்பொருள்வினையெச்சம் புணராது தனித்து நின்று காரியத்தைப்பிரித்தறிவிக்கும்.

‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“சிறப்பு*அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.”

*குற்றியலுகரமாகிய புகரம் அலகுபெறாது.

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி,
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button