இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௫௰. இடனறிதல்.

குறள் – ௪௱௯௧ (அச்சில் உள்ளவாறு).

“தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது.”

முற்றும் = முடிக்கும்.
எள்ளற்க = இகழவேண்டா.

“முற்றுமிடம் கண்ட பின்னல்லது எவ்வினையும் தொடங்கற்க; எவ்வினையும் எள்ளற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘எவ்வினையும்’ என்பது ஈரிடத்தும் சென்று பொருந்தும்.

“ஒரு செயலைச்செய்து முடித்தற்குரிய இடத்தினை கண்ட பின்னரே எச்செயலையும் தொடங்கவேண்டும். செய்யக்கருதும் எச்செயலையும் எளியதென இகழவேண்டா” என்பதாம்.
‘தொடங்கற்க’ என்பது வியங்கோள்வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எவ்வினையும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மை வடிவம் —
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.”

 

குறள் – ௪௱௯௨ (அச்சில் உள்ளவாறு).

“முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்.”

முரண் = பல்வகை (மாறுபாடான).
மொய்ம்பு = வலிமை, வல்லமை .
அரண் = பாதுகாப்பான இடம்.
ஆம் → ஆகும் = உண்டாகும்.
ஆக்கம் = நன்மை, மேம்பாடு .

சொற்பிரிப்பு — “முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவுந்தரும்.”

“மாறுபாட்டோடுகூடிய (பல்வகை) வலிமையோர்க்கும் அரணைச்சேர்ந்ததனால் (பாதுகாப்பான இடத்தினால்) உண்டாகும் மேம்பாடு பல நலன்களையும் தரும்” என்பதாம்.
‘மொய்ம்பினவர்க்கும்’ என்பதன்கண் வந்த உம்மை உயர்வுச்சிறப்பும்மை. சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘ஆம் ஆக்கம்’ (ஆகும் ஆக்கம்) என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.”

 

குறள் – ௪௱௯௩ (அச்சில் உள்ளவாறு).

“ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்.”

ஆற்றார் = ஆற்றல் இல்லார்.
ஆற்றி = செய்து.
அடுப = முடிப்பர் (வெல்வர்).
போற்றார் = பகைவர்.
போற்றி = காத்து.

“போற்றார்கண் இடனறிந்து போற்றி செயின் ஆற்றாரும் ஆற்றி அடுப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செயலை முடித்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து தம்மைக்காத்து பகைவர்மாட்டு வினைசெய்வாராயின் ஆற்றல் இல்லாதாரும் வினைமுடித்து வெல்வர்” என்பதாம்.
‘ஆற்றாரும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘அடுப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘போற்றார்கண்’ என்பதில் வந்த ஏழாம்வேற்றுமைவுருபான ‘கண்’, ‘போற்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஆற்றாரும் ஆற்றி யடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.”

 

குறள் – ௪௱௯௪ (அச்சில் உள்ளவாறு).

“எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.”

எண்ணினார் = (இடையூறு) கருதியவர்.
எண்ணமிழப்பார் = கருதியதை முடிக்கார்.
துன்னியார் = பொருந்தியவர்.
துன்னி = ஆராய்ந்து.

“இடனறிந்து துன்னியார் துன்னிச்செயின் எண்ணியார் எண்ணமிழப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இடனறிந்து அதனுடன் பொருந்தியவர் ஆராய்ந்து செய்தால் அச்செயலுக்கு இடையூறுகருதியவர் கருதிய எண்ணத்தை இழப்பர்” என்பதாம்.
‘எண்ணியார்’ என்பது எழுவாய். திரிபில்பெயர்ச்சொல்லாகும் எழுவாய் எதனுடனும் புணராது.
‘இழப்பர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“எண்ணியார் எண்ண மிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.”

 

குறள் – ௪௱௯௫ (அச்சில் உள்ளவாறு).

“நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.”

நெடும்புனல் = ஆழ்நிலை நீர்.
அடும் = வெல்லும்.
பிற = ஏனைய விலங்குகள்.

“நெடும்புனலுள் முதலை வெல்லும் புனலின் நீங்கின் அதனை பிற அடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆழமான நீரின்கண் முதலை பிறவற்றை வெல்லும். அப்புனலின் நீங்குமாயின் அம்முதலையை பிற வெல்லும்” என்பதாம்.
‘வெல்லும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அடும்’ என்னும் வினைமுற்றின் எழுவாய் ‘பிற’ என்பதாம். எனவே ‘முதலை’ என்னும் எழுவாயுடன் புணராது.
‘புனலின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘புனல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நீங்கின்’ என்னும் வினையெச்சம் ‘அதனை’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. ‌வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அதனை’ என்னும் ஐயுருபேற்ற சொல் ‘பிற’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனை பிற.”

 

குறள் – ௪௱௯௬ (அச்சில் உள்ளவாறு).

“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து.”

கால்வல் = வலிய உருளிகள்.
நெடுந்தேர் = உயர்ந்த தேர்.
நாவாய் = மரக்கலம்.

“கால்வனெடுந்தேர் கடலோடா. கடலோடுநாவாயும் நிலத்தோடா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வலிய உருளிகளையுடைய நெடுந்தேர் கடலில் ஓடாது. கடலின்கண் ஓடும் மரக்கலன் நிலத்தில் ஓடாது” என்பதாம்.
‘நாவாயும்’ என்பதன்கண் வந்தது தெரிநிலைவும்மை. தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயும் ஓடா நிலத்து.”

 

குறள் – ௪௱௯௭ (அச்சில் உள்ளவாறு).

“அஞ்சாமை யல்லாற் துணைவேண்டா வெஞ்சாமை
வெண்ணி யிடத்தாற் செயின்.”

எஞ்சாமை = விடுபடாது, முற்றாக.

‘அல்லால்’ என்னுஞ்சொல் ‘அஞ்சாமை’ என்பதனைத்தழுவும்; ‘துணை’ என்பதனையன்று. தழுவுஞ்சொற்களே புணரும்.
‘வேண்டா’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எஞ்சாமை’ என்பது ‘முற்று’ என்னும் பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. ‘முற்றாக’ எனப்பொருள்தருகிறது. முற்றாக என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் எதனுடனும் புணராது.
‘எண்ணி’ என்னும் வினையெச்சம் ‘இடம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இடத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘இடம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.”

 

குறள் – ௪௱௯௮ (அச்சில் உள்ளவாறு).

“சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்.”

செல்லிடம் = (தனக்கு) அரணான இடம்.
சேரின் = அடைந்தால்.
உறுபடையான் = பெரும் படையான்.
ஊக்கம் = எண்ணம், முயற்சி.

“சிறிய படையை உடையவன் தனக்கு அரணான இடத்தைச்சென்றடைந்து விடுவானாயின் அவனை வெல்லக்கருதிய பெரும்படையுடையானது எண்ணம், முயற்சி அழிந்துவிடும்” என்பதாம்.
‘சேரின்’ என்னும் வினையெச்சம் ‘உறுபடையான்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘ஊக்கமழிந்து’ என்னும் புணர்ச்சியில் ‘ஊக்கம்’ என்னும் பெயரின் மவ்வீறு கெடவில்லை. எனவே ‘மழிந்து’ எனவொலித்து ‘அழிந்து’ என பொருள் கொள்ளமுடியாது. ‘மழிந்து’ எனவொலித்து ‘ஊக்கம்’ எனவும் அறியமுடியாது. பொருள் சிதையாவண்ணமே உடல்மேல் உயிரேறும்.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையா
னூக்கம் அழிந்து விடும்.”

 

குறள் – ௪௱௯௯ (அச்சில் உள்ளவாறு).

“சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது.”

சிறைநலன் = அரணின் பாதுகாப்பு.
சீர் = பிற நலன்கள்.
உறைநலன் = நிலைத்து வாழுமிடம்.
ஒட்டல் = நெருங்கித்தாக்குதல்.
அரிது = இயலாது.

“அழித்தற்கரிய அரண்சிறப்பும் பெரும்படையும் பெரும்பொருளுமாகிய பிற பெருமையும் இல்லாதவராயினும்; மாந்தர் நிலையாக வசிக்கும் இடத்திற்குச்சென்று அவரைத்தாக்குதல் இயலாததாம்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள்தாம் புணரும்; பிறவற்றுடன் புணராது.
‘எனினும்’ என்னும் காரணயிடைச்சொல் ‘இலர்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளைஇழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘மாந்தர்’ என்பது எழுவாய். திரிபில்பெயர்ச்சொல்லான எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஓடு’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘நிலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு* ஒட்ட லரிது.”

* குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.

 

குறள் – ௫௱ (அச்சில் உள்ளவாறு).

“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.”

ஆழ் = அமிழும், சிக்கும்.
களரின் = சேற்றுநிலத்தில்.
அடும்= வெல்லும்.
வேலாண் → வேலாள் = வேலேந்தியவர்.
முகத்த = குத்திக்கோத்த (அள்ளிய).
களிறு = யானை.

“போர்க்களத்தில் யார்க்கும் அஞ்சாத வேலேந்திய வீரர்களை, கொம்புகளில் குத்திக்கோத்து அள்ளிய யானையை அதனது கால்கள் அமிழும் (சிக்கும்) சேற்றுநிலத்தில் அகப்பட்டவிடத்து நரி கொல்லும்” என்பதாம்.
“கண்ணஞ்சாவேலாள்முகத்த களிறு கால் ஆழ் களரின் நரி அடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘களரின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘களர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நரி’ என்பது எழுவாய். திரிபில்பெயர்ச்சொல்லான எழுவாய் எதனுடனும் புணராது.
‘அடும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காலாழ் களரின் நரிஅடும் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு.”

தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button