
குறள் – ௫௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
யுண்மையா னுண்டிவ் வுலகு.”
கண்ணோட்டம் = இரக்கம்.
கழிபெரும் = மிகப்பெரும்.
காரிகை = நிறைபண்பு (இப்பொருள் = contextual meaning).
உண்மையான் = உள்ளதால்.
“கண்ணோட்டமென்னும் கழிபெருங்காரிகை உண்மையான் இவ்வுலகு உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“இரக்கமென்னும் மிகப்பெரும் நிறைபண்பு இருப்பதால் இவ்வுலகம் இருந்து வருகின்றது” என்பதாம்.
‘என்னும்’ என்ற உவமச்சொல் ‘கண்ணோட்டம்’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘உண்மையான்’ என்னும் காரணக்கிளவியை அடுத்து காரணப்பொருள் எடுத்துரைக்கப்படுகிறது. எனவே காரணக்கிளவி புணராது தனித்துநின்று காரணப்பொருளை தெளிவுறுத்தும்.
கொண்டுகூட்டில் ‘இவ்வுலகு உண்டு’ என வினைமுற்று பயனிலையாகும். வேறோரிடஞ்சென்று பொருள்தருஞ்சொல் புணராது; புணரின் பிரியாது.
செம்மை வடிவம் —
“கண்ணோட்ட மென்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டு*இவ் வுலகு.”
* குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை.”
உலகியல்= உலகவாழ்க்கை.
உண்மை = இருப்பது.
நிலக்கு = நிலத்திற்கு.
பொறை = சுமை.
“உலகியல் கண்ணோட்டத்து உள்ளது. அஃதில்லார் உண்மை நிலக்கு பொறை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உலகோரது வாழ்க்கை இரக்கமென்னும் நிறைபண்பால் இயங்குகிறது. அக்கண்ணோட்டமில்லார் இருப்பது நிலத்திற்கு சுமை” என்பதாம்.
‘உள்ளது’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. செய்யுளில் ‘உலகியல்’ என்பது பெயர்ப்பயனிலையாம் முற்றுச்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘அஃதிலார்’ என்பது திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நிலத்திற்கு’ எனப்பொருள்தரும் ‘நிலக்கு’ (செய்யுள்விகாரம்) என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பொறை’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும்பெயர்களுடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் –
“கண்ணோட்டத் துள்ளது* உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்கு பொறை.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்.”
பண் = இசை.
என்னாம் = எதற்கு.
இயைபின்றேல் = பொருத்தமின்றேல்.
கண் = காணும் உறுப்பு.
கண்ணோட்டம் = இரக்கம்.
கண் = இடத்து (ஏழாம்வேற்றுமைவுருபு).
“பாடற்கு இயைபின்றேல் பண்ணென்னாம். கண்ணோட்டம் இல்லாதகண் கண்ணென்னாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பாட்டிற்கு பொருத்தமின்றேல் இசை எதற்கு. கண்ணோட்டம் இல்லாதவிடத்து கண் எதற்கு” என்பதாம்.
‘இன்றேல்’ என்பதன்கண் வந்த ‘ஏல்’ என்னும் விகுதி ‘இன்று’ என்னும் குறிப்புவினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கண்ணென்னாம்’ என்னும் வினாச்சொல் புணராது தனித்துநின்று தன்வினாப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்ட மில்லாத கண்.”
குறள் – ௫௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற்
கண்ணோட்ட மில்லாத கண்.”
அளவினான் = ஆய்ந்தறிவதால்.
உளபோன் → உளபோல் = உள்ளதுபோன்ற (தோற்றம்).
கண்ணோட்டம் = இரக்கம்.
“அளவினால் கண்ணோட்டமில்லாத கண் முகத்து உளபோன் தோற்றம் எவன் செய்யும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘தோற்றம்’ என்பது சொல்லெச்சம்.
“ஆய்ந்தறிவதால் கண்ணோட்டம்பெறாத கண்கள் முகத்தில் இருப்பனபோன்று தோன்றுவதால் என்செய்யும்; பயனில்லை” என்பதாம்.
‘முகத்தெவன்’ என்பது தழுவாப்புணர்ச்சி. ‘எவன்’ என்பது செய்யுமென்னும் வினைமுற்றை தழுவி வினாப்பொருள்தரும். தழுவுஞ்சொற்களே புணரும்.
‘செய்யும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அளவினான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இன்’ சாரியை பெற்று ‘அளவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உளபோன் முகத்து*எவன் செய்யும் அளவினான்
கண்ணோட்ட மில்லாத கண்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௫ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.”
“கண்ணோட்டம் கண்ணிற்கு அணிகலன். அஃது இன்றேல் புண்ணென்று உணரப்படும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கண்ணிற்கணிகலன்’ என்பது ‘கண்ணிற்கு அணிகலன்’ எனவிரியும். நான்காம்வேற்றுமையாம் குவ்வுருபு வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமையாம் குவ்வுருபு வினைசார்ந்து பொருள்தரும்பெயருடன்மட்டுமே புணரும்.
‘கண்ணோட்டம்’ என்னும் இயல்புப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது. மேலும் செய்யுளில் இது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகின்றது. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘இன்றேல்’ என்பதன்கண் வந்த ‘ஏல்’ என்னும் விகுதி ‘இன்று’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணிற்கு* அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென் றுணரப் படும்.”
* குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௬ (அச்சில் உள்ளவாறு).
“மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.”
இயைந்த = பொருந்திய.
அனையர் = ஒத்தவர்.
கண் = காணும் உறுப்பு.
கண் → கண்ணோட்டம் = இரக்கம்.
ஓடாதவர் = கொள்ளாதவர்.
“கண்ணோடு
இயைந்து கண்ணோடாதவர் மண்ணோடு இயைந்த மரத்தனையர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கண்களொடு பொருந்தி கண்ணோட்டங்கொள்ளாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர்” என்பதாம்.
‘மண்ணோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘மண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கண்ணோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“மண்ணோடு* இயைந்த மரத்தனையர் கண்ணோடு*
இயைந்துகண் ணோடா தவர்.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௭ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையு மில்.”
இல்லவர் = அற்றவர், இல்லாதவர்.
இன்மையும் = இல்லாததும்.
இல் = இல்லை.
“இரக்கமற்றவர் கண்கள் இல்லாதவர். கண்களை உடையவர் இரக்கம் இலராதலும் இல்லை” என்பதாம்.
‘இன்மையும்’ என்பது எச்சவும்மைச்சொல். எச்சவும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையும் இல்.”
குறள் – ௫௱௭௰௮ (அச்சில் உள்ளவாறு).
“கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு.”
கருமம் = வினை, செயல்.
சிதையாமல் = கெடாமல்.
உரிமையுடைத்து = உரியது.
“செயல் கெடாமல் இரக்கம்காட்டவல்லார்க்கு உரியது இவ்வுலகு” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘கருமம்’ என்பது இயல்புப்பொருள்தருஞ்சொல். இயல்புப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘சிதையாமல்’ என்பதன்கண் வந்த ‘மல்’ என்னும் விகுதி ‘சிதையா’ என்னும் எதிர்மறை எச்சவினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வல்லார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமையாம் குவ்வுருபேற்ற சொல் இயல்புப்பொருள்தரும் ‘உரிமை’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும்பெயர்களுடன்மட்டுமே புணரும்.
‘உரிமையுடைத்து’ என்பதனினும் ‘உரிமைவுடைத்து’ என வகரவுடம்படுமெய் பெறுவது ஒலியொப்புமையும் பொருட்டெளிவும் கொண்டது. “உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” என்பது தொல்காப்பியம்.
செம்மைவடிவம் —
“கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு*
உரிமை வுடைத்திவ் வுலகு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௫௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.”
ஒறுத்து = வருத்தி.
ஆற்றும் = ஒழுகும்.
தலை = தலையாயது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நம்மை வருத்தியொழுகும் பண்புடையார்கண்ணும் இரக்கங்கொண்டு பொறுத்தொழுகும் பண்பே தலையாயது” என்பதாம்.
‘பண்பினார்கண்ணும்’ என்பதன்கண் இழிவுச்சிறப்பும்மை வந்தது. இழிவுச்சிறப்பும்மை எதனுடனும் புணராது.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு வினைகள் புணராது தனித்துநிற்கும். கண்ணோடுதல், பொறுத்தல் என்னும் வினைகள் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை.”
குறள் – ௫௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”
பெய = ஊற்ற.
நயத்தக்க = யாவரானும் விரும்பப்படும், போற்றத்தக்க.
நாகரிகம் = கண்ணோட்டம் (அதிகாரமுறையான் பெறப்பட்ட பொருள்).
“நயத்தக்க நாகரிகம்வேண்டுபவர் பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“எல்லோராலும் விரும்பப்படும் போற்றத்தக்க கண்ணோட்டத்தை விரும்புபவர் தமக்கு நஞ்சிடக்கண்டும் அந்நஞ்சை உண்டு நிறைவடைவர்” என்பதாம்.
‘கண்டும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




