இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — அரசியல். தலைப்பு - ௪௪. குற்றங்கடிதல். (கடிதல் = விலக்குதல்).

குறள் – ௪௱௩௧ (அச்சில் உள்ளவாறு).

“செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.”

செருக்கு = ஆணவம்.
சிறுமை = இழிவு.
பெருக்கம் = சிறப்பு (செல்வம்).
பெருமிதம் = பெருமை.
நீர்த்து = உடையது.

“செருக்கும் சினமும் சிறுமையும் இல்லாரது சிறப்பு (செல்வம்) பெருமையை உடையது” என்பதாம்.

எண்ணும்மை எண்ணுப்பொருளில்மட்டும் புணரும்; பிறவற்றுடன் புணராது.

‘சிறுமையுமில்லார்’ என்பது ஒலிக்கவியலாப்புணர்ச்சி. ‘சிறுமையும்’ என்னும் சொல்லின் ஈற்றுமகரம் கெடவில்லை. ஒலியாயெழுத்து தமிழில் இல்லை. ஈற்றுமகரத்தை ஒலிக்கும்போது புணர்ச்சி தானே நீங்கும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.”

 

குறள் – ௪௱௩௨ (அச்சில் உள்ளவாறு).

“இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.”

இவறல் = ஈயாமை.
மாண்பு = பெருமை.
இறந்த = இழந்த.
மானம் = தன்னிலைதாழாமை.
மாணா = அளவிறந்த.
உவகை = களிப்பு, மகிழ்ச்சி.
ஏதம் = குற்றம்.
இறை = அரசர்.

எண்ணும்மை எண்ணுப்பொருளில்மட்டும் புணரும்; பிறவற்றுடன் புணராது. ‘உவகையுமேதம்’ என்றவாறு புணராது.

‘உவகையும்’ என்னும் எண்ணும்மையுடன் இயல்புப்பொருள்தரும் ‘ஏதம்’ என்னும் பெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.

இயல்புப்பொருள்தரும் ‘ஏதம்’ என்னும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

“இவறலும் மாண்பிறந்தமானமும் மாணாவுவகையும் இறைக்கு ஏதம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஈயாமை, மாண்பிழந்த மானம், அளவிறந்த களிப்பு ஆகியன அரசர்க்கு குற்றம்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையும் ஏதம் இறைக்கு.”

 

குறள் – ௪௱௩௩ (அச்சில் உள்ளவாறு).

“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.”

தினைத்துணை = தினைப்பயிரளவு.
பனைத்துணை = பனைமரத்தளவு.
நாணுவார் = அஞ்சுவார்.

“பழிநாணுவார் தினைத்துணையாங்குற்றம் வரினும் பனைத்துணையா கொள்வர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பழிக்கு நாணுவார் தம்மேல் தினையளவு குற்றம் வந்தாலும் அதனை பனையளவாக கொள்வர்” என்பதாம்.

‘பனைத்துணையாக’ என்பதன் கடையெழுத்து குறைந்து ‘பனைத்துணையா’ என நின்றது. ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மை வடிவம் —
“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையா
கொள்வர் பழிநாணு வார்.”

 

குறள் – ௪௱௩௪ (அச்சில் உள்ளவாறு).

“குற்றமே காக்க‌ பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை.”

காக்க = செய்யற்க.
பொருள் = மெய், வாழ்வின் பயன்.
ஏ = தேற்றேகாரம்.
அற்றம் = இறுதி, முடிவு.

“குற்றமே அற்றந்தரூஉம் பகை குற்றமே காக்க‌ பொருளாக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குற்றமே ஒருவற்கு இறுதியைத்தரும் பகை. குற்றம் செய்யாமையே வாழ்வின்பயன்” என்பதாம்.

தேற்றேகாரம் எதனுடனும் புணராது; புணரின் விட்டிசைத்துப்பெறும் தேற்றேகாரத்தின் அறுதிப்பொருள் கெடும்.

‘பொருளாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“குற்றமே காக்க‌ பொருளாக குற்றமே
அற்றந் தரூஉம் பகை.”

 

குறள் – ௪௱௩௫ (அச்சில் உள்ளவாறு).

“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”

வருமுன்னர் = நிகழாமுன்னர்.
காவாதான் = தடுக்காதவன்.
எரி = நெருப்பு.
எரிமுன்னர் = நெருப்பின்மேல்.
வை = வைக்கோல்.
தூறு = குவியல்
வைத்தூறு = வைக்கோற்குவியல்.

“குற்றம் நிகழாமுன்னர் தடுக்காதவனது வாழ்க்கை நெருப்பின்மேல் வைக்கப்பட்ட வைக்கோற்குவியற்போல எரிந்தழியும்” என்பதாம்.

‘காவாதான்வாழ்க்கை’ என்பது தொடரெழுவாய். எழுவாய் வருமொழியாகி புணராது. எழுவாய் எதனுடனும் புணராது.

‘போல’ என்னும் உவமவுருபு வருமொழியுடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போல கெடும்.”

 

குறள் – ௪௱௩௬ (அச்சில் உள்ளவாறு).

“தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு.”

இறை = அரசன்.
பின் = பின்னர்.
என் = யாது.

“தன்குற்றநீக்கி பின் பிறர்குற்றங்காண்கின் இறைக்கு ஆகுங்குற்றம் என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தனது குற்றங்களை நீக்கி பின்னர் பிறரது குற்றங்களைக்கண்டால் அரசனுக்கு உண்டாகும் குற்றம் யாது; யாதுமில்லை” என்பதாம்.

‘நீக்கி’ என்னும் வினையெச்சம் ‘பிறர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘காண்கின்’ என்னும் வினையெச்சம் ‘பின்’ (பின்னர்) என்னும் காலப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘என்’ என்னும் வினாப்பெயர் வருமொழியாகி புணராதுநின்று வினாப்பொருளை தெளிவாக காட்டும்.

செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சமான ‘ஆகும்’ என்பது ‘குற்றம்’ என்னும் பெயரை முடிக்குஞ்சொல்லாக கொள்ளும்; ‘இறை’ என்பதை முடிக்குஞ்சொல்லாக கொள்ளாது. ‘இறைக்கு ஆகுங்குற்றம் என்’ என்றவாறு கொண்டுகூடி பொருள்தரும். பிரிந்து வேறிடம்சென்று பொருள்தருஞ்சொற்கள் புணரா.

செம்மைவடிவம் —
“தன்குற்ற நீக்கி பிறர்குற்றங் காண்கின்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.”

 

குறள் – ௪௱௩௭ (அச்சில் உள்ளவாறு).

“செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.”

செயற்பால = செய்யத்தக்கன.
இவறியான் = பற்றுகொண்டான்.
உயற்பால= உயர்வுதருவன.
அன்றி = அல்லாமல்.
கெடும் = அழியும்.

“செயற்பால செய்யாது இவறியான்செல்வம்
உயற்பாலதன்றிக்கெடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“தனது செல்வத்தின்மேல் பற்றுகொண்டு செய்யத்தக்கனவற்றை (உயர்வுக்குரியனவற்றை) செய்யாதவனது செல்வம் உயர்வும் பெருக்கமும் தராது அழியும்” என்பதாம்.

‘செய்யாது’ என்னும் வினையெச்சம் ‘இவறியான்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘இவறியான்செல்வம்’ என்பது தொடரெழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“செயற்பால செய்யாது* இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

 

குறள் – ௪௱௩௮ (அச்சில் உள்ளவாறு).

“பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று.”

இவறன்மை = பற்றுடன்கூடிய ‌கஞ்சமனம்.
எற்றுள்ளும் = எவற்றுள்ளும்.
எண்ணப்படுவது = மதிக்கப்படுவது.

“இவறன்மை என்னும் பற்றுள்ளம் எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்றன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘உள்ளம்’ என்ற பெயருடன் புணர்ந்து அதனைவிளக்கி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘இவறன்மை’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘எற்றுள்ளும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

“கஞ்சத்தனம் என்னும் பற்றுள்ளம் எவற்றுடனும் வைத்து ‌மதிக்கப்படும் ஒன்றன்று” என்பதாம்.

செம்மைவடிவம் —
“பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.”

 

குறள் – ௪௱௩௯ (அச்சில் உள்ளவாறு).

“வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.”

வியத்தல் = செருக்குறுதல்.
எஞ்ஞான்றும் = எக்காலத்தும்.
நயவற்க= விரும்பற்க.
நன்றி = நன்மை.
பயவா = தரா, விளையா.

“எஞ்ஞான்றும் தன்னை வியவற்க நன்றி பயவாவினை நயவற்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எக்காலத்தும் தன்னை தானே வியந்து செருக்குற வேண்டா. நன்மையை பயவாத செயல்களை விரும்ப வேண்டா” என்பதாம்.

‘வியவற்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.

செம்மைவடிவம் —
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.”

 

குறள் – ௪௱௪௦ (அச்சில் உள்ளவாறு).

“காதல காத லறியாமை யுய்க்கிற்பி
னேதில வேதிலார் நூல்.”

காதல = விரும்பத்தக்கன.
காதல் = விருப்பம், அன்பு, காமம்.
உய்க்கின் = நுகரின்.
ஏதில = காரணமில.
ஏதிலார் = அயலார், பகைவர்.
நூல் = சூழ்ச்சி.

“காதல காதலறியாமை உய்க்கின் பின் ஏதிலார் நூல் ஏதில” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒருவன் தான் விரும்புவதை அயலார்/பகைவர் அறியாமல் நுகரின் பின்னர்வரும் பகைவரின் சூழ்ச்சிகள் பயனற்றதாய் போகும்” என்பதாம். ஒருவர் வெளிப்படையாய் நுகரின் அவ்விருப்பங்களின்வழி அவர்க்கு தீதுசெய்ய பகைவர் சூழ்ச்சி செய்வர் என்பது கருத்து.

‘உய்க்கின்’ என்னும் வினையெச்சம் ‘பின்னர்’ என்னும் பொருள்படும் ‘பின்’ என்னும் காலப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

’ஏதில’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“காதல காத லறியாமை யுய்க்கின்பின்
ஏதில ஏதிலார் நூல்.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button