
குறள் – ௲௰௧ (அச்சில் உள்ளவாறு).
“கருமத்தா னாணுத னாணுத் திருநுத
னல்லவர் நாணுப் பிற.”
கருமத்தால் = வினையால், செயலால்.
நாணுதல் = பழிக்கு அஞ்சுதல்.
திருநுதல் = அழகிய நெற்றி.
நல்லார் = நல்லாள், நற்குணப்பெண்டிர்.
நாணு = நாணம்.
பிற = பிற காரணங்கள்பொருட்டு.
“கருமத்தால் நாணுதல் நாணு. பிற திருநுதல் நல்லவர் நாணு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“செய்யும் செயல்களால் பழிக்கு ஆளாக கூடாதென அஞ்சுதல் நாணம். ஏனையது அழகிய நெற்றியுடைய நற்குணப்பெண்டிரது நாணம்” என்பதாம்.
‘கருமத்தால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘கருமம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நாணுதனாணு’ என்பது நாணுதல் +நாணு (நாணம்) என்பதன் புணர்மொழி.
‘நாணு’ என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. பொருள்முடிவினைத்தருமிடங்கள் புணரா.
‘நாணு(நாணம்) என்பது பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தருகிறது. பொருள்முடிவினைத்தருமிடங்கள் புணரா. பிற என்பது எழுவாயாகும். எழுவாய் வருமொழியாகாது .
செம்மைவடிவம் —
“கருமத்தால் நாணுதல் நாணு திருநுத
னல்லவர் நாணு பிற.”
குறள் – ௲௰௨ (அச்சில் உள்ளவாறு).
“ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.”
ஊண் = உணவு.
உடை = ஆடை.
எச்சம் = ஏனையவை, பிற.
நாணுடைமை = பழிக்கு அஞ்சும் பண்பு.
சிறப்பு = பெருமை.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“உணவு, ஆடை உள்ளிட்ட பிற உயிர்க்கெல்லாம் பொது. பழிக்கு அஞ்சும் பண்பாம் நாணுடைமை மாந்தர்க்குரிய தனிப்பெருமை” என்பதாம்.
இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொற்கள் புணராது தனித்துநின்று தத்தம் பொருளை உணர்த்தும். ‘ஊணுடையெச்ச’ என்பது ‘ஊண் உடை எச்சம்’ என்றவாறு பிரிந்துநின்று தத்தம் பொருளைத்தரும்.
செம்மைவடிவம் —
“ஊண்உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.”
குறள் – ௲௰௩ (அச்சில் உள்ளவாறு).
“ஊனைக் குறித்த வுயிரெல்லா நாணென்னு
நன்மை குறித்தது சால்பு.”
ஊன் = உடம்பு.
குறித்த(து) = சார்ந்த(து).
நாண் = நாணம், பழிக்கு அஞ்சுதல்.
குறித்தது = சார்ந்தது.
சால்பு = சான்றாண்மை.
“உயிரெல்லாம் ஊனைக்குறித்த. நாணென்னும் நன்மை சால்புகுறித்தது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உயிர்களெல்லாம் உடம்பை இருப்பிடமாக கொண்டது. நாணமென்னும் நன்மை சான்றாண்மையை இருப்பிடமாக கொண்டது” என்பதாம்.
‘குறித்த(து)’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நாண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு.”
குறள் – ௲௰௪ (அச்சில் உள்ளவாறு).
“அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற் பிணியன்றோ பீடு நடை.”
அணி = அணிகலன், மதிப்பு.
அன்றோ = அல்லவோ.
நாணுடைமை = பழிக்கு அஞ்சும் பண்பு.
பிணி = நோய், துன்பம்.
பீடு = பெருமிதம்.
நடை = வாழ்வு.
“நாணுடைமை அணியன்றோ. அஃதின்றேல் சான்றோர்க்கு பீடுநடை பிணியன்றோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பழிக்கு அஞ்சும் பண்பு அணிகலனல்லவோ. அஃது இல்லையானால் சான்றோர்க்கு பெருமிதவாழ்வு துன்பமல்லவோ” என்பதாம்.
‘சான்றோர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘அஃது’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘இன்றேல்’ என்னும் வினையெச்சம் ‘பிணி’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு* அஃதின்றேல் பிணியன்றோ பீடு நடை.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
குறைபதி யென்னு முலகு.”
உறைபதி = உறைவிடம்.
உலகு = உலகோர்.
என்னும் = என்பர்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“தம்மால் பிறர்க்கு நேரும் பழியையும் பிறரால் தமக்கு நேரும் பழியையும் ஒப்ப மதித்து அஞ்சுவாரை உலகோர் நாணத்தின் உறைவிடமென்பர்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘தன்பழியும்’ என்பது புணராது.
‘நாணுக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினையைச்சாராது இயல்புப்பொருள்தரும் ‘உறைபதி’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘என்னும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்று ‘என்பர்’ என்னும் பொருள்தரும். வினைமுற்று எதனுடனும் புணராது. ‘உறைபதியென்னும்’ என்ற புணர்மொழியில் வினைமுற்று விளக்கயிடைச்சொல்லாய் மயங்கும்.
செம்மைவடிவம். —
“பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக்கு*
உறைபதி என்னும் உலகு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௰௬ (அச்சில் உள்ளவாறு).
“நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.”
நாண் = நாணம், பழிக்கு அஞ்சுதல்.
வேலி = காப்பு, காவல்.
மன்னோ = அசைச்சொல்.
வியன்ஞாலம் = பரந்த உலகம்.
பேணலர் = பெற விரும்பார்.
மேலாயவர் = மேன்மையோர்.
“மேலாயவர் நாண்வேலிகொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. மன்னோ என்பது அசைச்சொல்.
“மேன்மையோர் பழிக்கு அஞ்சுதலாகிய நாணமென்னும் காவலைக்கொள்ளாது பரந்த உலகத்தை உடைமையாக கொள்ள விரும்பார்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவம் இதுவே.
குறள் – ௲௰௭ (அச்சில் உள்ளவாறு).
“நாணாலுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா
னாண்டுறவார் நாணாள் பவர்.”
நாணால் = நாணுடைமைப்பொருட்டு.
துறப்பர் = நீப்பர்.
நாணாள்பவர் = நாணத்தை உடையவர் .
“நாணாள்பவர் நாணால் உயிரைத்துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நாணத்தைக்கைவிடாதார்
நாணத்தின்பொருட்டு உயிரை நீங்குவார்; உயிரின்பொருட்டு நாணத்தை நீங்கார்” என்பதாம்.
‘நாணால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘நாண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘துறப்பர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உயிர்ப்பொருட்டால்’ என்பதன்கண்வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘பொருட்டு’ என்னும் நான்காம்வேற்றுமைச்சொல்லுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.”
குறள் – ௲௰௮ (அச்சில் உள்ளவாறு).
“பிறர்நாணத் தக்கது தானாணா னாயி
னறநாணத் தக்க துடைத்து.”
பிறர் = பிறரால்.
நாணத்தக்கது = பழிக்கு அஞ்சத்தக்கது.
நாணானாயின் = நாணப்படானாயின்.
அறம் = அறநெறி.
நாணத்தக்கது = அஞ்சும் தன்மையது. உடைத்து = உடையது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிறரால் பழிக்கத்தக்கனவற்றுக்கு தான் நாணப்படானாயின் அவனிடம் தங்க அறம் நாணும்” என்பதாம்.
‘தான்’ என்பது எழுவாயாகும் மறுபெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஆயின்’ என்னும் வினையெச்சம் ‘அறம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அறம்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.”
குறள் – ௲௰௯ (அச்சில் உள்ளவாறு).
“குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை.”
குலஞ்சுடும் = நற்குடியைக்கெடுக்கும்.
கொள்கை = ஒழுக்கம்.
பிழைப்பின் = தவறின்.
நலஞ்சுடும் = நன்மைகளைக்கெடுக்கும்.
நாணின்மை = நாணமின்மை, பழிக்கு அஞ்சாமை.
நின்றக்கடை = நிலைத்தவிடத்து.
“கொள்கை பிழைப்பின் குலஞ்சுடும். நாணின்மைநின்றக்கடை நலஞ்சுடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒழுக்கத்தில் தவறுவது நற்குடியைக்கெடுக்கும். பழிக்கு அஞ்சாமையில் நிலைப்பது நன்மைகளைக்கெடுக்கும்” என்பதாம்.
குலஞ்சுடும், நலஞ்சுடும் என்பன வினைமுற்றுகள். இவை ‘குலஞ்சுடுங்’, ‘நலஞ்சுடு’ என்றவாறு புணர்ச்சியில் திரியா. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பிழைப்பின்’ என்னும் வினையெச்சம் ‘நலம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘சுடும்’ என்னும் வினைமுற்று ‘நாணின்மை’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.”
குறள் – ௲௨௰ (அச்சில் உள்ளவாறு).
“நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று.”
நாண் = நாணம், பழிக்கு அஞ்சுதல்.
அகத்து = நெஞ்சத்து.
இயக்கம் = செயல்பாடு.
மரப்பாவை = மரப்படிமை.
நாணால் = கயிற்றால்.
மருட்டுதல் = மயக்குதல்.
அற்று = போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நெஞ்சத்து பழிக்கு அஞ்சுதல் இல்லாதாரது செயல்பாடு மரப்படிமையை கயிற்றால் கட்டி இயக்கி மயக்குவதை போன்றது” என்பதாம்.
‘நாண் (நாணம்)’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘இயக்கம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘நாணால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘நாண்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நாண்அகத் தில்லா ரியக்கம்ன் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.”
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




