இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௩௭. அவாவறுத்தல்.

குறள் – ௩௱௬௧ (அச்சில் உள்ளவாறு).

“அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.”

அவா = பெருவிருப்பு (பேராசை).
என்ப = என்பர்.
எஞ்ஞான்றும்= எக்காலத்தும்.
தவா = தவறாத.
ஈனும் = விளைவிக்கும்.
வித்து = விதை.

“எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப்பிறப்பீனும் வித்து அவா என்ப” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எல்லாவுயிர்க்கும் எக்காலத்தும் தவறாத பிறப்பீனும் வித்து அவா என்பர்” என்பதாம்.

‘என்ப’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எல்லாவுயிர்க்கும்’, ‘எஞ்ஞான்றும்’ ஆகியன முற்றும்மைச்சொற்கள். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அவாவென்ப எல்லா வுயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.”

குறள் – ௩௱௬௨ (அச்சில் உள்ளவாறு).

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.”

வேண்டுங்கால் = விரும்பினால்.
வேண்டும் = விரும்புக.
வேண்ட = விரும்ப.
வேண்டாமை = விரும்பாமை.

“விரும்பினால் பிறவாமையை விரும்புக. அப்பிறவாமை விரும்பாமையை விரும்ப வரும்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௩௱௬௩ (அச்சில் உள்ளவாறு).

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்.”

வேண்டாமை = விரும்பாமை.
அன்ன = ஒத்த.
விழுச்செல்வம் = விழுமிய செல்வம், சிறந்த செல்வம்.
யாண்டும் = எங்கும்.
இல் = இல்லை.

‘விழுச்செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘யாண்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை‌ எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்.”

குறள் – ௩௱௬௪ (அச்சில் உள்ளவாறு).

“தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.”

தூஉய்மை → தூய்மை = தெளிந்த தன்மை, குற்றமில்நிலை.
அவாவின்மை = விரும்பாமை.
மற்று = அசைச்சொல்.
வாஅய்மை → வாய்மை = உண்மை, மெய்ம்மை.
வேண்ட = விருப்ப.
வரும் = கிட்டும்.

“தூஉய்மையென்பது அவாவின்மை வாஅய்மை வேண்ட மற்றது வரும்”
என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“குற்றமில்லாத நிலையென்பது விரும்பாமை. மெய்ம்மையை விரும்ப அத்தூய்மை கிட்டும்” என்பதாம்.

‘என்பது’ என்ற இடைச்சொல் ‘தூய்மை’ என்ற பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“தூஉய்மை யென்பது* அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.”

* குற்றியலுகரமாகிய துகரம் அலகு பெறாது.

குறள் – ௩௱௬௫ (அச்சில் உள்ளவாறு).

“அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர்.”

அற்றவர் = துறந்தவர்.
அவா = பெருவிருப்பு (பேராசை).
அற்றார் = துறந்தார்.
அற்றாக = துறந்ததாக.
அற்றது = துறந்தது.
இலர் = இல்லாதவர்.

“அற்றவரென்பார் அவாவற்றார் மற்றையோர் அற்றாக அற்றது இலர்”
என்றவாறு சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்தரும்.

“துறந்தவர் எனப்படுவார் பெருவிருப்பை துறந்தவர். மற்றையோர் (பெருவிருப்பை துறவாதார்) துறந்ததாக துறந்தது எதுவுமில்லார்” என்பதாம்.

‘அற்றவரென்பார்’, ‘மற்றையோர்’ ஆகியன எழுவாயாம் திரிபில்பெயர்ச்சொற்கள். திரிபில்பெயர்ச்சொற்கள் எதனுடனும் புணராது.

‘அற்றாக’ என்றயிடத்தில் விட்டிசைக்க பொருளுணர்த்தும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

செம்மைவடிவம் —
“அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்.”

குறள் – ௩௱௬௬ (அச்சில் உள்ளவாறு).

“அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா.”

வஞ்சிப்பது = ஏய்ப்பது
ஓரும் = அசைச்சொல்.
அவா = பெருவிருப்பு (பேராசை).

“ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா (அவ்வவாவிற்கு) அஞ்சுவதோரும் அறனே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘ஓரும்’ என்னும் அசைச்சொல் ‘அஞ்சுவது’, ‘வஞ்சிப்பது’ ஆகியவற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

பெயர்ப்பயனிலையாம் ‘அறனே’ என்னும் தேற்றேகாரச்சொல் எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.”

குறள் – ௩௱௬௭ (அச்சில் உள்ளவாறு).

“அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.”

அவாவினை = பெருவிருப்பத்தை (பேராசையை).
ஆற்ற = முற்றும்.
அறுப்பின் = துறப்பின், நீங்கின்.
தவா = முத்தி நிலை, பிறவாமை.
தவாவினை = முத்திநிலைக்குரிய செயல்கள், பிறவாமைக்குரிய செயல்கள்.
வேண்டும் = விரும்பும்.
ஆறு = வழி, முறை.

“ஒருவன் பெருவிருப்பத்தை (பேராசையை) முற்றும் துறப்பின் முத்திநிலைக்குரிய (பிறவாமைக்குரிய) செயல்கள் அவன் விரும்பியவாறே வரும்” என்பதாம்.

‘அறுப்பின்’ என்னும் வினையெச்சம் ‘தவா’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“அவாவினை யாற்ற வறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.”

குறள் – ௩௱௬௮ (அச்சில் உள்ளவாறு).

“அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்.”

அவா = பெருவிருப்பு (பேராசை).
தவாஅது = தவறாது, தப்பாது.

“அவா இல்லார்க்கு துன்பம் இல்லாகும் அஃது (அவா) உண்டேல் துன்பம் மேன்மேல் தவாஅது வரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘ஆகும்’ என்னும் குறிப்புவினைமுற்று ‘துன்பம்’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘துன்பமஃது‌’ என்பதில் வந்த ‘துன்பம்’ பெயர்ப்பயனிலையாகி முற்றுப்பொருள்தரும். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.

‘உண்டேல்’ என்பதில் வந்த ‘ஏல்’ என்னும் இடைச்சொல் உண்டு என்னும் வினையுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

“பெருவிருப்பு (பேராசை) இல்லார்க்கு துன்பம் இல்லையாம். பெருவிருப்பு (பேராசை) இருக்குமானால் மேன்மேலும் துன்பம் தவறாது வரும்” என்பதாம்.

செம்மைவடிவம் —
“அவாவில்லார்க் கில்லாகும் துன்பம்அஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.”

குறள் – ௩௱௬௯ (அச்சில் உள்ளவாறு).

“இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.”

இடையறாது = தொடர்ந்து, அறுபடாது.
ஈண்டும் = இங்கும் (நிலவுலகிலும்).
அவா = பெருவிருப்பு (பேராசை).
கெடின் = ஒழியின்.

“அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின் ஈண்டும் இன்பம் இடையறாது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“துன்பங்களுள் (கொடிய) துன்பமாகிய பெருவிருப்பு (பேராசை) நீங்கின் இங்கும் இன்பம் இடைவிடாது வரும்.” என்பதாம்.

சொற்புணர்ச்சி புதிய பொருளுக்கானது. புணர்ந்த சொற்களைப்பிரித்தால் புதிய பொருள் மறையும்; நீங்கும்.
சீர்கள் ஏழும் புணர்ந்த நிலையில் எங்ஙனம் கொண்டுகூட்டுவது.

‘இன்பம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘இடையறாது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘ஈண்டும்’ என்பது உம்மீற்று இடச்சுட்டுப்பெயர். ‘உம்’ என்னும் இடைச்சொல் ‘ஈண்டு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘அவா’ என்ற பெயரைப்புணர்ந்து தனது பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘துன்பத்துட்துன்பம்’ என்பது அடையுடன்கூடிய திரிபில்பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல் ‘கெடின்’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

செம்மைவடிவம் —
“இன்பம் இடையறாது* ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துட் துன்பம் கெடின்.”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௩௭௰ (அச்சில் உள்ளவாறு).

“ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.”

ஆரா = அளவில்லாத.
இயற்கை = இயல்பு, தன்மை, குணம்.
அவா = பெருவிருப்பு (பேராசை).
நீப்பின் = நீக்கின்.
பேரா = மாறாத, நிலைத்த.

“அளவில்லாத இயல்பினை உடைய பெருவிருப்பை (பேராசையை) நீக்கின் அந்நிலையே மாறாத இயல்பினைத்தரும்” என்பதாம்.

‘நீப்பின்’ என்னும் வினையெச்சம் அகரச்சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“ஆரா வியற்கை யவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும்.”

தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.

நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button