
குறள் – ௲௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் பலரறியார் பாக்கியத் தால்.”
அலர் = ஊராரது பழிச்சொல், தூற்றுதல்.
எழ = நிகழ.
ஆருயிர் = அரிய உயிர்.
நிற்கும் = நிலைக்கும்.
பாக்கியத்தால் = நற்பேற்றினால்.
“அலர் எழ பாக்கியத்தால் ஆருயிர் நிற்கும் அதனை பலரறியார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவன்கூற்று. “ஊரார் தூற்றும் நற்பேற்றினால் எனது அரிய உயிர் நிலைக்கின்றது. இதனை பலரும் அறியார். ஊராரது தூற்றுதலிலிருந்து தன்னை தலைவி மறவாமையும் நாணுத்துறந்தமையும் தலைவன் அறிந்தான்” என்பதாம்.
‘அலர்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘எழ’ என்னும் வினையெச்சம் ‘ஆருயிர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘நிற்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அதனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பலர்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மை வடிவம் —
“அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனை பலரறியார் பாக்கியத் தால்.”
குறள் – ௲௱௪௰௨ (அச்சில் உள்ளவாறு).
“மலரன்ன கண்ணா ளருமை யறியா தலரெமக் கீந்ததிவ் வூர்.”
அன்ன = ஒத்த.
அருமை = பெருமை.
அலர் = பழிச்சொல், தூற்றுதல்.
ஈந்தது = தந்தது.
இவ்வூர் = இவ்வூரார்.
“மலரன்ன கண்ணாளருமையறியாது அலரெமக்கு இவ்வூர் ஈந்தது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவன்கூற்று. “மலரினையொத்த கண்களையுடைய இவளது பெருமையை அறியாது என்னை இவ்வூரார் தூற்றுகின்றனர்” என்பதாம்.
‘அறியாது’ என்னும் வினையெச்சம் ‘அலர்’ என்னும் பெயருடன் புணராது.
‘ஈந்தது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மலரன்ன கண்ணா ளருமை யறியாது*
அலரெமக் கீந்தது*இவ் வூர்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௪௰௩ (அச்சில் உள்ளவாறு).
“உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.”
உறாஅதோ → உறாதோ = ஏற்கத்தக்கதன்றோ.
கௌவை = அலர், பழிச்சொல், தூற்றுதல்.
அதனை = அவளது அடைவை.
பெறாஅது → பெறாது = அடையாது.
பெற்றன்ன = அடைந்ததுபோன்ற. நீர்த்து = தன்மையது, இயல்பினது.
“ஊரறிந்த கௌவை உறாஅதோ அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவன்கூற்று. “ஊரறிந்த பழிச்சொல் ஏற்கத்தக்கதன்றோ. அப்பழிச்சொல் தலைவியை அடையாதும் அடைந்ததுபோன்ற தன்மையது” என்பதாம்.
‘உறாஅதோ’ என்பது வினாப்பயனிலை. முற்றுப்பொருள்தரும் பயனிலை எதனுடனும் புணராது.
‘கௌவை’ என்பதும் ஊரறிந்த என்னும் பெயரெச்சத்தின் முடிக்குஞ்சொல். ‘அதனை’ என்னும் சுட்டு புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.”
குறள் – ௲௱௪௰௪ (அச்சில் உள்ளவாறு).
“கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
றவ்வென்னுந் தன்மை யிழந்து.”
கவ்வை → கௌவை = அலர், பழிச்சொல், தூற்றுதல்.
கவ்விது = கவ்வியது, இறுகப்பற்றியது.
காமம் = காதல், நிறையன்பு.
இன்றேல் = இல்லையாயின்.
தவ்வு = தாழ்தல், சுருங்குதல்.
தன்மை = இயல்பு, இயற்கை.
இழந்து = நீங்கி.
“கவ்வையால் காமம் கவ்விது அது இன்றேல் (காமம்) தன்மையிழந்து தவ்வென்னும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவன்கூற்று. “தூற்றுதலால் காதல் என்னை இறுகப்பற்றியது. தூற்றுதல் இல்லையாயின் காதல் இயல்பில் தாழ்ந்து/சுருங்கி இருக்கும். அலரும் காதலை வளர்க்கும்” என்பதாம்.
‘கவ்வையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘கவ்வை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘காமம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இன்றேல்’ என்னும் வினையெச்சம் வருமொழியாகி சுட்டுடன் புணராது தனித்துநின்று தம்பொருளைச்சிறப்பிக்கும்.
‘இன்றேல்’ என்னும் வினையெச்சம் கௌவையைச்சுட்டுகிறது. ‘தவ்வு’ என்னும் வினையெச்சம் காதலின் நிலையைச்சுட்டுகிறது. இருவேறு பெயர்களுக்குரிய வினையெச்சங்கள் புணரா.
‘என்னும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை யிழந்து.”
குறள் – ௲௱௪௰௫ (அச்சில் உள்ளவாறு).
“களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறு மினிது.”
களித்தொறும் = மகிழும்போதெல்லாம்.
வேட்டற்றால் = விருப்பப்படுவது போல. ஆல் என்பது அசைச்சொல்.
காமம் = காதல்.
“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந்தோறும் இனிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மகிழும்போதெல்லாம் கள்ளுண்பதை விரும்புமாறுபோல் காமம் வெளிப்படும்போதெல்லாம் இனிதாகிறது” என்பதாம்.
‘வெளிப்படுந்தோறும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘வேட்டற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.”
குறள் – ௲௱௪௰௬ (அச்சில் உள்ளவாறு).
“கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.”
மன்னும் (மன்+உம்) = மன், உம் என்பன அசைச்சொல்.
அலர் = பழிச்சொல், தூற்றுதல்.
கொண்டற்று = கவ்வியதுபோல.
இது தலைவிகூற்று. “தலைவனைக்கண்டது ஒரு நாளே. அதனால் விளைந்த பழிச்சொல் நிலவை பாம்பு கவ்வியதை எல்லாரும் காணுமாறு போலானது” என்பதாம்.
‘அலரின் வாழ்வு ஒருநாள்’ என்னும் பொருள்படும் ‘ஒருநாளலர்’ என்பது பொருளற்ற புணர்ச்சி.
மன், உம் ஆகிய அசைச்சொற்கள் தம்முள் புணர்ந்து ‘கண்டது’ என்னும் வினையெச்சத்தைச்சார்ந்துநின்று தம்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
மன், உம் ஆகிய அசைச்சொற்கள் தம்முள் புணர்ந்து ‘அலர்’ என்னும் பெயரைச்சார்ந்துநின்று தம்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘திங்களை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘பாம்பு’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களை பாம்புகொண் டற்று.”
குறள் – ௲௱௪௰௭ (அச்சில் உள்ளவாறு).
“ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொன்
னீராக நீளுமிந் நோய்.”
ஊரவர் = ஊராரது.
கௌவை = அலர், பழிச்சொல், தூற்றுதல்.
எருவாக = உரமாக.
அன்னைசொல் = வெஞ்சொல், கடுஞ்சொல், இடித்துரை.
நீளும் = வளரும்.
இந்நோய் = இக்காதல்.
“ஊரவர்கௌவை எருவாக அன்னைசொல் நீராக இந்நோய் நீளும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவிகூற்று. “ஊராரது பழிச்சொல்லை உரமாகவும் அன்னையின் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு காதல்நோயாகிய இப்பயிர் வளர்கிறது” என்பதாம்.
‘ஊரவர்கௌவையெருவாக’ என்பது ‘ஊரவரது கௌவையை எருவாக’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமை பெயருடன் புணராது; வினையொடுமட்டுமே புணரும்.
‘எருவாக’ என்பதன்கண் வந்த ‘ஆக’ என்னும் உருவகயிடைச்சொல் ‘எரு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அன்னைசொன்னீராக’ என்பது ‘அன்னையினது சொல்லை நீராக’ எனவிரியும். இரண்டாம்வேற்றுமை பெயருடன் புணராது; வினையொடுமட்டுமே புணரும்.
ஊரவர்கௌவை, அன்னைசொல் ஆகியன எழுவாயுமாம். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நீளும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.”
குறள் – ௲௱௪௰௮ (அச்சில் உள்ளவாறு).
“நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காம நுதுப்பே மெனல்.”
எரி = நெருப்பு.
நுதுப்பேம் = அவிப்பேம்.
அற்றால் (அற்று+ஆல்) = போன்றது. ஆல் என்பது அசைச்சொல்.
கௌவை = அலர், பழிச்சொல், தூற்றுதல்.
காமம் = காதல்.
எனல் = எனச்சொல்வது.
“கௌவையால்
காமநுதுப்பேமெனல் நெய்யால் எரிநுதுப்பேமென்றற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவிகூற்று. “காதலை தூற்றுதலால் இல்லாதாக்குவோமென்பது நெய்பெய்து நெருப்பை அவித்துவிடுவோமென்பதை போன்றது. இயலாது” என்பதாம்.
‘நெய்யால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘நெய்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கௌவையால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூனறாம்வேற்றுமைவுருபு ‘கௌவை’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்றற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நெய்யால் எரிநுதுப்பே மென்றற்றால் கௌவையால்
காம நுதுப்பே மெனல்.”
குறள் – ௲௱௪௰௯ (அச்சில் உள்ளவாறு).
“அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை.”
ஒல்வதோ = தக்கதோ.
அஞ்சல் = அஞ்சாதே.
ஓம்பு = கடைப்பிடி.
நீத்தக்கடை = பிரிந்தவிடத்து.
“அஞ்சல் ஓம்பென்றார் பலர்நாண நீத்தக்கடை அலர்நாண ஒல்வதோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவிகூற்று. “அஞ்சுதலை விடுகயென்றார். அதற்கு இசைந்தேன். பலரும் வெட்க பிரிந்தவிடத்து பழிச்சொற்கு வெட்கப்படுதல் தக்கதோ. இல்லை” என்பதாம்.
‘ஒல்வதோ’ என்னும் வினாச்சொல் வினாப்பயனிலையாகும்.
முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அலர்நாண வொல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை.”
குறள் – ௲௱௫௰ (அச்சில் உள்ளவாறு).
“தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங்
கௌவை யெடுக்குமிவ் வூர்.”
நல்குவர் = தருவர்.
கௌவை = அலர், பழிச்சொல், தூற்றுதல்.
எடுக்கும் = பேசும்.
இவ்வூர் = இவ்வூரார்.
“யாம் வேண்டும் கௌவையெடுக்கும் இவ்வூர் தாம்வேண்டின் காதலர் நல்குவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
இது தலைவிகூற்று. “உடன்போக்கிற்கு ஏதுவான யாம் விரும்பும் தூற்றுதலை இவ்வூரார் பேசுகிறார். இனி யாம் வேண்டின் (வரைவினை) காதலர் தருவார்” என்பதாம். வரைவு = திருமணம்.
‘வேண்டும் கௌவை’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘வேண்டின்’ என்பது தலைவியின் வினை. ’நல்குதல்’ என்பது தலைவனின் வினை. இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.
‘எடுக்கும் இவ்வூர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை யெடுக்கும்இவ் வூர்.”
களவியல் முற்றிற்று.
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



