வரலாற்று மாந்தர்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

வாழ்க்கைச்சுருக்கம்.

தமிழ்கூறும் நல்லுலகிற்குக்கிடைத்த முத்துகளில் ஒன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

வாழ்க்கைச்சுருக்கம் .

தமிழே வாழ்வாகவும், வாழ்வே தமிழாகவும் வாழ்ந்தோர் மிகச்சிலரே. அச்சிலருள் ஒருவரே தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர், மொழிஞாயிறின் முதல்மாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் எனுஞ்சிற்றூரில் பத்தாம்நாள்  மூன்றாந்திங்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து மூன்றாம் ஆண்டுல் பிறந்தார். இவர்தம் தந்தை துரைசாமி, தாய் குஞ்சம்மாள். ஆகவே, துரைமாணிக்கம் என்றானார்.

மாந்தர் தோன்றுகின்றனர்; மறைகின்றனர். அவர்களுள் இறந்தும் உயிர் வாழும் மாந்தர் மிகமிகச்சிலரே. அவர்களில் ஒருவரே பாவலரேறு பெருஞ்சித்திரனார். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்பிப்பது மொழித்தூய்மை தான், தூய்மையான ஒன்றுதான் பிரிதொன்றைப்படைக்க முடியும். எனவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் கற்பிக்கும் மொழி, தூய்மையானதாகவும் இருக்கவேண்டும். மொழி தூய்மையிழப்பின் அம்மொழியின் மக்கள் தூய்மையிழப்பர்; சீர்கெடுவர்; இறுதியில் அழிவர். சிலர் தமிழ்மொழியில் தேவையின்றி பிறமொழிச்சொற்களைக்கலந்து, தமிழை அழிக்கத்திட்டமிட்டுச்செயல்பட்டனர். மணிப்பவள நடையை உருவாக்கி தமிழ்மொழியைச்சிதைத்தனர். திட்டமிட்ட இச்செயலை தடுத்துநிறுத்தவும், தமிழ் மொழியின் தூய்மையைக்காக்கவும் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. அதனைப்பலர் தவறாகப்புரிந்துகொண்டு அவ்வியக்கத்தவரை ‘தமிழ்மொழிவெறியர்’ என்று குற்றஞ்சாட்டி இகழ்ந்து புறக்கணித்தனர்.

தனித்தமிழியக்கம் தமிழகத்தில் ஒரு தற்காப்புப்பேரியக்கமாகத்தலைதூக்கியது; வளர்ச்சி பெற்றது; தமிழரின் உள்ளத்தில் கிளர்ச்சியைத்தூண்டியது. தனித்தமிழ் இயக்க ஆலமரத்தின் ஒருவிழுதாக பாவலரேறு பெருஞ்சித்திரனார் விளங்கினார். இவர் குழந்தையிலேயே கூர்ந்த மதியும்,சுட்டிதனமும் நிரம்பப்பெற்று விளங்கினார். சேலம், கோட்டை மாநகராட்சிப்பள்ளியிலும், ஆத்தூர் உயர் நிலைப்பள்ளியிலும் கல்விகற்றார்.
இவரது தமிழ்ப்பற்று வளரவும், சிறக்கவும் பொருட்டாக இருந்தோர் சேலம் நடேசனார், தமிழ்மறவர் புலவர் பொன்னம்பலனார் ஆகியோர். மேலும், மறைமலை அடிகளின் தனித்தமிழ்வழியைப்பற்றி நடந்த பொன்னம்பலனார், புரட்சிப்பாவேந்தர் பாரதிதாசனார் ஆகியோரின் தனித்தமிழ் உணர்விலூறி வளர்ந்தார்.

தமிழர் நெஞ்சங்களில் நிறைந்துவாழும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் மொழி, இலக்கிய, இலக்கண வரலாற்றில் புதியதொரு வழியைக்கையாண்டார். தமிழ்த்தேயவினவரலாற்றில் என்றென்றும் அழிக்கமுடியாத கல்வெட்டாகத்திகழ்ந்தார்.தமிழ்நில வரலாற்றில் எழுச்சிமிக்க திருப்புமுனையை ஏற்படுத்திட முனைந்தார். அவர் தனக்கென ஒரு தனியடையாளத்தை பதித்துச்சென்றிருப்பதற்கான வரலாற்றுப்பதிவுகள் பற்பல உள.

“இன்பத்தமிழ்மொழிக்கு என்றுமென் மூச்சும்
இனிய தமிழ்நாட்டைப்பற்றியென் பேச்சும்
அன்பின் பிணைப்பினுக்கு என்றன்கை வீச்சும்
என்றுமித் தரையில் நின்றோச்சும் ”  என்னும் அவரது பாச்சொற்றொடர்கள், அவர் தமிழ்மொழியை தனது உயிர்மூச்சாகக்கொண்டு செயல்பட்டார் என்பதை உரத்துப்பாடும். பிரிவினை , வகுப்பு வேறுபாடு போன்றவற்றை வேரறுத்து வினையாற்ற, அரசியல் கட்சிகளுக்கும் அப்பால் நின்று தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் உணர்வோடு வாழ்ந்து வழிகாட்டியவர் பாவலரேறு.

ஆசிரியர் பயிற்சிமுடித்து தொடக்கப்பள்ளியொன்றில் பணிபுரிந்தபோது கமலம் என்ற நங்கையை தம் வாழ்விணையாக ஏற்றுக் கொண்டார். சேலம் நகராட்சிக்கல்லூரியில் தமது கல்லூரிக்கல்வியைத்தொடர்ந்தார். அக்கல்லூரியில் பேராசிரியாரகப்பணியாற்றிய மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் மாணவரானர். அவர்களின் தொடர்பு வாழ்நாள் இறுதிவரை தொடர்ந்தது.

“உழைப்போர் உலகம் வரல் வேண்டும்- ஒவ்
  வொருவர் நலமும் பெறல் வேண்டும் 
  பொதுமை உலகம் வரல் வேண்டும்  ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்” 
 என்று, பொதுவுடைமை எண்ணங்களை தனது நெஞ்சத்தில் ஏந்திப்பாடுபட்டார்.

மக்கள் அனைவரும் ஒரேமாதிரி வாழவேண்டும்;இனியஞாலம் மலரவேண்டும்;உழைப்பவர் வாழ்வு உயரவேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தார்.
தீண்டாமைக்கொடுமைகளை பலமுனைகளிலும் பாலூற்றி வளர்த்தனர் சமய அடிப்படைசார்பர். அவர்களின் எதிர்ப்பு தனித்தமிழ் இயக்கத்தையும் தாக்கிற்று. அத்தாக்குதலை முறியடித்து நின்ற தனித்தமிழ்ப்போராளிகளை நடுவணரசும், மாநிலஅரசும் நேர்மையற்ற, நெறி பிறழ்ந்த மேலாளுமை செலுத்தி தகர்க்கவும், நசுக்கவும் துணிந்தது. தமிழ், தமிழ் இனம் என்று குரல் கொடுத்தவர்களின் ஆட்சியிலும் இக்கொடுமை அரங்கேறியது கருத்திலிருத்தப்பட வேண்டியதாகும். இக்கொடுமைகள் பாவலரேறு பெருஞ்சித்திரனாரை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கியது. அரசு அவரை ஏதுமின்றி இருற்சிறையிற்தள்ளி அடைத்தது .

இந்தியாவைப்பொறுத்த மட்டில் அரசியல், அறவியல், பொருளியல், குமுகாயவியல், கல்வி, பண்பாடு, ஒழுக்கம், பொழுதுபோக்கு முதலிய அனைத்துத்துறைகளிலும் சமயப்போக்குகள் கண்டபடி வளர்ந்து கொடிய நச்சுத்தன்மை கொண்ட இறகுகளைப்போர்த்திக்கொண்டு இருப்பதை பெருஞ்சித்திரனார் வெளிப்படுத்தினார். மேலும் “இருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக்காலத்தில், எந்தவொரு தனிப்பட்ட மாந்தனுக்கும் சமயம் என்ற ஓரின உறுப்புத்தேவையே இல்லை” என்றார்.

தனித்தமிழ் இயக்கத்துக்காக “தென்மொழி’ எனும் இதழ், மொழிஞாயிறு அவர்களைப்பொறுப்பாசிரியராகக்கொண்டு, ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு முதல் வெளிவந்தது. பெருஞ்சித்திரனார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தைந்தாம் ஆண்டு இந்தி எதிர்ப்புப்போராட்டம் உச்சத்திலிருந்த காலம். “தென்மொழி” யில் சிவப்பு மையினால் ஓராசிரியர் உரை, அட்டை முகப்பில் வாளால் குத்துண்டு ஓடும் ஒரு காட்டெருமையின் படம். இப்படிப்படம் போட்டதற்காகவும், ஆசிரியவுரை எழுதியதற்காகவும் பெருஞ்சித்திரனார் , ம.இலெ. தங்கப்பா, தமிழ்க்குடிமகன் ஆகியோர் மீது இந்தியப்பாதுகாப்புச்சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு முடிவில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு மட்டும் ஒறுத்தல் வழங்கப்பட்டது. ஒறுத்தல் திறை கட்ட மறுத்துச்சிறை சென்றார்.

தென்மொழி இதழின் தமிழ்த்தொண்டு தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகிறது. தனித்தமிழ் இயக்கம் காணவேண்டும் என்பதை உணர்ந்த பெருஞ்சித்திரனார். தென் மொழிக்கழகம் தொடங்கினார். பின்னர் அது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறிபத்தெட்டாம் ஆண்டு, ‘தமிழ் மறுமலர்ச்சிக் கழகம் ’- எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“கலப்புத் தமிழே அழுக்குத்தமிழ்.
 அக்கலப்புச் சொற்களை நீக்கிய
 மூல முதல் தமிழே தூயதமிழ்”
என, தூயதமிழை வரையறுக்கிறார் பெருஞ்சித்திரனார்.

தமிழை பிறமொழிப்பிணைப்பினின்றும் விடுவிப்பதும், தமிழை அனைத்துத்துறைகளிலும் வளர்த்து வளப்படுத்துவதும் பாவாணாரின் வாழ்க்கை நோக்கமாக இருந்தமையால், அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து பரளாவிய தமிழர் கழகம் தொடங்கப்பட்டது. அதன் செயலாளராக பெருஞ்சித்திரனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அக்கழகத்துடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பொறுப்பிலிருந்து விலகினார். பொறுப்பிலிருந்து விலகினாலும் அதன் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொள்ள தவறவில்லை. பாவலரேறு தனது வாழ்நாள் முழுதும் தமிழர், தமிழ்-தமிழ்நாடு ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னிறுத்தி வாழ்ந்தார். தன்னை நினையாமல், தன் குடும்பத்தை நினையாமல், எப்பொழுதும் தமிழையும், தமிழனையும், தமிழ்நாட்டையும் உயர்த்த உழைத்தவர். அதற்காக தன்னையே ஈகம் செய்தவர்.

பாவேந்தர் பாரதிதாசனைப்போன்ற இலக்கிய ஏற்றமும், மறைமலையடிகள், திரு.வி.க போன்றோரின் தனித்தமிழ் நடையும். மொழிஞாயிறு பாவாணர் அடியொற்றிய மொழியறிவும் கொண்டு தமிழ் விடுதலைக்கும், தமிழர் விடுதலைக்கும் பாடுபட்ட தன்னல மறுப்பாளர் பெருஞ்சித்திரனார்.

பாவலரேறு தமிழுக்கு அளித்த நூல்களின் பட்டியல் வருமாறு:

௧. கொய்யாக்கனி.
௨. பாவியக் கொத்து.
௩. ஐயை.
௪. எண்சுவை எண்பது.
௫. கற்பனை ஊற்று.
௬. பள்ளிப்பறவைகள்.
௭. மகபுகு வஞ்சி.
௮. கனிச்சாறு.
௯. நூறாசிரியம்.
௰. தன்னுணர்வு.
௰௧. இளமை உணர்வுகள்.
௰௨. பாவேந்தர் பாரதிதாசன்.
௰௩. இலக்கியத்துறையில் பணிவளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்.
௰௪. வாழ்வியல் முப்பது.
௰௫. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.
௰௬. சாதித்தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்.
௰௭. இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?.
௰௮. செயலும் செயற்திறனும்.
௰௯. தமிழீழம்.
௨௰. ஓ… ஓ… தமிழர்களே.
௨௰௧. தனித்தமிழ் வளர்ச்சி வலராறு.
௨௰௨. நெருப்பாற்றில் எதிர்நீச்சல்.
௨௰௩. இளமை விடியல்.
௨௰௪. இட்ட சாவம் முட்டியது.
௨௰௫. நமக்குள் நாம்.
௨௰௬. கழுதை அழுதகதை.
௨௰௭. சாதியொழிப்பு.
௨௰௮. மொழிஞாயிறு பாவாணர்.
௨௰௯. அறுபருவத்திருக்கூத்து.
௩௰. திருக்குறள் மெய்ப்பொருளுரை.
௩௰௧. வேண்டும் விடுதலை.
௩௰௨. பாவலரேறு பெருஞ்சித்திரனார் .
கட்டுரைகள்.
௩௰௩. உலகியல் நூறு.

தமிழ் ,தமிழர் ,தமிழ்நாடு ஆகிய மூன்றும் பெருஞ்சித்திரனார் நினைவிலிருந்து அழிந்த நாள் பதினைந்து ஆறு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்றைந்து அன்று. அதுவே அவர் தமிழனைப்பற்றி நினைப்பதை நிறுத்திக்கொண்ட இறுதிநாளும் ஆகும்.

தமிழுக்குக்கிடைத்த அருங்கொடை பாவலரேறு பெருச்சித்தினரால் ஐயா . இவரை மறக்கத்தான் முடியுமா அன்றேல் மறுக்கத்தான் முடியுமா?தமிழுள்ள வரை வாழ்வீர் ஐயனே!

வாழிய நின் புகழ் வையகம் உள்ளவரை .

நன்றி .
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button