வரலாற்று மாந்தர்கள்

சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) : வீரச்சாவு வரலாற்றுச் சுருக்கம்.

சார்ள்சு் அன்ரனியின் சிறப்புப் படையணி முதற் படையணியின் சிறப்புக் கட்டளைத் தளபதி சீலன் (ஆசீர்) முதலாவது மறைமுகப் பிரிவின் கட்டளைத்தளபதி .தமிழீழ மண்ணில்  முதன்முதல் வீரச்சாவடைந்தவர் .

தலைவரின் பெரு நம்பிக்கைக்கு உரியவர்களில் முதன்மையானவர் . ஞானப்பிரகாசம் லூக்காசு் சாள்சு் அன்ரனி புனிதமரியாள் தெரு, திருகோணமலையைப் பிறப்பிடமாகக்  கொண்டவர்.

வீரப்பிறப்பு: ௧௧/௧௨/௲௯௬௦ (11.12.1960 ) வீரச்சாவு:௧௫/௭/௲௲௬௦(15.07.1983)

 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இலங்கைப் படையினரின் முற்றுகைப் போரில் விழுப்புண்ணடைந்த நிலையில் தனது கட்டளையின் பெயரில் தனது தோழனால் சுடப்பட்டு வீரச்சாவு அடைந்தார் .

 1983ம் ஆண்டு கடகத்திங்கள் 15-ஆம் நாள்.

மாலை 3 மணி….

 கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.அந்த மீசாலை என்கின்ற சிற்றூர் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது.அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, இலங்கையின்  படைத்துறைக் கூலிப்படைகள், அந்தச் சிறிய சிற்றூரைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் தெருவுடன் இணையும் அல்லாரை மீசாலைத் தெருவை , அரச படைகளின் ஊர்திகள் நிரப்புகின்றன.

 ஒரு சிற்றுந்து, இரண்டு வல்லுந்து, ஒரு படைத்துறை  வல்லுந்து வண்டி.  எளிய உடையணிந்த சில சிங்களப் படைத்துறை சடுதிவிரைவுப் படையினர். அந்தச் சிற்றூர் சிலிர்த்துக் கொள்கிறது.

 கல்லும் மணலும் கலந்த சிற்றொழுங்கைகளுக்கூடாக, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துமிக்கிகளுடன் மிதியுந்தில் விரைந்து கொண்டிருந்தனர்.

ஒரு இரண்டகர் காட்டிக் கொடுத்தால் சிங்களப் படைத்துறை தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்தச் சிற்றூரை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார்த்தொருவை கடந்து கொண்டிருக்கிறார்கள். தெருவின் ஒரு புறம் சுடலையருகேயும் ,மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த படைத்துறை வண்டிகள் இளைஞர்கள் கடந்த இடத்தை நோக்கிச் விரைவாக விரைந்து சென்று நிற்கின்றன.படையினரின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்கிறார்கள். சிற்றுந்திலிருந்த படைத்துறையினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த படையினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.

 தார்த் தெருவைக் கடந்த இளைஞர்கள் கெட்ட்ட நேரம் , இப்போது அவர்கள் நின்று கொண்டிருப்பது, வெறும் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன்.

அவன் தான் சீலன் !

அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.

 ஆசீர் ,சீலன் , இதயச்சந்திரன் ஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பிரிவுத் தலைவன்.

“சுடுங்கள்”

கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துமிக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துமிக்கிகளை இயக்குகின்றனர்.

 வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் மாணிக்கக்கல் பாய்ந்தவன். அவனொடு இன்னுமொரு வீரன்.பேரிடரின் எல்லைக்கப்பால்  வீரர்களின் உறுதி, பக்குவம், விரைவு, நுண்ணிய மிகுதிறன்  , இவை மட்டுமஏ துணையாகக் களத்திலே புலிகள்.

 இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்குகின்றனர்.வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…

ஆனாலும் , ஆய்தங்களோடு அரச படைகளின் கையில் அடைக்கலம் புகுமளவிற்கு கோழைகளல்லர் இவர்கள் ! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.இறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர். சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்படைகள்! வெளியைத் துளைக்கும் குண்டுகள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் பொறிமுறைத் துமிக்கி தொடர்ந்து சடசடக்கிறது.!ஆனால் , கூலிபடையின் துமிக்கிக் குண்டை ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. குருதி பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.

 இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான். உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் ! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன்

கட்டளையிடுகிறான்.

 படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.பனை வடலிக்குள் திறம்படப் பதுங்கி நிற்கும் படைத்துறை வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.

 சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?ஒரு அன்பு மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் சாவு தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? நொடி நேரத்தில் விடை காணவேண்டிய தேவை அந்த வீரனுக்கு.

 “என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.

 நெஞ்சில் வழியும் குருதி;முகத்தில் துளிர்க்கும் வியர்வை.சீலன் கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான். குறிக்கோள் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.நொடி நேரத்திற்குள் சீலனின் தலையில் துமிக்கி குண்டுகள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.

அதற்குள், வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் . எதனால் உயர்ந்தவன் உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.

 “என்னையும் சுட்டு விடு” ஆனந்தின் வேண்டுகோள்.

 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் குருதிச் சான்றுகள்.பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்ததும் படைத்துறைக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்த்தப்பட்ட வீரர்களின் துமிக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

 இறந்து கிடப்பவர்கள் யார்?

 படைத்துறை விலங்குகள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கையிலுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே!

 அந்தக் கூலிப்படையின் தலைமை மேலாளர்  ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துமிக்கிச் குண்டுகள் பாய்ந்த தழும்புகள்.அந்த தலைமை மேலாளன் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்!”

 சீலன் இருபத்து மூன்று அகவை கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்பான். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும். பழகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் அழகு அவனுடையது.ஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது.இவனோட பழகக் கிடைத்தவர்கள் பேறுபெற்றவர், தான் மட்டுமன்று தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான்.கூச்சத் தன்மை உள்ளவன். ஆனால் பழகத் தொடங்கினால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பை அன்பாகவே  ஏற்றுக் கொள்வான்.உடனிருப்பவர் விளையாட்டுக்காகக் சினந்தால்  கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. கம்பளை இல்லாதவன்.ஆய்தப்படைகளுக்கு எதிரான திடுக்கிடும் விரைவுத்தாக்குதலென்றால் போர்க்களத்தில் குதிக்கும் இவன், மற்றப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான்.

 அவன் உயிரை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை.

 தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.

 பிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான்.தேசிய விடுதலைக்கான ஆய்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய கடமை நிறைந்த ஒப்புவிப்பு , கணிக்கமுடியாதது.

 அந்த அவகையிலேயே தலைவர் பிரபாகரனின் முழுமையான  நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உடையவனாகச் சீலன் இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத தன்நலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய இரண்டகர்களும், பிளவுசார் நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன்.

 பதவி இறக்கப்பட்டதற்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறான். அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் குருதி நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவி வெறியர்களாக, தன்நலமிகளாயும் வடிவங்கொண்டு திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் சளிப்புக் கொண்ட பொழுதுகளில் , சீலனே இயக்கத்திற்குப் புதிய குருதி பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்றியிருக்கிறான்.

சீலன் படைத்துறைப் படிப்புப் படித்தவன் அல்லன். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் படைதுறைப் பிரிவில் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான மறைத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும்  முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.

 தமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த மறைவுத்தாங்குதலின் சிறந்த வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்லன், தானே முன் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம்.

 ஒரு மறை தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான செய்திகளைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். எண்ணக்குறைவில் எச்சிதைவும்   நிகழாமல்  எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவிடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். பெரும் துணிச்சலும், எதிரிகளின் இயலாமைகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் படைத்துறைப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.

 “ஒரு மறைவுத் தாக்குதல் போராளியின் வீரம் அவனது பொறித் துமிக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் பட்டறிவுச் சொல்லியம்.அவனது மனவலிமை திடமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு எதிர்வுகூறலே.

 துமிக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. குருதி பீரியடிக்க விழுந்து கிடந்த நிலையிலும் கூட…அந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர்.

 மூச்சு விடவும் முடியாத  நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன சொற்கள்;

“இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடாதீங்கோ”

 பிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்;

 “பொறித் துமிக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்”

 சாவின் விளிம்பிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த சொற்கள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உண்மைதான்.சாவுக்கே எதிர்வுகூறல்  விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துமிக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை.

 சீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையில் நடைமுறை நிகழ்வுகளை அவன் கண் கூடாகக் கண்டவன்.

 இலங்கையின் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்களும் கடற்படை, விண்ணூந்துப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், படைத்துறை, காவற்றுறை ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த வன் செயல்களுக்கு  இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான்.கல்லூரி நாட்களிலேயே இனவெறிபிடித்து சிங்கள ஆளும் பேரின ஆற்றல்களுக்கு  எதிராக போராடும் உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்.

 1978ம் ஆண்டு மடங்கல் திங்கள் கொண்டுவரப்பட்ட இலங்கை மக்களாட்சி  பொதுமைக் குடியரசின் அரசியல் உடன்படிக்கை அடிப்படையில், யே.ஆர். ஜெயவர்த்தனா முதல்வராக பதவியேற்கும் பொழுதில் தமிழீழ மண்ணில் சிறப்பாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வெளிப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த நிகழ்வையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் இலங்கைத் தேயக்  கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 சீலன் தனக்கேயுரித்தான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொசுபரசு’ என்னும் வேதியற் துளை களைஅத்தேயக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேயக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது.

 ஐயத்தின் பேரில் 18 அகவை மாணவனான சீலன் சிறைப்பிடிக்கப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் படுவதை செய்யப்பட்டான். அந்த அகவையிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், படுவதைகளும் என்ன செய்துவிடமுடியும்?

 

தனிமாந்தன் ஒருவனால்  , எதிர்ப்புணர்வால் அரச உடமைகளை அழித்து விடமுடியாது என்ற பட்டறிவையும், இவை சீலனுக்கு கற்றுக்கொடுத்தன. இந்தப் பட்டறிவே  சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, பொருட்டாக உதவியது.ஆய்தந்தாங்கிய அடக்குமுறையை,  ஆய்தப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆய்தப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற கோட்டையில் சீலன் மிகைவீரத்துடன் நடந்திருக்கிறான். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை.

 ஆனால் , இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அன்று; வறிய குடும்பமொன்றின் எதிர்பார்ப்புகளை தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், குறிக்கோள் சீலனிடம் இருந்ததன.சாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிலையான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை.சீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம்.எண்ணாற்றலில்  திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமன்று, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான்.

 சீலனின் வாழ்நிலையே , புரட்சிநிறைந்த விளைநிலமானது. பொதுவுடமை எண்ணத்தில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். பொதுவுடமை ஒளியில் தேய இனச்சிக்கலை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.

 உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஈடுபாட்டுடன் உற்றுநோக்கி வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது கருத்துகள் தன்னிலை எண்ணங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன.இத்தகைய அரசியற் தெளிவு கொண்ட சீலன் படைத்துறைப் பிரிவுத் தலைவனாகர் திறனொடு செயற்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.

 குறுகிய காலத்தில் சீலன் ஆற்றிய  வீரம் அளப்பெரியது .

1981 கன்னித்திங்கள், பிரிகேடியர் வீரதுங்க இலங்கை அரசால் பதவி உயர்வு பெற்று, படைத்துறைத் தலைவனாக அமர்த்தப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைப் படைத்துறைக் கூலிப்படைக்கு எதிரான மறை தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது.

 1982 இல் முதல்வர் தேர்தலுக்கான பரப்புரைக்காக யாழ்ப்பணத்திற்கு யே.ஆர் யெயவர்த்தனா வருகை செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் வல்லுந்து வண்டிகளைச் சிதைக்கும் மறை நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. கெடுபேறாக இலங்கைக் கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.

 1982 கன்னித்திங்கள் 20-ஆம் நாள், கெடுந்தேசிய வெறியன் யே.ஆர் யெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டான்.காவல் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு சிற்றுந்து நிக்கிறது. சிற்றுந்திலிருந்து படைத்துறை உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் துணை பொறிமுறைத் துமிக்கி (S.M.G), தானியங்கித் துமிக்கிகளோடு  மின்வெட்டும் விரைவிர் காவல் நிலையத்தினை பிடிக்கின்றனர்.

எதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு இலங்கைக் காவற்றுறையினர் சுடப்பட்டனர். அந்த விடியற்காலையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துமிக்கி வேட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாய்கின்றன. கணிப்பெடுக்கும் அறை சிதைக்கப்படுகிறது.

 சாவின் அச்சம் அறியாத  சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் காவற்றுறைத் திடும்படை துமிக்கிப் பயன்பாட்டிற்கு குறியானதால் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துமிக்கிச் குண்டுகள் பாய்ந்தன.காவல் நிலைய வண்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிற்றுந்துக்குள் ஆயுதங்கள் அனைத்தும் விரைவாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துமிக்கியையும் இழுத்துக்கொண்டு சிற்றுந்திற்கருகில் வந்து உடனிருந்த போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான்.இதற்கு ஐந்து திங்கள்களுக்கு முன்புதான் துமிக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, மருத்துவமனையில் மருத்துவம்பெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம்.

 இந்தத் துமிக்கிக் காயம் சீலனை மிகவும் வல்லமை அற்றவனாக்கியது . காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பாதுகாப்பதில் பெரிதாகக் கடினம் ஒன்றும் இருக்கவில்லை .

 “நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான்.

முதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக  மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான்.

 ஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று சீலனிடம், மருத்துவமனையில் அவனைக் பார்த்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் மறுத்து விட்டான்.அவன் ஓரளவு குணமாகியிருந்தாலும் கெந்திக் கெந்தித்தன் நடப்பான். ஐந்து திங்கள் இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துமிக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான்.

 நெஞ்சிலே காயம்பட்டு அறுவை மருத்துவம் வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது, மருத்துவமனையில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட செவிலியர் அவனிடம் கேட்டாள்:

“நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா? நண்பர்களினாலா? மருத்துவரினாலா? அல்லது கடவுளின் அருளினாலா?”

 அந்தச்செவிலியர் என்ன மறுமொழியை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்த விடையை சீலன் சொல்லியிருக்கலாமே என்று பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர்.அவளுடைய நிறைவிற்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு மறுமொழியைச் சொல்ல, அவன் அணியமாக இல்லை.மருத்துவம் பெற்று ஐந்து துங்கள் கூட நிற்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான்.

 1983 விடைத்திங்கள் 18-ஆம் நாள்,

 இலங்கை அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான நாள் ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்றிணைந்த தேய கட்சியும், தமிழ்க் காங்கிரசு, நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் விரைவுத் தேர்தல் பரப்புரையில் இறங்கியிருந்தன.யாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் பணியில் இயக்கம் முழுமூச்சுடன்  செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தன்னலத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனசார் அரசின் தேர்தல் மயக்கத்திலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரை வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்சார்பாகவும் படைத்துறை சார்பாகவும் சீலன் துடிப்புடன் பணியாற்றினான். கொடுந்தேசிய இனவெறியன் யே.ஆரின் சார்பில் ஒன்றிணைந்த தேயக் கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, மேழம் 29ம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.

 விடை 18 ஆம் நாள் , தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு ஒருங்கமைப்புக் கருதி இலங்கை அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆய்தப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் இருக்கையளிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 ஒவ்வொரு இருக்கையளிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆய்தம் தாங்கிய காவற்றுறையினரும் ஐந்து ஆய்தம் தாங்கிய படைத்துறையினரும், பாதுகாப்பிற்காக அணிய நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.இதனை விட, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை காவற்துறையும்  படைத்துறையும் உழவு  பார்த்துக் கொண்டிருந்தன.

 விடை 18ஆம் நாள் மாலை 4.15 மணி.

 கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் இருக்கையளிப்பு நிலையத்திற்கருகில், மூன்று மிதியுந்துகளில் இளைஞர்கள் வந்திருந்திறங்கியிருந்தார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு மிதியுந்தின் சட்டத்திலிருந்து பொறிமுறைத் துமிக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன.பாதைகள் மறிக்கப்பட்டு, ஊர்திகள் திருப்பி அனுப்பபடுகிறன. தெருவைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் படைத்துறைக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சான்று.இந்தத் தாக்குதல் நிகழ்வு பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விளக்குகையில், “விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்கக் கூடியவர்கள் அல்லர் என்று , மக்கள் புலிகளின் படைத்துறைத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார்.

 கந்தர்மட நிகழ்வு  நடைபெற்று இப்போது ஒன்றரை திங்களாகிவிட்டது .

 ஆடவை 05ம் நாள்.

 நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது.

 கொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் படைத்துறை உடையில் பொறிமுறைத் துமிக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் படைத்துறை இடைத்தங்குமிடத்தில் இருந்து  வந்திருப்பதாகவும், தாவடி இணைப்பில் தங்களுடைய வல்லுந்து பழுதாகி நிற்பதாகவும் சிற்றுந்தை தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும்  தனது சிற்றுந்தைக் கொடுக்கிறார்.நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை பைஞ்சுதை தொழிற்சாலையருகில் இந்தச் சிற்றுந்தை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர்.துமிக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் திறப்பை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே மணித்துளிகளில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான பொருட்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர். விடியற்காலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட சிற்றுந்தை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள்.மிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான்.1979ம் ஆண்டின் தொடக்க நாள்களில்  இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு  வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் நடுவில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது எளிதாக இருந்தது.அரச படையினால் தேடப்படத்தொடங்கியதும், தனது வீட்டுக்குப் போவதை முழுமையாக நிறுத்திக்கொண்டு விட்டான். மருத்துவமனையில் நெஞ்சில் துமிக்கிக் காயத்திற்காக மருத்துவம் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி சில நாட்கள் கழித்து அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கடினமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனச் சொல்ல முடியாது. தனது குடும்பச் சிக்கல் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அரிதாகவே கதைத்திருக்கிறான்.சீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான்.

 சீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவமனைச் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றாள், நெற்றிப்போட்டிலே பாய்ந்த துமிக்கிச் குண்டால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு ஆண்டுகளுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள் சிதைவிற்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகத்தைப் பெற்றவள் இணங்காண்கிறாள்.

 அது அவளுடைய செல்வந்தான்.

அரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரம் தோய்ந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இந்த அமைதியை படைத்துறைப் படையிலுள்ள ஒருவன் குலைக்கிறான்.

 “இது ஒண்ட மகனா?” கொச்சைத் தமிழில் கேட்கிறான்.

 கண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேலாளரிடம் வேண்டுகிறாள்.அவனோ வெறுப்பை உமிழ்கிறான்.

 அந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் உரிமை – இது நெறி.அந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு உரிமை – இது சட்டம்.

 தான் பெற்ற மகனைக் மதிப்புரவுடன் அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையை, அரசின் கொடுநெறி நெரித்தது. சீலன் உயிரோடிருந்ததைவிட அவன் வீரச்சாவடைந்தபோதுதான் அரசுக்குப் பெரும் எதிர்வுகூறலானான். புரட்சிசார்பாளர்களின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் தொடங்குகிறது .

 அவனுடைய உடல் கிடத்தப்பட்டிருந்த மருத்துவமனை வலுவான படைத்துறைக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.அதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் உடலைப் பார்க்க முடியவில்லை.எத்தனையோ நூறாயிரம் தமிழ் மக்களின் நெஞ்சங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் வித்துடல், யாருக்கும் தெரியாமல் விரைவுகாலச் சட்டத்தின் கீழ் படைத்துறை விலங்குகள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.

 

விடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூறுகிறார்.

 “எவ்வளவு சிறப்பானவன் என் சீலன் !”

 “பெருவிருப்போடல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….!”

 “இவ்வளவு விரைவில் என்னை விட்டுப் போனான்?”

 “அவனது சாவுச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…”

 “எவ்வளவு கடினமான பொழுதுகளில் உயிருக்குயிராய் துணை நின்றான்…”

 “காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை உயர்வானவை…”

 “குறிக்கோளோடு காத்திருந்தானே…”

 “ஏன் சடுதியாக இப்படி இல்லாமல் போனான்?”

 “மீண்டும்…. மீண்டும்…..

நினைவிற் சுழல்கிறது அது.

அந்த அழகு முகம்.

அந்த மழலைச் சிரிப்பு.

அந்தப் பாட்டு.

அன்று இரவு சூழ்ந்துவிட்டது.

சலசலக்கும் காட்டு மரங்கள்,

சருகுகளின் ஓசை,

சில்வண்டுகளின் இசை.

காற்றின் தடவல்,

குழுமியிருக்கும் விடுதலை இளவல்கள்.

அவர்களிடையே பல்சுவை நிகழ்ச்சி.

அது சீலனின் முறை.

அவனுக்கு பாட்டு.

அதோ சீலன்!

எப்போதும்போல் கட்டமிட்ட சட்டை; கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட நீளக்காற்சட்டை.

அவனிடம் கூச்சம்.

சிரித்துச் சமாளிக்கின்றான்.

நண்பர்களின் தூண்டுதல்.

பாட்டின் தொடக்கம்.

கம்பளையான வரவேற்பு.

மகிழ்வடைகிறான்.

கைகளை அகலவிரித்து உறுதியாகப் பாடுகிறான்.”

 “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….”

நினைவின் துளியில் ஒரு தூளி ..

முற்றும் !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button