ஈழம்வரலாற்று மாந்தர்கள்

திருமலை ஈகர் நடராயன்;நினைவுநாள் தொகுப்பு.

வரலாற்றுக்குறிப்பு.

திருமலை ஈகர் இனமானப்பிள்ளை நடராயன்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழாம் ஆண்டு, குடத்திங்கள் நான்காம் நாள், இலங்கை விடுதலையடைந்து ஒன்பதாவது ஆண்டுநாள் ஆகும். அன்றைய நாள், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களச்சட்டத்தை எதிர்த்து, தமிழர் தேயமெங்கும் இலங்கை விடுதலைநாளை தமிழர் புறக்கணித்தனர். இது ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முதன்மையான எதிர்ப்பு வெளிப்பாடாகக்கருதப்படுகிறது.

அந்த நாளில், திருகோணமலை (திருமலை) பகுதியில் சிங்கக்கொடியை அகற்றி, அதற்கு மாற்றாக கருப்புக்கொடியைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார் இனமானப்பிள்ளை நடராயன். இனப்பற்றும் தேயப்பற்றும் நிரம்பிய அவர், அப்போது இருபத்திரண்டு அகவை கொண்ட இளைஞனாக இருந்தார். அவர் மேற்கொண்ட செயல், அமைதியான முறையில் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பாகும்.

அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நடராயன், எவ்.யி. மனுவல் மற்றும் டீ. சில்வா ஆகிய அரச காவற்துறையினரால் துமுக்கிச்சூட்டுக்கு குறியாகி, தேயக்கொடியுடன் மண்ணில் வீழ்ந்து உயிர்நீத்தார். இந்த நிகழ்வு, வடக்கு- கிழக்கு பகுதிகளைச்சேர்ந்த தமிழர் தாயகத்தை பெருமளவில் உலுக்கியது .

ஈகர் நடராயன் உயிர்நீத்த காலத்தில், பின்னாளில் தமிழீழத்தேயத்தலைவராக இன்று எம்மால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு அகவை மூன்றாக இருந்தது. இதனால், ஈகர் நடராயன் நிகழ்வு தமிழர் விடுதலை வரலாற்றின் தொடக்கக்காலக்குறியீடுகளில் ஒன்றாகக்கருதப்படுகிறது.

இலங்கை விடுதலையடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில், அரச அடக்குமுறைக்கு எதிராக முதல் விடுதலை உணர்வோடு உயிரீந்த திருகோணமலை மண் தந்த மறப்புதல்வனாக ஈகர் இனமானப்பிள்ளை நடராயன் வரலாற்றில் நிலைபெற்றார். இலங்கை விடுதலையின் எழுபத்தெட்டாவது ஆண்டுநாளில், அவரது இருபத்தொன்பதாவது ஆண்டு நினைவுநாள் நினைவு கூரப்படுகிறது.

தமிழர் அரசியல் வரலாற்றில், அறவழிப்போராட்டத்தில் உயிர்துறந்த முன்னோடி இளைஞர்களில் ஒருவராக ஈகர் நடராயன் நினைவுகூரப்படுகிறார். அவரது ஈகமும் இனமான உணர்வும், தமிழர் தாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button