தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா
(௨௮/௰௧/௨௱௨௰௪.(௰௩/௰௧/௨௱௫௰௫).

“வாழ்கதமிழ்”
தூயதமிழ்த்துளி மன்றம்; தொடக்கவிழா
இருபத்தெட்டாம் நாள் , நளித்திங்கள் இரண்டாயிரத்து இருபத்துநான்கு (பொதுநாள்காட்டி ) ௨௮/௰௧/௨௱௨௰௪.
பதின்மூன்றாம் நாள் , நளித்திங்கள், திருவள்ளுவர் ஆண்டு இரண்டாயிரத்து ஐம்பத்தைந்து .( ௰௩/௰௧/௨௱௫௰௫).
துளிப்பணிப்பகத்தின் ஏற்பாட்டில் துளிவானொலியால் தொடங்கப்படும் தூயதமிழ்த்துளி மன்றம் .
தூயதமிழ்த்துளி மன்றத்தொடக்க விழாவானது , துளிவானொலி இயக்குநரும் அறிவிப்பாளருமான பவியம்மாவின் பெருமங்கலநாளை நினைவுகூரும் வகையில் தொடங்கப்படவுள்ள உலகலாவிய தமிழ்ச்செயற்பாடுகளுக்கான மன்றமாகும் . இதன் தொடக்கவிழாவானது இந்தியா தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பிசர் கீபர் கல்லூரியில் நிகழ்த்தப்படவுள்ளது. இந்நிகழ்வை பிசர் கீபர் கல்லூரியில் துளிவானொலியும் பிசர் கீபர் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நிகழ்வறிக்கை
தமிழ்மொழித்தேவைகருதி வியத்தகு தமிழ்ச்செயலாற்றல்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதன் பொருட்டு அடித்தளமிடும் இந்நிகழ்வற்கான வரவேற்புரையை வழங்குவதற்கு பிசர் கீபர் கல்லூரியின் கலையறிவியற்றுறை மாணவி செல்வி சு . தர்சினி அவர்கள் அணியப்படுத்தப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து ,முன்னிலையுரைகளை வழங்குவதற்காக வழக்குரைஞர் பிரபு , துளிவானொலி உறவுகளான ஆசிரியர் தேவகி அன்புராசு ,சிற்றூர்ப்பாடகர் லெனில் , அனுமுருகன் போன்றோர் அணியப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பிசர் கீபர் கல்லூரி முதல்வர் யே . பிரின்சி மெர்லின் அவர்களும் தமிழாய்வுத்துறைத்தலைவர் பா . இராசகுமார் அவர்களும் நிகழ்விற்கான வாழ்த்துரை வழங்கவுள்ளனர் .
இந்நிகழ்விற்கான தலைமையுரையை வழங்குவதற்கு வருகைதரவுள்ளார் வேர்ச்சொல்லாய்வறிஞர் மா. சோ. விக்டர் அவர்கள் .அதனைத்தொடர்ந்து தூயதிங்களிதழாசிரியர் தமிழமல்லன் ,தமிழ்ச்செம்மல், திருக்குறள் நாவை.சிவம் ஆகியோரது கருத்துரை போன்றவற்றுடன் தம்முயிர் , உடல், வாழ்நாள்யாவற்றையும் தமிழிற்காக உவந்தளித்த தமிழ்போற்றும் வல்லோர்களின் வழித்தோன்றல்களான
மறைமலையடிகளாரின் கொள்ளுப்பெயர்த்தியும் , நீலாம்பிகையம்மாவின் பெயர்த்தியும் , புலியூர்க்கேசிகனார் மகளுமான பாவலர் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன் அவர்களும்..
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெயர்த்தியும்
தமிழகப்பெண்கள் செயற்களத்தின் ஒருங்கிணைப்பாளர் இ.இசைமொழி அவர்களும்..
பாவேந்தர் பாரதிதாசனார் கொள்ளுப்பெயரன்களான
பாமன்ற நிறுவனர் திரு. கனகரத்தினம் தமிழன்பன் பாவலர் திரு. கனகசிவா அவர்களும்
தேவநேயப்பாவணர் கொள்ளுப்பெயரனான திரு. சிவா பாவண்ணர் ஆகியோருடன்,தமிழாய்வுத்துறைத்தலைவர் திரு. பா. இராசகுமார் ஆகியோரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் மாணவர்களின் பாவரங்கமும் பாவலர் கீர்த்தி அவர்கள் வழங்கும் தமிழிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது .
இதனைத்தொடர்ந்து தமிழார்வலர் முத்தையா சுப்பிரமணியம் (துளிவானொலி ) நன்றியுரை வழங்கி ,நிகழ்வை இனிதே நிறைவுசெய்யவுள்ளார் .
நிகழ்விற்கான ஒருங்கிணைப்புப்பணியை த.யோன் யெயந்தி, உதவி ஒருங்கிணைப்பு ஒத்திசைவாளர்களாக த.செல்வம்மணி, இரா. இராசராசன், தே. சீலா , புலவர் செமிதா செலின் ராணி.
அத்துடன்….
தூயதமிழ்த்துளி மன்றத்திற்கான அனைத்து செயற்பாடுகளையும் துளிவானொலி சார்பில் அணியப்படுத்தி ஒருங்கமைத்தவர் துளியரசன் செண்பகம் (துளிவானொலி). (அறிஞர்கள் தேர்வு , பதாகை , வரவேற்பட்டை , உணவேற்பாடு , தங்குமிட ஏற்பாடு , துண்டறிக்கை போன்ற பல்தரப்பட்ட பணிகள்)
தூயதமிழ்த்துளி மன்றத்தின் தொடக்கவிழாவானது , தமிழ்போற்றும் நல்லுலகிற்கு ஓரெடுத்துக்காட்டாகவும் மாணவச்செல்வங்கட்கு வழிகாட்டுதலாகவும் , காலங்காலமாகத்துளிர்க்கும் தமிழின் வரலாற்றுப்பெட்டகமாகவும் ஒருங்கமைப்புச்செய்யப்பட்டுள்ளமை வரவேற்பிற்குரிய செய்திகளிலொன்றாக இவ்வுலகம் பார்க்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது . அதேநேரம் தமிழ்மொழிக்கு அரணாக தமிழ்மாந்தர் அனைவரும் அறத்துடன் அணிதிரண்டு வரவேண்டும் என்ற அறைகூவலாகவும் இருப்பதையே துளிப்பணிப்பகம் விரும்புகிறது .
இந்நிகழ்விற்கு வருகைதரவிருக்கும் மதிப்புறு பெரியோர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் , செயற்பாட்டாளர்கள் அனைவரையும் பேருவகையொடு வரவேற்று மகிழ்கிறது நிகழ்வு ஒருங்கிணைப்புச்செயற்குழு .
செய்திப்பகிர்வு : துளிப்பணிப்பகம் /துளிவானொலி
“தமிழே எங்கள் முகவரி”
“வாழ்க தமிழ் “






மகிழ்வான செய்தி. நிகழ்வு நன்றாக அமைய தூய தமிழ் எங்கும் பரவ வாழ்துகிறோம்.