
குறள் – ௲௨௱௩௰௧ (அச்சில் உள்ளவாறு).
“சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்.”
சிறுமை = துன்பம்.
நமக்கொழிய = நமக்கு உரியதாக.
சேண் = தொலைவு
உள்ளி = நினைத்து.
நறுமலர் = மணமுள்ள மலர்.
நாணின = நாணமுற்றன.
கண் = விழிகள்.
“சிறுமை நமக்கொழிய சேட்சென்றாருள்ளி நறுமலர்(காண)
கண் நாணின” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘காண’ என்பது சொல்லெச்சம்.
“துன்பத்தை நமக்குரியதாக்கி தொலைவில் சென்றாரை நினைத்து அழகும் மணமும் கொண்ட மலர்களைக்காண கண்கள் நாணமடைந்தன.
முன்பு தனது கண்களைக்காண நாணிய மலர்களை பிரிவினால் அழகும் ஒளியும் குன்றிய கண்கள் இப்போது காண நாணின” என்பதாம். குறளெண் – ௲௱௰௪-ஐ ஒப்பு நோக்குக.
‘ஒழிய’ என்னும் வினையெச்சம் ‘சேண் (தொலைவு)’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“சிறுமை நமக்கொழிய சேட்சென்றா ருள்ளி
நறுமலர் நாணின கண்.”
குறள் – ௲௨௱௩௰௨ (அச்சில் உள்ளவாறு).
“நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாருங் கண்.”
நயந்தவர் = விரும்பியவர்.
நல்காமை = (இப்போது) அன்புசெய்யாமை.
சொல்லுவபோலும் = கூறுவ. ‘போலும்’ என்பது உரையசைச்சொல்.
பசந்து = பசலைநிறமடைந்து.
பனிவாரும் = கண்ணீர் வழியும்.
கண் = விழிகள்.
“பசந்து பனிவாரும் கண் நயந்தவர் நல்காமை சொல்லுவபோலும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பசலைநிறமடைந்து கண்ணீர் வழியும் கண்கள் விரும்பியவர் இப்போது அன்புசெய்யாமையைச்சொல்கின்றன” என்பதாம்.
‘பனிவாரும் கண்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.”
குறள் – ௲௨௱௩௰௩ (அச்சில் உள்ளவாறு).
“தணந்தமை சால வறிவிப்ப போலு
மணந்தநாள் வீங்கிய தோள்.”
தணந்தமை = பிரிந்தமை.
சால = மிகவும், விளங்க.
அறிவிப்பபோலும் = அறிவிக்கின்றன. ‘போலும்’ என்பது உரையசைச்சொல்.
மணந்தநாள் = சேர்ந்திருந்த நாள். வீங்கிய = பூரித்த, வனப்புற்ற.
“மணந்தநாள் வீங்கிய தோள் தணந்தமை சால அறிவிப்பபோலும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சேர்ந்திருந்த நாளில் வனப்புற்ற தோள்கள் பிரிந்த காலத்தை விளங்க அறிவிக்கின்றன” என்பதாம்.
‘சால’ என்னும் உரிச்சொல் புணராது தனித்துநின்று தனது உரிப்பொருளை செறிவாக உணர்த்தும்.
‘போலும்’ என்னும் உரையசைச்சொல் ‘அறிவிப்ப’ என்னும் வினைமுற்றைச்சார்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.”
குறள் – ௲௨௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.”
பணைநீங்கி = பருமை குறைந்து.
பைந்தொடி = பசும்பொன் வளையல்.
சோரும் = கழலும்.
துணைநீங்கி = கணவரைப்பிரிந்து.
தொல்கவின் = திருணத்திற்கு முன்னிருந்த இயற்கையழகு.
வாடிய = அழகிழந்த, வனப்பிழந்த.
“துணைநீங்கி தொல்கவின் வாடிய தோள் பணைநீங்கி பைந்தொடி சோரும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“கணவரைப்பிரிந்து திருமணத்திற்கு முன்னிருந்த இயற்கைவனப்பும் குறைந்து பருமையிழந்தன தோள்கள். செம்பொன் கைவளையல்கள் கழலும்” என்பதாம்.
‘நீங்கி’ என்னும் வினையெச்சம் ‘பைந்தொடி’, ‘தொல்கவின்’ ஆகிய பெயர்களுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘சோரும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பணைநீங்கி பைந்தொடி சோரும் துணைநீங்கி
தொல்கவின் வாடிய தோள்.”
குறள் – ௲௱௩௰௫ (அச்சில் உள்ளவாறு).
“கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.”
கொடியார் = அன்பிலார்.
தொடியொடு = வளையலணிந்த கைகளுடன்.
தொல்கவின் = திருமணத்திற்கு முன்பிருந்த அழகு.
வாடிய = அழகு குறைந்த, வனப்பு குன்றிய.
“தொடியொடு தொல்கவின் வாடிய தோள் கொடியார் கொடுமையுரைக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“வளையல்களணிந்த மூங்கில்போலும் கையொடு திருணத்திற்கு முன்பிருந்த அழகும் குன்றிய தோள்கள் அன்பிலாரது கொடுமையை உரைக்கும்” என்பதாம்.
‘உரைக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கொடியார் கொடுமை யுரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.”
குறள் – ௲௨௱௩௰௬ (அச்சில் உள்ளவாறு).
“தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற நொந்து.”
தொடியொடு = வளைகளணிந்த மூங்கில்போலும் கைகளொடு.
நெகிழ = தளர.
நோவல் = வருந்துவன்.
கொடியரென = அன்பிலாரென.
நொந்து = வருந்தி.
“அவரை கொடியரென கூறல் நொந்து தொடியொடு தோள் நெகிழ நோவல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அவரை (கணவரை) அன்பிலாரென கூறியதற்கு வருந்தி வளையல்களும் தோளும் தளர வருந்துவன்” என்பதாம்.
‘தோணெகிழ’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘தோள்’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘நோவல்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அவரை’என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபெற்ற சொல் ’கொடியர்‘ என்னும் வினையாலணையும்பெயரொடு புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘கொடியர்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து அதன்முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரை
கொடிய ரெனகூற நொந்து.”
குறள் – ௲௨௱௩௰௭ (அச்சில் உள்ளவாறு).
“பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து.”
பாடு = உய்தல், மேம்படல்.
பெறுதியோ = பெறுவாயோ.
கொடியார்க்கு = அன்பிலார்க்கு.
வாடுதோள் = அழகு/வனப்பு குன்றி வாடும் தோள்.
பூசல் = வருத்தம்.
“கொடியார்க்கு என்வாடுதோள் பூசலுரைத்து நெஞ்சே பாடு பெறுதியோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அன்பிலார்க்கு அழகு/வனப்பு குன்றி வாடும் என்தோள்களது வருத்தத்தைக்கூறி நெஞ்சே உய்க” என்பதாம்.
‘கொடியார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு*என்
வாடுதோள் பூச லுரைத்து.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௱௩௰௮ (அச்சில் உள்ளவாறு).
“முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.”
முயங்கிய = இறுகத்தழுவிய, பிணைந்த.
ஊக்க = தளர்த்த.
பசந்தது = பசலைநிறமடைந்தது.
பைந்தொடிப்பேதை = பசும்பொன் வளையலகளணிந்த பெண்.
நுதல் = நெற்றி.
“முயங்கிய கைகளை ஊக்க பைந்தொடிப்பேதைநுதல் பசந்தது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“என்னை இறுகத்தழுவிய பசும்பொன்வளையல்களணிந்த இப்பெண்ணினது கைகள் நோகுமென சற்று தளர்த்தியதற்கே இவளது நெற்றி பசலையுற்றது” என்பதாம்.
‘கைகளையூக்க’ என்பதன்கண் வந்த யகரவுடம்படுமெய்ப்புணர்ச்சி ஒலிப்பெளிமையும் பொருளுணர் எளிமையும் இல்லாதது. ‘கைகளைவூக்க’ வகரவுடம்படுமெய்பெறுவது மேற்சொன்ன குறைகளைக்களையும்.
‘ஊக்க’ என்பது கணவரின் வினை, ‘பசத்தல்’ என்பது மனையாளின் வினை. இருவேறுவினைமுதல்களின் வினைகள் புணரா.
செம்மைவடிவம் —
“முயங்கிய கைகளைவூக்க பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.”
குறள் – ௲௨௱௩௰௯ (அச்சில் உள்ளவாறு).
“முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.”
முயக்கிடை = தழுவலிடை.
தண்வளி = குளிர்க்காற்று.
போழ = புக, நுழைய.
பசப்புற்ற = பசலையடைந்த.
பேதை = பெண் (மனையாள்).
பெருமழைக்கண் = பெரிய குளிர்ந்த விழிகள்.
“முயக்கிடை தண்வளி போழ பேதைபெருமழைக்கண் பசப்புற்ற” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தழுவலிடை குளிர்க்காற்று நுழைய என்னவளின் பெரிய குளிர்ந்த விழிகள் பசலையுற்றன. சிறுவிலகலையும் விரும்பாள்” என்பதாம்.
‘முயக்கிடை’ என்பதன்கண் வந்த ‘இடை’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘முயக்கு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘போழ’ என்பது காற்றின் செயல். ‘பசத்தல்’ என்பது கண்களின் செயல். இருவேறு வினைமுதல்களின் வினைகள் புணரா.
செம்மைவடிவம் —
“முயக்கிடை தண்வளி போழ பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.”
குறள் – ௲௨௱௪௰ (அச்சில் உள்ளவாறு).
“கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
யொண்ணுதல் செய்தது கண்டு.”
பசப்போ = புசந்தனவோ.
பருவரல் = துன்பம்.
எய்தின்றே = அடைந்தது. இன்று, ஏ ஆகியன அசைச்சொற்கள்.
ஒண்ணுதல் = ஒளிமிகு நெற்றி.
“ஒண்ணுதல் செய்தது கண்டு பருவரல் எய்தி கண்கள் பசப்போ ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒளிமிகு நெற்றி பசப்புற்றது கண்டு துன்பமடைந்த கண்கள் புசந்தனவோ. தலைமகளது உறுப்புகள் ஒன்றினொன்று முற்பட்டு நலனழிகின்றன” என்பதாம்.
‘எய்தின்றே’ என்பதன்கண் வந்த ஓகார அசைச்சொல் ‘இன்று’ என்னும் அசைச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.”
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



