குறள்களில் பொருள்மயங்குபுணர்ச்சி; “நீத்தார்பெருமை”
குறள்களின் செம்மைவடிவம்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி
பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோராலும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௧.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.”
செம்மைவடிவமும் இதுவே.
‘உலகப்பற்று’ எனும் ஒருசொல்லை வருவித்து பொருள்காண்க. இவ்வாறு வருவித்துக்கொள்ளுஞ்சொல் ‘சொல்லெச்சம்’ எனப்படும்.
“உலகப்பற்று நீத்தார் ஒழுக்கத்து பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு” என்றவாறு கொண்டு கூட்டி பொருள்காண்க.
‘உலகப்பற்றுகளை நீத்தாரது ஒழுக்கத்தின் பெருமையே, விழுமியங்களை விரும்பும் நூல்களினது உறுதிப்பொருள்’ என்றவாறு விரியும்.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௨.
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.”
‘துணைக்கூறின்’ என்பதில் ‘துணை’ என்பது ‘அளவு’ எனப்பொருள்படும். துணை என்பது ஐகாரயீற்றுச்சொல் ‘ஐ’ உருபேற்ற சொல்லன்று. இரண்டாம்வேற்றுமையுருபு இவ்விடத்து மறைந்து நிற்கிறது. இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
‘துறந்தாரது பெருமையின் அளவைக் (துணையைக்) கூறின், வையத்தில் இறந்தாரை எண்ணி கணக்கிட்டதை ஒக்கும்’ என்றவாறு விரியும்.
செம்மைவடிவம் —
“துறந்தார் பெருமை துணைகூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௩.
“இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.“
‘ஈண்டு இருமைவகையைத்தெரிந்து அறத்தினை பூண்டாரது பெருமையால் உலகு பிறங்கிற்று (உயர்ந்தது)’ எனவிரியும்.
‘இருமைவகைதெரிந்தறம்பூண்டார்பெருமை’ — இது இக்குறளின் நெடுந்தொடரெழுவாய் ஆகும். ‘ஈண்டு’ எனும் இடச்சுட்டு இந்நெடுந்தொடரெழுவாய்க்கு உரியதன்று; இடைப்பிறவரலாய் நின்றது. இடைப்பிறவரல் புணராது தனித்து நின்றாலே, உரிய இடத்திற்கு அதுசெல்லும். பொருள்பொருத்தமுறாத இடைப்பிறவரல் புணராது.
செம்மைவடிவம்—
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.“
இதனால் அசை கெடாது. குற்றியலுகரம் ஒற்றெழுத்துக்குரிய அரைமாத்திரையளவினையே பெறும். ஈண்டு எனும் சுட்டின் முன்னும்பின்னும், நெடுந்தொடரெழுவாயீற்றிலும் விட்டிசைக்கும். விட்டிசை என்பது புணர்ச்சியை மறுக்கும் உத்தியன்று; பொருளுணர்ச்சியைத்தோற்றுவிக்கும் இலக்கணமே.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௪.
“உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.”
‘ஓரைந்தும்’ என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது.
‘உரனென்னுந்தோட்டியான்’ என்பது ‘ஆன்’ எனும் மூன்றாம்வேற்றுமையுருபேற்ற பெயர்ச்சொல். மூன்றாம்வேற்றுமை வினையைமட்டுமே ஏற்கும். ‘ஓரைந்து’ எனும் பெயர்ச்சொல்லை ஏற்காது. ஏற்காது என்பது புணராது என்பதாம். பெயர்ச்சொல் புணராமல் அதனையடுத்து நிற்கலாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு- ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௫.
“ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.”
‘அகன்ற’ எனும் பொருள்தரும் ‘அகல்’ எனும் சொல் விசும்பு என்பதற்கு அடையாக நிற்கிறது; ‘ஆற்றல்’ எனும் சொல்லுக்கன்று. பொருள்பொருந்த தழுவுஞ்சொற்களே புணரும். தழுவுஞ்சொற்களல்லயென்றாலும் புணர்ந்த்துவதற்கு விதியில்லாநிலை வரும்வரை புணர்ந்த்துவதை செய்யுள்வழக்காக நாம் பிறழ உணர்ந்துள்ளோம்.
‘அகல்விசும்புளார்கோமான்’ என்பது ‘அகன்ற வானுலகத்தில் வாழும் தேவர்களது தலைவன்’ எனவிரியும். இஃது இந்திரனுக்கான அடைமொழி. அடைமொழியும் அடைமொழிக்குரியவனும் புணர்ந்து ஒருசொல்லாவது சிறப்பன்று.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்காண்க.
‘ஐந்தும் அவித்தானது ஆற்றலுக்கு அகன்ற வானுலகத்தில் வாழும் தேவர்தலைவனான இந்திரனே போதிய சான்று’ எனவிரியும்.
செம்மைவடிவம் —
“ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௬.
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.”
செம்மைவடிவமும் இதுவே.
“பெரியர் செயற்கரிய செய்வார்; சிறியர்
செயற்கரிய செய்கலாதார்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௬.
“சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.”
அறுதிப்பொருள்தரும் தேற்றேகாரத்தின்பின் விட்டிசை நேரும். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
“உலகு சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘உலகம் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தனது வகைகளை ஆராய்ந்து தெரிந்தவர்க்கே உரியது’ எனவிரியும்.
செம்மைவடிவம் —
“சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.”
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௮.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.”
செம்மைவடிவமும் இதுவே.
“குற்றமில்சொற்களையுடைய மாந்தரது பெருமையை நிலவுலகத்தின்கண் அவர்தம் மெய்ம்மொழிகள் காட்டும்” எனவிரியும்.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௨௰௯.
“குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.“
செம்மைவடிவமும் இதுவே.
“குணமென்னும் குன்றேறி நின்றாரது வெகுளி வெளிப்படுங்காலம் கணப்பொழுதேயாயினும் அதிலிருந்து ஒருவர் தன்னைக்காத்தல் அரிது“ எனவிரியும்.
பால் — அறத்துப்பால்.
இயல் — பாயிரவியல்.
தலைப்பு – ௩. நீத்தார்பெருமை.
குறள் – ௩௰.
“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
“அந்தணர் என்போர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு ஒழுகலான் அறவோர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘அறவோர்’ என்பது பெயர்ப்பயனிலை. அவ்விடத்தில் பொருள் முடிகிறது. பயனிலை என்பது தனித்திருப்பது சிறப்பு. அறவோர் என்பதன்பின் வருவது இடைப்பிறவரலாகும். ‘என்போரறவோர்’ எனப்புணர்த்தியபின் இதனுள் இடைப்பிறவரல் எங்ஙனம் நுழையும். கொண்டுகூட்டுவதற்கு ஏதுவாக புணர்த்தவேண்டும்.
மற்று என்பது அசைச்சொல். எவ்வுயிர்க்கும் என்பது முற்றும்மை. முற்றும்மை எதனுடனும் புணராது. சொற்புணர்ச்சிக்கு விதியுள்ளதால் புணர்த்த வேண்டா.
செம்மைவடிவம் —
“அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.”
நன்றி.
எழுத்து : முத்தையா சுப்பிரமணி .




