இலக்கணம்தமிழ்நன்னூல்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௩௫. துறவு.

குறள் – ௩௱௪௧ (அச்சில் உள்ளவாறு).

“யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்.”

நீங்கியான் = நீங்கியவன், துறந்தவன்.
நோதல் = துயருறுதல்.

‘யாதனின்’ என்பதில் ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அன்’ சாரியைபெற்று ‘யாது’ என்னும் வினாச்சொல்லுடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘நீங்கியான்’ என்பது எழுவாயாகும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.

‘நோதல்’ என்னும் வினையெச்சத்தின் முடிக்கும் சொல் ‘இலன்’ என்பதாகும். இடையில் சுட்டுப்பெயரடுக்கு இடைப்பிறவரலாக வந்தது புணராது நிற்கும்.

‘அதனின் அதனின்’ என்பது அடுக்குத்தொடர். அடுக்குத்தொடர் தம்முள் புணராது.

‘அதனின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அன்’ என்னும் சாரியைபெற்று ‘அதன்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணர்ந்து பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மை வடிவம் —
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.”

குறள் – ௩௱௪௨ (அச்சில் உள்ளவாறு).

“வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல.”

வேண்டின் = (இன்பம்) வேண்டின்.
துறக்க = விடுக.
இயற்பால= இயல்பாவன (மாறுபாடின்மை, ஒத்திசைவு).

“(இன்பம்) உண்டாக வேண்டின் துறக்க துறந்தபின் ஈண்டு இயற்பால பல” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“இன்பம் உண்டாக வேண்டின் துறக்க. துறந்தபின் ஈண்டு இயல்பாவன பல” என்பதாம். ‘இன்பம்’ என்பது முன்குறளிலிருந்து உணரப்பட்டது.

‘உண்டாக’ என்பதையடுத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

‘துறந்தபின்’ என்பதில் வந்த ‘பின்’ என்னும் இடைச்சொல் ‘துறந்த’ என்னும் வினைச்சொல்லுடன் புணர்ந்து அதன் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“வேண்டினுண் டாக துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.”

குறள் – ௩௱௪௩ (அச்சில் உள்ளவாறு).

“அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு.“

அடல் = வெல்லல்.
ஐந்தன்புலம் = ஐம்புலன்.
ஒருங்கு = முழுவதும்.

“ஐந்தன் புலத்தை அடல்வேண்டும் (அடலுக்கு) வேண்டியவெல்லாம் ஒருங்கு விடல்வேண்டும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஐம்புலன்களை வெல்லவேண்டும். ஐம்புலவெற்றிக்கு விடவேண்டியதெல்லாம் முழுவதுமாக விடவேண்டும்” என்பதாம்.

‘அடல்வேண்டும்’ என்பதில் ‘வேண்டும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய யெல்லா மொருங்கு.“

குறள் – ௩௱௪௪ (அச்சில் உள்ளவாறு).

“இயல்பாகு‌ நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.”

நோன்பு = தவம்.
ஒன்றின்மை = ஒன்றன்மீது பற்றின்மை.
இயல்பு = குணம், தன்மை.
உடைமை = ஒன்றன்மீது பற்று.
மயல் = மயக்கம்.
பெயர்த்து = ஒழித்து.

“நோன்பிற்கு ஒன்றின்மை இயல்பாகும் உடைமை பெயர்த்து மற்றும் மயலாகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“ஒன்றன்மேல் பற்றின்மை நோன்பின் குணமாகும். பற்றுகொள்வது நோன்பினை ஒழித்து மீண்டும் மயக்கத்தைத்தரும்” என்பதாம்.

‘நோன்பிற்கு’ என்னும் குவ்வுருபேற்ற சொல் ‘ஒன்று’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘இயல்பாகும்’ என்பதில் வந்த ’ஆகும்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘ஒன்றின்மை’ என்பதையடுத்து மறுதலையான கருத்து தொடங்குகிறது. கருத்துமாற்றம் நிகழுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.

‘மயலாகும்’ என்பதில் வந்த ’ஆகும்’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“இயல்பாகு‌ம் நோன்பிற்கு*ஒன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.”

*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.

குறள் – ௩௱௪௫ (அச்சில் உள்ளவாறு).

“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.”

மற்றும் = அதற்கு மேலும்.
தொடர்ப்பாடு = தொடர்பு, உறவு.
எவன் = எதற்கு.
கொல் = அசைச்சொல்.
அறுக்கல் = அறுத்தல்.
உற்றார்க்கு = மேற்கொண்டார்க்கு.
மிகை = மிகுதி.

“பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“பிறவியறுத்தலை மேற்கொண்டார்க்கு அவர்தம் உடம்பே சுமையாயிருக்க அதற்குமேலும் பிறவற்றுடன் தொடர்பு எதற்கு” என்பதாம்.

‘எவன்’ என்னும் வினாப்பெயர் முன்பின் புணராது தனித்துநின்று வினாப்பொருளைச்சிறப்பித்துக்காட்டும்.

‘உற்றார்க்குடம்பு’ என்பதில் நான்காம்வேற்றுமை குவ்வுருபுடன் புணர்த்திய ‘உடம்பு’ என்னும் பெயர்ச்சொல் வினைசாராது தன்னளவில் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். குவ்வுருபு வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘உடம்பும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“மற்றுந் தொடர்ப்பாடு* எவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க்கு* உடம்பும் மிகை.”

*குற்றியலுகரங்களாகிய டுகரமும் குகரமும் அலகுபெறாது.

குறள் – ௩௱௪௬ (அச்சில் உள்ளவாறு).

“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.”

செருக்கு = தன்முனைப்பு (ஆணவம்).

‘என்னும்’ என்ற இடைச்சொல் ‘எனது’ என்ற சொல்லுடன் புணர்ந்து அதன் பொருளைச்சிறப்பித்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘உயர்ந்த’ என்னும் பெயரெச்சம் ‘உலகம்’ என்னும் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.

“ ‘தான்’ அல்லாத உடம்பை ‘யான்’ என்றும் தன்னோடு இயைபில்லாத பொருளை ‘எனது’ என்றும் கருதி அவற்றின்கண் பற்றுசெய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக்கெடுப்பான் வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்”‌ என்பது பரிமேலழகனாரது உரை.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

செம்மைவடிவம் —
“யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.”

குறள் – ௩௱௪௭ (அச்சில் உள்ளவாறு).

“பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.”

இடும்பைகள் = துன்பங்கள்.

“பற்றினைப்பற்றி விடாஅதவர்க்கு இடும்பைகள் பற்றி விடாஅ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

‘விடாதவர்க்கு’ என்பது ‘விடாதவரை’ என்றபொருளில் நான்காம்வேற்றுமைவுருபு இரண்டாம்வேற்றுமைப்பொருளில் வந்த வேற்றுமைமயக்கம்.

முதலடியில் வரும் ‘விடாஅ’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.”

குறள் – ௩௱௪௮ (அச்சில் உள்ளவாறு).

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

தலைப்பட்டார் = உயர்நிலையை அடைந்தார்.
தீர = முற்றும்.
மயங்கி = தெளிவின்றி.
வலைப்பட்டார் = அகப்பட்டார்.

“தீரத்துறந்தவர் தலைப்பட்டார் மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“முற்றும் துறந்தார் உயர்நிலையை அடைந்தார். அத்தெளிவின்றி மயங்கிய மற்றையோர் வலையில் அகப்பட்டார்” என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௩௱௪௯ (அச்சில் உள்ளவாறு).

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.”

அற்ற = அறுந்த, நீங்கிய.
மற்று = வினைமாற்றுக்குறிப்பு.

“பற்று அறுந்தகண்ணே பிறப்பு அறுபடும். பற்று அறாதபோது பிறந்து பிறந்து இறக்கும் நிலையாமை காணப்படும்” என்பதாம்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

 

குறள் – ௩௱௫௰ (அச்சில் உள்ளவாறு).

“பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”

பற்று = ஆசை.
அற்றான் = அறுத்தான், துறந்தவன்.

பற்றினை என்பதில் வந்த இரண்டாம்வேற்றுமைவுருபு அகரச்சுட்டுப்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

“பற்றற்றான் பற்றினைப்பற்றுக பற்றுவிடற்கு அப்பற்றினைப்பற்றுக” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“அவாவினைத்துறந்தான்மேல் அவாவினைக்கொள்க. அவாவினைத்துறக்க அவாவினைத்துறந்தான்மேலான அவாவினைக்கொள்க” என்பதாம்.

செம்மைவடிவம் —
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”

தொகுத்தொழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button