பிறந்தநாள் வாழ்த்தைக்கூறுவதற்கான தமிழ்ச்சொற்கள்!
வெள்ளணிநாள் /பெருமங்கலநாள்

பிறந்தநாள் வாழ்த்து என்ற சொல் எவ்வாறு தமிழர்களுக்குக்கிடைத்தது என்பதை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள் .இப்பிறந்தநாள் ஆங்கிலேயர்களின் Birthday என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு மட்டுமே .
பண்டைத்தமிழர்கள் பிறந்தநாளைக்கொண்டாடியுள்ளார்களா ? அப்படிக்கொண்டாடியுள்ளார்கள் என்றால் எப்படி வாழ்த்தியுள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம் .
பண்டைத்தமிழர்கள் பிறந்தநாளைப்பற்றி பெரிதாகக்கண்டுகொண்டதாக எந்த வரலாற்றுச்சான்றும் பகரவில்லை . ஆயினும் , இந்நாள் உன்னிக்கப்பட்டது . அது எப்படியென்றால் மன்னர்கள் , பெரியவர்கள் , மக்களின் தலைவர்கள் போன்றோர் இந்நாளில் ஏழை எளிய மக்களுக்கு கொடையளிக்கவும் பரிசுப்பொருட்களை வழங்கவும் தாங்கள் பிறப்பெடுத்த இந்நாளைப்பயன்படுத்தியுள்ளனர் .
அப்படியானால் இந்நாளில் அவர்கள் எப்படியாக வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்கள் என்பதை இப்போது பார்க்கலாம் .
பிறந்தநாளை பண்டைத்தமிழர்கள் வெள்ளணிநாள் என்றும் பெருமங்கலநாளென்றும் அழைத்துள்ளனர் . ஆங்கிலேயர் வருகையின் பின்னரே பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறும் பழக்கம் தமிழர்களிடையே பரவியுள்ளதே அன்றி தமிழர்கள் இந்நாளைக்கொண்டாடியது இல்லை என்றாலும் இந்நாளில் பெரிய கொடைச்செயல்கள் செய்யப்பட்டுள்ளன .
பழந்தமிழர் கொடுத்த அழகிய சொற்கள் இருக்க நாம் ஏன் குழம்பவேண்டும். வெள்ளணிநாள் வாழ்த்தென்றோ , பெருமங்கலநாள் வாழ்த்தொன்றோ கூறி பண்டைத்தமிழ்ச்சொற்களைப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை .
அகவை நாள் வாழ்த்துக்கூறல் சரியா ?!
வயது என்ற சமற்கிருதச்சொல்லிற்கான தமிழ்ச்சொல்லே அகவை என்பது . வயதுநாள் வாழ்த்து என்று கூறுவது தவறென்பதால் அகவைநாள் வாழ்த்தெனக் கூறலும் தவறான ஒன்றே. சரியான சொற்றொடரைப்பயன்படுத்திக்கூறவேண்டும் என்றால் , அகவை மூப்பேற்றநாள் வாழ்த்தென்றே கூறவேண்டும் .
வெள்ளணிநாள் மற்றும் பெருமங்கலநாள்
அழகான தமிழ்ச்சொற்களாக எம்மிடம் இருக்கும் வெள்ளணிநாள் மற்றும் பெருமங்கலநாள் என்ற சொற்களைக் கொண்டு வாழ்த்துவதே வறவேற்கத்தக்க ஒன்றாகும் .
ஏகப்பட்ட சொற்களைத்தன்னகத்தே கொண்டுள்ள பழம்பெரும் மொழிதந்த சொற்களைப்புழக்கத்தில் கொண்டுவந்து எம் தமிழ்மொழியைக்காத்து நிற்போம் .
எழுத்தாக்கம் : துளிவானொலி




