அரிய பற்றியம்சொல்விளக்கம்பிறமொழி/தமிழ்

சூடாமணி நிகண்டிலுள்ள இருபத்தேழு வகையான உணவின் பெயர்கள்.

குழப்பமும் / தெளிவும்

சூடாமணி நிகண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் இருபத்தேழு வகையான உணவுகளையும் ஒவ்வொன்றாகப்பார்த்து அவற்றின் பொருளறிய வேண்டியது முதன்மையானவொன்று. ஏனெனில், இந்த இருபத்தேழு பெயரும் சோற்றின் மறுபெயர் என்று பலர் பகர்வதால் சரியான தெளிவிற்காக நாம் இவற்றை ஆய்வுசெய்ததன் அடிப்படையில் உங்களுக்காக  இங்கே பதிவுசெய்கிறோம்.

இன்னும் சிறப்பாகச்சொல்லவேண்டும் என்றால் உணவுவகை என்பதையும் தாண்டி இப்பெயர்கள் அனைத்தும் உணவு சார்ந்த பெயர்களாக இருப்பதைக்காணமுடிகிறது .

பொது ஊழி : பதினாறாம் நூற்றாண்டில் வெளியான ஓருரிச்சொற்பதிப்பே சூடாமணி நிகண்டு . இதில் வரும் நிகண்டு என்ற சொல் ஒரு வடமொழிச்சொல் . அதுவே தமிழில் காலூன்றிவிட்டது .நிகண்டு என்பதற்கான தமிழ்ச்சொற்கள் :தொகை ,தொகுப்பு ,கூட்டம் என்பவையே. நிகண்டு என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூலும் இதுவாகவே உள்ளது. அதற்கு முன் இது உரிச்சொல் என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது . சூடாமணி நிகண்டானது சமணரான மண்டல புருடர் என்பவரால் எழுதப்பட்டது .இவரே நிகண்டு என்ற சொல்லையும் முதன்முதலில் தமிழிற்குள் அழைத்துவந்துள்ளார் .பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன எனக்கருதப்படுகிறது.

சங்கம் மருவிய காலத்திற்குப்பின் வந்த நூல்களில் பெரிதாகத்தனித்தமிழ் இருப்பது அரிதான ஒன்றே . சூடாமணி நிகண்டில் உணவைப்பற்றிக்கூறப்பட்டுள்ளனவா, சோற்றின் வேறு பெயர்கள் கூறப்பட்டுள்ளனவா என்று சற்று விளக்கமாகப்பார்ப்போம் .

குறிப்பு :
முன்பு உணவு என்பது பொதுவாக அரிசியைக்கொண்டு சமைக்கப்பட்டதால் பொதுப்பெயராக சமைத்த உணவுகளை சோறு என்று பல நூல்கள் தவறாகப் பதிப்புச் செய்துள்ளமையும் தொடர்ந்து வருகின்ற அறிஞர்களும் அதை அப்படியே எடுத்துக்கொண்டு நடப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடும் எழுகின்றது .பொதுவாகப்பண்டைய மக்களின் உணவு சோற்றைச்சார்ந்து பெறப்படும் ஒன்றாக இருந்தமையால் உணவைக்கூடச்சோறு என்று மொழிபெயர்த்துக்கொடுத்திருக்கின்றன பல நூல்கள் . உணவில் ஒன்றே சோறு என்பதைத்தெளிவாக உணர்தல் தகும்.

சூடாமணி நிகண்டில் கூறப்பட்ட இருபத்தேழு பெயர்களையும் முதலிற்பார்ப்போம் .

அடிசில், போனகம், மூரல், அமலை, அயினி, பொம்மல், மடை, மிசை, உணா, புழுக்கல், வல்சி, பாளிதம், அன்னம், பதம், மிதவை, பாத்து, துற்று, உண்டி, சொன்றி, புன்கம், சரு, அசனம், ஊண், கூழ், ஓதனம், புகா, சோறு என்பவையே அவை .

அடிசில்

பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி

பொருள் : கொழுத்த ஆட்டின் ஊனில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை அவியவைத்துக்கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில் அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக்குழைத்து ஆக்கிய உணவுடன் இந்த ஒழுகும் நிணமும்( கொழுப்பு) கலந்திருக்கும் நிணம் சேர்த்த நெய் அடிசிலை ( உணவு ) விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாமுண்போம்.

சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்/பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/7,8

பொருள்: சுவைத்தலுக்கு இனிதாகிய தாளிப்பையுடைய உணவு என்று பொருள் கொள்கின்றது.

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை – புறம் 188/3-6

குழந்தைகளும் உண்ணும் குழைந்த உணவே அடிசில்.

குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில்
மதி சேர் நாள்மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ – புறம் 160/7 -9
இது இன்னும் சிறந்த கொழும் துவை நெய்யுடை அடிசில்!

இந்தக்குய் மணக்கும் கொழுந்துவை அடிசில் ( உணவு) மிக்க சுவையுடையது என்றும் அமிழ்தத்தினும் சுவைமிக்கது என்றும் கூறுகின்றனர் நம் சங்கப்புலவர்கள்.

ஆகவே அடிசில் என்பதன் நேரடிப்பொருள் : சமைத்தவுணவு என்பதே.

அடு = சமைத்தல்
அடுக்களை = சமயற்கூடம்
அடுப்பு= நெருப்பைக்கொண்டு சமைக்கப்பயன்படும் அமைப்பு
அடிசில் =சமைத்தவுணவு

போனகம்

“தயிர் போனகம் அமுது செய்தருள இட்ட வெள்ளி கச்சுகோர
தயிர் உணவை அமுதாகச்செய்தருள என்ற பொருளோடு வருகின்றது .

இச்சொல் சமற்கிருதத்தில் இருந்து நேரடியாக வந்த சொல் அன்று பிராகிருத மொழியிலிருந்து வந்தது. அம்மொழியில் இச்சொல் (bhoo-ana) என்றுதான் வரும்.

போயன என்ற சொல்லில் இரு உயிர்களுக்கு இடையில் வரும் ஜ மெய் கெடும் னகரம் ணகரமாக மாறும். இது பிராகிருத இலக்கண முறை போ அண என்பது – அம் விகுதி சேர்த்து போ அணம் உருவாயிற்று. உயிர் மயக்கம் கெட்டு மேலும் போணம், போனம் உண்டாகி போனகம் வந்திருக்கலாம். கல்வெட்டுகளில் திருப்போனகம், போனம் என வருகின்ற வடிவங்களும் இடைக்கால இலக்கியங்களில் இருந்து வந்த போனகம் என்பதும் பிராகிருத மொழியிலிருந்து வந்தசொல்லென்று முடிவாகக்கூறலாம்.

மூரல்

மூரல் என்பதின் பொருள் : புன்னகை , இளநகை , தன்மை , பொலிவான உணவு .

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில் என்று வருவது உணவின் தன்மையைக் குறிக்கிறது .

பசுந் தினைமூரல் பாலொடும் பெறுகுவிர்
பெரும்பாண். 168)

பொருள்: பசும்பாலில் தினை உணவைப்பாலோடு பெருவீர்கள்.


ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286
இதில் கூறப்படும் மூரல் என்பது புன்முறுவலைக் குறிக்கின்றது .

பெரிய தன் அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/12-17
இங்கு வரும் மூரல் ஆனது முறுவலைக் குறிக்கிறது .

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் – பெரும் 192-196

இங்கு மூரல் என்ற சொல் உணவைப் பற்றியே மொழிவதைக்காணக்கூடியதாக உள்ளது.

அமலை

பொருள் : மிகுதி, திரள்

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
பொருள் : குற்றுதலில் சிறந்த அரிசியால் ஆக்கிய திரளான வெள்ளைச்சோற்றை

அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3
பொருள்: பாலை நிலத்து வேம்பின் நிறைந்த வெள்ளிய பூக்கள்

ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
பொருள்: ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்களத்தின்

இங்கே அமலை என்பது திரள் என்பதையும் , மிகுந்து என்பதையுமே குறிக்கின்றது .

அயினி

வைகிற்,பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
பொருள்: விடியலில், பழைய உணவை உண்ணும் முழங்குகின்ற நீரையுடைய தோட்டங்கள்..

கரும்பின்,கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
பொருள்: கரும்பின், அடிமரத்தைத் துண்டித்து அதன் துண்டத்தை உண்டது போல

அயில் உருப்பு அனைய ஆகி – சிறு 7
பொருள் : இரும்பு வெப்பமேற்ற தன்மையது ஆகி,

அயில்வாய்க்கூர்முகச் சிதலை வேய்ந்த – அகம் 167/18,19
பொருள்: வேலின் முனை போன்ற
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்

அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52
பொருள்:வெட்டின வாயையுடைய குறிய மரக்கட்டையைக் கூர்மையான உளி குடைந்த

அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34
பொருள்:கூரிய முனைகளையுடைய கொம்பினில் தம் துதிக்கையை தூக்கிப்போட்டதைப் போல்

அயிலை – ஒரு வகை மீன், அயிரை என்பர்
அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/5
பொருள்: அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி

கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4
பொருள்:கொழுவிய கண்களையுடைய அயிலையை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன்

அயினி – உணவு
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற் 254/7

பொருள்: உப்புவணிகர்கள் உப்பினை விற்று அதற்கு விலையாகப் பெற்ற நெல்லைக் குற்றிச் செய்த
உணவை உன் குதிரை இன்று உண்ண

பால்விட்டு, அயினியும் இன்று அயின்றனனே – புறம் 77/8
பொருள்பா: ல்குடியை மறந்து, உணவும் இன்று உண்டான்

உணவு நன்னற்கு மயினி சான்மென (மலைபடு. 467).  
அயில் என்பதன் பொருள், விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல். அதனை அடியாகக்கொண்ட பெயர்ச்சொல்லே அயினி.

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு
வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி – மலைபடுகடாம் 465

புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14
புதிய மணமகள், பல்வேறு உணவுவகைகளையுடைய திருமண வீட்டில் என்ற பொருளில் அமைகின்றது .

அயின் = அயிலை = அயினி என்பன உணவு , உண்பது மற்றும் பருகுவதையே சுட்டுகிறது . அதைவிட இரும்பு மற்றும் கூர்மை என்ற பொருளில் அமைகின்றது . மீனின் பெயராகவும் வருகின்றது அயிலை என்ற சொல் .

பொம்மல்

மிகுதி,குவியல்,பொங்குதல்,திரள்,தோற்றப் பொலிவு.

கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/4-6

பொருள் : கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை பொங்கவைத்து மிக்க சோற்றுடன் கையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு,

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169

பொருள்: பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண்வெந்த பொரியலுடன்(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர்..

பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/4
பொருள்: பொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து..

பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3
பொருள்: திரளான அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில்,

பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11
பொருள்: பொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு..

பொம்மல் ஓதி என்ற தொடர் சங்க இலக்கியங்களில் 13 இடங்களில் காணப்படுகிறது.
பொருள்: இதற்கு, மிகுதியான, திரளான என்ற பொருள்களும் ஒத்து வருவன.

அடர்த்தியான, நீண்ட கூந்தல் உள்ளவர்கள் சில சமயங்களில் நீண்ட முடியைப்பந்துபோல் சுருட்டிக்கொண்டை போட்டிருப்பார்கள். புலவர்களால் இது பொம்மல் ஓதி எனப்படுகிறது. ஓதி என்பது கொண்டை. பொம்மல் என்பது திரட்சி, மிகுதி. ஒரு தட்டில் மிகுந்த அளவு உணவைக்குவித்து வைத்தால் அது பொம்மல் பெரும் உணவு எனப்படுகிறது.

புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
என்று நற்றிணை கூறுகிறது. இதுவே ஆகுபெயராகி, பொம்மல் என்றாலேயே திரட்சியாகக்குவிக்கப்பட்ட உணவு என்ற பொருள்தரும்.

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169
என்ற மலைபடுகடாம் அடி, பெருமளவு சோறு என்பதைப் பொம்மல் என்று சொல்வதைப்பார்க்கலாம்.

ஆகவே பொம்மல் என்பது சோற்றைக்குறிக்கவில்லை உணவின் தன்மையைக்குறிக்கின்றது என்பதைப்புரிந்து கொள்ளல் வேண்டும்.

மடை

மடு, ஊட்டு, அருத்து, பலியுணவு,  மடுத்தல், உண்ணுதல், பருகுதல்,ஆபரணங்களின் மூட்டுவாய், மதகு,உருளையான பொருள்களின் பொருத்துவாய், மடுத்தல், தடுத்துநிறுத்தல்,

அக்காலத்தில் இதற்கு ‘மடை வைத்தல் ’ என்று பெயர். மடை என்ற சொல்லுக்கு ‘உணவு’ என்று பொருள்.

ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை – அகம் 275/1-3

பொருள்: உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய அடைவித்து பனக்குடையால் முகந்த நீரினை மடுத்தவளாய்ச் சொரிந்து வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தரில்..

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 104,105

பொருள்:தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலியுணவுபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப்பெறுவீர்;

இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
பொருள்: மிகுதியாகப் பருகுதலையுடைய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு.

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி – நெடு 124,125

பொருள்: மூட்டுவாய் சிறந்துவிளங்கும் நுண்ணிய நூல் அழகுபெறும்படி, (அதனைத்)தொடுத்தல் சிறப்புற அமைந்து முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21

பொருள்: மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை கொளுத்துச்செறிந்த முன்கைக்கணிந்த கடகத்துடனே தந்தனன் (கொளுத்து = அணிகலன் மூட்டுவாய்)

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4

பொருள்: சிறப்பாகச்செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத்திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச்சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்

மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3

பொருள்: அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும்
சூடாத பூவைப்போல உடல் மெலிந்தாள்;

செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/15
பொருள்: செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றி

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
பொருள்: மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலே துணையாக

செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2
பொருள்: மூட்டுவாய் செறிந்த அம்பினையும் வலிய வில்லினையுமுடைய வேட்டுவன்

மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் – அகம் 248/8,9

பொருள்: பகைவர் படையைத்தடுப்பதற்குச்செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை மறவர் புறங்காட்டி ஓடிவிட, தான் மட்டும் ஓடாமல் பகைவர் வரும் வழியில் தடுத்து நிற்கும் எம் வலிய வீரனைப்போல்..

மடைப்பள்ளி என்பது உணவு கொடுக்கும் இடம் . இங்கும் உணவைக்குறித்தே இச்சொல் அமைவதைக் காணலாம்

மிசை

உண்ணு, பருகு, தின்னு,உணவு,உச்சி, உயரமான இடம், மேடான இடம்,மேலே, வானம்,அத்துடன் இது
ஏழாம் வேற்றுமை உருபு.

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2

பொருள்: மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,அதனைத்தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை..

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
பொருள்: கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்..

உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப – புறம் 160/1,2

பொருள்: உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட இந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப..

இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/8
பொருள்: பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்

மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175

பொருள்: மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்..

மிசை படு சாந்தாற்றி போல எழிலி
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/30-32

பொருள்: மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டுஒளிவிடும் புள்ளிகளைக்கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட…

துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின்- கலி 46/20
பொருள்: மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தில் பாடித்திரியும் பறவையைப்போல..

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
பொருள்: செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை..

மிசைவு

கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் – புறம் 236/1,2

பொருள்: முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவு போலும் பெரிய பலாப்பழம்
வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாலைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்…

மிசை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ‘கீழ்’ என்பதாகும். மிசை என்பது மேல், குடி, உண் முதலியவற்றையும் குறிக்கும்.

உணா

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
பொருள்:கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
பொருள்: சிறிதளவு உணவுப் பொருளைக் கொண்டுவந்த சிறிய ஊர்களிலுள்ள பெண்கள்..

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
பொருள்: கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
பொருள்: சிறிதளவு உணவுப் பொருளைக் கொண்டுவந்த சிறிய ஊர்களிலுள்ள பெண்கள்

உணக்கல் – காயவைத்தல்
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/6
கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,

உணக்கு என்பதன் பொருளையும் காண்க:
உணக்கு – காயவை, உலறப்போடு

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
பொருள்: அழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச்சேர்ந்தவனிடம் சென்று…

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2
பொருள்: மிகுதியாகப்பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்

உணங்கல் – காயவைத்த பொருள்

கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – அகம் 20/2
பொருள்: ஏராளமான மீனை உலர்மீனாக்க(காயப்போட), அதைத் தின்னவரும் பறவைகளை ஓட்டி

உணங்கு – உலர், காய்ந்துபோ, தீய்ந்துபோ

வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83
பொருள்: வலைகள் காயும் மணல்முற்றத்தில்

ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
பொருள்: காட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழி

உணவு என்பதைக் குறிக்கும் சொல் உணா என்பது தெளிவாகின்றது .

புழுக்கல்

ஆவியில் அவியவைத்து வைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச்சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. புழுங்கலாக அவியவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு தாவர உணவாகவோ இருக்கலாம்.

முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை – பொரு 113-116
பொருள்: (தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)அவியவைத்ததை(சோற்றை)யும்,
பருக்கைக்கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
உண்டபொழுதின்..

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்/எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/5,6
பொருள்: ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண் உணவு ,

வாராது அட்ட வாடூன் புழுக்கல்/வாடா தும்பை வயவர் பெருமகன் – பெரும் 100,101
பொருள்: வடிக்காமல் பொங்கிய (மான் கறியின்)உப்புக்கண்ட(ம் சேர்ந்த) ஊன் உணவை…

தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்/அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் – பெரும் 474,475
பொருள்: ஆராய்ந்து பொறுக்கிக்கொண்ட அரிசியால் ஆக்கின திரண்ட நெடிய உணவை,

உப்பு இலாஅ அவி புழுக்கல்/கை கொண்டு பிறக்கு நோக்காது – புறம் 363/12,13
பொருள்: உப்பில்லாமல் வேகவைத்த உணவை,

மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல்/அழிகளின் படுநர் களி அட வைகின் – புறம் 399/9,10
பொருள்: மூடிவைத்து அவித்து முழுதும் வெந்த உணவும்…

குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16
பொருள்: இடையர்கள் புழுக்கி ஆக்கிய பொங்கி மலர்ந்த உணவை(சோற்றை)…

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
பொருள்: மானின் தசையை வேகவைத்த புலால் நாறும் பானையின் (கொழுப்புத்தோய்ந்த)

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்/பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104
பொருள்: அறுகம் புல் கட்டுக்களைக் கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(அவிக்கப்பட்ட)

கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25
பொருள்: சர்க்கரைக் கட்டியுடன் அவரை விதைகளை அவியவைத்து உண்ணும் கொங்கர்களின் அரசனே!

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
பொருள்: குற்றம் நீங்க, இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய் மிக்க வெண்மையான சோற்றை

யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3
பொருள்: ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு,

அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 195
பொருள்: அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்

வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
பொருள்: வயல் ஆமையைப் புழுக்கின இறைச்சியைத் தின்றும்,

நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
பொருள்: வலிய வில்லையுடைய மழவர் (மணமுண்டாகும்படி) ஊனைப் புழுக்கி உண்ணும்,

பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
பொருள்: மிகுந்த புழுக்கம் எய்திய உனது பிறை போன்ற நெற்றியில் புள்ளிகளாய் அரும்பிய வியர்வைத் துளிகளை..

உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
பொருள்: தழைமாலையைத் தலையில் சூடியவராய் – ஊனை வேகவைத்து உண்ணுகின்ற…

சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் – அகம் 172/13
பொருள்: சந்தன விறகினாலான தீயில் ஊனுடன் கூடிய உணவைச் சமைத்து உண்ணும்

புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
பொருள்: அதன் புலாலைப் புழுக்கி உண்ட உயர்ந்த இடம் அகன்ற பாறையில்..

ஊன் புழுக்கு அயரும் முன்றில் – அகம் 315/17
பொருள்: ஊனை வேகவைத்து உண்ணுகின்ற முற்றத்தைக் கொண்ட

எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே/வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப – பதி 18/2,3
பொருள்: அறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!

புழுங்கலாக அவியவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. ஆவியில் அவியவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது அரிசிவகை உணவாகவோ அல்லது தாவர உணவாகவோ இருக்கலாம்.

வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 100
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103
வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10

போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 114
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று – பெரும் 195
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16

ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்

புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
என்று நற்றிணை கூறுகிறது. இதுவே ஆகுபெயராகி, பொம்மல் என்றாலேயே திரட்சியாகக்குவிக்கப்பட்ட உணவு என்ற பொருள்தரும்.

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169
என்ற மலைபடுகடாம் அடி, பெருமளவு சோறு என்பதைபொம்மல் என்று சொல்வதைப் பார்க்கலாம்.

வல்சி

நாம் எந்த உணவை உண்ட உயிர்வாழ்கிறோமோ அதுதான் நமக்கு வல்சி. அது என்ன பொருளாக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அது வல்சிதான்.

உழவர்களுக்கு நெல், பருப்பு வகை எல்லாமே வல்சிதான்

வல்சி – வழக்கமாக உண்ணும் உணவு, வாழ்க்கைக்கான உணவு.

இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
பொருள்: இல்லிலுள்ள எலியை வழக்கமான உணவாகக்கொண்ட வலிய வாயினதாகிய கூகையின் சேவல்.

ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
பொருள்: ஒரு பசுவினால் வரும் வருமானத்தால் உணவு கொண்டு வாழு…

அதைப்போல யானையைக் கொண்டும் சிலர் பிழைப்பு நடத்தலாம்.

களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/9
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/12

என்ற அடிகள் இதனைக் கூறும்.

கூகை எனும் ஆந்தைக்கு எது உணவு? வீட்டில் வாழும் எலிதானே. எனவே எலி என்பது கூகையின் வல்சி.

இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
என்று அகம் கூறுவதைப்பாருங்கள்.

இன்னும் ஒவ்வொருவருக்கும் வாழ்வுதரும் உணவு அவர்களுக்கு வல்சி என்பதைக் கீழே காணும் அடிகள் உணர்த்தும்.

கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவு வில் பொலி கூவை – மது 141,142

ஓய்பசிச் செந்நாய் உயங்குமரைத் தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/2-5

வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு இருக்கும் – ஐங் 180/2,3
முளவு_மா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் – ஐங் 365/2
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ – ஐங் 391/3,4
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் – பதி 19/1
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/2
கொழு மீன் வல்சி என்றனம் – அகம் 110/17
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த – அகம் 224/12
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/3
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் – அகம் 290/3
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் – அகம் 377/4
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/8 வேளை என்பது கீரை.
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/10
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு – புறம் 360/18,19

மன்னனுடைய முரசை ஒலிக்கும் வீரர்கள் எப்போதும் முரசின் அருகிலேயே இருக்கவேண்டும்; எந்த நேரமும்
அறிவிக்கப்படவேண்டிய செய்தி வரலாம் இல்லையா? அப்போது தம் பசிக்கு உண்டுகொள்வது அவர்களின் வல்சி.
மதுரைக்காஞ்சி சொல்வதைப்பாருங்கள்.

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்
பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப – மது 395,396

இங்கே தீம் என்பது சுவைத்தால் இனிப்பது. புழல் என்பது உள்துளை. குழல் போன்று இனிப்பானது எது? தெரியவில்லையா?
சுருண்டு சுருண்டு இருக்குமே! அது சுருள் இனிப்பு தளர்வுற்றிருக்கும்போது இனிப்பை இன்றும் உண்கிறோமே!
அன்றைக்கு நம் மறவர்கள் உண்டிருக்கின்றனர்.

பதம்

பொதுவாகப் பதம் என்பது ஏற்றகாலம், பக்குவம் என்ற பொருள் தரும். நன்றாக வெந்த சோற்றை அவிழ் பதம் என்பர். தயிரைக் கடைந்து பக்குவமாக வழித்து எடுக்கப்படும் வெண்ணெய் பதம் எனப்படும். இருப்பினும் பதமாகச் சமைக்கப்பட்ட ஒரு பொருள் பதம் என்று சொல்லப்படுகிறது.

பதம் – பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை,
அவியவைத்த உணவு,செவ்வி, தகுந்தவேளை, ஈரம், தரம்.

புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10
பொருள்:காய்ந்து புலரும் பக்குவத்தை எய்தின தினையின் கதிர்கள்.

செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157

பொருள்: வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,
(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாகஅவியவைத்த அவ்வுணவை நிறையப்பெறுவீர்

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப – பொரு 112
வெந்த உணவை(யும்) கொள்வாயாக’ என்று வேண்ட,

ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
பொருள்:நன்றாக ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச்செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப்பார்த்து…

அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
பொருள்: அரிய காத்தல் தொழிலையுடைய காவலர் சோம்பியிருக்கும் தகுந்த நேரத்தைப்பார்த்து

மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/1,2

பொருள்: மலைப்பக்கத்தை விரிவாக்கி உருவாக்கிய கொல்லையில் மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்

இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசிலாக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் – புறம் 151/3-5

பொருள்: அணிகலன்களை அணிந்து
புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியைப்பரிசிலாகக் கொண்டு அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில்கொடுக்கும்.

பதம் என்பதன் பொருள் தன்மை என்பதையே குறிக்கிறது என்பதை இவற்றினூடாகக் காணக்கூடியதாக உள்ளது .

மிதவை

மிதவை என்பதற்குச் சோறு, கூழ், கும்மாயம் என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி. கும்மாயம் என்பது குழையவைத்த பருப்பு. ஆனால் சங்க இலக்கியங்களில் இச்சொல் காணப்படும் இடங்களை ஆய்ந்தால் வேறுவகையாகப் பொருள்கொள்ளத்தோன்றுகிறது.

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின் அவரை அம் பைங்கூழ் – மலை 434 – 436

சிவந்த பூக்களையுடைய வேங்கைப்பூவினை ஒத்த, மூங்கிலினின்றும் கொண்ட அரிசியினாலான உணவின் கண் சொரிந்த மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியை விரவி, அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழ் என்று பெருமழைப்புலவர் உரை கூறுகிறார்.

எனவே இங்கு மிதவையும் (அவரைப்)பருப்புக் கூழும் வெவ்வேறானவை என்பது தெளிவாகிறது.

அடுத்து ஓர் அகநானூற்றுப்பாடல் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப – அகம் 86:1,2

உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு, பெரிய சோற்றுத்திரளை உண்டல் இடையறாது நிகழ என்று நாட்டார் அவர்கள் இதற்குப் பொருள் கூறுகிறார். எனவே மிதவை என்பது சோற்றினின்றும் வேறுபட்டது என்பது இதன்மூலம் தெரிகிறது. இங்கு மிதவை என்பது குழைவான பொங்கல் என்று குறிப்பிடப்படுகிறது. உழுந்து என்பது உழுந்தம்பருப்பைக்குறிக்கிறதா, உழுந்தம் மாவைக் குறிக்கிறதா என்பது ஆயத்தக்கது. கொழுங்களி என்பதால் இங்கே உழுந்து என்பது உழுந்தம் மாவாக
இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. இந்த உழுந்தங்களி மிதவை என்று சொல்லப்படுவதேன்?

வேறு ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று தேடும்போது இன்னொரு அகப்பாடலைப்பார்க்கிறோம்.

பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாஅத்
தயிர்மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340:14,15

இது நெய்தல் திணைப்பாடல். பச்சைமீனை விலைக்குக்கொடுத்து வாங்கிய வெண்ணெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழ் என்று நாட்டார் இங்கே பொருள்கொள்கிறார். எனவே இங்கு மிதவை என்பது மாவினால் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆனால் நெல்லின் மாவைத் தயிரிட்டுப்பிசைந்து அப்படியே உண்பார்களா? சமைக்கவேண்டாமா? எனவே இங்கு வெண்ணெல் மா மிதவை, தயிர்மிதி மிதவை என்று இரண்டையுமே மிதவைக்கு அடையாகக்கொள்ளவேண்டும். வெண்ணெல் மாவைச்சமைத்துக்களியாக்கி, அதனுடன் தயிர் சேர்த்துப்பிசைந்து கூழாக்கி உண்டிருக்கிறார்கள். எனவே மிதவை என்பது கூழல்ல – தயிரில் பிசைந்து கூழாக்கப்படுகிறது என்பதுவும் புலனாகிறது.

தெளிவான முடிவுக்காக மேலும் ஆய்ந்தபோது கைகொடுக்கிறது ஒரு புறப்பாடல்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல்
தாதெரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை – புறம் 215:1-4

இங்கே வரகு அவைப்புறுகிறது – அதாவது குற்றப்படுகிறது. கிடைப்பது வரகரிசி. கதிரினின்றும் பெறப்பட்ட வரகைக்குற்றி
அரிசியாக்குகிறார்கள். எனவே இது வரகின் பச்சரிசி. ஆக்கினால் இது வெகு விரைவில் குழைந்துபோகும். இதனையும் தயிருடன் சேர்த்து உண்டிருக்கிறார்கள்.

இதனையும் அடுத்து மற்றுமோர் அகப்பாடல் மிதவை பற்றிப்பேசுகிறது.

காண்வர, கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளிக்கோல்வரைந்தன்ன வாலவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை – அகம் 37: 13,15

கொள்ளும் பயறும் அழகுபொருந்த பாலுடன் கலந்து ஆக்கிய வெள்ளிக்கம்பியை ஓரளவாக நறுக்கி வைத்தாற்போன்ற வெள்ளிய அவிழ்க்கஞ்சியை வளைத்து உண்ட கைபோதும் எனத்தடுத்த பின்னர் என்று இதற்குப்பொருள்கூறப்படுகிறது.

இங்கும் மிதவை கூழாக்கப்படுகிறது. ஆனால் இங்கு அது கொள்ளு, பயறு ஆகியவற்றின் மாவை ஆக்கிச்செய்யப்பட்டிருக்கிறது. தயிருக்கு மாறாக இங்கு பால் சேர்க்கப்படுகிறது. எதிரில் நிற்பவர் குனிந்து உள்ளங்கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்க, வெள்ளிக்கம்பியாய் இந்தக்கூழ் அவர் கைகளில் ஊற்றப்படுகிறது.

எனவே மிதவை என்பது, நெல்லரிசி மாவு, பச்சை வரகரிசி, பயறுகளின் மாவு ஆகியவற்றைக் குழையவோ, களியாகவோ கிண்டி. அதனுடன் பாலோ, மோரோ, புளித்தநீரோ சேர்த்துக் கூழாக உண்ணப்படுவது என்பது புலனாகிறது.

இருப்பினும் இது மிதவை என்று ஏனழைக்கப்படுகிறது. மலைபடுகடாம் அடியொன்று இதற்கு மறுமொழி கூறுகிறது.

கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 415-417

கல்லென்ற ஓசையையுடைய காட்டிடத்தே கடல் போல ஒலிக்கும் பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இருட்டும் நேரத்தில் சென்றால் பாலும் மிதவையும் (அப்போதைக்குச்) சமைக்காமல் பெறுவீர்கள் என்பது இதன் பொருள்.

இங்கே காட்டப்படுவோர் ஆட்டு இடையர்கள். ஊருக்கு வெகு தொலைவில் காட்டில் கிடைபோட்டிருக்கிறார்கள். காலையில் எழுந்து களிக்கிண்டி உண்டுவிட்டு, மீந்ததை நீரில் போட்டுவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு செல்வர். களியை நீரில் போடாவிட்டால் மாலைவரை தாங்காது. கெட்டுப்போய்விடும். எனவே களி உருண்டைகளை நீரிலோ, புளித்ததண்ணீரிலோ, அல்லது நீர்த்த மோரிலோ போட்டு வைத்திருப்பார்கள்.மாலையில் ஆடுகளைத் திரும்ப ஓட்டிக்கொண்டு வந்த அவர்களுக்குக் களிக்கிண்ட நேரமிருக்காது. எனவே நீரில் மிதந்து கொண்டிருக்கும் உருண்டைகளை எடுத்து, நீரை நன்கு வடித்து, அந்த உருண்டைகளைப் பாலில் கரைத்து உண்ணுவர். அது அப்போதைக்கு ஆக்காத களியாதலால் அதனைப் பண்ணாது என்கிறார் புலவர். அந்நேரத்தில் கூத்தர்கள் அங்குச்சென்றால், ‘பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்” என்கிறார் புலவர்.

மிதவை என்பதன் அடிச்சொல் மித. இது நீரில் அல்லது நீர்த்தன்மையுள்ள ஒரு பொருளில் மிதப்பது. அது எப்படி உணவுக்கானது? மேலே ஆட்டிடையர்கள் செய்வதுபோல, பச்சரிசிச்சோற்றை குழைய ஆக்கியோ, அல்லது பயறுகளின் மாவைக்களியாகக்கிண்டியோ, சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை.

பாளிதம்

இச்சொல் பிங்கல நிகண்டில் உள்ள ஒரு சொல் . இயற்சொல் வகையைச்சேர்ந்த இச்சொல் தொல்காப்பியர் கூற்றுப்படி ‘இயற்சொல்’ என்றால் செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் நடக்கும் சொல்.”அதாவது தமிழர் நிலத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு சொல்லை எந்த ஒரு பொருளில் பயன்படுத்துறாங்களோ, அந்தச்சொல்லை அதே பொருளில் அப்படியே பயன்படுத்துவது .”

அப்படியானால் பாளிதம் என்ற சொல் தமிழர்கள் வாழ்நிலங்களில் பயன்படுத்தப்படவில்லையே என்ற கேள்வி எழலாம் . உண்மை என்னவென்றால் தொல்காப்பியர் காலத்தில் தமிழர் நிலங்கள் என்பன “செந்தமிழ் நிலம் என்பது வையயாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு.” வரை என்பதன் அடிப்படையில் இச்சொல் சோறு என்பதற்கான ஒரு சொல்லாக வளங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அன்னம்

அன்னம் – ஒரு பறவை,
அன்னத்தைப்பற்றி  சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. ஆனாலும் அன்னப்பறவை வாழ்ந்ததற்கான சான்றுகள் இல்லை . இவை புராணக்கதைகளில் இடம்பெற்ற ஒருபறவை .

அன்னம் என்றால் பாலோடு நீரைக்கலந்து வைத்தாலும் பாலை மட்டும் அருந்தும் திறன் கொண்டதாகச்சொல்கின்றனர் . சோற்றுக்குள் நீங்கள் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்து மறுநாள் பார்த்தால் பாலும் தண்ணீரும் தனித்தனியாக இருப்பதனால் சோற்றுக்கு அன்னம் என்றும் சொல்வதுண்டு . பண்டைய இலக்கியங்களில் இடம்பெறாத ஒரு தான்தோன்றிச்சொல் தான் இச்சொல் . அன்னம் என்ற சொல்லைவிட தொன்மையான சொல் சோறு என்பதே . இங்கு நேரடியாகப் பொருள் கொள்ள வேண்டுமாயின் அன்னப்பறவையைத்தான் கூறலாம் . காரணப் பெயராக சோற்றுக்கு அன்னம் அமைந்திருக்கலாம் .

பதம்

பொதுவாகப் பதம் என்பது ஏற்றகாலம், பக்குவம் என்ற பொருள் தரும். நன்றாக வெந்த சோற்றை அவிழ் பதம் என்பர். தயிரைக் கடைந்து பக்குவமாக வழித்து எடுக்கப்படும் வெண்ணெய் பதம் எனப்படும். இருப்பினும் சரியான முறையில் சமைக்கப்பட்ட ஒரு பொருள் பதம் என்று சொல்லப்படுகிறது.

பதம் – பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை,
வேகவைத்த உணவு, செவ்வி, தகுந்த வேளை, ஈரம்,தரம்.

புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10
பொருள்:காய்ந்து புலரும் பக்குவத்தை எய்தின தினையின் கதிர்கள்.

செழும் பல் யாணர் சிறு குடி படினே
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 156,157

பொருள்: வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,(அலைச்சலால்)கறுத்துப்போன பெரிய சுற்றத்துடன் பக்குவமாக வேகவைத்த அவ்வுணவை நிறையப் பெறுவீர்…

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப – பொரு 112
பொருள்: நன்றாக வெந்த சோற்று உணவை(யும்) கொள்வாயாக என்று வேண்ட,

ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
பொருள்: ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச்செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து,

அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
பொருள்: அரிய காத்தல் தொழிலையுடைய காவலர் சோம்பியிருக்கும் தகுந்த நேரத்தைப் பார்த்து,

மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/1,2
பொருள்:
மலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில் மழையால் ஈரப்பதம்பெற்ற காட்டை உழும் குறவர்,

இழை அணிந்து
புன் தலை மட பிடி பரிசிலாக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் – புறம் 151/3-5
பொருள்:
அணிகலன்களை அணிந்து
புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியைப் பரிசிலாகக் கொண்டு அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில்கொடுக்கும்,

வேவை

வேகவைத்த உணவு வேவை எனப்படுகிறது.
வேவை – வெந்தது

துராய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராரை வேவை பருகு எனத் தண்டி – பொரு.103, 104

பொருள்: என்ற அடிகள் துருவை ஆட்டின் கொழுத்த இறைச்சியைப்புழுக்கி அவியவைத்த துண்டுகளை வேவை என்று சங்க மக்கள் அழைத்தமை பற்றிப்பேசுகின்றன.
நீரில் வெந்தது புழுக்கின் வேவை என்றால், எண்ணெயில் வெந்தது நெய்க்கண் வேவை எனப்படுகிறது.

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168
பொருள்: என்ற மலைபடுகடாம் அடி நெய்யில் வெந்த வேவை பற்றிப் பேசுகிறது.

உண்டி, உணவு, ஊண்

இந்த மூன்றுமே உணவு என்ற பொதுவான பொருளை உடையன. இருப்பினும் இலக்கியப் பயன்பாட்டில் இவற்றுக்கிடையே நுண்மையான வேறுபாடு இருப்பதைக் காணலாம். அவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இங்குக் காண்போம்.

உண்டி, உணவு

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே (புறம் 18:19) என்ற அருமையான புறநானூற்று அடி நமக்குத் தெரியும்.
பொருள்: ஒருவன் மிகவும் பசியோடு தள்ளாடிக்கொண்டு வருகிறான். இன்னும் சிறிது நேரத்தில் சுருண்டு படுத்துவிடுவான் என்ற நிலையில், அவனுக்குப் பக்கத்துத் தேநீர்க் கடையில் கிடைக்கும் ரொட்டி, பழம், தேநீர் ஆகியவற்றை வாங்கிக்கொடுக்கிறீர்கள். மிகுந்த ஆவலுடன் அந்தப் பண்டங்களை உண்ட அவன் சற்று நேரங்கழித்து, “அப்பாடா இப்போதுதான் உயிர் வந்தது” என்று சொல்வான் பார்த்தீர்களா, அதுதான் உயிர்கொடுத்தல். அவன் சாப்பிட்டதுதான் உண்டி.

ஒருவர் நோன்பு இருக்கிறார். காலையிலிருந்து ஒன்றுமே உட்கொள்ளாமல் இருந்து நன்பகல் வேளையில் எல்லாக்கடமைகளையும் முடித்து தம் நோன்புக்குரிய பண்டங்களைக்கொண்ட உணவு உண்பார். அதுவே நோன்பு கழிப்பது. இவ்வாறு அவர் உண்பதனை உண்டி என்கிறது குறுந்தொகை.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு. 156:1-4

ஒருவன் பசியுடன் இருக்கும்போது ஒரு கிணைமகள் பாகல்காய்க் கூட்டுடன் புளிக்குழம்புடன் சேர்த்த கூழ் தருகிறாள். நேரங்கெட்ட நேரமாயிருந்தாலும் பசியினால் அதனையுண்ட புலவன் கூறுகிறான்,

கிணைமகள் அட்ட பாகல் புளிங்கூழ்
பொழுதுமறுத்துண்ணும் உண்டியேன் – புறம் 399:16,17

பொருள்; ஆக, இவற்றினின்றும் நாம் அறிவது, ஒரு திருமண வீட்டில் சமைத்துப் பரிமாறுவதற்காகப் பலவித பாத்திரங்களில் எடுத்துவைக்கப்பட்டிருப்பது உணவு. அதனை ஒவ்வோர் இலையிலும் பரிமாறியபின் இலையில் இருப்பது உண்டி. உண்டி எனப்படுவது உண்ணும் நிலையில் உள்ள உணவு. உணவு என்பது பொதுப்படையான சொல் – “நான் புலால் உணவு உண்பதில்லை” என்று சொல்கிறோமே,
அங்கு வருவதைப் போல.

மேலும் உண்டி என்ற சொல் உயர்திணை உயிரினங்கள் உண்ணுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளதைக்காணலாம். உணவு என்ற பொதுச்சொல் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். வானில் பறந்து திரியும் வானம்பாடிப் பறவைக்கு மழைத்துளியே உணவு என்கிறது பட்டினப்பாலை.

தற்பாடிய தளி உணவின் புள் – பட்:3,4

கோடைகாலத்தில் எறும்புகள் தம் மழைக்காலத்தேவைக்காக கிடைக்கின்றவற்றை இழுத்துக்கொண்டுபோய்ச்சேர்ப்பதை
அகநானூறு அழகாகச்சொல்லுகிறது.

கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த – அகம் 377: 1-3

வேள்வித்தீயில் படைக்கும் பொருள்கள் வேகும்போது ஏற்படும் மணமே தேவர்களுக்கு உணவாகிறதாம். இதனை நாற்ற உணவு
என்கிறார் புறநானூற்றுப்புலவர்.

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் – புறம் 62: 16,17

‘நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு’
என்கிறது மதுரைக்காஞ்சி (458)

உணவு என்பது உணா என்றும் அழைக்கப்படுகிறது.

பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட – மதுரைக்காஞ்சி 660
சில் உணா தந்த சீறூர்ப் பெண்டிர் – அகம் 283: 5

என்ற அடிகளில் உணா என்பது உணவு என்ற பொருளில் வந்துள்ளதைக்காணலாம்.

ஊண்

அடுத்ததாக இவற்றையொட்டிய பொருள்கொண்டு வருவது ஊண் என்ற சொல். ஊன் என்பது புலாலைக் குறிக்கும். ஊண் என்பது உண்ணுகின்ற எந்தப்பொருளையும் குறிக்கும்.

வேலைக்குச் செல்வோர் ஒரு தூக்குச் சட்டி நிறைய பழைய சோற்றை, சில உரித்த சின்ன வெங்காயத்துடன் எடுத்துப்போவதை சிற்றூர்களில் காணலாம். அது உண்டியா உணவா? அவ்வாறான உணவைத்தான் இலக்கியங்கள் ஊண் என்கின்றன.

விருந்தோம்பலில் சிறந்த ஒருவரின் வீட்டில் பொருள்கள் குறைந்துபோயின. திடீரென்று உணவுக்காக நிறையப் பேர் வந்துவிடுகின்றனர். வந்தவருக்குப்பெரிய விருந்து படைக்கமுடியாவிடினும், வெறும் ‘சாற்றுச்சோறாவது ’ போட்டனுப்புவான் என்பதை,

தவச் சிறிதாயினும் மிகப் பலர் என்னான்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331:7,8

ஊண் என்ற சொல்லால் குறிக்கிறது புறநானூறு.

கரிகால் பெருவளதானிடம் பரிசில் வேண்டிச்செல்கிறது ஒரு பொருநனின் குடும்பம். அரண்மனையில் அவர்களுக்கு வளமான
பலவித உணவுகள் கிடைத்தாலும் அவர்கள் மிகவும் விரும்பி உண்ணுவது இறைச்சியைத்தான். இரவும் பகலும் இறைச்சியை மென்று மென்று, கொல்லைக்காட்டில் உழும் கலப்பையிலுள்ள கொழுவினைப்போல் பல் எல்லாம் தேய்ந்துபோய்விட்டனவாம். மூக்குமுட்ட ஊனையே உண்டு உண்டு அந்த ஊண் அவர்களுக்கு வெறுத்துப்போய்விட்டதாம்.

கொல்லை உழுகொழு ஏய்ப்பப், பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,
உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து – பொருநராற்றுப்படை 117-119

புலால் உணவு உண்ணாமல், புலாலையே ஊணாகக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆக, ஒருவர் பலவிதப்பண்டங்களோடு உண்டால் அது அவருக்கு உண்டி. மிகக்குறைந்த எண்ணிக்கையினாலான பண்டங்களுடன், ஒரே வகை உணவை ஒருவர் உண்டால் அது அவருக்கு ஊண்.

பிரிந்துசென்ற கணவனை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பவள், நாளும் விருந்துச் சோறா உண்பாள்? இருக்கின்ற பருக்கைகளையும் எடுத்துப்போட்டு உண்ண மனமில்லாதவளாய் இருக்கிறாள் என்று கலித்தொகை கூறும்போது,

ஊண் யாதும் இலள் ஆகி – கலி 147:8
எனக் கூறுகிறது.

எனவே ஒருவர் உண்ணக்கூடியது உணவு; பலவிதப்பொருட்களோடு பரிமாறப்படுவது உண்டி; பெரும்பாலும் ஒரே வகையாக அமைந்த உணவு ஊண் ஆகும் அறுசுவை உண்டி என்றுதானே சொல்கிறோம். பல்சுவை கொண்டது உண்டி என்றால்,  சுவைத்தது ஊண் ஆகும் எனலாம்.

சொன்றி

சோறு என்பது நாம் உண்ணும் முழு உணவையும் குறிக்கும். பொதுவாக, வேகவைத்த அரிசி, அதைப் பிசைந்து உண்ணக்குழம்புவகைகள் மற்றும் கூட்டுவகைகளைக்கொண்டது சோறு. இதில் வேகவைத்த அரிசி மட்டும் சொன்றி எனப்படுகிறது. இந்த அரிசி நெல், வரகு ஆகிய தானியவகை மணிகளினின்றும் தோல்நீக்கிப்பெறப்பட்டது. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற சொலவடையில் வரும் சோறு என்பதே சொன்றி.

சுவல் விளை நெல்லின் செவ் அவிழ் சொன்றி – பெரும்.131
என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவது நன்றாக மலர்ந்து வெந்த நெல்லரிசிச்சோறு.

குறுந்தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும். 193
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12

என்ற அடிகளில் கூறப்படுவது வரகரிசிச்சோறு.

மேலும்,
இழித்து ஆனாப் பல சொன்றி – மது 212
சாறு அயர்ந்து அன்ன மிடாஅச் சொன்றி – குறி 201
அடங்காச் சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
வரை கோள் அறியாச் சொன்றி – குறு 233/6
கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி – பதி 24/22,23

ஆகிய இடங்களில் குறிப்பிடப்படும் சொன்றியும் பானைகளில் சமைத்துக் கொட்டும் அரிசிச்சோற்றையே குறிக்கிறது.

பாத்து

பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் – (மணிமேகலை )
பொருள் :பிச்சை ஏற்ற மணிமேகலையின் தெய்வக்கடிஞையிற் கற்பிற்சிறந்த ஆதிரைநல்லாள் பலர்க்கும் பகுத்துண்ணும் உணவினை இட்டதும்,

பாத்து என்பது பகிர்ந்து, பிரித்து என்ற பொருளில் அமைந்த ஒரு சொல் .

துற்று,குவி, நிறை,கவ்விப்பிடி,உண், தின்,நெருங்கு.

கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கை – புறம் 29/19,20

பொருள்: கூவை இலைகள் குவித்துவைக்கப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தலாகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கை,

பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/1,2

பொருள்: பிளந்த வாயையுடைய வராலின், பல சொற்றொடர்களைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையைக் கவ்வி,

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் – பொரு 103
பொருள்: அறுகம் புல் கட்டுக்களைத் தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)

வெம் கதிர் கனலி துற்றவும் – புறம் 41/6
பொருள்: வெய்ய சுடரையுடைய ஞாயிறு நெருங்கிவரவும் (சுட்டெரிக்கவும்)

இச்சொல் சோற்றைக்குறிக்காத ஒரு சொல் என்பது ஐயமுறத் தெளிவாகின்றது .

புன்கம்

நீர்வற்றும்படி சமைத்த உணவு , பொங்கல் போன்றது.

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/10
பாலின்கண் பெய்து சமைக்கப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு,

புன்கு – புங்கமரம்

இதன் பூ பொரிப்பொரியாக இருக்கும். தளிர்கள் செந்நிறத்திலிருக்கும்.

பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/5
பொருள்: பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை,பெண்கள் தங்கள் மார்பில் தோன்றும் சுணங்கு என்ற அழகுத்தேமலை நீக்க, இதன் தளிரைப் பூசிக்கொள்வர்.

பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி – நற் 9/5,6

பொருள்: பொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை அழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத்தேய்த்து புங்கம் மரம் தூய்மையான காற்றைக் கொடுக்கக் கூடியதும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,மூட்டு வலியைப் போக்கவல்லதும் உடலில் ஏற்படும் அரிப்பை குணப்படுத்தக் கூடியதும்,பசியின்மை, ஈரல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டதுமானது புங்கமரம்,
புங்க இலை தோலுக்கு வலிமை கொடுக்கிறது. தோல் மென்மைத்தன்மை அடைகிறது.அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது என்ற இன்றைய மருத்துவக் குறிப்புகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

சரு

இச்சொல் கடவுளுக்குப் படைக்கும் உணவைக்குறிங்கும் ஒரு சொல் . சருவிதம் என்ற வடமொழிச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் உண்டல் எனப்படுகிறது . ஆகவே இச்சொல் உணவைக் கூறும் ஒரு சங்கதச்சொல்லாகவும் கொள்ளலாம் .

அசனம்

இதுவும் ஒரு வடமொழிச் சொல்லே . அசனம் என்ற வடமொழிச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் உண்ணுதல் . அதே போல் அனசனம் என்பது உண்ணா நோன்பைக் குறிக்கும் சொல்லாகும் .உணவு , ஊண் , உண்பது போன்ற பொருளையுடைய பல சொற்களை இங்கே சோறென்று கொண்டது தவறான ஒன்றே.

கூழ்

உணவு, பொதுவாக கேழ்வரகு, கம்பு போன்றவற்றை அரைத்து நீரோடு கொதிக்க வைத்து செய்யப்படும் உணவு.

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
பொருள்: ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
பொருள்: உணவுடைய நல்ல வீடுகளையும், வளைந்த அணிகலன்களையுடைய மகளிர்

கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 163
பொருள்: (தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும்,

கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/5
பொருள்: உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும்

கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
பொருள்: செல்வமுடைய நல்ல இல்லங்களில் காளைகள் தம்முள் மாறுபட்டு செருக்கி முழங்குகின்ற,

வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
பொருள்: வலிய வாயையுடைய கோடலியையுடைய கூழ் குடிக்கும் கிணறுதோண்டுவோர்,

ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
பொருள்: பாதுகாப்புடன் இருக்கும் உணவு மிக்க அரண்களில் சென்று,

கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
பொருள்: நெல்முதலிய உணவுப்பொருள்களையும் உடைய தன் தந்தையின் அகன்ற இடமுள்ள மாளிகையில்,

கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
பொருள்: கொல்லையை உழும் உழவர்கள் கூழ் உண்ணுவதற்கு நிழலாக விட்டுவைத்த,

கொளகொள குறைபடா கூழ் உடை வியன் நகர் – புறம் 70/7
பொருள்: எடுக்க எடுக்கக் குறையாத உணவினையுடைய அகன்ற மனைகளில்

பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/5
பொருள்: பகையாகிய செறிந்த கூழில் அழுந்தி

வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் – புறம் 320/16
வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக்விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்/பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/14,15
பொருள்: பெரிய தலைகளை வெட்டிச் சாய்த்து, அச்சத்தை விளைவிக்கும் மூளையும் நிணமுமாகிய கூழே பசிய பயிராக,.

கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20
பொருள்: கூழையும் சோற்றையும் விரும்பி, ஒவ்வொன்றாக

கூழ் என்பது அரிசியிலும் செய்யலாம். கூழ் என்பது உணவே . சோற்றின் மறுபெயர் கூழ் என்பது தவறு .

ஓதனம்

இச்சொல்லும் ஒரு வடமொழிச்சொல்லாகும் . இதன் பொருளும் உணவு என்பதே . சோறு என்று பொதுவாக பல இடங்கள் கூறினும் உணவு வகைகளில் ஒன்றே . தமிழ்ச் சொல் அன்று .

புகா

புகா -உணவு

மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
பொருள்: மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்

மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள்
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்று உறா முன்றிலோ இல் (பாடல்}171)
மழை பொழியாது வறண்டு போயிருந்த காலத்திலும்கூட, பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், தன்னை இரந்து நின்ற பாணனுக்கு நீர் உலையுள் செய்து அழகாக சமைத்து வைத்திருந்த உணவுப் பானையைத் திறந்து, பொன்மனங் கொண்டு உணவு கொடுத்து உதவினாள்.

இதனூடாக இங்கும் உணவையே குறிக்கின்றனர் .

சோறு

நிறைவாகச் சோறு தமிழ்ச்சொற்பொருள் என்னவெனில் நெல்லில் இருந்து உமியை நீக்கியபின் சமைத்துப் பரிமாறும் ஓருணவே சோறு ஆகும் .

வரகின் சோறு:வரகில் இருக்கும் உண்ணத் தகுந்த பொருள்.

தென்னஞ் சோறு : தென்னையில் இருக்கும் உண்ணத்தகுந்த பொருள்.

மூங்கில் சோறு : மூங்கிலில் இருந்து பெறப்படும் உண்ணத்தகுந்த பொருள் .

தெளிவுரை :

சூடாமணி நிகண்டில் கொடுக்கப்பட்டிருக்கும் 27 வகையான பெயர்களும் சமைத்து / வேகவைத்து உண்ணக்கூடிய உணவுகளையே குறிக்கின்றன .இதில் இருக்கும் சில சொற்கள் பிறமொழிச் சொற்கள் .அத்துடன் முன்னைய உணவுகளில் பெரும்பாலும் அரிசி கலந்துள்ளதால் பொதுவான உணவுகளையும் சோறென்று தவறாக அடையாளப்படுத்தியுள்ளனர் .சோற்றின் மறுபெயர்கள் என்பது ஒரு தவறான கூற்றே .

நிறைவு : சூடாமணி நிகண்டில் கூறப்பட்டுள்ளவை இருபத்தேழு வகையான உணவுகளின் பெயர்களே .

முற்றும்.
தொகுப்பு : துளிவானொலி .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button