தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா ! தமிழின் பொற்குடம்!

உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர் 1855 ஆம் ஆண்டு குடத்திங்கள் 19 -ஆம் நாள் பிறந்தார்.
இவர் உழைத்திராவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். மேலும், தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய பணிக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட கடினங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது அச்சுப்பணியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.
சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா பெரும் காரணமாவார். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.
சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்கமுயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சூழ்நிலைக்கு நடுவில் கற்று பாடம் சொல்லிக் கொடுத்ததால், இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887 ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக்கருவூலமாக இருக்கின்றது.
இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்குவதற்கு மேன்மைகள் இன்மையால் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த மாபெரும் வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் ஈகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.
இந்திய அரசு, குடத்திங்கள் 18,2006-ஆம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
உ.வே.சா. 1948ஆம் ஆண்டு மேழத்திங்கள் 28- ஆம் நாள் இம்மண்ணுலகை நீத்தார் .
தமிழ் நல்லுலகு எமக்களித்த கொடையான பெருமாந்தர்களை நாம் என்றும் மறவாது நினைவு கூறுவோம் .
எழுத்து :பெரணமல்லூர் சேகரன்




