
ஈகர் பொன். சிவகுமாரன்.
எமது நாட்டின் நாளையதூண்களான மாணாக்கர் யாவரும் நாளை எமது நாட்டைக்கட்டியெழுப்பும் இளையசிற்பிகள். எமது நாட்டின் விடியலிற்காய் தம்முயிரையீகம் செய்தவர்களில் மாணாக்கரின் உழைப்பு அளப்பரியது. தமிழீழவிடுதலைப்போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து , இப்போராட்டம் பெருமரமாக வளர்வதற்கு மாணவ ஆற்றலே பெரிதும் துணைநின்றது .
ஞாலத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்கு ஒத்திசைவாக பாரெங்கும் குரல் கொடுக்கக்கூடியளவிற்கு ஆணிவேராக இருந்தோர் இற்றைக்கு, மூன்று நூற்றாண்டுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் துமுக்கிப்போராட்டத்திற்கு வித்திட்டோர், அன்று மாணவராக இருந்த தமிழீழத்தலைவரும் அவர்தம் தோழர்களுமே.
இம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயை சேர்ந்த பொன். சிவகுமாரன் ஆவார்.
ஆயிரத்து தொள்ளாயித்தைம்பது மடங்கல் திங்கள் இருபத்தாறாம் நாளில், பொன்னுத்துரை அன்னலட்சுமி ஆகியோர்க்கு மகனாகப்பிறந்தார். தமிழினவுணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் இயல்பாய்க்குடிகொண்டிருந்தது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டாம் ஆண்டின் இனக்குழப்பத்தில் இவரது மூத்த பெண் உடன்பிறப்பு பருத்தித்துறைத்துறைமுகத்தில் உடுத்ததுணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்கவேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டு அகவையிலேயே இவ்வாறான எண்ணம் இவர் உள்ளத்தில் தோன்றியது.
இவர் தனது தாயிடம்சென்று , “ஏன் அம்மா , அக்கா இப்படி கண்ணீர் வடித்தபடி இங்கு வரநேர்ந்தது? சிங்களவர் அடித்தால் இப்படி அடிவாங்கிக்கொண்டு நாம் ஓடிவரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பியடித்தால் என்ன” என்று கேட்டாராம்.
இயற்கையிலேயே இவரிடம் பல திறமைகள் குடிகொண்டிருந்தன .ஆயிரத்து தொள்ளாயிரத்து றுபதாம் ஆண்டில் தனது பத்தாவதகவையில் “(தினப்)நாள் புழுகு”என்ற பெயரில் ஒரு கையெழுத்துச்செய்தித்தாள் நடத்தியுள்ளார். அதில் இவர் பி.எசு்.கே என்ற புனைபெயரில் எழுதினார்.
இதே காலகட்டத்தில்ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் இலங்கை விடுதலைக்கட்சியின் தலைமையிலான கூட்டணியரசு ஆட்சிக்குவந்தது. இனசார்பாளரான சிறீமா அம்மையார் தமிழர் மீது அளவற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய குமுகாயத்தின், குறிப்பாக தமிழ் மாணவக்குமுகாயத்தின் உயர் கல்வியிலும் சிறீமா அரசு கைவைத்தது. தமிழரை கல்வியில் பின்தங்கவைக்கவேண்டும் என்கிற கெடுதிட்டத்தோடு ,தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழகக்கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவனொருவன் பல்கலைக்கழகம் செல்லவேண்டுமாயின் இருநூற்றைம்பது புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின்இருநூற்று இருபத்தொன்பது புள்ளிகள் பெற்றால் போதும். இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்க்குமுகாயம். அதன் விளைவாக ,
“தமிழ் மாணவர் பேரவை” பிறந்தது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு நளித்திங்கள் இருபத்துநான்காம்நாள் தமிழீழமெங்கும் சிங்கள இரண்டகக்கெடுபிடியையெதிர்த்து தமிழ் மாணவர்குமுகாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவகுமுகத்தினதும் தமிழ்மக்களினதும் அன்பையும் ஒத்திசைவையும் பெற்றான். சிவகுமார் தலைமையில் தமிழ்இளைஞர்கள் திரள்வதைக்கண்ட சிங்களவரசு, உரும்பிராய்க்குவந்த சிங்கள உதவியமைச்சர் ஒருவருக்குக்கைக்குண்டு வீசியதாக ஐயத்தின் பெயரில்ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் சிவகுமாரனைச்சிறைப்பிடித்தது. இத்தனை கொடுமைகளை சிங்களவரசு செய்தபோதும் , தனது கல்வியைக்கைவிடாது பல்கலைக்கழக கல்வித்தேர்வில் தேர்ச்சியானார் .
அக்காலகட்டத்தில் இவரது தந்தையார் , “தம்பி ! நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படியும்” என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும்மிக்க சிவகுமாரன்.. அப்பா ,”நான் எங்கும் போகமாட்டேன் . இந்நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப்போராடுவேன்.எனதுடலில் உயிரிருக்கும் ஒவ்வொரு சொட்டுக்குருதியும் இத்தமிழ் மண்ணிற்கே உரிமையாகும்” என்று கூறினாராம்.
இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம் ..”அம்மா , உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப்போவதும் ஒருதடவைதான். அப்படிப்போகும் இவ்வுயிரை ஒருதூய குறிக்கோளிற்காகக்கொடுப்பதில் என்ன தவறு “என்று .
தமிழராய்ச்சி மாநாட்டுப்படுகொலைகள் சிவகுமாரன் நெஞ்சை அளவிற்குமேல் தாக்கியுள்ளது. தமிழராய்ச்சி மாநாட்டில் இலங்கைக்காவற்றுறையினரின் அடாவடித்தனமான மக்களின் மேல் மேற்கொள்ளப்பட்ட கெடுதாக்குதல்களுக்கும் நடுவில் அவர்களின் கெடுபிடிகளால் துன்பப்படும் முதியோர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுச்செல்வர்களையும் காப்பாற்றுவதில் இளையோர் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள்பலர், உயிர் காக்கப்பட்ட முதியோர்பலர். சிவகுமாரன் தன்னுயிரைப்பற்றிக்கவலைப்படாமல் தமிழ்மக்களின் உயிரைக்காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பிவேலிக்குப்பக்கத்தில் ஏழுதமிழர் உயிர் மீட்கப்போராடிக்கொண்டிருக்கின்றனர். கம்பி வேலியின்மீது சிங்களக்கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின்கம்பியொன்று மின்சாரத்தைப்பாய்ச்சியதால் ஏற்பட்ட கெடுநெறி இது. அகப்பட்ட தமிழர்களில் சிறுவனொருவன் ஈகர் பொன் சிவகுமாரனைப் பார்த்து , “அண்ணை ! என்னைக்காப்பாற்றுங்கோ நான் சாகப்போகின்றேன்” என்று , குரல் எழுப்பினான். ஆனால், இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்துத்தூக்கப்போவதற்கு முற்படுகையில் அவரது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத்தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னே தமிழீழத்தின் குருத்தொன்று மரமாகி, காயாகி, கனியாகி ,விதையாக முன்பே கருகிவிடுகின்றது.
தமிழினப்படுகொலைக்கு பொருட்டாகவிருந்த காவற்றுறை மேலாளர் சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத்தேடி சிங்களக்காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை உரூபாய்கள் விதித்தது சிங்களம்.
தமிழினவுணர்வும் விடுதலைவேட்கையும் மிகுந்த ஈகர் சிவகுமாரன் சிங்களக்கைக்கூலியும் பெற்றோல் நிலைய தலைவருமான நடராசாவால் காட்டிக்கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்கிற மறமரபின் முதல் வித்தாய் நஞ்சுக்குப்பியைக்கடித்து சாவை அணைத்துக்கொண்டான்.
இதுவும் அவன் ஈகைக்குணத்தாலேயே ஈகச்சாவடைந்தான். இறுதி மணித்துளியில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது , “அம்மா! என்னைப்பிடிக்கவந்த காவற்படை மேலாளர்” “நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னையெதுவும் செய்துவிடாதே” எனக்கெஞ்சினான். அதனால் நானொன்றும் செய்யவில்லை.”
கடைசிநேரத்தில் இவனிற்கு தண்ணிவிடாய் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டுவந்துபுகட்ட முற்பட்டபோது அதற்குச்சிங்களக்காவற்படை ஒப்புதலளிக்கவில்லை.
ஈகர் பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சிகொண்டது. தமிழீழ மாணவகுமுகாயம் தாயகமீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்குள் குதித்தது. சாவிலும் ஒரு குமுகாயமறுமலர்ச்சி செய்தான் மாவீரன் சிவகுமாரன். வீட்டைவிட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாதகுமுகத்தில். ஆயிரக்கணக்கில் மாணவியரும், இளையோரும் ஈகர் பொன். சிவகுமாரன் இறுதி நிகழ்வில் திரண்டனர்.
ஈகர் பொன் சிவகுமாரன் மறைந்தநாளாகிய ஆடவை ஐந்துற்கு மறுநாள் ஆடவை ஆறாம் நாள் தமிழீழ மாணவரெழுச்சி நாளாக அறிவித்து ,தாயகம் அடங்கலாக தமிழீழமக்கள் வாழும்நாடெங்கும் தமிழீழமக்களால் கொண்டாடப்படுகின்றது.
ஈகர் பொன். சிவகுமாரன் வெல்ல முயற்சித்தவற்றை தமிழீழத்தலைவரும் அவர்தம் தோழர்களும் வென்று காட்டினர். இன்று அவனின் கனவான தமிழீழத்தாயகத்தைநோக்கி தமிழீழமண் வீறுநடைபோடுகின்றது.
இன்று மாணவக்குமுகாயம் பொங்குதமிழாய் உலகப்பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத்தேசியத்தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழமாணவக்குமுகாயத்தின் ஒத்திசைவு தாயக கட்டமைப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலமிட்ட கட்டளையைநிறைவேற்ற வரலாறாகிப்போன மாணவப்போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளஞ்சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்குவந்து செயற்படவேண்டியநேரமிது .
ஈழப்பறவைகள் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது .
நினைவுப்பகிர்வு: போராளி செ. கதிர்நிலவன்.
தனித்தமிழுக்கு மாற்றிய பொறுப்பை ஏற்கிறது துளிவானொலி.



