துளி உறவுகளின் பாக்கள் !

“நினைவுப்படலம்”
பொழுது சாயும்
நேரம்தான்..
ஆட்டுகல்லை
அம்மாவும் அக்காவும்
கழுவி தூய்மை செய்வார்கள்.!
காலையில்
ஊறவைத்த
அரிசியையும்
உளுந்தையையும்
ஆட்டுவதற்கு..
ஆட்டுக்கல்
இல்லாதவர்களும்
அரிசியை வைத்து
காத்திருப்பார்கள்..!
நள்ளிரவில் அப்பா
கயிற்றுக் கட்டிலில்
அமர்ந்து கொண்டு
ஒலிப்பரப்பு நின்றுப்போன
வானொலியைத்
திருகிக்கொண்டிருப்பார்..!
எனக்கே தெரியாமல்
தூங்கி எழுந்த
எனக்கு இட்லி
தோசைகள்
தட்டில் காத்திருக்கும்..!
குளிப்பாட்டி
உண்ணத் தொடங்கினால்
இரண்டு நாளைக்கும்
இதே திருவிழா தான்
எங்களுக்கு..!
எந்தச் சாமிக்கு
என்றுகேட்டு விடாதீர்கள்..
இன்று வரையிலும்…
எனக்குத் தெரியாது..!!!
-செண்பகராசு
_______________________
தலையில்
பேன் இல்லையெனிலும்
ஈர்க்குழியால்
ஈர்க்கும் அம்மா..
அப்பா
வாங்கி வந்த
திண்பண்டங்களை
அக்காவிற்குத் தெரியாமல்
கொடுத்து…..
நகச்சுத்தி வருமென்று
விரல் முழுக்க
மருதாணிபூசி…..
நட்டுவைத்த
செடியைக் கூட..
என்செடியன்று
பற்றோடு பாதுகாத்து
நீர் ஊற்றி ….
பொய்சொன்னால்
அடிக்கும்
அம்மாவின் அடிகள்
வலிக்கவில்லை..
அம்மாவிடம்
சொன்ன பொய்கள் தான்
இன்னும்
வலிக்கிறது
வடுக்களாய்..!
-செண்பகராசு




