
“தலாட்டு”
தாய் தந்த தாலாட்டுப் பாடலல்லவே!
தாயுமானவன் பரிவுடன் தனயனுக்குத் தந்ததுவே!
நட்ட வித்தெல்லாம் நச்சாகிப் போனதடா
கிட்டியவரை தாய்ப்பாலைக் கருத்தாய்ப் பருகிடடா!
நல்லவன் கெட்டவன் நாற்புறமும் இருக்கையிலே
வல்லவனாய் பகுத்தறிவை வளர்த்திடடா செல்லமே!
போட்டி உலகில் போராட அறிந்திடுவே
நாட்டுப் பற்றுதனை நாள்தோறும் வளர்த்திடுவே!
இயன்றதைச் செய் இயலாதோர்க்கே இன்முகத்துடன்
முயன்று பார் மூவுலகமும் உன் கையிலே!
கருவிலிருந்து செவியுற்ற கன்னித் தமிழில்
வேரோடு களையெடு வீணான கலப்பையே!
அனைத்தும் கற்று அகிலமும் சுற்று
அன்னைத் தமிழை அகத்தில் வைத்திடடா!
பிறந்தாய் தமிழனாய் பெருமைப்படு அதனால்
சிறப்புடன் வாழியவே சிங்கத் தமிழனாய்!
சண்முகசுந்தரம்




