துளிவானொலியுறவு பாவலர் ப குமரவேல் அவர்கள் துளிவானொலிக்காக எழுதிய பா .
பாவலர் ப குமரவேல் : துளிவானொலி

துளி வானொலி
——————
“தமிழே எங்கள் முகவரி ” என்பதே
தமிழைத் தூயத் தமிழாக வளர்க்க
வென்றே தொடங்கி வெற்றி நடையிடும்
துளிவா னொலியின் தூரத்து இடிமுழக்கம்!
இருபத்து நான்கு மணியும் பிரான்சில்
இருந்தபடி ஒலிக்கும் இணைய வானொலி
இருளை விலக்கி எங்கும் ஒலிபரப்பிக்
கருத்தாய் யாவும் கைகூடச் செய்யும்
தனித்தமிழ் எழுத்தாளர் தகைமை துளியரசன்,
நனிபுகழ் ஆளுமை, நம்நிலா அம்மா,
இனியதம் குரலால் ஈர்க்கு மன்பினால்,
தனித்தமிழ் வளர்க்க, தரணியே போற்றும்
தரணி முழுதும் தவழும் தனித்தமிழ்
வரமாய் வந்தநம் வாழ்வினை என்றும்
தரமாய், மகிழ்வாய், தன்னிக ரில்லா
மரபின் வழியில் மாண்புறச் செய்யும்
இலங்கைத் தமிழின் இனிமை கொஞ்சும்
புலம்பெயர்த் தமிழர் போற்றும் வண்ணம்
பலப்பல நிகழ்வைப் பாங்குடன் அளித்து
நிலவின் தண்மை நெகிழ்வைத் தந்திடும்
துளிவா னொலியின் துடிப்பான நிகழ்வு
எளிமையான “பழமையில் எத்தனை இனிமை”
களிப்பூட்டும் பழைய காலப் படப்பாடல்
அளித்துத் தம்குரலில் அழகாகப் பாடுவார்.
உலகத் தமிழர் ஒன்றியே இணைந்து
பலபொருள் பற்றிப் பாங்குடன் உரையாடி
கலக்கும், “நிலாமுற்றம்” கருத்தான நிகழ்வு
நலமுடன் வளமுடன் நாளும் வளரும்.
தனித்தமிழ்ப் பாக்கள் தாங்கி வருவார்
நனிபுகழ்ப் பாவலர் நேர்த்தி யுடனே
இனிமை யான இயலிசைப் பாடலதைப்
பனித்துளிச் சிலிர்ப்புடன் படைப்பார் “பாக்களத்தில்.”
திறந்த நூலாய்த் திகழும் மழலையர்க்குச்
சிறந்த நிகழ்ச்சி சிறுவர் நிகழ்ச்சி
உறக்கம் கலைக்கும் உணர்வைப் பெருக்கும்
நிறைவைக் கொடுக்கும் நிலைத்து நிற்கும்
வானுக்கு இன்னும் வண்ணம் தீட்டும்
வான வில்நிகழ்வை வழங்கும் வானொலி
ஏனைய சேவையை இணையத்தில் வழங்கும்
ஞானச் சுரங்கம் நம்துளி வானொலியே!
பாழ்படக் கலந்த பிறமொழிச் சொல்மாற்றி
ஆழ்ந்த தமிழின் தரமதை உயர்த்துகிறார்
வீழ்க எதிர்வினை விளைக்கும் வினைகள்
வாழ்க வானொலி தனித்தமிழ்த் தொண்டு!
*****
கவிச்சுடர் ப குமரவேல்
புதுவை
16/11/2024
✓✓✓




தங்களின் கலிமண்டிலப் பாடல் அருமை.
வாழ்த்துகள் அன்பரே.
பாச்சுடர் ப. குமரவேலு அவர்களின் கலிமண்டிலப் பாடல் அருமை.