தேய விடுதலை ஊக்கி நமசிவாயம் சத்தியமூர்த்தி : நினைவுநாள்
வாழ்ந்த காலம் : (1951-2013)

உலகத்தமிழர்களாலும் தேயத்தலைமகனாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட நமச்சிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் 03.09.1951 அன்று பிறந்தார்.உடல் நலக்குறைவால் 27.02.2013 இவ்வுலகை நீத்தார்.
ஒப்பற்ற தேய விடுதலை ஊக்கி சத்தியமூர்த்தி அவர்கள் ,தமிழ் மக்களின் விடுதலைக்காக பல ஆண்டுகள் தன்னை ஒப்புவித்து பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே எண்ணிச் செயலாற்றி தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு போற்றுதற்குரிய மாந்தர்.
இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்தவர்.
தனது வாழ்நாட்களின் போது இலங்கை அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல பொழுதுகளில் இக்கட்டான சூழ்நிலைகுள்ளான போதும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக விடுதலை நெருப்பை எல்லோருள்ளும் பற்றச்செய்ய மிக முக்கியமான பணியினை தலைமேல் கொண்டு தன்னை ஒப்புவித்தவர் இவர் .
1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர்.
பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
தமிழ்த்தேயத்தின் உயர்ந்த கனவைச் சுமந்து தனது வாழ்நாட்களின் பெரும் பகுதியை அதற்காகவே ஒப்புவித்த ஒப்பற்ற தேய விடுதலை ஊக்கி நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களை இன்றைய நாளில் துளிவானொலி நன்றியோடு நினைவு கூறுகின்றது .




