உலகத்தாய்மொழி நாளிற்கான தமிழ்மொழிப் பாக்கள்..!

@ செண்பகராசு
எண்ணப் பகிர்வுகளை
எழுத்தாக்கினேன்
இடர்பாடுகளை
தமிழ்
சொல்லாக்கினேன்
வரும் இடர்களை
இனி ….
வாளாக்குவேன்
வரலாறே
தமிழென்று
‘பா’வாக்குவேன்
எதுவென்றும்
இல்லையென்ற எமக்களிக்கும் கொடையாக
தமிழன்னை
வீற்றிருப்பார் ~தமயனென
பாதுகாக்க
தமிழே கேடயமாக
நானணிவேன்
மிளிரும் பொன்னாக
இதுவென்று
போதுமே _இன்னும்
தமிழோடு
நானும் வாழ..
_____________________________________________
குகன்
தமிழனாய்ப் பிறந்தேன்
தடாதகை மண்ணில்,
இம்மையிலும் நன்மை இட்ட சிவபுரியிலே!
சங்கம் வைத்துச் செம்மொழி வளர்த்த
செங்கமல நாட்டின் சீர்காணா பாவியானே!
கோணவரை சத்தம் காததொலை சென்றிடினும்,
எண்ணத்தின் ஊற்றாய் எழுந்தாள் ஒலி அலையாவே!
எழுத்தும் பேச்சும் எண்ணமும் தமிழாய்
செழித்து வளர செந்தமிழாய் வந்தாளே!
விதைத்த விதை விண்ணைத் தொடும் வரை
புதைய மாட்டேன் பன்முகத் தாயே!
மாற்றம் என்பதை மனதில் வித்திட்ட
ஏற்றமிகு எம் எழிலே வாழியவே…!
…….குகன்…..
_________________________________________________
@ செண்பகராசு
துயரெதுவும்
நீக்கீடும்
பேராற்றல்
தமிழே
துணையாக
நீயிருப்பதால்
இணையில்லா
மகிழ்வே
துணைகொண்டு
வழிநடத்தும்
தூய நல்
தமிழே
துளியாய்
வந்து •வந்து
அருவியாகக்
கொட்டும் உயிரே
இனிக்கும்
சுவையாய்
பொழிகின்ற
அமுதே
சுடராய்
வழிகாட்டும்
எங்கள்
ஒளியே
தமிழே
உம்மை அறியாமல்
நானேது -இல்லாமல்
வாழ்வேது
________________________________________________
@ யோ சுந்தர்
என் தாய் தமிழே!!!
என் தேனே
என் தேன் மொழியே …
நின் குரலே எனக்கு
தாலாட்டு..
தேனிசையும் திகட்டாத தீந்தமிழை
தேனாக எமக்கு கொடுத்த என் தேன்மதியாளே..
தமிழ் வேறு நீ வேறு என்று பிரிக்க முடியாது என் தமிழச்சியே !!
உன்னிடம் வரம் கேட்டு கேட்டு தோற்று போனேன்..
அதனால்..
தமிழ் தாயிடம் வரம் கேட்டு விட்டேன்.
உன்னைத் தன் உயிராய் நினைத்து காதலிக்கும்.
வெய்யோனை, உயிராய்,
கருவாய்,
தருவாய் என் தாயே என்றேன்…
தந்தாள்
கன்னமதில் முத்தமிட்டு
தன்மதியாளை, முழுமதியாக தருகிறேன்.
நீ ! நின் மதியாள், நிம்மதியாய் வாழ்வாய் என்றாள் என் தாய் !!
வாழ்க தமிழ்
வாழிய தமிழ் தாயே!
வாழிய எங்கள் துளிவானொலி வாழியவே…..
யோ..
_________________________________________________
21-2-24
பாவலர் சொல்லரசிவீணைதேவி பெங்களூர்
தலைப்பு -அன்னைத்தமிழே
என் தமிழ் தாய்மொழி தமிழ்
நம் தமிழ் நாவில் பேசும் தமிழ்
கற்கவும் கற்பிக்கவும் நம்
தமிழ்
அன்னையின் அமுதான தேன்
தமிழ்
நம் இனமொழியின் அம்மா
என்றழைக்கும்
மழலையின் கொஞ்சும் தமிழ்
மிஞ்சும்
தமிழ் பஞ்சான பருத்தி பாலான
பட்டு நூலான கட்டு கைத்தறி
தமிழ்
கொஞ்சும் தமிழ் விஞ்சும் தமிழ்
வீரத்தின் அடையாளம் வெற்றி
தமிழ்
நெற்றியில் பொட்டுப் போன்ற
உலகத்தில்
உரையாடும் உன்னத தமிழ்
உயர்ந்த தமிழ்
குருதியில் அனுக்களின் மேலாளுமை தமிழ்
ஆசானாய் அரசனாய் ஆண்ட
தாய்நாட்டின்
நெறி தமிழ் எங்கும்
தமிழ்
எதிலும் தமிழ் பொங்கும் தமிழ்
நாவில்
தங்கும் தமிழ் பாவில் படைக்கும்
கதை பா கட்டுரை தங்கத்
தமிழ்
சங்கத்தமிழ் பூந்தமிழ் பைந்தமிழ் தேன் தமிழ்
வானுயர்ந்த திருக்குறள் தமிழ்
வள்ளுவரின் தமிழ்
புரட்சி தமிழ் பாரதி தமிழ்
விடுதலையாகப் பேசும் ஈர்க்கும்
தித்திக்கும்
தீந்தமிழ் தெள்ளுதமிழ்
காலத்தால் கருவூலத்தால்
நடுகல் எல்லாமே
கதை சொல்லும்
கலைத் தமிழ் சிலைபேசும்
மேழத் தமிழ்
வல்லின மெல்லின இடையின
முத்துத்தமிழ்
வித்து தமிழ் சத்தான விரல்
பத்தான தொப்புள் கொடி பித்தான
அன்னையின் அருந்தமிழ்
அமுதான அன்பு தமிழ்
கன்னித்தமிழ் கருத்துரைகள்
பல்லாயிரம் படைக்கும்
வண்ண ஒப்பனை ஒய்யார
ஓம்கார
தாய்பால் தூயதமிழ் பாலான
செந்தமிழ்
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
பாவலர் சொல்லரசிவீணைதேவி பெங்களூர்
______________________________________________________
@ தமிழன் ஆவண எழுத்தகம்
#தீந்தமிழ்-வாழியவே__
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழினம்
வாழிய வாழியவே!
வேற்று மொழியெலாம் விஞ்சி வளர்ந்தயெம்
வண்டமிழ் வாழிய வே!!
ஆழ்குழி யாழ்ந்திட ஆவணம் சாற்றிடும்
அந்தமிழ் வாழிய வே!
ஆற்றல் புகன்று அவனியி லோங்கிடும்
அணித்தமிழ் வாழிய வே!!
கேழ்மிகச் சாட்டிடும் காப்பியம் கண்டயெம்
களத்தமிழ் வாழிய வே!
கூர்மிகும் ஆற்றல் குவலயம் ஈந்தயெம்
குலத்தமிழ் வாழிய வே!!
சூழ்வினை யோட்டி சுடரென வீற்றயெம்
செந்தமிழ் வாழிய வே!
சூடிகை யேற்றவர் சூரலன் போற்றும்
சுடர்தமிழ் வாழிய வே!!
தாழ்நிலை கொண்டத் திருமொழி மாய்த்தயெம்
தண்டமிழ் வாழிய வே!
தேறலர் போற்றும் தனிமொழி வீழ்த்திய
தீந்தமிழ் வாழிய வே!!
பாழ்குழி வீழ்ந்தவர் பாட்டைத் தகர்த்தயெம்
பசுந்தமிழ் வாழிய வே!
பாவலர் பாடப் பலபொருள் ஈந்திடும்
பொற்றமிழ் வாழிய வே!!
வீழ்நிலை காணா விழுமியம் கொண்டயெம்
வெண்டமிழ் வாழிய வே!
வானவர் போற்றிய வாய்மை மிகுந்தநல்
வாய்மொழி வாழிய வே!!
கீழ்க்கதி வேண்டார் குருதியில் பாய்ந்தயெம்
கொற்றமிழ் வாழிய வே!
காற்றிசை யெழிலாய்க் குவலயம் ஆளும்
கருத்தமிழ் வாழிய வே!!
போழ்ந்திட வெங்களப் போர்நெறி புகட்டிடும்
பைந்தமிழ் வாழிய வே!
பாரினில் எம்மினப் பாவலர் யாத்திடும்
பாற்றமிழ் வாழிய வே!!
ஊழ்வினைப் போக்கும் உறவென வீற்ற
உயிர்த்தமிழ் வாழிய வே!
ஊற்றெனப் பொங்கி உணர்வினில் வாழும்
உயர்தமிழ் வாழிய வே!!
காழ்.திகழ் சாற்றி கருதலர் சாய்த்தயெம்
கற்றமிழ் வாழிய வே!
காசினி மூத்த மொழியாய்க் கிளைத்த
கனித்தமிழ் வாழிய வே!!
மாழ்கிடத் தூண்டும் மொழியாய்த் திகழும்
மணித்தமிழ் வாழிய வே!
மேதினி யெங்கெனும் முன்னை மொழியெனும்
மாத்தமிழ் வாழிய வே!!
ஏழ்பிறப் பாகினும் ஏற்றிட வேண்டிடும்
எந்தமிழ் வாழிய வே!
எம்மினம் வாழ்ந்திட எண்குணன் பாடும்
எழிற்றமிழ் வாழிய வே!!
மூழ்கிடத் தூண்டும் மதியிலார் சாற்றிடும்
முத்தமிழ் வாழிய வே!
முன்னோர் வளர்த்த முழுமதி யென்னும்
முதுதமிழ் வாழிய வே!!
ஆழ்மனம் வீற்று அகிலம் உயர்ந்தயெம்
அண்டமிழ் வாழிய வே!
ஆளுமை சேயென ஆகமெழச் செயும்
அருந்தமிழ் வாழிய வே!!
ஓல்மிகப் பாட ஒடுக்கமும் ஓட்டிடும்
ஒண்டமிழ் வாழிய வே!!
ஒல்லுநர் போற்றும் ஒருமறை தந்த
ஒளித்தமிழ் வாழிய வே!!
வாழ்வினில் வாய்மை வலுபெறச் செய்யும்
வளர்தமிழ் வாழிய வே!
வாணி மகவாய் வளர்க்கும் இணைய
வழித்தமிழ் வாழிய வே!!
தீழ்ப்பு விரட்டும் திறனதூம் நல்கும
தனித்தமிழ் வாழிய வே!
தீயென யெம்மைத் துணிந்தெழச் செய்திடும்
தேன்தமிழ் வாழிய வே!!
#######
#மன்னைத்_தமிழ்த்தோன்றல்__
_____________________________________________________
@RAVICHANDRAN
தாய்மொழி நாள் பா…
தமிழே அமுதே அழகியவடிவே இல் எனதுயிரே…
கவியே கலையே
கற்பனையெழிலே எனதுறவே…!
கோவில் தேடிய தேவாரம்
குணத்தை பாடிய குறளாகும்..
இனத்தை போற்றிய இயலிசையே இதயத்தை வருடும் தேனிசையே…!
கருத்தை ஆளும் அகப்பாட்டே..
காதலை போற்றிய
புறப்பாட்டே…!
மண்ணை ஆளும் அறிவாக…
மாண்பினை சொல்லும்
நெறியாக…!
காப்பியம் புகழும் காவியமே…
களத்தில் நிகழும்
வீரியமே…!
சோழனும் சேரனும் வீரத்திலே…
பாண்டியன் பல்லவன் காதலிலே..!
நிலத்தில் ஆண்டான்
நான்கினிலே…!
நீரினை வென்றான்
முன்றினிலே…!
மொழியினை காத்தான் ரெண்டினிலே …
முடிவில் நின்றான் தமிழொன்றினிலே…!
வாழிய தமிழே
உயிராக..
வளமும் நலமும்
பயிராக…!
தாய்மொழி நாளே
திருநாளே…
தாயகம் காக்கும்
பெருநாளே…!!
வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்
____________________________________________
@~Senthil
தாய் மொழியில் பெயரை வைத்தால் வாய்மொழிய கூடுமே வழிவழியா வழிமொழிய
விழிப்புணர்வு கூடுமே
நாம் தமிழர் பறைசாற்ற நமக்கு என்ன தலை எழுத்தா.. ஏன்..? தமிழில் பெயர் இல்லை.. எடுத்தியம்புவதே உன் நிலை…
தமிழ் மொழியில் பெயரை வை
பிற மொழியை தள்ளி வை….
வந்தேறிகள் வந்து இங்கு
வடமொழியை புகுத்தியது நன்கு
முறை பார்த்து பேரு வச்சா சாப கேடு…
மரபு பார்த்து பேர வச்சா குலம் விளங்காது
கோள் பார்த்து பெயர் வைத்த கிறுக்கு பிடிக்காம ஆகாது…
ஓரை பார்த்து பேரு வச்சா தாசி நிலை மாறாது
வரலாறு பார்த்து பெயர் வையி பீடை பிடிக்காது
சங்க தமிழில் பெயர் வையி பங்கம் உனக்கு நேராது…
பொங்கும் தமிழில் பெயரை வை பொலிவு என்று மங்காது…
நம் தமிழில் பெயரை வை
நலிவு என்றும் தோன்றாது….
மண்ணின் தரம் பார்த்து தானே
விதைகள் யாவும் விளையக் கூடும்
மொழியின் ஒலியை சுவைத்து தானே
உணர்வுகள் இங்கு விளையக் கூடும்
தழைக்க ஒரு பெயர் அழைக்க ஒரு பெயர் பிழைக்க
ஒரு பெயர்… இனம் என்று ஆகிப்போகும் வைத்த பெயர்
இருக்கும்போது தமிழில் பெயர் வை இறப்புக்கு பின்னும் வழக்கமாகும்
பிறப்பின் சிறப்பு இதுவே ஆகும்
ஒலியற்ற ஒளி கோடு
மொழியற்று இல்லை கையொப்பம்
விழியொற்றி வாசிக்க விளங்கட்டும்
கையொப்பம் தமிழ் என்று ஆகட்டும்
உரையாடல் யாவும் இங்கு தமிழாக
நிறைவாகும் யாவுமிங்கு அமிழ்தாக
உயிராக மெய்யாக இயைந்த மொழி
உயிருள்ளவரை நீயும் வழிமொழி
இவண்
ஆற்காடு குமரன்
9789814114
______________________________________________________________
தமிழ் (குறள்வெண்செந்துறை)
*************************************
உலகம் போற்றும் உன்னத மொழியைக்
கலப்பே இல்லாக் காத்தல் கடமையே.
எங்கும் தமிழை ஏற்றிட வேண்டிச்
சங்கம் செய்து சிகரம் வைப்போமே.
தேனிலும் இனியது தென்தமிழ் என்றும்
நானிலம் போற்றும் நன்நெறி ஆகுமே.
பூவில் வீசும் புதுமணம் போலே
நாவில் தமிழின் நறுமணம் வீசுமே.
எண்ணம் யாவிலும் எங்கள் தமிழை
வண்ணம் போலே வைத்தே வாழ்வோமே.
இன்பம் ஊட்டும் இனிய தமிழால்
துன்பம் வாராத் தூய்மை காப்போமே.
பாரதி போற்றிய பாதையில் தமிழை
பாரினில் எங்கும் பரவிடச் செய்வோமே.
பயின்றிடும் தமிழை பண்புடன் பேணி
உயிரிலும் மேலாய் உயரம் வைப்போமே.
அழகுத் தமிழை அணிந்திடும் கவிகள்
பழம்பெரும் மரபில் பரவிடச் செய்வோமே .
தேன்தமிழ் தன்னைத் தேய்விலாக் காப்போம்
மேன்மை நிலையில் மேதினி புகழவே.
கவிஞர். மன்னனூர் பாரதி
_______________________________________________________
என் முகவரி….
என் மூச்சு….
ஒஎன் நாடி..,யான்
என்
தமிழுக்கு என் தமிழால்……
கொடை……
தமிழிலேயே பேசுங்கள்
சென்றடையும் செவிகளெல்லாம்
செம்மையாகும்…..
தமிழிலேயே எழுதுங்கள்
தரணி வாழும் வரை
வாழும் என் தமிழ் எழுத்துகள்
எழுதியதை வாசிப்பதால்
என்தமிழ் தீஞ்சுவை
தீண்டும் நாவினை
காற்றோடு கலந்த என் தமிழ்
செவிகளை குளிரச் செய்யும்
நீத்தார்கடனிலும்
என் தமிழில்
அரிச்சந்திரன் பாடல்
தமிழனின் பறை….
தலை சாய்ந்த என்னை வழியனுப்பும்…….
தாய்மண் நானுறங்க
இடம் கொடுக்கும்….
மூச்சிலும்
பேச்சிலும்
வீச்சிலும்
தமிழ்……
எழுபிறவியினும்
வணங்குவேனென்
தாய் மொழி
எனைத்தாங்கிய
தாய்மொழிதனையெனில் தாங்கி நீங்காதிருக்க
நீர்த்தாலும்
நீடிப்பேன் தாய்மண்ணில்
விதைந்தே……
புதையும் நானொரு விதையே……….
மழை நீர் சேரும் மண்ணே
மாறிடும் நீரின் குணமே
எம்மொழியாகினும்
செம்மொழியெம்மண்ணில்
சேர்ந்திருக்க…….
அம்மொழியும் மாறிடுமே செம்மொழியாய்
என் தமிழாய்…….
இவண்
ஆற்காடு.குமரன்
9789814114
______________________________________________________
ஓராயிரம் மொழிகளிலே..*
*****************************
ஓராயிரம் மொழிகளிலே
நம் தாய்மொழி தானறிவேன்.. வேறாயிரம் மொழிகளுக்குள்.. நம் தமிழ்போல் கேட்டறியேன்!
ஒருதாயென முன்னுதித்து.. வேர் சொற்களில் உயிர் தரித்து.. பாரெங்கிலும் பரவிநின்ற..
பைந்தமிழ் போலறியேன்.!
(ஓராயரம்…)
இந்த உடலிலே குருதியென.. உள் மூச்சிலும் நீயிருந்தாய்! அந்த வானிலும் பரிதியென..
எம் வாழ்விலும் ஔிகொடுத்தாய்! என்று பிறந்தனள் என்றறியா.. எங்கள் இயக்கத்தில் தமிழிருந்தாய்!
(ஓராயிரம்..)
யாதும் யெம் ஊரென்று நாங்கள் சென்றிடும் போதுயெல்லாம்.. யாவரும் உறவென்று..
கரம் விரிந்திடும் போதுயெல்லாம்.. உயிர் நாளத்தில் நீயிருந்து.. எம்முயிராகியே நின்றாய்!
இனமானத்தில் கலந்திருந்து.. என் தமிழே நீ முன் நடந்தாய்.!
(ஓராயிரம்..)
வே.கல்யாண்குமார்.
____________________________________________________________________
அனைத்துலகத் தமிழ் மாமன்றம்.
தாய் மொழி தமிழ் ஔிரும்.!
*****************************
” ஓங்கும் தமிழ்.. ஔிரும் தமிழ்.. உலகமெங்கும் ஓங்கும்.! ஓங்கும் வரை ஓய்வு ஏது? புலிகள் எங்கு தூங்கும்! தேங்கிநிற்க நீர்நிலையோ? தெள்ளுதமிழ் பாயும்.! தென்னவர்கள் திரண்டெழுந்தால்.. பகைவர் சிரம் சாயும்.!
கட்டி வைத்த இலக்கணமாம் அடித்தளத்தில் எழும்பும்! கட்டிடமாய் விண்ணளந்து காலம் வென்று முழங்கும்.! அட்டியின்றி அகிலமெல்லாம் அன்னைத்தமிழ் எங்கும்.. அன்புதந்து.. இன்பம் தந்து.. ஆர்த்தெழுந்து ஓங்கும்!
மக்கி மடிய எங்கள் நிலம் பாலைவனம் அல்ல.. மார்பில் ஏந்தும் வேலின் வீரம்..! எப்படி யான் சொல்ல.! சங்கத்தமிழ் இலக்கியங்கள் எங்களுக்குக் கண்கள்.! சான்று ஒன்று திருக்குறளே.! மதிவளர்க்கும் திங்கள்.!
முள்வேலிக் குள்ளடைத்தும் முழங்குகிற முரசு! மூன்று தமிழ் காப்பதற்கே தோன்றும் ஒரு அரசு! தொல்லுலகே அந்தநாளில்.. திருப்பு முகம் திருப்பு.! தொப்புல்கொடி உறவுகளே.. காட்டுவாய் உன் இருப்பு.!
செல்லறித்த கூடுஅல்ல.. செந்தமிழர்க் கூட்டம்! செல்லுகின்ற நாடெல்லாம் தமிழை நிலை நாட்டும்.! கூலிகளாம்.. ஏதிலியாம்.. கூறுதடா இவ் வுலகம்.! கொடியுயர்த்து.. படைநடத்து.. பிறக்கும் ஒரு காலம்.!
தாங்கவொரு பிள்ளை உண்டு! தடையுடைத்து நிமிரும்! தன்மானச் சுடரேந்து.. தரணியில் தமிழ் ஔிரும்! எங்கள் தமிழ்.. எங்கும் தமிழ்.. ஓங்கும் எங்கும் ஓங்கும்! இனமானம் காத்திருக்கும்.. இதயம் அதை தாங்கும்!
வே.கல்யாணகுமார். பெங்களூரூ.
______________________________________________________________________________________________
உயிரெழுத்தால் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து!
****************************
அம்மாவும் நீயே.. அவள்உரு தமிழ்த்தாயே!
ஆவியிலே கலந்தாயே..
ஆற்றலைாய்த் தமிழ்த்தாயே!
இமைப் பொழுதும் எனைப்பிரியா இன்னுயிர் தமிழ்த்தாயே!
ஈடுயிணை யற்ற என்தந்தையாய் நின்று தாயுமானத் தமிழ்த்தாயே.!
உணர்வாகினாயே
உணரச்சியில் பாவே தமிழ்த்தாயே!
ஊரெல்லாம உறவாகி உடன்வந்து தொடர்கின்ற தமிழ்த்தாயே!
எப்பொழுதும் எமைப்பிரியா இனியநிழல் தமிழ்த்தாயே!
ஏற்றிவைத்து அழகுபார்க்கும் ஏணியான தமிழ்த்தாயே!
ஐயம் யெழும் போதெல்லாம் ஆழ்மனதுள் விடைதருவாய் தமிழ்த்தாயே!
ஒருபிறப்பு போதாதே உனக்கு நான் மகனாக தமிழ்த்தாயே!
ஓருயிரில் ஆருயிராய் இருப்பவளே என் தமிழ்த்தாயே!
ஓளடதமாய் மாமருந்தாய் அருகிருந்து காப்பவளே தமிழ்த்தாயே!
அஃதெனக்கு உயிர்வளர்த்து அன்றாடம் பாவுரைத்த வியப்பே தமிழ்த்தாயே!
வே.கல்யாணகுமார்.
_______________________________________________________________________
சொல்லித் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை
உறவுத்தமிழ் மொழியை
அள்ளி தெளிக்கின்றேன்
வெள்ளி முளைத்திடவே…..
உறவு மொழி தனிலே சந்தம் தான்
அமைக்க எந்த மொழியும் ஈடு இணையில்லை….
தாய் மொழியே தலைப்பிள்ளை….
அறிவிப்பு பலகை எதற்கு தமிழ் அறிவு நிறைந்தவன் அடவி கிடக்க
உயிரின் உணர்வாய் நிரவி கிடக்க
உறவு மொழியை கொண்டாடு வந்த மொழியும் தூண்டாது… தாய்மொழி
பண்போடு வாய்மொழி அன்போடு
வானின் மழைக்கும் மண்ணின் மொழிக்கும் ஈடு இணை ஏது
கருவிற்க் குழவிக்கும் கல்லறைக்குழி சவத்திற்கும் திரிபளவு நிலையேது
எந்தன் மொழியும் உயிருள்ளடக்கம்
உணர்வின் தொடக்கம் உரிமையின் முழக்கம்…
அடக்கிட வெடிக்கும்…
வழி வழி வாய்மொழி நீ மொழி
வாழ்வாங்கு வளப்படும் நம் மொழி
குறில் நெடில் கொண்டதுன் குரலொலி…
மாத்திரையுடன் யாத்திரை நம் தமிழ் மொழி….
நா வன்மை பயத்திடும் நற்றமிழ்
நாளும் உண்மை நவிலும் நற்றமிழ்
வாழும் வாழவைக்கும் பைந்தமிழ்
வாதை நீக்கிடும் நாளும் தமிழ்….
தமிழிலே உரையாடு தன் நிறைவோடு…
தாய் மொழியிலேயே உரையாடு தரித்த
வயிற்றுக்கு நன்றியோடு…
மரித்த பின் சுமக்கும் மண்ணின் மரபோடு…
“வாழ்க தமிழ்” என்று வாழ்த்த வயதில்லை வயிற்றுப்
பிள்ளை நான் வணங்கி பணிகிறேன் என் தாய் தமிழை…
இவண்
ஆற்காடு குமரன்
9789814114
______________________________________________________________________________
தாய் மொழியை மறக்கலாமா.?*
*******************************
லாமா.. லாமா.. லாமா..
தமிழன் தமிழை மறக்க லாமா?
வாலு மொழி இந்திக்குத் தான்
வால்பிடிக்கப் போறவனே..
ஆங்கிலத்தைத் தலையில் வைத்து
ஆடலாமா.?
அன்னை தந்த தாய் மொழியை
மறக்கலாமா.?
பாதையிலே தமிழுமில்லே..
பெயரினிலேத் தமிழுமில்லே..
தொடக்கத்திலே பிறந்த மொழியை
மறக்கலாமா.? இவன்
கழிவிலே விழுந்தது போல்
இருக்கலாமா?
கற்பிக்கின்ற பள்ளியிலும்..
வழக்காடுமன்ற படிகளிலும்..
தேடித்தேடிப் பார்த்துப்புட்டேன்
தமிழுமில்லையே!
தொடக்கசிவன் கோவிலிலும்
அரங்கநாதன் வாயிலிலும்
கருவறையில் உயிர்த்தமிழில்
வழிபாடுயில்லையே!
வட்டெழுத்தாய் கல்லெழுத்தாய்
வளர்ந்த பனை சொல்லெழுத்தாய்
ஓலையிலே இருந்ததமிழைக்
காணவில்லையே!
கணினியிலே கலந்தும் தமிழைப்
பேச ஆளுமில்லையே!
எதிர்காலத் தலைமுறைக்கு
எழுதிவைத்த இலக்கணத்தை
எடுத்துச்சொல்லத் தமிழருக்கு
நேரமில்லையே.!
இலகுதமிழ் அவனுக் கொன்றும் பாரமில்லையே!
வே.கல்யாண்குமார்.




