
நேரிசை ஆசிரியப்பா தலைப்பு:- கல்வி!
நடுவர் : கி . மணிவாசகன்
“பாவலர் ச. அரசமதி”
உற்றநல் உறவும் ஊரும் போற்ற
கற்ற கல்வி கற்பென இயம்பி
பற்றியே ஒழுகப் பாரும் போற்றும்
தொற்றும் ஒல்லாமை தொற்றா வண்ணம்
வற்றிடாப் புகழும் வானம்
ஏற்றிடும் வளமை ஏட்டின் மாண்பே!
நடுவரின் மதிப்பாய்வு ..
மிகச் சிறப்பு 95 விழுக்காடு ஆசிரியத்தளைகள் வந்துள்ளன. ஒல்லாமை தொற்றா காய் முன் நேர் வெண்சீர் வெண்டளை வந்துள்ளது. இது தவறல்ல. வாழ்த்துகள் . 🌹
வற்றிடா
ஏற்றிடும்
முதல் அடி குற்றெழுத்திலும் இரண்டாம் அடி நெட்டெழுத்திலும் உள்ளது.
இதில் இரண்டாவது அடியில் மோனை ஏகாரத்தில் தொடங்குகிறது. குற்றெழுத்தில் தான் தொடங்க வேண்டும்.
“க.தமிழ்ச்செல்வி”
கலைமகள் எனவொரு தமிழ்க் கடவுள்!
நிலையிலா உலகில் கல்வி தானே ,
நிலையான செல்வம் என்றுணர்ந்து கற்பின்,
நற்றமிழைக் கற்று அவ்வழி நடப்பின்,
மண்ணுளோர் எல்லமாண்புறுவர்,
அதனால் கற்க வாரும் பாரோரே!
நடுவரின் மதிப்பாய்வு ..
உங்கள் சொல்லியங்களில் மோனை வரவில்லை. எதுகையும் முதலிரண்டு சொல்லியங்கள் தவிர்த்து மற்ற சொல்லியங்களில் வரவில்லை. ஆசிரியத் தளைகள் 68 விழுக்காடு, 27 விழுக்காடு வெண்டளை மற்றும் 5 விழுக்காடு கலித்தளையும் வந்துள்ளது. ஆக அடுத்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள் அம்மா ..
“பாவலர் அர. செல்வமணி”
பசியும் வறுமையும் பாழ்சமய வெறியும்
புசிப்பும் சுரண்டலும் பூசலும் போக்கும்
வேசற வழித்துள வெம்மையும் அகற்றும்
இசைபட வாழ்ந்திட இடையறா வழிசெயும்
கசடறக் கற்கும் கல்வி
வீசும் நன்மைகள் விசும்பினும் பெரிதே!
நடுவரின் மதிப்பாய்வு ..
வேசற இசைபட மூன்றாம் அடியில் முதலெழுத்து நெட்டெழுத்திலும் நான்காம் அடியில் குற்றெழுத்திலும் உள்ளது. ஆசிரியத்தளைகள் 52 விழுக்காடு வந்துள்ளது.48 விழுக்காடு வெண்டளைகள் வந்துள்ளது. *பசியும் வறுமையும்* நேர் முன் நிரை *வறுமையும் பாழ்மத* நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளை இவ்வாறு தளைகள் கலந்து வந்துள்ளது.
”பாவலர் இ. சூசை அருள் ராச்”
கருவில் தொடங்கி கல்லறை வரையில்
கண்களின் காட்சியில் கற்பதும் கல்வி
தாலாட்டுப் பாடலில் தொட்டிலில் கல்வி
தோழியர் உரையில் துலங்கிடும் கல்வி
புலன்களில் யாண்டும் புகுந்திடும்
புவியின் புரிதல்கள் புதிரவிழ்க் கல்வியே
நடுவரின் மதிப்பாய்வு ..
இவர் பாடலில் 32 விழுக்காடு ஆசிரியத்தளையும்,64 விழுக்காடு வெண்டளையும்,5 விழுக்காடு கலித்தளையும் வந்துள்ளது. ஆசிரியப்பாவில் ஆசிரியத்தளைகளே வரவேண்டும். பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும். ஓரிரு இடங்களில் காய்ச்சீர்கள் வரலாம். வெண்பாவில் மட்டுமே வெண்டளைகள் வரவேண்டும். *கருவில் தொடங்கி* இதில் நேர் முன் நிரை வருகிறது அதாவது இயற்சீர் வெண்டளை. அடுத்த சீரில் *தொடங்கி கல்லறை* நேர் முன் நேர் நேரொன்றாசிரியத்தளை.இது சரி அடுத்து *கல்லறை வரையில்* நிரை முன் நிரை நிரையொன்றாசிரியத்தளை இது சரி.அடுத்து கண்களின் காட்சியில் நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளை வருகிறது. *காட்சியில் கற்பதும்* நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளை வருகிறது.இவ்வாறு பெரும்பாலும் தளைகள் இயற்சீர் வெண்டளைகளாகவே வருகிறது. ஆசிரியத்தளை குறைந்தது 70விழுக்காடு வேண்டும்.
“பாவலர் பொ. கிருபாவதி”
கல்வியே என்றும் கலங்கரை விளக்காகும் நல்லெண் ணங்கள் நம்மனதில் வளர்ந்திடவே பல்துறை கல்வியைப் படித்தே நாமும் பல்தேச மெங்கும் பறந்தே உயர்ந்திடலாம் கல்வியை நாமும் கற்றிட்டால் காலம் முழுவதும் கவலையின்றி வாழ்ந்திடலாம்.
நடுவரின் மதிப்பாய்வு …
*கல்வியே என்றும்* நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளை ஆகும். *கலங்கரை விளக்காகும்* நிரை முன் நிரை. நிரையொன்றாசிரியத் தளை. *பல்துறை கல்வியை* நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளை.இவ்வாறு நிறைய சீர்கள் வெண்டளைகளாக வந்துள்ளது. ஆசிரியத்தளைகள் 27 விழுக்காடு வெண்டளைகள் 73 விழுக்காடு உள்ளது. ஆசிரியத் தளைக்கு குறைந்தது 70 விழுக்காடு ஆசிரியத்தளைகள் வேண்டும். மேலும் ஐந்தாவது வரியில் *கல்வியை* ஆறாம் வரியில் *காலம்* அடியெதுகை வரவில்லை.
“பாவலர் ஒப்புரவாளன் “
வாழும் நாட்டின் வாய்ப்புக் கேற்பக் கூழுங் குடியும் ஓங்கிட உழைக்கும் ஈழத் தமிழரும் நிலத்தில் நிலைக்க சூழும் பேரினச் சூழ்ச்சியை ஒழிக்கும் கல்வியை உலகில் கற்று வல்லமை கொள்வீர் விடுதலை பெறவே!
நடுவரின் மதிப்பாய்வு …
இதில் 68 விழுக்காடு ஆசிரியத்தளைகளும்,32 விழுக்காடு வெண்டளைகளும் பயின்று வந்துள்ளது. மேலும் ,
*கூழுங் _ ஓங்கிட*
*ஈழத் _ நிலத்தில்* பொழிப்பு மோனை வரவில்லை.
“பாவலர் சேயோன்”
குறிஞ்சித் தலைவன் கைகளில் உள்ளதென்
அறிந்த தென்வேல் அறந்தனைக் காக்க
அறிவு கூரியபின் அகன்று அதனின்
பெறிதன் ஆழ்ந்த பட்டறிவு ஆனதே
வேல்கண் உரைத்த வரைபடம்
கல் தமிழைக் கசடற சீருடனே!
நடுவரின் மதிப்பாய்வு …
ஆசிரியத்தளைகள் 27 விழுக்காடும் வெண்டளைகள் 68 விழுக்காடும், கலித்தளை 5 விழுக்காடும் வந்துள்ளன. அறிந்த *த்* தென்வேல் ஒற்று மிகாது.கசடற ச் ஒற்று மிகாது. கல் என்பது ஓரசைச் சீர் ஆசிரியப்பாவில் ஓரசைச் சீர்கள் வரக்கூடாது. ஈரசைச் சீர்கள் காய்ச்சீர்கள் மட்டுமே வர வேண்டும்.
நன்றி ..
வாழ்க தமிழ் ..!




