
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௰௨. (அச்சில் உள்ளவாறு.)
நடுவுநிலைமை.
குறள் – ௱௰௧.
“தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.”
ஒன்று = ஒப்பற்றது.
பகுதி = துறைகள்.
பால் = முறைமை.
“துறைகளின்பால் முறைமை தவறாது ஒழுகப்பெறும் ஒப்பற்ற தகுதியென்பதே நன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘எனவொன்று’ எனப்புணர்த்தினால் எண்ணுப்பொருள் வெளிப்படுமேயன்றி ‘ஒப்பற்றது’ எனும் பொருள் வெளிப்படாது. ‘ஒன்று’ என்பது தகுதிக்கு முன்நின்று தகுதியைச்சிறப்பிக்கும்.
‘பகுதியால்’ என்பது மூன்றாம்வேற்றுமையின் ஆலுருபுபெற்றசொல். ‘பால்’ என்பது பெயர்ச்சொல். மூன்றாம்வேற்றுமை பெயர்ச்சொல்லுடன் புணராது.
‘பெறின்’ என்பது இன்றியமையாமையை உணர்த்தும் தகுதிச்சொல். இஃது இருந்தால் இதனைப்பெறலாம் என்பதாகும்.
செம்மைவடிவம் —
“தகுதி யெனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட் டொழுகப் பெறின்.”
குறள் – ௱௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.”
எச்சம் = கால்வழியினர்.
ஏமாப்பு = அரண்.
‘செப்பமுடையவனாக்கம்’ என்பது நெடுந்தொடரெழுவாய். ‘சிதைவின்றி’ என்பது வினையெச்சம். வேற்றுமையுருபேற்காத திரிபில்பெயர்ச்சொல்லாம் எழுவாய் எதனுடனும் புணராது.
‘எச்சம்’ என்பது பெயர்ச்சொல். ‘இன்றி’ என்பது வினையெச்சம். வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எச்சத்திற்கு’ எனும் நான்காம்வேற்றுமையுருபேற்ற பெயர்ச்சொல். நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து தனது பொருளை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களுடன் மட்டுமே புணரும். அரண் எனும் பொருள்தரும் ‘ஏமாப்பு’ எனுஞ்சொல் வினைச்சொல் துணையின்றி தனது பொருளை வெளிப்படுத்தும் வேண்டாப்பெயர்ச்சொல்லாகும்.
“செப்பமுடையவனது ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பாகும் தன்மைத்து” எனவிரித்து அவ்வாறே ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செப்ப முடையவ னாக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு* ஏமாப் புடைத்து.”
*குற்றியலுகரம் குவ்வானது மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.
குறள் – ௱௰௩.
“நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.”
இகந்து = தவறி.
‘நன்றே தரினும் நடுவு இகந்து ஆ(கு)ம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்’ எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘ஆ(கு)ம் ஆக்கம்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சம் புணராது.
‘தரினும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆக்கத்தை’ எனும் இரண்டாம்வேற்றுமையுருபேற்றசொல் ‘அன்று’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
‘அன்றே’ (அப்பொழுதே) என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.”
குறள் – ௱௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும்.”
‘என்பது’ என்றயிடத்தில் சொல்லவரும் கருத்தின் அடுத்தபடிநிலை தொடங்குவதால் விட்டிசை நேரும். விட்டிசைக்குமிடங்கள் புணரா. மேலும் ‘அவர்’ எனும் சுட்டுச்சொல் எதனுடனும் புணராது.
இடைச்சொற்களாம் வேற்றுமைவருபுகள் தனித்து நிற்கும் ஆற்றலின்றி பெயரையோ வினையையோ இடனாக கொண்டு சார்புப்பொருளைத்தரும். அதன்பின் தன்பொருள் மயக்குமாறு அவ்விடைச்சொல் புணராது. ‘எச்சத்தால்’ என்பதில் வரும் ஆலுருபு புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தக்கார் தகவில ரென்பது* அவரவ ரெச்சத்தால் காணப் படும்.”
*குற்றியலுகரம் துவ்வானது மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.
குறள் – ௱௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.”
“(ஒருவர்க்கு) கேடும் பெருக்கமும் இல்லாததல்ல . நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க்கு அணி” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்காண்க.
எண்ணும்மைகள் தம்முள் தாம் புணரும்; பிறவற்றுடன் புணராது. ‘கேடும் பெருக்கமும்’ என்பது எண்ணும்மை.
செம்மைவடிவம் —
“கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.”
குறள் – ௱௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
நடுவொரீஇ யல்ல செயின்.”
ஒரீஇ = நீங்கி.
அல்ல = செய்யத்தகாதவை.
“தன்னுடைய நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி அல்லவை செயின் யான் கெடுவல் என்பதை அறிக” எனவிரித்து இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘நெஞ்சம்’ என்பது தன்னையறிவிக்கும் இயல்புப்பொருள்தரும் ஒரு பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் ஒரு பெயர்ச்சொல் எதனுடனும் புணராது. இயல்புப்பொருள்தரும் ஒரு பெயர்ச்சொல் வேற்றுமைவுருபு முதலானவற்றை ஏற்று பொருள்வேறுபடுமேயன்றி ஈறினையிழந்து குறைச்சொல்லாகாது.
‘அல்லவை’ எனும் பொருள்தரும் ‘அல்ல’ என்பது பெயர்ச்சொல். ‘ஒரீஇ’ என்பது வினையெச்சம். வினையெச்சம் பெயர்ச்சொல்லுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.”
குறள் – ௱௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.”
நன்றி = அறம்.
“நடுவுநிலைமை எனும் அறத்தின்கண் தங்கியானது தாழ்வினை உலகம் கெடுவாக வையாது“ எனவிரித்து இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க .
‘உலகநடுவாக’ எனும் புணர்ச்சியின்பொருள் ‘உலகத்தின் மையம்’ என்பதாக மயங்கும். அவ்விடம் புணர்ச்சி நிகழாது.
கெடுவாக வையாது உலகம் என்பதாகவோ உலகம் கெடுவாக வையாது என்பதாகவோ கொண்டுகூட்டி பொருள்காண்க. இருவழியில் உலகம் என்பதன் மவ்வீறு நீங்காது.
‘நன்றிக்கண்’ என்பது ‘நன்றியின்கண்’ எனவிரியும். பெயருடனும் வினையுடனும் புணர்ந்த இடைச்சொற்களாம் வேற்றுமைவுருப்புகள் தனிச்சொல்போல் விகாரப்புணர்ச்சியைப்பெறா; பெறின் அவை தம்பொருளில் மயங்கும்.
செம்மைவடிவம் —
“கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் றாழ்வு.”
குறள் – ௱௰௮. (அச்சில் உள்ளவாறு.)
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.”
‘தூக்கும் கோல்’ என்பதில் ‘தூக்கும்’ என்பது ‘செய்யும்’ எனும் வாய்பாட்டு பெயரெச்சம். பெயரெச்சம் பெயரை முடிக்குஞ்சொல்லாக ஏற்குமேயன்றி புணராது.
‘போல்’ என்பது உவமவுருபு. உவமவுருபு எதனுடனும் புணராது.
‘அமைந்தொருபால்’ என்பதில் அமைந்து என்றவிடத்து ஒரு கருத்து முடிந்து அடுத்தகருத்து தொடங்குகிறது. இதனைப்பிரித்துணர அவ்விடத்து விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்களில் புணர்ச்சி நிகழா.
‘பால்’ என்பது ஏழாம்வேற்றுமையவுருபு. இடைச்சொற்களாம் வேற்றுமைவுருபுகள் தனிச்சொல்போல் விகாரப்புணர்ச்சி பெற்றா; பெறின் பொருளில் மயங்கும்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து*ஒருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”
*குற்றியலுகரம் துவ்வானது மெய்யெழுத்துபோல் அரைமாத்திரைபெறும்; அலகு பெறாது.
குறள் – ௱௰௯. (அச்சில் உள்ளவாறு.)
“சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வுட்கோட்ட மின்மை பெறின்.”
செப்பம் = செவ்விது.
கோட்டம் = வரைதல் (நெறிதவறல்).
‘ஒருதலையா’ என்பது ‘ஒருதலையாக’ என்பதன் கடையெழுத்து குறைந்த சொல். இதனை உணர அவ்விடத்து விட்டிசைக்க வேண்டும். விட்டிசைக்கும் இடங்களில் புணர்ச்சி நிகழாது.
“சொல்லில் கோட்டம் இன்மை நடுவுநிலைமை (செப்பம்). மனத்தின்கண் ஒருதலையாக சாராமை பெறின் அது நிகழும்” எனவிரித்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க. ‘நிகழும்’ என்பது சொல்லெச்சம்.
செம்மைவடிவம் —
“சொற்கோட்ட மில்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்ட மின்மை பெறின்.”
குறள் – ௱௨௦. (அச்சில் உள்ளவாறு.)
“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தமபோற் செயின்.”
‘பேணி’ என்பது வினையெச்சம். ‘பிற’ என்பது பெயர்ச்சொல். வினையெச்சம் பெயருடன் புணராது.
‘போல்’ எனும் உவமவுருபு எதனுடனும் புணராது.
‘பிறவும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘தம்’ என்பது மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொற்கள் வருமொழியாகி புணர்ந்தால் இடைச்சொற்களைப்போல் மயங்கும்.
“பிறவும் தமபோல் பேணிச்செயின் வாணிகம் செய்வார்க்கு வாணிகமாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
தம்+அ → தம. ‘அ‘ என்பது ஆறாம்வேற்றுமையின் பன்மைவுருபு.
செம்மைவடிவம் —
“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தமபோல் செயின்.”
எழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.




