குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — இல்லறவியல். தலைப்பு - ௨௨. ஒப்புரவறிதல்.

குறள் – ௨௱௰௧. (அச்சில் உள்ளவாறு.)
“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.“
கைம்மாறு = மறுபயன்.
கடப்பாடு = கடமை.
மாட்டு = அதனிடத்து.
மாரி = மழை.
கொல் = அசைச்சொல்.
ஓ = வினாவெழுத்து.
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு உலகு என்னாற்றுங்கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“மறுபயன்கருதாது கடமையைக்கருதி பொழியும் மழையின்மாட்டு உலகு என்ன கைம்மாறு செய்யும்” என்பதாம்.
‘மாட்டு’ என்பது ‘அதனிடத்து’ எனும் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்த சொல்லுருபு. இந்த வேற்றுமைச்சொல்லுருபு ‘மாரி’ என்னும் பெயர்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்தது. இச்சொல்லுருபு மீளவும் வினாச்சொல்லுடன் புணராது; புணரின் சொல்லுருபின் தன்மை கெடும்.
‘ஓகார வினாவெழுத்து ‘உலகு’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு*
என்னாற்றுங் கொல்லோ உலகு.”
*குற்றியலுகரமாம் டுகரம் அலகுபெறாது.
குறள் – ௨௱௰௨. (அச்சில் உள்ளவாறு.)
“தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
தாள் = முயற்சி.
தக்கார் = தகுந்தவர்.
வேளாண்மை = உதவுதல், ஒப்புரவு.
தந்த = ஈட்டிய.
‘எல்லாம்’ எனும் சொல் ‘பொருள்’ என்பதைத்தழுவிப்புணர்ந்தது. ‘தக்கார்க்கு’ என்பதை ‘எல்லாம்’ எனும் சொல் தழுவாது. ஒரு புணர்மொழியை புணர்ந்தநிலையிலேயே பொருள் கொள்ளவேண்டும். ‘பொருளெல்லாந்தக்கார்க்கு’ என்பது தழுவாப்புணர்ச்சி.
புணர்த்துமுன் புணர்த்துவதற்கான இன்றியமையாமையைக்காணவேண்டும். பொருளீட்டல் ஒரு நிலை. அதனைப்பயன்படுத்தல் அடுத்த நிலை. ‘எல்லாம்’ எனும் சொல் இந்த நிலைமாற்றத்தை அறிவிக்கின்றது. இவ்வாறான இடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
மேலும் ‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
குறள் – ௨௱௰௩. (அச்சில் உள்ளவாறு.)
“புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.”
புத்தேளுலகத்தும் = தேவருலகத்தும்.
ஈண்டும் = இவ்வுலகத்தும்.
ஒப்புரவு = உலகநடையினை அறிந்து செய்தல்.
எண்ணும்மை தம்முள்தாம் புணருமென்றாலும் பொருள் திரியுமிடத்து புணராது பிரிந்தே நிற்கும். எனவே ‘புத்தேளுலகத்தும் ஈண்டும்’ என்பதே செம்மை.
“ஒப்புரவின் நல்ல பிற புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அரிதே’ என்பது தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘ஒப்புரவினல்ல பிற’ எனும் புணர்ச்சியில் ‘இன்’ எனும் ஐந்தாம்வேற்றுமையுருபு ஒப்புப்பொருளில்வந்து ‘ஒப்புரவு’ என்னும் பெயரின் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்தது. இன்னுருபு மீண்டும் புணராது; ‘நல்ல’ என்னும் குறிப்புவினைமுற்றுக்கு முன்னொட்டாகாது.
செம்மைவடிவம் —
“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.”
குறள் – ௨௱௰௪. (அச்சில் உள்ளவாறு.)
“ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.”
ஒத்தது = உலகநடையுடன் பொருந்துவது.
மற்றையான் = மாறான பிறர்.
“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்” என்றவாறு ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௨௱௰௫. (அச்சில் உள்ளவாறு.)
“ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு.”
ஊருணி = ஊர்மக்கள் அருந்தும் பொதுநீர்க்குளம்.
அற்றே = அது போன்றதே.
அவாம் = விரும்பி செய்தல்.
திரு = செல்வம்.
‘உலகினை அவாம் பேரறிவாளன் திரு ஊருணி நீர் நிறைந்தற்றே’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘அற்றே’ என்பது தேற்றேகாரம்பெற்ற உவமச்சொல். இடைச்சொற்களாம் உவமச்சொற்கள் ஒரு புணர்ச்சியுடன் தமது பணியை முடிக்கும். மேலும் தேற்றேகாரம் எதனுடனும் புணராது விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா.
‘பேரறிவாளனது திரு’ என்பதன் தொகைநிலை ‘பேரறிவாளன்திரு’ என்பதாகும்.
செம்மைவடிவம் —
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.”
குறள் – ௨௱௰௬. (அச்சில் உள்ளவாறு.)
“பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்.”
அற்று = போல.
ஆல் = அசைச்சொல்.
நயன்* = அறம்.
*உலகநீதிகள் பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே நயன் என்றாரென்பது பரிமேலழகனாரின் விளக்கம்.
நயனுடையான் = ஒப்புரவாளன் (அதிகாரமுறையால் பெறப்பட்டது).
படின் = சேரின்.
‘செல்வம் நயனுடையான்கட்படின் பயன்மரம் உள்ளூரில் பழுத்தற்று’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
‘பயன்மரம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘செல்வம்’ என்பது இயல்புப்பொருள்தரும் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆல்’ என்னும் அசைச்சொல் முதற்புணர்ச்சியுடன் தன்பணியை முடிக்கும். மற்றுமொருமுறை புணராது; புணர்ந்தால் அசைச்சொல்லாம்தன்மை கெடும்.
செம்மைவடிவம் —
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்.”
குறள் – ௨௱௰௭. (அச்சில் உள்ளவாறு.)
“மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.”
தப்பா மரம் = தப்புதலாவது ஒரு மரம் வெட்டுதற்கரிய இடங்களில் நிற்றல், கண்பார்வைக்கு மறைந்து நிற்றல், வேண்டிய காலத்தில் வளராதிருத்தலென்பது பரிமேலழகனாரின் விளக்கம்.
அற்று = போல.
ஆல் = அசைச்சொல்.
தகை = அருள்.
படின் = சேரின்.
‘செல்வம் பெருந்தகையான்கட்படின் (அச்செல்வம்) மருந்தாகி தப்பா மரத்தற்று’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
‘தப்பா’ என்னும் ஈறுகெட்டயெதிர்மறைப்பெயரெச்சம் ‘மரம்’ என்னும் பெயர்ச்சொல்லைத்தழுவும். இது ‘ஆகி’ என்னும் வினையெச்சத்துடன் புணர்வது தழுவாப்புணர்ச்சி. தழுவாச்சொற்கள் புணரா.
‘ஆல்’ என்னும் அசைச்சொல் முதற்புணர்ச்சியுடன் தன்பணியை முடிக்கும். மற்றுமொருமுறை புணராது.
செம்மைவடிவம் —
“மருந்தாகி தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.”
குறள் – ௨௱௰௮. (அச்சில் உள்ளவாறு.)
“இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.”
ஒல்கார் = தளரார்.
கடன் = கடமை.
காட்சி = அறிவு.
“கடனறி காட்சியவர் இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘தாம் செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவுடையார் வளங்குன்றிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத்தளரார்’ என்பதாம்.
‘பருவத்தும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.”
குறள் – ௨௱௰௯. (அச்சில் உள்ளவாறு.)
“நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு.”
நயனுடையான் = ஒப்புரவாளன்.
நல்கூர்தல் = வறுமையடைதல்.
நல்கூர்ந்தான் = வறுமையாளன்.
செயு = செய்யும்.
நீர = தகுதியுடைய.
அமைதல் = நேர்தல்.
ஆறு = நிலை.
‘நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செய்யும்நீர செய்கலாவாறு அமைகல்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஒப்புரவாளன் வறுமையாளனாதல் செய்யத்தகுந்த ஒப்புரவுகளைச்செய்ய இயலாதநிலை நேர்தல்’ என்பதாம்.
‘நயனுடையான்’ என்பது திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு.”
குறள் – ௨௱௨௰. (அச்சில் உள்ளவாறு.)
“ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.”
கோள் = கொள்.
‘ஒப்பரவினால் வரும் கேடெனின் அக்கேடு ஒருவன் தன்னை விற்றும் கொள்ளும் தகுதியுடையது’ என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.




