உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் என்பதன் பயன்பாடுகளை அறிக !
சுவாசம்/ சுவாசித்தல் போன்றவை வடமொழிச் சொற்கள் .

( சுவாசம்/ சுவாசித்தல் ) போன்ற பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து.. உயிர்ப்பு , மூச்சு , உயிர்த்தல் , மூச்சுவிடுதல் போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவற்கான எளிய வழிகள்.
சுவாசம் , சுவாசித்தல் என்ற சொற்களை நாம் அன்றாட வாழ்வியலில் பயன்படுத்துகின்றோம் . சுவாசம் என்பதும் சுவாசித்தல் என்பதும் தமிழ்ச்சொற்கள் அன்று .
அப்படியானால் இதற்கான தமிழ்ச்சொற்கள் யாதாகும் ?
“சுவாசம்” என்றால் உயிர்ப்பு , மூச்சு என்றும்
“சுவாசித்தல்” என்றால் உயிர்த்தல் என்றும் தமிழில் சொல்லலாம் .
மூச்சுவிடுதல் ( சுவாசித்தல் )
மூச்சுவிடுதல் என்ற இச்சொல்லானது மிகவும் பொருத்தமான ஒரு சொல்லாக இருக்கிறது .ஏனெனில் , மூச்சு விடுதல் என்பதில் இரண்டு செயற்பாடுகள் நடக்கின்றன .
௧ . மூக்கின் வழியாக மூச்சை உடலினுள் விடுதல் .
௨ . மூக்கின் வழியாக மூச்சை உடலில் இருந்து வெளியில் விடுதல் .
இரண்டுமே மூச்சுவிடுதல் என்ற தொழிற்பெயரில் அடங்கிவிடுகிறது . அதனால் மூச்சுவிடுதல் என்பதும் ஒரு பொருத்தமான சொல்லே.
இத்தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் இல்லை என்பதனால் பேசுவது எளிமையாக இருக்காது . ஆனாலும் நாம் , தமிழைத்தானே பேச வேண்டும் . அது தானே மொழி ஒன்றுக்கு நாம் ஆற்றும் கடமை .
வள்ளுவனார் குறளில் இங்ஙனம் இயம்பியதையும் காண்க:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
பொருள்:
நம் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் அழிக்கப்படுவார் என்பது திண்ணம்.
இக்குறள் உங்களை ஓரளவிற்கு தமிழ் நோக்கி நகர்த்தியிருக்கும் என்பதில் ஐயமில.
இப்போது நாங்கள் சுவாசம் என்ற சொல்வரும் இடங்களில் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தினால் சொல்லியங்கள் எவ்வாறு அமைகிறது என்று பார்க்கலாம் .
சுவாசம் சரியாக இருப்பதனால், அவள் உயிருக்கு இடர் ஏதும் இல்லை என்று மருத்துவர் கூறினார் .
இப்போது இச் சொற்றொடரைத் தமிழில் எழுதிப் பார்ப்போம் .
மூச்சு சரியாக இருப்பதனால் ..
உயிர்ப்பு சரியாக இருப்பதனால் …
இச் சொல்லியத்தில் சொல்லவந்த கருத்தில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா . உன்னித்துப்பாருங்கள். இதே போல, சுவாசித்தல் என்ற சொல்லிற்கான பயன்பாட்டைக் காண்க :
தூய்மையான காற்றைச் சுவாசித்தல் வேண்டும் .
இச்சொல்லியத்தைத் தமிழில் எப்படி எழுதுவது .
தூய்மையான காற்றை உயிர்த்தல் வேண்டும் .
தூய்மையான காற்றை முச்சுவிடுதல் வேண்டும் .
இச்சொல்லில் ஏதாவது கருத்துப் பிறழ்தல் இருக்கின்றதா ?
உயிர்த்தல் என்றால் உயிர் பிழைக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது . மூச்சுவிடுதல் என்பதும் உயிர்ப்போடு இருப்பதை உறுதிசெய்யும் ஒரு செயலே .
வேற்று மொழிச் சொல்லாடல்களை மொழிபெயர்ப்பதை விடுத்துத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எம்மால் தவறின்றிப் பேச , எழுத முடியும் .
எடுத்துக்காட்டாகச் சில சொல்லியங்கள்.
- எனக்கு மூச்சுவிடுவது எளிதாக இல்லை .
- எனது மூச்சில் நுண்மிகள் கலந்திருப்பதாக மருத்துவர் கூறினார்.
- மூச்சுப் பயிற்சி செய்வது உடல் நலத்திற்குச் சிறப்பானது .
- தூய்மையான காற்றை உள்ளெடுக்க வேண்டும் என்றால் சுற்றுச் சூழலை சரியாகப் பாதுகாக்க வேண்டும் .
- மூச்சுவிடும் போதுதான் உயிரிகள் உயிர்ப்போடு இருப்பதை அறிந்து கொள்ள முடியும் .
- உயிர்ப்புத் தடையை உணரில் உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும் .
- மூச்சை மூக்கின் வழியாக உள்ளெடுத்து அதன் வழியே வெளிவிடுவது தான் சிறப்பு .
- குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் , மூச்சிரைப்பு , மூச்சடைப்பு போன்றன இருந்தால் முறையான மருத்துவம் மேற்கொள்ளல் கட்டாயமானது .
- எல்லா வகையான உயிரிகளும் ஏதோவோர் உறுப்பினூடாக உயிர்க்கின்றது/மூச்சுவிடுகின்றது.
- மூச்சுச் சிக்கலைத் தவிர்த்தால் உடலில் உள்ள பலநோய்கள் காணாமல் போய்விடும் .
இவற்றோடு இன்னும் சில முறைகளைக் கையாளலாம் ..குறிப்பிட்ட செயலைச் சொல்லும் போது குறிப்புடனே சொல்லலாம் ..
- மூச்சை வெளியே விடுங்கள்..
- மூச்சை உள்ளே இழுங்கள் ..
- வாயை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள் ..
இப்படியாகத் தமிழைத் தமிழில் பேசி பழகவேண்டும் . வேற்றுமொழிச் சொற்கள் என்பது அவர்கள் மொழிக்கான பயன்பாடே அன்றி அச்சொற்களை நாம் மொழிபெயர்த்தால் எம்மொழிப் பயன்பாடு சிதைந்து போய்விடும் . ஒருபோதும் மொழிபெயர்ப்புச் செய்யாது உரையாடி எழுதிப் பழகுங்கள் . தமிழைத் தமிழில் தேடி , தமிழ் மூலம் விளக்கம் சொல்லி அதனூடே தெளிவுறச் செய்வதால் எம்மொழியை நாம் எளிமையாகப் பேச முடியும்.
இதையும் தாண்டி சில சொற்கள் உண்டு .
முகர்தல் , நுகர்தல் , மோத்தல் , உய்த்தல் போன்ற சொற்களுக்கான தனித்தனிப் பொருள்களையும் நாம் இன்னொரு பதிவில் காணலாம் .
தமிழ் பேசு தமிழா . எம் மொழியை நாமே கொலை செய்தல் தகுமா ?!
எழுத்து : நிலா ( துளிவானொலி )



