
குறள் – ௪௱௰௧ (அச்சில் உள்ளவாறு).
“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.”
செல்வம் = சிறப்பு, செழிப்பு.
செவிச்செல்வம் = செவியான் பெறும் செல்வம் (கேட்பதால் பெறும் சிறப்பு).
‘செல்வத்துட்செல்வம்’ என்பது அடைபெற்ற திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் தனது இயல்புப்பொருளைத்தரும். இயல்புப்பொருளைத்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘செவிச்செல்வம்’ என்பது முற்றுப்பொருள்தரும் பெயர்ப்பயனிலை. முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
‘அச்செல்வம்’ என்னும் சுட்டுடன்கூடிய பெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
‘செல்வத்து ளெல்லாம்’ என்பதை தொடர்ந்தொலிக்க ளகரம் ஒலிக்கிறது. இவ்விரண்டும் தழுவுஞ்சொற்கள்.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தருஞ்சொல். முற்றுப்பொருள்தருஞ்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் ளெல்லாம் தலை.”
குறள் – ௪௱௰௨ (அச்சில் உள்ளவாறு).
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.”
‘வயிற்றுக்கும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.”
குறள் – ௪௱௰௩ (அச்சில் உள்ளவாறு).
“செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து.”
செவியுணவு = கேள்வியறிவு.
கேள்வி = கேட்டலால் பெறும் அறிவுச்செல்வம்.
அவியுணவு = ஆவிவுணவு.
அவியுணவின் ஆன்றோர் = தேவர்.
நிலத்து = மண்ணுலகத்து.
“மண்ணுலகில் நல்லோர் சொல்வதைக்கேட்டு அறிவுபெறும் கேள்வியறிவுடையார் ஆவிவுணவு உண்ணும் தேவர்க்கு ஒப்பாவார்” என்பதாம்.
‘செவியுணவில்’ என்பதில் வந்த ‘இல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘செவியுணவு’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கேள்வியுடையார்’ என்பது தொடரெழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
‘அவியுணவின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அவியுணவு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆன்றாரோடு’ என்பதில் வந்த ‘ஓடு’ என்னும் வேற்றுமைவுருபு ‘ஆன்றார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“நிலத்து செவியுணவில் கேள்வியுடையார் அவிவுணவின் ஆன்றாரோடு ஒப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செவியுணவில் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோடு* ஒப்பர் நிலத்து.”
*குற்றியலுகரமாகிய டுகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௰௪ (அச்சில் உள்ளவாறு).
“கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை.”
ஒற்கத்தின் = தளர்வில்.
ஊற்று ← ஊன்று = ஊன்றுகோல்.
துணை = உதவி.
‘கற்றிலனாயினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மைச்சொல் எதனுடனும் புணராது.
‘கேட்க’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஒருவற்கு’ என்னும் குவ்வுருபேற்றசொல் ‘ஒற்கம்’ (தளர்வு) என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஒற்கத்தின்’ என்பதில் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு ‘அத்து’ சாரியைபெற்று ‘ஒற்கம்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு தளர்வின்போது ஊன்றுகோலாய் உதவும்” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு*
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௰௫ (அச்சில் உள்ளவாறு).
“இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்.”
இழுக்கல்= வழுக்கல்.
உடையுழி = உற்றபொழுது.
ஊற்றுக்கோல் = ஊன்றுகோல்.
அற்றே = ஒத்ததே.
‘உடையுழி’ என்னும் வினையெச்சம் ‘ஊன்றுகோல்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘அற்றே’ என்னும் உவமச்சொல் ‘ஊன்றுகோல்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“வழுக்கியபோது ஊன்றுகோல் துணைபுரிவதை ஒத்ததே ஒழுக்கத்தினை உடையாரது வாய்மொழி” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.”
குறள் – ௪௱௰௬ (அச்சில் உள்ளவாறு).
“எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு
மான்ற பெருமை தரும்.”
ஆன்ற = நிறைந்த.
பெருமை = சிறப்பு.
“எவ்வளவாயினும் நல்லவற்றைக்கேட்க. அஃது அவ்வளவுக்கு நிறைந்த பெருமையைத்தரும்” என்பதாம்.
‘எனைத்தானும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘அனைத்தானும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘கேட்க’ என்னும் வினைமுற்று ஈண்டு வினையெச்சப்பொருளில் வந்தது. எனவே ‘அனைத்து’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.”
குறள் – ௪௱௰௭ (அச்சில் உள்ளவாறு).
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.”
பிழைத்து(ம்) = பிறழ்(ந்தும்).
பேதைமை = மடமை.
இழைத்து = நுண்ணாய்வு.
ஈண்டிய = திரண்ட.
“இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் உணர்ந்தும் பிழைத்தும் பேதைமை சொல்லார்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘உணர்ந்தும்’ என்பதன்கண் உள்ள உம்மை முன்சென்றும் பொருந்தும்.
“நுண்ணாய்வும் திரண்ட கேள்வியறிவும் கொண்டவர் உணர்ந்தும் பிறழ்ந்தும் மடமையைச்சொல்லார்” என்பதாம்.
‘சொல்லார்’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.”
குறள் – ௪௱௰௮ (அச்சில் உள்ளவாறு).
“கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற்
றோட்கப் படாத செவி.”
கேளாத்தகை = செவிடாந்தன்மை.
தோட்கப்படாத = துளைக்கப்படாத.
“கேள்வியால் தோட்கப்படாத செவி கேட்பினும் கேளாத்தகையவே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கேள்வியறிவால் துளைக்கப்படாத காதுகள் தம்புலனுக்கேற்ப ஓசையொலிகளைக்கேட்குமாயினும் செவிடாம்தன்மையனவே” என்பதாம்.
‘கேட்பினும்’ என்பது எதிர்மறைவும்மைச்சொல். எதிர்மறைவும்மை எதனுடனும் புணராது.
‘‘கேள்வியால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘கேள்வி’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.”
குறள் – ௪௱௰௯ (அச்சில் உள்ளவாறு).
“நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.”
நுணங்கிய = நுட்பமான.
கேள்வி = கேள்வியறிவு.
வணங்கியவாய் = பண்புடைசொற்கள்.
அரிது = இல்லை.
“நுட்பமான செய்திகளைக்கேட்கும் கேள்வியறிவு இல்லாதார் பண்புடைசொற்களைப்பேசுவது இல்லை” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
குறளின் செம்மைவடிவம் இதுவே .
குறள் – ௪௱௨௦ (அச்சில் உள்ளவாறு).
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
ளவியினும் வாழினு மென்.”
மாக்கள் = விலங்கனையர்.
அவியினும் = இறப்பினும்.
“செவியால் நுகரப்படும் சுவையினை (கேள்வியறிவினை) உணராது வாயினால் நுகரப்படும் உணவின் சுவையைமட்டுமே அறிந்த மாக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் என்; பயனில்லை” என்பதாம்.
‘முதல் நான்கு சீர்களும் சேர்ந்து நெடுந்தொடரெழுவாய் ஆகும். எழுவாய் எதனுடனும் புணராது.
‘வாழினுமென்’ என்பதில் ‘என்’ என்னும் வினாச்சொல் வருமொழியாகி புணராது தனித்துநின்று வினாப்பொருளைத்தரும். புணரின் வினாப்பொருள் எழாது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!



