
பொறுப்புத்துறப்பு — அச்சிடப்பட்ட பரிமேலழகனாரின் திருக்குறளுரையிலுள்ள சீரமைப்பின்புணர்ச்சியில் யாம் கண்ட பொருள்மயங்குபுணர்ச்சிகள்குறித்து ஆராயவுள்ளோம். எமதாய்வில் மயங்குவதாக சுட்டப்படும் புணர்ச்சிகள் பரிமேலழகனார் செய்தவையல்ல; அல்லவே அல்ல. அவைகள் ஓலைப்படியெடுத்தோரும், தாளில் (காகிதத்தில்) அச்சிட்டோரும் செய்தவை.
பால் — அறத்துப்பால்.
இயல் — இல்லறவியல்.
தலைப்பு – ௯.
விருந்தோம்பல்.
குறளெண் – ௮௰௧.
“இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
“இல் இருந்து ஓம்பி வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
ஓம்பி = போற்றி, பேணி.
வேளாண்மை = உவந்து அளித்தல்.
‘ஓம்பி’ எனும் வினையெச்சம் ‘இல்லம்’ எனும் பொருள்தரும் ‘இல்’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் வினையெச்சத்துடனும் வினைமுற்றுடனும் புணரும்.
‘இல்லம்’ எனும் பொருள்தரும் ‘இல்’ எனுஞ்சொல் வேறோரிடத்து சென்று பொருந்தி பொருள்தருகிறது. அதற்கேற்ப அச்சொல் புணராமல் தனித்திருக்கவேண்டும். புணர்ந்தபின் அப்புணர்ச்சியிலிருந்து பிரிந்துசென்று பொருள்தருமானால் அவை தழுவாச்சொற்கள் எனப்படும். தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.”
குறளெண்– ௮௰௨.
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”
‘புறத்ததாக’ எனும் வினையெச்சத்தின் கடைகுறைந்த சொல்லே ‘புறத்ததா’ எனுஞ்சொல். ‘தான்’ என்பது மறுபெயர்ச்சொல்.
வினையெச்சம் வினையெச்சத்துடனும் வினைமுற்றுடனும் புணரும்; பெயருடன் புணராது.
“விருந்து புறத்ததாக தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாலதன்று” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
செம்மைவடிவம் —
“விருந்து புறத்ததா தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”
குறளெண்- ௮௰௩.
“வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.”
“வருவிருந்தினை வைகலும் ஓம்புவானது வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இல்லை” எனவிரியும்.
‘வைகலும்’ எனும் முற்றும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.”
குறளெண்- ௮௰௪.
“அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.”
“அகனமர்ந்து நல்விருந்தினை ஓம்புவானது இல்லத்தில் செய்யாள் முகனமர்ந்து உறையும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
மகரத்தின்முன் மகரம் நில்லாவென்பது எல்லாயிடத்தும் பொருந்தாது. ‘உறையும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அகனமர்ந்து செய்யா ளுறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.”
குறள் – ௮௰௫.
“வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.“
மிச்சில் = எஞ்சியது, மிசைதல் = உண்ணுதல்.
“விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்து (நிலத்து) வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘வித்தும்’ என்பது சிறப்பும்மைச்சொல். இக்குறளின் தலையாய சொல்லும் இதுவே. இவ்விடத்து விட்டிசைத்தலே சிறப்பும்மை வந்ததன் நோக்கம்.
செம்மைவடிவம் —
“வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.“
குறளெண்- ௮௰௬.
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.”
‘பார்த்திருப்பான்’ என்பது ‘பான்’ எனும் வினையெச்சவிகுதியைப்பெற்ற வினையெச்சம். வினையெச்சம் பெயரொடு புணராது.
“செல்விருந்தினை ஓம்பி வரும்விருந்தினைப்பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு” எனவிரிந்து ஆற்றொழுக்காக பொருள்தரும்.
செம்மைவடிவம் —
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.”
குறளெண்- ௮௰௭.
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்.”
“விருந்தோம்பலின் பயன் இன்ன அளவுடையதென்பது இல்லை. விருந்தோம்பலின் அளவு வேள்வியின் பயனை ஈந்துவிடும்” எனவிரியும். ‘விருந்து’ என்பது ‘விருந்தோம்பல்’ என பொருள்பட்டு ஈரிடத்தும் நின்று பொருள்தரும்: அவ்வாறே ‘பயன்’ என்பதும். இவ்வாறே கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘விருந்தின்’ என்பதிலுள்ள ‘இன்’ ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்தது. ஏழாம்வேற்றுமை ‘துணை’ எனும் வினைவேண்டாப்பெயரொடு புணராது.
செம்மைவடிவம் —
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.”
குறள் – ௮௰௮.
“பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.”
“விருந்தோம்பி தலைப்படாதார் வேள்வியைப்பரிந்தோம்பி பற்று அற்றேமென்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘ஓம்பி’ எனும் வினையெச்சம் ‘பற்று’ எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பரிந்தோம்பி பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.”
குறளெண்- ௮௰௯.
“உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்கண் ணுண்டு.”
“உடைமையுள் இன்மை (எனும்) மடமை விருந்தோம்பலை ஓம்பா மடவார்கண் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
இக்குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறளெண்- ௯௰௧ (அச்சில் உள்ளவாறு.)
“மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”
“அனிச்சம் மோப்பக்குழையும். விருந்து முகந்திந்து நோக்கக்குழையும்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்காண்க.
‘குழையும்’ எனும் வினைமுற்று எதனுடனும் புணராது.
‘அனிச்சமுகம்’ என்பதொன்று இல்லை. குழைதல் எனும் தொழில் அனிச்சமலர்க்கு உரியது. திரிதல் எனுந்தொழில் முகத்திற்கு உரியது. இருவேறு தொழில்புரியும் எழுவாய்கள் புணரா. ‘அனிச்சம்’ என்பது தன்னையறிவித்துநிற்கும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”
நன்றி.
முத்தையா சுப்பிரமணி.




