
குற்றியலுகரப் புணர்ச்சி
குற்றியலுகர ஈறு கொண்ட சொற்கள் தமிழில் எண்ணற்றவை. அவற்றுக்கான புணர்ச்சிமுறைகள் பின்வரும் மூன்றே வரையறை அடக்குவது அவற்றின் புணர்ச்சியை எளிதில் கையாள உதவுகிறது. இவை அடிப்படையில் ஒலிசார்ந்த புணர்ச்சி வரையறைகளே. எனினும், மென்றொடர்க் குற்றியலுகரம் மட்டும் பொருள் சார்ந்து செயற்படுகிறது என்பது ஈண்டு கையாளுதற்கு உரியதாகும்.
குற்றியலுகர வரையறை ௧(1)
வன்றொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம் வினையடிச்சொல் தவிர மற்ற எல்லாத் தொடர்களிலும் வலிமிகும். வினையடிச்சொல் என்பது வினைச் சொல்லின் ஆகக் குறுகிய வடிவம். இது பேசு, எடு, எழுது என்பன போல ஏவல் வினையாகவும் ஊறுகாய், விடுகதை, குடிநீர் என்பன போல வினைத்தொகையின் நிலைமொழிகளாகவும் வழங்குகிறது. விடுபடுதல், அடைபடுதல் என்பன போல படு என்ற துணைவினைக்கு முன் சேர்ந்துவரும் வினையாகவும் பயன்படுகிறது.
வன்றொடர்க் குற்றியலுகர ஈறுகள்
- சாக்கு +பை = சாக்குப்பை – அடைப்பெயர் வலிமிகுந்தது.
- அச்சு + தொழில் = அச்சுத்தொழில் – அடைப்பெயர் வலிமிகுந்தது.
- தப்பு தப்பு = தப்புத்தப்பு – அதே அடுக்குப்பெயர் வலிமிகுந்தது.
- தப்பு + தவறு = தப்புத்தவறு – வேறு அடுக்குப்பெயர் வலிமிகுந்தது .
- பாட்டுப் படி = பாட்டுப்படி – பெயர்வினைத் தொடர் வலிமிகுந்தது.
- பார்த்து +பேசு = பார்த்துப்பேசு – வினைவினைத் தொடர் வலிமிகுந்தது.
- மற்று + பல =மற்றுப்பல-இடைச்சொல் தொடர் வலிமிகுந்தது.
- உவப்பு + கூடல் = உவப்புக்கூடல் – உரிச்சொல் வலிமிகுந்தது.
- கட்டு கட்டாக = சுட்டுக்கட்டாக – அடுக்குப்பெயர் வலிமிகுந்தது .
- கட்டு கட்டு = கட்டுகட்டு -கட்டு வினையடிச்சொல் வலிமிகவில்லை .
- கத்துகடல் கத்துகடல் -கத்து வினையடிச்சொல் வலிமிகவில்லை .
- கொட்டு கரம் கொட்டுகரம் வினையடிச்சொல் வலிமிகவில்லை.
விளக்கம்: கட்டுக்கட்டாக என்ற தொடரில் கட்டு, பெயர்ச்சொல்; வலிமிகுந்தது. கட்டுகட்டு என்ற தொடரில் கட்டு, இருமுறை அடுக்கி வந்த ஏவல் வினை. இங்கு வினையடிச்சொல்லாக வந்ததால் வலி மிகவில்லை. கத்துகடல், கொட்டுகரம் என்பன வினைத்தொகைகள். இவற்றில் கத்து, கொட்டு என்பன வினையடிச்சொல் என்பதால் வலிமிகாமல் புணர்ந்தன.
குற்றியலுகர வரையறை ௨ (2)
மென்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம், அடைப்பெயர்களிலும், இடம் சார்ந்த சுட்டு, வினாப் பெயர்களிலும் வலிமிகும். மற்ற தொடர்களில் வலிமிகாது.
- அன்புக்கை -அன்பு, அடைப்பெயரானதால் மென்றொடர்க் வலிமிகுந்தது.
- அன்புகாட்டு – பெயர்வினைத்தொடர், மென்றொடர்க்குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- உடும்புப் பிடி – உடும்பு அடைப்பெயரானதால் மென்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகுந்தது.
- உடும்புபிடித்தான் – பெயர்வினைத் தொடர், மென்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- பாம்புபாம்பு – அடுக்குப்பெயர் (அதே பெயர்), மென்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- குண்டுகுழி – அடுக்குப்பெயர் (வேறு பெயர்கள்), மென்றொடர்க் குற்றிய லுகரம் வலிமிகவில்லை.
- கண்டுபிடித்தான் – கண்டு வினையெச்சம், மென்றொடர்க் குற்றிய லுகரம் வலிமிகவில்லை.
- முந்துபுகழ் – முந்து வினையடிச்சொல், மென்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
விளக்கம்: மென்றொடர்க் குற்றியலுகரம், அடைப்பெயர் தவிர மற்ற எந்த வகைத் தொடரிலும் வலிமிகாது. எடுத்துக்காட்டுகளில், அடுக்குப் பெயர், பெயர்வினைத் தொடர், வினைவினைத் தொடர், வினை பெயர்த் தொடர் ஆகியவை இயல்பாகவே புணர்ந்துள்ளதைக் காண்க.
இடச்சுட்டு, வினாப்பெயர்கள்: அங்கு இங்கு எங்கு, ஆங்கு ஈங்கு யாங்கு; ஆண்டு ஈண்டு யாண்டு (அங்கு இங்கு எங்கு என்ற பொருளில்). (அன்று, இன்று – காலச் சுட்டுப்பெயர்கள்; என்று – காலவினாப் பெயர்)
இடம் சார்ந்த சுட்டு, வினாப் பெயர்கள்:
- அங்கு + சென்றான் = அங்குச் சென்றான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமிகுந்தது.
- இங்கு + கண்டான் = இங்குக் கண்டான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமிகுந்தது.
- எங்கு + போனான் = எங்குப் போனான் – இடம் சார்ந்த வினாப்பெயர் வலிமிகுந்தது.
- ஆங்கு + சென்றான் = ஆங்குச் சென்றான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர்.
- வலிமிகுந்தது ஈங்கு + கண்டான் = ஈங்குக் கண்டான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர்.
- வலிமிகுந்தது யாங்கு + போனான் = யாங்குப் போனான் – இடம் சார்ந்த வினாப்பெயர் வலிமிகுந்தது.
- ஆண்டு + சென்றான் = ஆண்டுச் சென்றான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமிகுந்தது.
- ஈண்டு + கண்டான் = வலிமிகுந்தது : ஈண்டுக் கண்டான் – இடம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமுகிந்தது.
- யாண்டு + போனான் + யாண்டுப் போனான் – இடம் சார்ந்த விள பெயர் வலிமிகுந்தது.
காலம் சார்ந்த சுட்டு, வினாப் பெயர்கள்:
- அன்று + சென்றான் = அன்று சென்றான் – காலம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமிகவில்லை.
- இன்று + கண்டான் = இன்று கண்டான் – காலம் சார்ந்த சுட்டுப்பெயர் வலிமிகவில்லை.
- என்று + போனான் = என்று போனான் – காலம் சார்ந்த வினாப்பெயர் வலிமிகவில்லை.
விளக்கம்: சுட்டும் வினாவும், பொருள், இடம், காலம் என மூன்று வகைப்படுகின்றன. இவற்றில் இடமும் காலமும் சார்ந்த சுட்டுச் சொற்களும் வினாச்சொற்களுமே மென்றொடர்க் குற்றியலுகரமாக அமைகின்றன. இவற்றிலும் இடம் சார்ந்த சுட்டும் வினாவும் மட்டுமே வலிமிகுந்து புணர்வதால், இதனைத் தெளிவாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
குற்றியலுகர நெறி ௩ (3)
இடைத்தொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், நெடிற்றொடர்க் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகிய நான்கும் எந்தத் தொடரிலும் வலிமிகுவதில்லை.
- அழகு + தமிழ் = அழகுதமிழ் – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- வரகு + கஞ்சி = வரகுகஞ்சி உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- காது + கடுக்கண் = காதுகடுக்கண் – நெடிற்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- சேது + கடல் வலிமிகவில்லை – சேதுகடல் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- சார்பு + பேச்சு சார்புபேச்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- மார்பு + சளி = மார்புசளி – வலிமிகவில்லை இடைத்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- சால்பு+ பெருமை = சால்புபெருமை -இடைத்தொடர்க் குற்றியலும் வலிமிகவில்லை.
- இயல்பு +குணம் = இயல்புகுணம் -இடைத்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- வீழ்து + பரப்பு = வீழ்துபரப்பு -இடைத்தொடர்க் குற்றியலுகரம் (வீழ்து – விழுது) வலிமிகவில்லை.
- எஃகு + கம்பி = எஃகுகம்பி -ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
- கஃசு + தங்கம் = கஃசுதங்கம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் வலிமிகவில்லை.
விளக்கம்: உயிர்த்தொடர், நெடிற்றொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர் ஆகிய நான்கு குற்றியலுகரங்களும் வலிமிக மாட்டா என்பது கொல்காப்பியம் வழக்கிலும் தெளிவாகக் கூறும் வரையறை. இலக்கண இலக்கிய வழக்கிலும் உருபு புணரியல், திரிவு புணர்ச்சி என உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் இயல்பாகவே புணர்கிறது. மக்களிடையிலும் அழகு தமிழ், மிளகு தண்ணீர் போன்று சரியாகப் புணர்ந்த தொடர்கள் வழக்கில் உள்ளன. இன்று மரபுத்தொடர், மரபுப்பா என்பன போன்ற பிழை வழக்குகள் மிகுந்துவிட்டன. இவை திட்டவட்டமான பிழைகளாகும். எனவே, இந்த நான்கு குற்றியலுகரங்களிலும் வலி மிகாது என்ற வரையறையை ஐயத்துக்கு இடமின்றி அனைவரும் உறுதியுடன் கையாளுதல் வேண்டும்.
குற்றியலுகர வரையறை ௩.௧(3.1)
ஒற்று இரட்டினால் மிகும் குற்றியலுகரங்கள்
வன்றொடர் அல்லாத மற்ற குற்றியலுகரங்கள், ஒற்று இரட்டுவதால் வன்றொடர்க் குற்றியலுகரமாக மாறுவதுண்டு, அவ்வாறு மாறினால் அவை வன்றொடர்க் குற்றியலுகர வரையறைப்படி வலிமிகும். டு, று என முடிகிற உயிர்த்தொடர், நெடிற்றொடர்க் குற்றியலுகரங்களே புணர்ச்சியில் இவ்வாறு இரட்டுகின்றன.
- வயிறு + பசி > வயிற்று + பசி = வயிற்றுப்பசி
வயிறு உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயினும், அஃது இரட்டி வயிற்று என்று ஆயின், வன்றொடர்க் குற்றியலுகரமாகிறது. எனவே வன்றொடர்க் குற்றியலுகர வரையறைப்படி வலிமிகுந்தது.
- நாடு + பற்று > நாட்டு + பற்று = நாட்டுப்பற்று
நாடு, நெடிற்றொடர்க் குற்றியலுகரமாயினும் அஃது இரட்டி நாட்டு என்று ஆயின், வன்றொடர்க் குற்றியலுகரமாகிறது; வன்றொடர்க் குற்றியலுகர வரையறைப்படி வலிமிகுந்தது.
விளக்கம்: எல்லா உயிர்த்தொடர், நெடிற்றொடர்க்குறலறியலுகரங்களும் ஒற்று இரட்டிப் புணர்வதில்லை. பகுதி என்று பொருள்படும் கூறு என்ற சொல்லும் நெடிற்றொடர்க் குற்றியலுகரமாயினும் ஒற்று இரட்டிப் புணர்வதில்லை. இவ்வ்வரையறையை பொருளறிந்து ஆளவேண்டும்.
அரிதாக மற்ற குற்றியலுகரங்கள் இவ்வாறு இரட்டி வன்றொடர்க குற்றியலுகரமாயினும், வன்றொடர்க் குற்றியலுகரமானதால் அந்த வரையறைப்படி வலிமிகுந்தே புணரும்.
- மருந்து + பை >மருத்து + பை = மருத்துப்பை
- இரும்பு + பாதை > இருப்பு + பாதை = இருப்புப்பாதை.
விளக்கம்: டு, று ஈறுகள் அல்லாத மற்ற உயிர்த்தொடர், நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று இரட்டிப் புணர்வது மிக அரிது. இலக்கிய வழக்கில் புலவர்கள் கையாண்ட தொடர்கள் மட்டுமே இவ்வாறு ஆளப்படுகின்றன. எனவே, வழக்கை அறிந்தே இவற்றைக் கையாளுதல் வேண்டும். விரும்பியவாறு இவற்றை ஒற்று இரட்டிப் புணர்த்தல் கூடாது.
முற்றும்




சிறப்பு –