
குறள் – ௪௱௫௧ (அச்சில் உள்ளவாறு).
“சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.”
சிறுமை = இழிவு.
சிற்றினம் = இழிந்தோர்.
பெருமை = உயர்வு; உயர்ந்தோர்.
“பெருமை சிற்றினமஞ்சும் சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உயர்ந்தோர் இழிந்தோரைச்சேர அஞ்சுவர். சிறுமைப்பண்பு இழிந்தோரை தமக்கு உறவாக கொள்ளும்” என்பதாம்.
குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௪௱௫௨ (அச்சில் உள்ளவாறு).
“நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு.”
இயல்பு = தன்மை, குணம்.
அற்றாகும் = அத்தன்மையது ஆகும்.
“நிலத்தின் இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு அறிவு
இனத்தின் இயல்பது ஆகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘நிலத்தியல்பான்’ என்பதன்கண் வந்த ‘ஆன்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘இயல்பு’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘மாந்தர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இனமாஅஅ’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது. மேலும் வினைமுற்றின் விகுதி ஒருகாலும் நீங்காது; நீங்கின் வினைமுற்றின் வடிவு கெடும்.
“நிலத்தின் இயல்பினால் நீர் திரிந்து நிலத்தின் இயல்பாக ஆகும். அதுபோல மாந்தரறிவு அவர் சேரும் இனத்தின் இயல்பாக ஆகும்” என்பதாம்.
செம்மைவடிவம் –
“நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு*
இனத்தியல்ப தாகும் அறிவு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௩ (அச்சில் உள்ளவாறு).
“மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ் சொல்.”
உணர்ச்சி = உணர்வு.
இன்னான் = இத்தன்மையன்.
“மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம். இன்னான் எனப்படுஞ்சொல் இனத்தான் ஆம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘மனத்தானாம்’, ‘இனத்தானாம்’ என்பனவற்றின்கண் வந்த ‘ஆம்’ (ஆகும்) என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
மேலும் வினைமுற்றின் விகுதி ஒருகாலும் நீங்காது.
மூன்றாஞ்சீரில் ஒரு கருத்து முடிகிறது. கருத்து முடிந்து முற்றுப்பொருள் தருமிடங்களில் புணர்ச்சி நிகழா.
“மாந்தர்க்கு உணர்வு மனத்தால் உண்டாகும். இவன் இத்தன்மையன் எனச்சொல்லப்படுதல் அவன் சேர்ந்த இனத்தால் உண்டாகும்” என்பதாம்.
செம்மைவடிவம் —
“மனத்தானாம் மாந்தர்க்கு* உணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது
குறள் – ௪௱௫௪ (அச்சில் உள்ளவாறு).
“மனத்து ளதுபோலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு.”
உளது = உள்ளது.
இனம் = சார்ந்த நட்பு.
“ஒருவர்க்கு அறிவு மனத்துளதுபோல காட்டி இனத்து உளதாகும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘போல’ என்னும் உவமவுருபு ‘மனத்துளது’ என்னும் சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘காட்டி’ என்னும் வினையெச்சம் ‘ஒருவர்க்கு’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது
‘ஒருவர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமையுருபேற்ற சொல் ‘இனம்’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
”ஒருவர்க்கு மனத்தின்கண் இருப்பதுபோல காட்டும் அறிவு அவர் சார்ந்த நட்பினைப்பொறுத்தது” என்பதாம்.
செம்மைவடிவம் —
“மனத்து ளதுபோல காட்டி ஒருவற்கு*
இனத்துள தாகும் அறிவு.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௫ (அச்சில் உள்ளவாறு).
“மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்.”
மனந்தூய்மை = உள்ளத்தூய்மை.
செய்வினைத்தூய்மை = செயற்றூய்மை (செயலினது தூய்மை).
தூவா = பற்றுக்கோடாக, காரணமாக.
“உள்ளத்தூய்மை, செயற்றூய்மை ஆகிய இரண்டும் ஒருவர்க்கு அவர் சார்ந்த நட்பினை பற்றுக்கோடாய்க்கொண்டு வரும்” என்பதாம்.
‘இரண்டும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“மனந்தூய்மை செய்வினைத் தூய்மை யிரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.”
குறள் – ௪௱௫௬ (அச்சில் உள்ளவாறு).
“மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.”
இனம் = நட்பு, துணை.
“மனந்தூயர்க்கு எச்சம் நன்றாகும். இனந்தூயர்க்கு நன்றாகாவினை இல்லை“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தூயமனதார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும். தூயயினத்தை உடையார்கக்கு நன்றாகாவினை இல்லை” என்பதாம்.
‘மனந்தூயார்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமையுருபேற்ற சொல் ‘எச்சம்’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘எச்சம்’ என்னும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“மனந்தூயார்க்கு* எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு*
இல்லைநன் றாகா வினை.”
*குற்றியலுகரமாகிய குகரம் இரண்டும் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௭ (அச்சில் உள்ளவாறு).
“மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்.”
ஆக்கம் = பெருக்கம்.
மன்னுயிர் = உலகவுயிர் (சிறப்புகருதி மாந்தர்).
“மனத்தின் நலன் மாந்தர்க்கு பெருக்கத்தைத்தரும். இனத்தின் நலன் மாந்தர்க்கு எல்லாப்புகழையும் தரும்” என்பதாம்.
மூன்றாஞ்சீரில் வந்த ‘ஆக்கம்’ என்பது பெயர்ப்பயனிலை. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘மனநலம்’, ‘இனநலம்’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“மனநலம் மன்னுயிர்க்கு* ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௮ (அச்சில் உள்ளவாறு).
“மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்.”
ஆக்கம் = பெருக்கம்.
மன்னுயிர் = உலகவுயிர் (சிறப்புகருதி மாந்தர்).
“மனத்தின் நலன் மாந்தர்க்கு பெருக்கத்தைத்தரும். இனத்தின் நலன் மாந்தர்க்கு எல்லாப்புகழையும் தரும்” என்பதாம்.
மூன்றாஞ்சீரில் வந்த ‘ஆக்கம்’ என்பது பெயர்ப்பயனிலை. இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘மனநலம்’, ‘இனநலம்’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“மனநலம் மன்னுயிர்க்கு* ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௮ (அச்சில் உள்ளவாறு).
“மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து.”
ஏமம் → ஏமாப்பு = அரண், காப்பு.
‘ஆயினும்’ என்பது சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘சான்றோர்க்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘இனம்’ என்னும் வினைசாராப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘மனநலம்’, ‘இனநலம்’ என்பன இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
“நல்ல மனநலத்தை உடையவராயினும் சான்றோர்க்கு அவர் சார்ந்த நட்பினால் பெறப்படும் நலம் பாதுகாப்பினைத்தரும்” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு*
இனநலம் ஏமாப் புடைத்து.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௪௱௫௯ (அச்சில் உள்ளவாறு).
“மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து.”
மறுமை = மறுபிறவி.
மற்று = அசைச்சொல்.
ஏமாப்பு = காப்பு.
உடைத்து = உடையது.
“மறுமை மனநலத்தினான் ஆகும் அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘ஆகும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இனநலம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொற்கள். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இனநலத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்து சாரியைபெற்று ‘இனநலம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
“மறுபிறவி மனநலத்தினால் (நற்பிறப்பு) ஆகும். அஃதும் இனநலத்தினால் காப்புபெறும்” என்பதாம்.
செம்மைவடிவம் —
“மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.”
குறள் – ௪௱௬௦ (அச்சில் உள்ளவாறு).
“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்.”
ஊங்கும் = மிகவும்.
அல்லல்= துன்பம்.
படுப்பதூஉம் = தருவதும்.
“நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. ‘ஊங்கு’ என்பது பின்னுங்கூடி பொருள்தரும்.
‘நல்லினத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘நல்லினம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தீயினத்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் வேற்றுமைவுருபு அத்துச்சாரியைபெற்று ‘தீயினம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘படுப்பதூஉம்’ என்பதன்கண் வந்த மவ்வீறு கெடவில்லை. தமிழில் ஒலியாயெழுத்து இல்லை. மகரத்தை ஒலித்தால் புணர்ச்சி நீங்கும்; ‘இல்’ என்னும் வினைமுற்று பிரிந்துநிற்கும். ‘படுப்பதூஉ மில்’ என்பது மயங்குபுணர்ச்சி. மொழியில் மயங்குபுணர்ச்சி இல்லை.
“நல்லோர்தொடர்பின் மிக்க துணையும் இல்லை. (அதுபோல) தீயோர்தொடர்பின் மிக்க துன்பம் தருவதும் இல்லை” என்பதாம்.
இக்குறளில் சீர்களமைந்தவரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




