குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.
பால் — அறத்துப்பால். இயல் — துறவறவியல். தலைப்பு - ௨௬. புலான்மறுத்தல்.

குறள் – ௨௱௫௰௧. (அச்சில் உள்ளவாறு)
“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பா
னெங்ஙன மாளு மருள்.”
ஊன் = உடம்பு.
பெருக்கம் = வளர்ச்சி.
பிறிது = பிற (விலங்குகள்).
‘தனது உடம்பை வளர்ப்பதற்கு பிறவிலங்குகளின் உடம்புகளை உண்பானை எங்ஙனம் அருள் ஆளும்’ என்பதாம்.
‘தான்’ என்பது மறுபெயர்ச்சொல். மறுபெயர்ச்சொல் எதனுடனும் புணராது. இங்கே புணர்த்தியதால் மறுபெயர்ச்சொல் என்னும் நிலை நீங்கி இடைச்சொல்தன்மைபெற்று ‘பெருக்கத்திற்காக’ என்னும் பொருளைத்தந்தது.
‘உண்பான்’ எழுவாய் ஆகும் வினையாலணையும்பெயர். எழுவாய் எதனுடனும் புணராது.
‘ஆளும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘எங்ஙனம்’ என்னும் வினாப்பொருண்மை அழுத்தம் பெறுவதால் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடங்கள் புணரா. மேலும் ‘ஆளும்’ என்னும் வினைமுற்று ‘அருள்’ என்னும் பெயரைத்தழுவி பொருள் கொள்ளும்.
செம்மைவடிவம் —
“தன்னூன் பெருக்கற்கு தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.”
குறள் – ௨௱௫௰௨. (அச்சில் உள்ளவாறு)
“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.’
ஆட்சி = உரிமை, பயனடைதல்.
போற்றாதார் = காவாதார்.
ஆங்கு = அதுபோல்.
‘போற்றாதார்க்கு பொருளாட்சி இல்லை. ஆங்கு ஊன் தின்பார்க்கு அருளாட்சி இல்லை’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘இல்லை’ என்பது குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘ஆங்கு’ என்பது உவமச்சொல். உவமச்சொல் எதனுடனும் புணராது. மேலும் ‘ஆங்கு’ என்பதுடன் புணர்த்தப்பட்ட ‘இல்லை’ என்னும் குறிப்புவினைமுற்று வோறோரிடஞ்சென்று பொருந்தும். இவ்வினைமுற்று ‘ஆங்கு’ என்னும் உவமச்சொல்லைத்தழுவாது. தழுவும் சொற்களே புணரும்.
‘ஊன்றின்பவர்க்கு’ என்பதில் ‘ஊன்’ என்பதில் இரண்டாம்வேற்றுமைவுருபு தொக்கி நிற்கும். அடுத்துவரும் ‘தின்பவர்’ என்பது வினையாலணையும்பெயர். இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்; பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை பல அருளாட்சி
ஆங்கு*இல்லை ஊன்தின் பவர்க்கு.’
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௨௱௫௰௩. (அச்சில் உள்ளவாறு)
“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்ற
னுடற்சுவை யுண்டார் மனம்.”
படை = கொலைக்கருவி.
ஊக்காது = ஊக்குவிக்காது.
ஊன் = இறைச்சி.
‘படைகொண்டார்நெஞ்சம்போல் ஒன்றனுடற்சுவையுண்டார்மனம் நன்றூக்காது’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கொலைக்கருவியை தமது கையில் ஏந்தினார்மனம் அக்கருவியினால் செய்யும் கொலையையே நோக்குவதுபோல ஒன்றனது உடற்சுவையை உண்டாரது மனம் நன்மையை நோக்காது’ என்பதாம்.
‘ஊக்காது’ என்பது எதிர்மறைவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது* ஒன்ற
னுடற்சுவை யுண்டார் மனம்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௨௱௫௰௪. (அச்சில் உள்ளவாறு)
“அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.”
அருளல்லது = அருளற்றது.
கோறல் = கொல்லுதல்.
பொருளல்லது = பொருளற்றது.
தினல் → தின்னல் என்பதன் தொகுத்தல்விகாரம் = உண்ணல்.
‘அருள் யாதெனின் கொல்லாமை; அருளல்லது யாதெனின் கோறல். பொருளல்லது அவ்வூன் தினல்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘யாதெனின்’ என்னும் வினாச்சொல் முன்பின் புணராது தனித்துநின்று வினாப்பொருண்மை காட்டும்; புணரின் கருத்துணர்ச்சி தோன்றாது. விட்டிசைக்குமிடங்கள் புணரா.
செம்மைவடிவம் —
“அருளல்லது* யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௨௱௫௰௫. (அச்சில் உள்ளவாறு)
“உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.”
அண்ணாத்தல் = வாய்திறத்தல் (வாயில்திறத்தல்).
அளறு = நரகம்.
‘ஊன் உண்ணாமையுள்ளது உயிர்நிலை. ஊனுண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது’ என்றவாறு ‘ஊன்’ என்பது முதலிலும் சென்றுநின்று பொருள்தரும்.
‘உயிர்நிலை’ பெயர்ப்பயனிலையாகிய முடிக்குஞ்சொல். முடிக்குஞ்சொல் எதனுடனும் புணராது.
‘உண்ண’ என்பது வினையெச்சம். ‘அண்ணாத்தல்’ என்பது தொழிற்பெயர். வினையெச்சம் தொழிற்பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.”
குறள் – ௨௱௫௰௬. (அச்சில் உள்ளவாறு)
“தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.”
தினல் = உண்ணல்.
விலைப்பொருட்டு = பொருளுக்காக.
‘உண்பதற்காக விலங்கினை உலகோர் கொல்லாரெனின் பொருளுக்காக ஊனை விற்பவர் ஒருவரும் இரார்’ என்பதாம்.
‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘தினற்பொருட்டு’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘விலைப்பொருட்டு’ என்பதுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஊன்றருவார்’ என்பது ‘ஊனினை தருவார்’ எனவிரியும். ‘தருவார்’ என்பது வினையாலணையும்பெயர். இரண்டாம்வேற்றுமை ஐயுருபு வினையொடு மட்டுமே புணரும்; பெயருடன் புணராது.
‘தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் விலைப்பொருட்டால் ஊன் தருவார் யாருமில்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்.”
குறள் – ௨௱௫௰௭. (அச்சில் உள்ளவாறு)
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.”
புண் = வெட்டுண்ட தசை.
‘புலாஅல் பிறிதொன்றன் புண். அஃது* உணர்வார்ப்பெறின் (புலாஅல்) உண்ணாமை வேண்டும்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
*‘அஃது’ என்பது விகாரத்தால் ‘அது’ எனத்தொக்கது.
‘உணர்வார்’ என்பது வினையாலணையும்பெயர், ‘பெறின்’ என்னும் வினையெச்சத்துடன் புணராது. இவ்விடத்துவரும் பகரமெய் ‘உணர’ என்னும் வினையெச்சப்பொருளை உணர்த்திநின்றது.
குறளின் செம்மைவடிவமும் இதுவே.
குறள் – ௨௱௫௰௮. (அச்சில் உள்ளவாறு)
“செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன்.”
செயிர் = குற்றம்.
தலைப்பிரிந்த = நீங்கிய.
காட்சியார்= அறிவாளர்.
*‘தலைப்பிரிவு’ என்பது ஒருசொல் என்பார் பரிமேலழகனார்.
‘செயிரிற்றலைப்பிரிந்த காட்சியார் உயிரிற்றலைப்பிரிந்தவூனுண்ணார்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘குற்றத்திலிருந்து நீங்கிய அறிவாளர் உயிரிலிருந்து நீங்கிய ஊனை உண்ணார்’ என்பதாம்.
‘காட்சியார்’ என்பது பெயர்ப்பயனிலையாம் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘உண்ணார்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘பிரிந்தவூன்’ என்பது பெயரெச்சம். பெயரெச்சத்தில் பெயர் தனித்துநின்று ‘பிரிந்த ஊன்’ எனவரும்.
செம்மைவடிவம் —
“செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்.”
குறள் – ௨௱௫௰௯. (அச்சில் உள்ளவாறு)
“அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று.”
அவி = தேவருணவு (நெய் முதலானவை).
சொரிந்து = பெய்து.
வேட்டல் = வேண்டுதல், வேள்வி செய்தல்.
செகுத்து = கொன்று.
‘ஆயிரம் அவிசொரிந்து வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்துண்ணாமை நன்று’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘சொரிந்து’ என்னும் வினையெச்சம் ‘ஆயிரம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘வேட்டலின்’ என்னும் வினையெச்சம் ‘ஒன்று’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“அவிசொரிந்து* ஆயிரம் வேட்டலின் ஒன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௨௱௬௰. (அச்சில் உள்ளவாறு)
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.”
கொல்லான் = உண்பதற்காக ஓருயிரையும் கொல்லான்.
‘கொல்லான் புலாலை மறுத்தானை எல்லாவுயிரும் கைகூப்பித்தொழும்’ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கொல்லானையும் புலாலை மறுத்தானையும் எல்லாவுயிரும் கைகூப்பித்தொழும்’ என்பதாம்.
‘மறுத்தானை’ என்பது இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல். இரண்டாம்வேற்றுமை ‘கை’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடு மட்டுமே புணரும்.
‘கூப்பி’ என்னும் வினையெச்சம் ‘எல்லாம்’ என்னும் பொதுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா வுயிருந் தொழும்.”
தொகுத்தெழுதியவர்-முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ் .




