தமிழ்வரலாற்று மாந்தர்கள்

சி.வை.தாமோதரம்பிள்ளை;வரலாற்றுச்சுருக்கம்.

தமிழர் அறிந்துவைத்திருக்கவேண்டிய முதன்மையான தமிழ்த்தொண்டர் .

௧௨/௯/௲௮௩௨) இன்றையநாள் , யாழ்ப்பாணத்தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் பெருமங்கலநாள்.

“பேரறிஞர் பற்றிய சிறுகுறிப்பு”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியானது தமிழ்த்தொண்டர் தாமோதரம் பிள்ளையின் காலமென்று வரலாறுகூறும் .

“சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்திற்காக அவர் வரலாறாகிய தமிழ்வரலாற்றை மறைக்க முயல்வது நன்றன்று” என்றும் “தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை’ என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்திருக்கிறது. ஆறுமுகநாவலர் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தெட்டாம் ஆண்டில் தொல்காப்பியச்சொல்லதிகாரம், சேனாவரையம் உரையை , தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக்கொண்டு பதிப்பிக்கச்செய்துள்ளார்.

“ஆங்கில விருப்புகள் தலைவிரித்தாடிய அந்நேரத்தில், தொல்காப்பியப்படிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்களவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்.தொல்காப்பியக்கடலில் இறங்கினார்” என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

தமது முப்பத்துமூன்றாவது அகவையில் உ.வே.சா.தாமோதரம் பிள்ளையைக்கண்டார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியை பதிப்பிக்கும் எண்ணங்கொண்டு மூலப்படிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும்புதியது. தாமோதரம் பிள்ளையின் தொடர்பானது உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, “இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை ஆய்வுசெய்ததற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து வெளியீடு செய்யும்படி, யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளையை பலமுறை தூண்டியமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்” என்று ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தேழாம் ஆண்டில் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் வைரவநாதபிள்ளை-பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக ஆயிரத்து எண்ணூற்று முப்பத்திரண்டாம் ஆண்டு கன்னித்திங்கள் பன்னிரண்டாம்நாள் பிறந்தார்.

தாமோதரம் பிள்ளை, சிற்றகவை முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக்கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக்கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கணநூல்களையும் பயின்றார்.

பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பளை அமெரிக்கப்பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், மெய்யியல்(தத்துவம்) போன்ற பாடங்களில் முதல் மாணவராகத்திகழ்ந்தார்.

ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டாண்டுகள் பயின்றபின் தமது இருபதாவது அகவையில் கோப்பாயிலிருந்தபள்ளிக்கூடத்தில் பிள்ளை ஆசிரியராகப்பணியமர்த்தப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்கவுரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழறிவைச்செவியுற்று அவரை சென்னைக்கு அழைத்து “தினவர்த்தமானி’ எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச்சிறப்பாகநடத்தி அதில் தனியான ஒருரைநடையைக்கையாண்டார் பிள்ளை. மேலும் லசு்சிசு்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்கு தமிழும் கற்பித்துவந்தார். இதையறிந்த அன்றையவரசு, தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக்கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய “சென்னை இராசதானி’ கல்லூரியில் தமிழாசிரியராகப்பணியமர்த்தி மகிழ்ந்தது.

சென்னைப்பல்கலைக்கழகத்தில் இளங்கலையிற்டேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை அரசமருத்துவமனை உதவியாசிரியராகப்பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பற்பல சீர்திருத்தங்கள் செய்து அமைத்துவத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக்கணக்குச்சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டியதிறமையினால் ஆய்வர் பதவியும் வந்துசேர்ந்தன. ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தொன்றில் தாமோதரம்பிள்ளை சட்ட இளங்கலைத்தேர்வில் வெற்றிபெற்றார்.

எப்பணியை மேற்கொண்டபோதிலும் தமது ஓய்வுநேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களையும் ஓலைப்படிகளையும் பயின்றுவந்தார். அப்படிகளின் ஓரஞ்சிதைந்தும், இதழொடிந்தும் சீரழிந்து இருந்தன. அப்படிகளைச்சீராக்கி அச்சேற்றிப்பதிப்பிக்கவேண்டியது தமது தலையாயபணியென்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் இருபதாவது அகவையலேயே நீதிநெறிவிளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத்தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலர் ஆய்வுசெய்தலே நன்றென்றுகருதி அவருக்கே பிள்ளை உதவி செய்துவந்தார்.

இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் ஆய்ந்தளித்த சொல்லியலை தம்பெயரினால் பிள்ளை முதன்முதலில் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தெட்டில் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தொன்பதில் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் உளம் வருந்தியதோடு நாவலரின் பணியை தாம் தொடரவேண்டுமென முடிவுசெய்தார்.

நாவலரின் மறைவுக்குப்பிறகு இரண்டு ஆண்டுகள்கழித்து பிள்ளை அரசுப்பணியிலிருந்துவிலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத்துணிந்தார். அதன் பயனாய் வீரசோழியம் (ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்று), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்று), தொல்காப்பியப்பொருளதிகாரம் (ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தைந்து), கலித்தொகை (ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தேழு), இலக்கணவிளக்கம், சூளாமணி (ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பது), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்றொன்று), தொல்காப்பிய சொல்லதிகாரம் (ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்றிரண்டு) முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன.

இதுமட்டுமன்றி, கட்டளைக்கலித்துறை, வசனசூளாமணி, சைவமகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களை தாமேயெழுதி வெளியிட்டபெருமை பிள்ளைக்கே உரியதாகும்.

அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் பிள்ளை, ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தேழாம் ஆண்டில் புதுக்கோட்டை அரசவையில் நான்காண்டு செங்கோல்மன்ற அரசராகப்பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக்கிரந்தப்பாதுகாப்பு (பரிபாலன) அவை, நேர்மைப்பாதுகாப்பவை போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவுமிருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல்மாணவரென்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம்பிள்ளை.

அன்றைய சென்னையரசு இவருக்கு ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தைந்தில் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச்சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச்செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, செங்கோல்மன்ற அரசராக, தான்தோன்றிய துறையிலெல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, ஆயிரத்து தொள்ளாயிரத்தொன்று ,தைத்திங்கள் முதல்நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வையத்துவாழ்வை நீத்தார்.

பல பழையவிலக்கியங்களைப்பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல காலத்தால் முந்திய இலக்கண நூல்களைப்பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமே . தமிழ்ச்சன்றோரை நினைவிற்கொள்ள , நினைவுகூரவேண்டியது தமிழரின் தலையாய கடமைகளில் ஒன்றே .

நன்றி ..
வாழ்க தமிழ் ..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button