வரலாற்றில் இன்றுவரலாற்று மாந்தர்கள்

கல்விக்கண்திறந்த பெருந்தலைவர் காமராயரின் வாழ்க்கைச்சுருக்கம்!

அரசியற்தலைவர்களின் முன்னோடி காமராயர்

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராயர்’.

தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு பணமற்ற நண்பகல் உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர் ’‘படிக்காத மேதை’, ‘கல்விக்கண் திறந்த காமராயர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். குமுகாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு முதன்மை மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் போற்றப்படும் காமராயரின் வாழ்க்கை வரலாறு மற்றும் வெற்றிகள் போன்றவற்றை விரிவாகக்காண்போம்.

பிறப்பு: 15/07 /1903

இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா

பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.

இறப்பு: 2/10/1975

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு:

கு. காமராயர் அவர்கள், 1903  ஆம் ஆண்டு ஏழாம் திங்கள் 15  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாச்சி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராயா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாச்சி + ராயா) ‘காமராயர்’ என்று பெயர் வரவதற்கான பொருட்டாக  அமைந்தது.

தொடக்க வாழ்க்கை மற்றும் கல்வி:

காமராயர் அவர்கள், தனது தொடக்கக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த ஆண்டே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யாசாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறகவையான பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்று குடும்பத்தைக்காப்பாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பைத்தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராயர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

விடுதலைப்போராட்டத்தில் காமராயரின் ஒப்புவிப்பு:

முனைவர் வரதராயுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் யார்ச் யோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் ஈர்க்கப்பட்ட காமராயர் விடுதலைப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “கோம் ரூல் இயக்கத்தின்” ஒரு உறுப்பினராக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நாடுதழுவிய காங்கிரசில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது அகவையில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரகத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராயகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராயர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத்தலைமை தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறை ஒறுத்தல் பண்டுணர்ந்தார்.

காங்கிரசின் தலைவர் சத்தியமூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:

‘காங்கிரசு தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்றச்செய்தவர்’, ‘மிகச்சிறந்த பேச்சாளர்’ எனப்புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரசு தலைவராக பொறுப்பேற்றபோது, காமராயரை செயலாளராக பணித்தார் . இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராயர் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, முதலில் சத்தியமூர்த்தி வீட்டிற்குச்சென்று தேயக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராயர் தமிழக முதலமைச்சராகப்பதவி ஏற்பதற்கு முன், சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச்சென்று அவருடைய படத்திற்கு மாலையணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத்தொடர்ந்தார்.

தமிழக முதல்வராக காமராயர்:

1953 ஆம் ஆண்டு, ராயாயி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராயாயியின் ஆளுமை குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரசு் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராயாயி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராயர் பெருவாரியான இருக்கைகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

முதல்வராக காமராயர் ஆற்றியப்பணிகள்:

காமராயர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் மாறுதலாகவும் வியக்கும்படியும் அமைத்தார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராயாயி கொண்டுவந்த குலக்கல்வித்திட்டத்தினைக்கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத்திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத்திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “பணமற்ற நண்பகல் உணவுத்திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத்திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 விழுக்காடாக இருந்த கல்விக்கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 விழுக்காடாக உயர்ந்தது.

தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராயர் மேற்கொண்ட திட்டங்கள்:

காமராயர் கல்வித்துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்வழங்கல் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழிற்றுறைகளை வளர்ப்பதைக்குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத்தொடங்கினார்.

அவையாவன:

‘நெய்வேலி நிலக்கரித்திட்டம்’, ‘பெரம்பூர் தொடருந்துப் பெட்டித்தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத மிகு மின்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா படம்பிடிப்புத்தொழிற்சாலை’, ‘கிண்டி தொலை அச்சுத்தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத்தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின்நிறுவனம்’, ‘தொடருந்து பெட்டித்தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச்சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராயரால் உருவாக்கப்பட்டன.

இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் வளர்ச்சித்திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசு்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்வழங்கல் திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்.

காமராயர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில்வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப்பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப்பிடித்தது.

அனைத்து இந்திய காங்கிரசு்தலைவராக காமராயர்:

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராயர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முதன்மை என கருதி “கே-திட்டம்  (K-PLAN)” எனப்படும் “காமராயர் திட்டத்தினை” கொண்டுவந்தார்.

அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் 2/10/1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராயர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் 9 ஆம் நாள், பத்தாம் திங்களில் அனைத்து இந்திய காங்கிரசு் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாசு்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மதிப்பிற்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்.

1964 ஆம் ஆண்டு, யவர்கலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாசு்திரி அவர்களை இந்திய முதல்வராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாசு்திரியின் சடுதியாக சாவைத் தழுவ, 48 அகவை நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த முதன்மை மந்திரியாக்கினார், காமராயர்.

இறப்பு:

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் குமுகாயத்தொண்டு செய்வதிலேயே ஒப்புவித்துத்துக்கொண்ட காமராயர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு பத்தாம் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 72 வது அகவையில் காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது நடுவண் அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. குமுகாயத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில வேட்டிகள், சட்டைகள், நூல்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே. இப்படிப்பட்ட உன்னதமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழகவரலாறு  இனிமேல் காணுமா என்பது ஐயமே..

இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு முதலவர்களை உருவாக்கி, ‘இந்தியாவின் பெருந்தலைவராகத்திகழ்ந்த பெருந்தலைவர் காமராயர், ‘பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும்’, ‘படிக்காத மேதையாகவும்’, ‘கல்வியின் விண்மீனாகவும்’, ‘மாந்தநேயத்தின் மறு உருவமாகவும்’ திகழ்ந்தார். திரையில் நாம் பார்த்து வியந்த நடிகர்ரகளைப்போல இல்லாமல்,  நடைமுறை வாழ்க்கையில் உண்மையான உயர்த்தவராக வாழ்ந்து காட்டியவர்.

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நம்பிக்கை என அனைத்தையும் கற்பித்த மாமாந்தராக மட்டுமன்று , ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

“இறந்தும் வாழும் ஒப்பற்ற மாந்தர்களில் , அரசியலின் முன்னோடியான உங்களைப்போன்ற நல்மாந்தகளை கடைக்கோடி அரசியல் சார்பாளர்களும் எளியமாந்தர்களும் கூட பின்பற்ற வேண்டும்”

              “தமிழே எங்கள் முகவரி”

நன்றி.

வாழ்க தமிழ் ..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button