இலக்கணம்

வினையெச்சமும் பெயரும் புணரும் புணர்ச்சி இலக்கணம்

சொல் : கால்வாய்வெட்டிப்பாசனம் ; பாடநூலில் உள்ள பிழையைச்சுட்டல்

வினையெச்சமும் பெயரும் புணர்தல்.

குறிப்பு : பாசனம் என்பது பிறமொழிச்சொல். அதற்கு ஈடான தமிழ்ச்சொல் “வழங்கல்” என்பதாகும் .

‘உழவர் கால்வாய்வெட்டிப்பாசனம் செய்கின்றனர்’ — இத்தொடர் பன்னிரெண்டாம் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. இத்தொடரில் பகரமெய் இடம்பெறாது. ஏன்?!

இலக்கணவழிகளுக்கு செல்லாமல் பொருள் பொருத்தத்தைக்காணுவோம். வெட்டி எனுஞ்சொல் கால்வாய் எனுஞ்சொல்லுடன் தொடர்புடையது. எதனை வெட்டினரென வினவ கால்வாய் எனும் விடை கிட்டும். பாசனம் என்பது செய்கின்றனர் எனும் வினைமுற்றுடன் தொடர்புடையது. என்ன செய்கின்றனரென வினவ பாசனம் எனும் விடை கிட்டும்.

இவ்வாறு இச்சொற்கள் தொடர்பு பெற்றிருக்க ‘வெட்டிப்பாசனம்’ எனும் புணர்மொழி எதிர்மறைப்பொருளைத்தருகின்றது.

எமக்கு மற்றொரு ஐயம். வெட்டிப்பாசனம் எனப்புணர்கையில் ‘பாசனஞ்செய்கின்றனர்’ எனப்புணராதா. இதனை பாடவுரைநூலாசியர் ஏன் மறந்துவிட்டனர். இஃது ஒருபுறமிருக்கட்டும்.

வெட்டி எனும் வினையெச்சம் பாசனம் எனும் பெயர்ச்சொல்லுடன் புணராது. ஒரு பெயர்ச்சொல் வேற்றுமையுருபு தொகநின்றால், அல்லது வேற்றுமையுருபு வெளிப்படநின்றால் வினைவகைசொற்களுடன் புணரும்.

கால்வாய்வெட்டி என்பது கால்வாயைவெட்டி என்றவிரியின் தொகைநிலையாகும். அதனால் பெயர்+வினைப்புணர்ச்சி ஏற்கத்தக்கது. கால்வாய்வெட்டி எனும் புணர்மொழியிலுள்ள கால்வாயெனும் பெயர்ச்சொல் ஐயுருபினால் வேறுபடுத்தப்பட்ட பெயர்ச்சொல்லாகும்.

‘பாசனம் செய்கின்றனர்’ என்பதும் பிரித்து நிறுத்தக்கூடாதது. பாசனம் என்பது இத்தொடரின் எழுவாயன்று; உழவர் என்பதே எழுவாய்/ வினைமுதல். பாசனம் எனும்பெயர்ச்சொல்லின் பொருளும் ஐயுருபால் வேறுபடுத்தப்பட்டுள்ளது. இதன்பொருள் பாசனத்தைச்செய்கின்றனரென்பதே.
பாசனம்+செய்கின்றனர் → பாசன+செய்கின்றனர் (மவ்வீறு கெடும்) → பாசன+ஞ்+செய்கின்றனர் (இனமெல்லினம் மிகுந்தது) → பாசனஞ்செய்கின்றனர். ஒரு வினைச்சொல்லினால் வேறுபடுத்தப்பட்ட பெயர்ச்சொல் அவ்வினைச்சொல்லுடன் புணர்ந்துநிற்கும்.

பாடவுரைநூலில் இடம்பெற்ற ஒருதொடரில் எத்துணைப்பிழைகள்; பொருட்குழப்பம். பொருட்குழப்பமில்லாமல் செய்திகளைப்பரிமாற கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளே இலக்கணவிதிகளாக தொகுக்கப்பட்டன. நெறிகளைக்கைவிடுவது மரபுகளைமீறுவதாகும். இவற்றை மீறக்கூடாதது.

தமிழ்பாடவுரைநூலில் இலக்கணப்பிழையிருந்தால் நாம் கற்குந்தமிழும் பிழையாகும்.

“தமிழே எங்கள் முகவரி”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button