
குறள் – ௲௩௱௧ (அச்சில் உள்ளவாறு).
“புல்லா திராஅப் புலத்தை யவருறு மல்லனோய் காண்கஞ் சிறிது.”
புல்லாதிராஅ → புல்லாதிரா = ஊடாது இருந்து விடாதே.
புலத்தை = தன்மை முன்னிலை ஒருமைப்பெயர்ச்சொல். தன்னைத்தானே முன்னிலைப்படுத்துகிறாள். ‘புல்லுபவளே’ என்பது பொருள்.
உறும் = அடையும் துன்பநோய்.
காண்கம் = காண்போம்
“புல்லாதிராஅ புலத்தை அவர் உறும் அல்லனோய் சிறிது காண்கம்“ என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
தலைமகள் தனக்கு தானே கூறல்.
“ஊடாது இருந்துவிடாதே புலப்பவளே. அவ்வூடலால் அவர் உறும் துன்பநோயை சிறுபொழுதிற்கு காண்போம்” என்பதாம்.
‘புலத்தை’ என்பது விளிச்சொல். விளிச்சொல் எதனுடனும் புணராது.
‘உறும் அல்லனோய்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘காண்கம்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“புல்லா திராஅ புலத்தை அவருறும் அல்லனோய் காண்கம் சிறிது.”
குறள் – ௲௩௱௨ (அச்சில் உள்ளவாறு).
“உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றா னீள விடல்.”
உப்பமைந்தற்றால் = உப்பிட்டது போன்றது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
புலவி = ஊடல்.
மிக்கற்றால் = மிகுந்தது போன்றது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
நீளவிடல் = (ஊடலைத்) தொடராதே.
“புலவி உப்பமைந்தற்றால் நீளவிடல் அதுசிறிது மிக்கற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க
“ஊடலென்பது உணவிலிட்ட உப்பினது அளவு போன்றது. ஊடலை நீளவிடுவது உணவில் உப்பை சிறிது மிகுத்தது போன்றது. ஊடலை நீளவிடாதே” என்பதாம்.
‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் ஒட்டி அசையானதால் மறுபுணர்ச்சிபெறாது.
‘அது’ என்னும் சுட்டுப்பெயர் உப்பைக்குறிப்பதால் ‘புலவி’ என்பதுடன் புணராது. சுட்டுப்பெயர் தனித்துநின்று தனது சுட்டுப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.”
குறள் – ௲௩௱௩ (அச்சில் உள்ளவாறு).
“அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.”
அலந்தாரை = துன்பமுற்றாரை, நொந்தாரை.
அல்லனோய் = துன்பநோய்.
செய்து அற்று ஆல் = செய்தது போன்றது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
புலந்தாரை = ஊடியவரை.
புல்லாவிடல் = புணராதிருத்தல்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“நொந்தாரை மேலும் துன்பநோய்க்கு ஆட்படுத்துவது போன்றது தம்மை ஊடினாரை புணராதிருத்தல்” என்பதாம்.
‘அலந்தாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அல்லனோய்’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘செய்தற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் என்னும் உவமவுருபுடன் ஒட்டி அசையானதால் வருமொழியுடன் புணராது.
‘தம்மை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘புலந்தாரை’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘புல்லாரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘புல்லாவிடல்’ என்னும் எதிர்மறைத்தொழிற்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“அலந்தாரை அல்லனோய் செய்தற்றால் தம்மை
புலந்தாரை புல்லா விடல்.”
குறள் – ௲௩௱௪ (அச்சில் உள்ளவாறு).
“ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.”
ஊடியவரை = புலந்தவரை, பிணங்கியவரை.
வாடிய வள்ளி = நீரின்றி வாடிய கொடி.
முதல் = வேரினை.
அரிந்து அற்று = அறுத்தது போன்றது.
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிணங்கியவரது ஊடலைநீக்கி அன்புசெய்யாமை நீரின்றி வாடிய கொடியினது வேரினை அறுத்தது போன்றது” என்பதாம்.
‘ஊடியவரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘உணராமை’ என்னும் எதிர்மறைத்தொழிற்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.”
குறள் – ௲௩௱௫ (அச்சில் உள்ளவாறு).
“நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.”
நலத்தகை = நல்லியல்பு.
நல்லவர்க்கே = நல்லவர்க்கு (தலைமகனுக்கு). ஏகாரம் அசைநிலை.
ஏஎர் →ஏர் = அழகு, பெருமை.
புலத்தகை = புலத்தல், புலவி, ஊடல்.
பூவன்ன = மலரையொத்த.
கண்ணாரகத்து = கண்களை உடையாளிடத்து.
இது தலைமகனது கூற்று.
“நலத்தகைநல்லவர்க்கே ஏஎர் பூவன்ன கண்ணாரகத்து புலத்தகை” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நல்லியல்புகளைக்கொண்ட நல்லவர்க்கு (தலைமகனுக்கு) அழகாவது மலரையொத்த கண்களை உடையாளிடத்து நிகழும் ஊடல்” என்பதாம்.
‘நல்லவர்க்கு’ என்னும்
நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘ஏஎர் (அழகு)’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
செம்மைவடிவம் —
“நலந்தகை நல்லவர்க்கு* ஏஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱௬ (அச்சில் உள்ளவாறு).
“துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று.”
துனியும் = (பிரிவால் வரும்) துன்பமும்.
புலவியும் = ஊடலும், பிணங்கலும்.
இல்லாயின் = இல்லையென்றால்.
காமம் = காதல்.
கனியும் = மிகவும் பழுத்த பழமும்.
கருக்காயும் = இளங்காயும், இளம்பிஞ்சும்.
அற்று = ஒத்தன.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிரிவால் வரும் துன்பமும் ஊடலும் இல்லையென்றால் காதல் மிகவும் பழுத்த பழத்தையும் இளங்காயையும் போன்றது. பழுத்த பழம் மரத்தின் நீங்கும். பிரிவற்ற காமமும் அத்தன்மையது. இளங்காய் உண்ணும் சுவையற்றது. ஊடலற்ற காமமும் அத்தன்மையது. ஆகவே இரண்டும் வேண்டும்” என்பதாம்.
எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘புலவியும்’ என்பது புணராது தனித்துநிற்கும்.
‘இல்லாயின்’ என்பதன்கண் வந்த ‘ஆயின்’ என்னும் காரணப்பொருள்வினையெச்சம் ‘காமம்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘காமம்’ என்பது எழுவாயுமாகும் இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். எழுவாய் எதனுடனும் புணராது.
எண்ணும்மைகள் தம்முள் பொருண்மயங்காவண்ணம் புணரும்; பிறவற்றுடன் புணரா. இறுதியெண்ணும்மையான ‘கருக்காயும்’ என்பது புணராது தனித்துநிற்கும்.
செம்மைவடிவம் —
“துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியுங் கருக்காயும் அற்று.”
குறள் – ௲௩௱௭ (அச்சில் உள்ளவாறு).
“ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று.”
ஊடலின் = பிணங்கலின்.
உண்டு = உள்ளது.
ஆண்டு ஆங்கோர் → ஆண்டோர் = அங்கு ஒரு. ‘ஆங்கு’ என்பது உரையசைச்சொல்.
நீடுவது அன்று கொல் = புணர காலந்தாழ்வதோ. ‘கொல்’ என்பது ஐயயிடைச்சொல்.
“புணர்வது நீடுவது(கொல்) அன்றுகொலென்று ஆங்கோர் துன்பம் ஊடலின் உண்டு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘கொல்’ என்னும் ஐயயிடைச்சொல்லை ‘நீடுவது’ என்பதுடனும் கூட்டுக.
“புணர்ச்சிக்கு காலந்தாழ்த்துமோ நிகழாமல் போகுமோ எனக்கருதும் ஒரு துன்பம் இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின்கண்ணும் உள்ளது” என்பதாம். ‘கருதும்’ என்பது அவாய்நிலையான் வந்தது. ‘ஊடலின்கண்ணும்’ என்பதன்கண் ஏழாம் வேற்றுமையும், சிறப்பும்மையும் தொக்கு நின்றன.
‘ஆங்கு’ என்னும் உரையசைச்சொல் உண்டு என்னும் குறிப்புவினைமுற்றை ஒட்டி உரையசையானதால் மறுபுணர்ச்சிபெறாது.
‘கொல்’ என்னும் ஐயயிடைச்சொல் ‘அன்று’ என்னும் குறிப்புவினைமுற்றுடன் புணர்ந்து ஐயப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஊடலி னுண்டாங்கு*ஓர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௩௱௮ (அச்சில் உள்ளவாறு).
“நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
காதல ரில்லா வழி.”
நோதல் எவன் = வருந்தல் ஏன்.
மற்று = இனி நோவதில்லையென பொருள்பட வினைமாற்றின்கண் வந்தது.
நொந்தாரென்று = ஏன் வருந்தினாரென்று.
அஃது அறியும் = அதனை அறியும்.
காதலர் = அன்பர்.
இல்லா வழி = இல்லாதபொழுது.
“நொந்தாரென்று அஃது அறியும் காதலர் இல்வழி மற்று நோதல் எவன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. இனி நோவதில்லையென்னும் வினைமாற்றுப்பொருளில் ‘மற்று’ என்பது வந்தது.
“இவள் நம்பொருட்டு வருந்தினாரென்று அதனை உணரும் அன்பர் இல்லாதபொழுது வருந்துவது ஏன். பயனில்லை” என்பதாம்.
‘எவன்’ என்னும் வினாப்பெயர் வருமொழியாகி புணரின் வினாப்பொருட்செறிவு குன்றும். வினாப்பொருளை தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘நொந்தார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அறியும் காதலர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘காதலர்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நோதல் எவன்மற்று நொந்தாரென்று* அஃதறியும்
காதலர் இல்லா வழி.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱௯ (அச்சில் உள்ளவாறு).
“நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.”
நீரும் = குளிர்ந்த பருகுநீரும்.
நிழலது = நிழல்கீழ் உள்ள.
இனிதே = இனிமையானதே.
புலவியும் = ஊடலும்.
வீழுநர்கண்ணே = விரும்புநரிடத்தே. அன்புடையாரிடத்து .
இனிது = நன்மையானது.
“நிழலது நீரும் இனிதே புலவியும்
வீழுநர்கண்ணே இனிது” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நிழலின்கீழ் இருப்பதால் குளிர்ந்த நீர் தாகத்தைத்தீர்க்க இனியது. அதுபோல ஊடலை உணர்ந்து அதனைப்போக்கும் அன்புடையாரிடத்து ஊடுதல் இனியது” என்பதாம்.
‘நீரும்’ என்னும் தெரிநிலைவும்மைச்சொல் புணரின் தெரிநிலைவும்மையின் பொருட்செறிவு குன்றும். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.
‘நிழலது’ என்பதன்கண் ஏழாம்வேற்றுமைப்பொருளில் வந்த ‘அது’ என்னும் ஆறாம்வேற்றுமைவுருபு ‘நிழல்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘வீழுநர்கண்ணே’ என்பதன்கண் வந்த ‘கண்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு தேற்றேகாரம் பெற்றது. தேற்றேகாரம் புணரின் தேற்றேகாரவன்மை குன்றும். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நீரும் நிழலது* இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱௰ (அச்சில் உள்ளவாறு).
“ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவே மென்ப தவா.”
ஊடல் = புலத்தல், பிணங்கல்.
உணங்க = வாட, உலர.
கூடுவேம் = புணர்வேம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“ஊடலை நீக்காது வாட விடுவாரோடு புணர்வோமென்பது எனது நெஞ்சத்து அவா. மெய்யாய் நிகழாது” என்பதாம்.
‘விடுவாரோடு’ என்பதன்கண் வந்த ‘ஓடு’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘விடுவார்’ என்னும் வினையாலணையும்பெயரொடு புணர்ந்து அதன்பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘என்பது’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘கூடுவேம்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஊட லுணங்க விடுவாரோடு* என்னெஞ்சம்
கூடுவே மென்பது* அவா.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.
தொகுத்தெழுதியவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




