
குறள் – ௲௨௰௯௰௧ (அச்சில் உள்ளவாறு).
“அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே
நீயெமக் காகா தது.”
அவர்நெஞ்சு = கணவரது நெஞ்சு.
அவர்க்கு ஆதல் = கணவர்க்கு உடன்படுதல்/உதவுதல்.
கண்டும் = அறிந்தும்.
எவன் நெஞ்சே = ஏன் நெஞ்சமே/மனமே.
ஆகாதது = உடன்படாதது/உதவாதது.
இது தலைமகள்கூற்று.
“அவர்நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் நெஞ்சே நீ எமக்கு ஆகாதது எவன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவரது நெஞ்சு நம்மை நினைக்காமல் அவர்சொற்கு உடன்படுதலை அறிந்தும் எனது நெஞ்சமே நீ எமக்கு உடன்படாது அவரை நினைப்பதற்கு காரணம் யாது?” என்பதாம்.
‘அவர்நெஞ்சு’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘கண்டும்’ என்னும் வினையெச்சம் எவன் என்னும் வினாப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘எவன்’ என்னும் வினாச்சொல் புணராது தனித்துநின்று தனது வினாப்பொருளை உணர்த்தும்.
‘நீயெமக்கு’ என்பது வன்புணர்ச்சி. ‘நீ’ என்னும் முன்னிலைப்பெயரும் ‘எமக்கு’ என்னும் தன்மைப்பெயரும் விட்டிசைத்து தம்மை உணர்த்தும். விட்டிசைக்குமிடம் புணராது.
செம்மைவடிவம் —
“அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக் காகா தது.”
குறள் – ௲௨௰௯௰௨ (அச்சில் உள்ளவாறு).
“உறாஅ தவர்க்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.”
உறாஅதவர் → உறாதவர் = அன்பிலார்.
கண்டகண்ணும் = அறிந்தபோதும்.
செறாஅரென → செறாரென = சினவாரென.
சேறி = சேர்கிறாய்.
என் = ஏன்.
“உறாஅதவர்கண்டகண்ணும் செறாஅரென அவரைச்சேறி என் நெஞ்சு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நம்மேல் அன்பிலாரென அறிந்தபோதும் சினவாரென அவரைச்சேர்கிறாய் நெஞ்சே ஏன். இஃது அறியாமையன்றோ” என்பதாம்.
‘உறாஅதவரைக்கண்டகண்ணும்’ எனவிரியும் இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வருமொழி இயல்பாகும்; ஒற்று மிகாது. இடைவெளிநீக்கமும் ஒருசொன்னீர்மையும் தொகையாற்றலை உணர்த்தும்.
‘அவரை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘செறார் (செறாதவர்)’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.
‘செறாஅரென (செறாரென)’ என்பதன்கண் வந்த ‘என’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘செறார்’ என்னும் வினையாலணையும்பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘சேறி’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“உறாஅ தவர்கண்ட கண்ணும் அவரை
செறாஅரென சேறிஎன் னெஞ்சு.”
குறள் – ௲௨௰௯௰௩ (அச்சில் உள்ளவாறு).
“கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்.”
கெட்டார்க்கு = நாணத்தை இழந்தார்க்கு.
நட்டார் இல் = நட்பானவர் இல்லை.
பெட்டாங்கு = விரும்பியவாறு.
செலல் = செல்லல்.
“நீ பெட்டாங்கு அவர்பின் செலல் நெஞ்சே கெட்டார்க்கு நட்டார் இல்லென்பதோ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நெஞ்சே என்னுடன் இருக்காமல் நீ விரும்பியவாறு அவர்பின் செல்வது நாணத்தை இழந்தார்க்கு நட்பானவர் இல்லையென்பதாலோ” என்பதாம்.
‘நட்டாரில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்பது எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. இப்பொருண்மயங்குபுணர்ச்சியால் எதிர்மறைக்குறிப்புவினைமுற்று வேற்றுமைவுருபாகவும் மயங்கும்.
‘அவர்’ என்னும் சுட்டுப்பெயர் வருமொழியாகி புணராது தனித்துநின்று தனது சுட்டுப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“கெட்டார்க்கு நட்டார்இல் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு* அவர்பின் செலல்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௰௯௰௪ அச்சில் உள்ளவாறு).
“இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.”
இனி = இனிமேல்.
அன்ன = அத்தன்மையான.
சூழ்வார் = கலந்து பேசுவார்.
துனி = புலவி, ஊடல், பிணங்கல்.
துவ்வாய் = நுகராய்.
காண் = உரையசைச்சொல்.
மற்று = சூழேன் என்பதாக வினைமாற்றின்கண் வந்தது.
“துனிசெய்து துவ்வாய்காண் மற்று இனியன்ன நின்னொடு நெஞ்சே சூழ்வார் யார் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவரைக்கண்டபோது அவரது தவறுகளைச்சுட்டி அளவாக பிணங்கி பின் தழுவக்கருதாது கண்டதும் கலக்க விரும்புகிறாய். இத்தன்மையதான நெஞ்சே நின்னொடு இனிமேல் யார் கலந்து பேசுவார்; நான் பேசேன்” என்பதாம்.
‘இனியன்ன’ என்பது பொருளற்ற வன்புணர்ச்சி. ‘இனி’ என்பது வருங்காலத்தைத்குறிக்கும். ‘அன்ன’ என்பது ‘அத்தன்மையதான’ நெஞ்சென நெஞ்சினது இயல்பைக்குறிக்கும்.
செம்மைவடிவம் —
“இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.”
குறள் – ௲௨௰௯௰௫ (அச்சில் உள்ளவாறு).
“பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு.”
பெறாஅமையஞ்சும்→ பெறாமை = கணவரொடு புணரப்பெறாது துன்புறும்.
பெறின் பிரிவஞ்சும் = கணவரொடு புணரப்பெறின் பிரிவெண்ணி துன்புறும்.
அறாஅ இடும்பைத்து = நீங்காத்துன்பமுடையது.
என்னெஞ்சு = எனது நெஞ்சு.
“பெறாஅமையஞ்சும் பெறின் பிரிவஞ்சும் என்னெஞ்சு அறாஅ இடும்பைத்து” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“கணவர் உடனில்லாப்பொழுது அவர் உடனில்லாததற்கு துன்புறும். அவர் உடனுள்ளப்பொழுது அவரது பிரிவை எண்ணித்துன்புறும். இவ்வாறாக எனது நெஞ்சு நீங்காத துன்பமுடையது” என்பதாம்.
‘பெறின்’ என்னும் காரணப்பொருள்வினையெச்சம் புணராது தனித்துநின்று தனது காரணப்பொருளை உணர்த்தும்.
‘அஞ்சும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘இடும்பைத்து’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“பெறாஅமை யஞ்சும் பெறின்பிரி வஞ்சும்
அறாஅ விடும்பைத்து*என் னெஞ்சு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௰௯௰௬ (அச்சில் உள்ளவாறு).
“தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.”
தினிய = தின்ன, உண்ண.
நினைத்தக்கால் = பிரிவின் கொடுமையை நினைத்தபோது.
“தனியே இருந்து நினைத்தக்கால் (என்னொடு) இருந்த என்னெஞ்சு என்னைத்தினிய” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“யான் தனியே இருந்து கணவர் பிரிந்ததால் உற்ற துயரை நினைத்தபோது எனது நெஞ்சு என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தது” என்பதாம். (அவ்வளவிற்கு துன்பங்களாம்.)
‘தனியே’ என்னும் பிரிநிலையேகாரச்சொல் புணரின் ஏகாரப்பொருட்செறிவு குன்றும். பிரிநிலையேகாரம் எதனுடனும் புணராது.
‘நினைத்தக்கால்’ என்னும் வினையெச்சம் ‘என்’ என்னும் மறுபெயர்ச்சொல்லுடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘இருந்தது’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தினியவிருந்தது’ என்னும் புணர்ச்சியில் வந்த வகரவுடம்படுமெய் மயங்குபொருள்தரும்; ஒலியொப்புமை இல்லாதது. ‘தினியயிருந்தது’ என்றவாறு யகரவுடம்படுமெய்யிடுதல் சிறப்பு.
செம்மைவடிவம் —
“தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய யிருந்தது*என் னெஞ்சு.”
*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௰௯௰௭ (அச்சில் உள்ளவாறு).
“நாணு மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.”
நாணும் = நாணத்தையும்.
மறந்தேன் = இழந்தேன். மறக்கல்லா = மறக்கயியலா.
மாணா = மாண்பில்லா, மாட்சிமையில்லா.
மடநெஞ்சில் பட்டு = அறிவற்ற நெஞ்சுடன் சேர்ந்து.
“அவர்மறக்கல்லா என்மாணாமடநெஞ்சிறல் பட்டு நாணும் மறந்தேன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அவரை (கணவரை) மறக்கயியலாத
மாண்பில்லா அறிவற்ற நெஞ்சுடன் சேர்ந்து நாணத்தையும் இழந்தேன்” என்பதாம்.
‘நாணும்’ என்பது இறந்தது தழீஇய எச்சவும்மைச்சொல் புணரின் எச்சவும்மைப்பொருட்செறிவு குன்றும். எச்சவும்மை எதனுடனும் புணராது.
‘மறந்தேன்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘மறக்கல்லாவென்’ என்பது வேண்டா வன்புணர்ச்சி. இப்புணர்மொழியில் புணர்ந்த ‘என்’ என்னும் தன்மையொருமைப்பெயர் ‘மாணா மடநெஞ்சு’ என்னும் பெயருடன் கூடி ஆறாம்வேற்றுமைத்தொகையாகும். தழுவுஞ்சொற்களே புணரும்.
செம்மைவடிவம் —
“நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சில் பட்டு.”
குறள் – ௲௨௰௯௰௮ (அச்சில் உள்ளவாறு).
“எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
முள்ளு முயிர்க்காத னெஞ்சு.”
எள்ளின் = இகழின்.
இளிவாம் = இகழ்ச்சியாகும்.
எண்ணி = நினைத்து.
அவர்திறம் = அவரது மேன்மை.
உள்ளும் = நினைக்கும்.
உயிர்க்காதன்னெஞ்சு = உயிரின்மேல் பற்றுள்ள நெஞ்சு.
“எள்ளின் இளிவாமென்று எண்ணி உயிர்க்காதன்னெஞ்சு அவர்திறமுள்ளும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“நாம்மைப்பிரிந்தாரை இகழின் நமக்கு இளிவாகுமென நினைத்து உயிரின்மேல் பற்றுள்ள என்னெஞ்சு அவரது மேன்மையை நினைக்கும்” என்பதாம்.
‘எள்ளின்’ என்னும் காரணப்பொருள்வினையெச்சம் இளிவு என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘என்று’ என்னும் விளக்கயிடைச்சொல் ‘இளிவாகும்’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘எண்ணி’ என்னும் வினையெச்சம் ‘அவர்’ என்னும் சுட்டுப்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘உள்ளும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“எள்ளின் இளிவாமென்று* எண்ணி அவர்திற
முள்ளும் உயிர்க்காதன் னெஞ்சு.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௲௨௰௯௰௯ (அச்சில் உள்ளவாறு).
“துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.”
துணையாவார் = உதவுவார்.
தாமுடைய = தம்முடைய, தமது.
துணை அல்வழி = துணையாக அல்லாதபொழுது.
“தாமுடைய நெஞ்சம் துணையல்வழி துன்பத்திற்கு துணையாவார் யாரே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஒருவர்க்கு துன்பம் வந்தபோது அதனை நீக்குதற்கு அவரது நெஞ்சம் துணையாக அல்லாதபொழுது அத்துன்பத்திற்கு உதவுவார் யாரே. யாரும் இலர்” என்பதாம்.
‘துன்பத்திற்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் வினைசாராது இயல்புப்பொருள்தரும் ‘யார்’ என்னும் வினாப்பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘தாமுடையநெஞ்சம் (தம்முடைய நெஞ்சம்)’ என்பது எழுவாயாகும். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“துன்பத்திற்கு* யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௩௱ (அச்சில் உள்ளவாறு).
“தஞ்சந் தமரல்ல ரேதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி.”
தஞ்சம் = சொல்லவும் வேண்டுமோ.
எளிதில் அறிவது.
தமரல்லர் = உறவல்லர்.
ஏதிலார் = அயலார்.
தாமுடைய = தமது, தம்முடைய.
தமர் அல்வழி = உறவல்லாதபொழுது.
“தாமுடைய நெஞ்சம் தமர் அல்வழி ஏதிலார் தமரல்லர்தஞ்சம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தமது நெஞ்சு தமக்கு உறவல்லாதபொழுது அயலார் உறவாகாரென சொல்லவும் வேண்டுமோ” என்பதாம்.
‘சொல்லவும் வேண்டுமோ’ என்னும் பொருள்தரும் ‘தஞ்சம்’ என்னும் வினாப்பொருண்மைச்சொல் புணரின் வினாப்பொருட்செறிவு குன்றும். வினாப்பெயர் எதனுடனும் புணராது.
‘தமரல்லர்’ என்பதன்கண் வந்த ‘அல்லர்’ என்பது எதிர்மறைக்குறிப்புவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நெஞ்சம்’ என்பது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘தமரல்வழி (தமர் அவ்வழி)’ என்பது வேண்டாப்புணர்ச்சி. இப்புணர்ச்சியில் தொகுவது ஏதுமில்லை; புதுப்பொருள் தோன்றவுமில்லை.
செம்மைவடிவம் —
“தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமர்அல் வழி.”
தொகுத்தெழுதியவர்: முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்.




