
குறள் – ௲௱௧ (அச்சில் உள்ளவாறு).
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள.”
ஒண்டொடிகண்ணே = ஒளிரும் வளையல்களை அணிந்தவளிடத்தே.
உள = உள்ளது.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தொட்டும் துய்க்கப்பெறும் ஐந்து புலனின்பங்களும் ஒளிரும் வளையல்களை அணிந்த இப்பெண்ணிடத்தே உள்ளன” என்பதாம்.
வினையெச்சங்கள் தம்முள் புணருமாயினும் வேறுவேறு புலன்களுக்குரிய வினையெச்சங்கள் புணராது தனித்துநின்று தம்மை உணர்த்தும்.
‘உம்’ என்னும் எண்ணும்மை ‘உற்றறியும்’ என்னுஞ்சொல்லுடன் கூடியும் அதற்குமுன் நின்ற வினையெச்சங்களுடன் சென்று சேர்ந்தும் தம்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘ஐம்புலனும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
‘கண்ணே’ என்பது அறுதியிடும் தேற்றேகாரச்சொல். தேற்றேகாரம் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“கண்டுகேட்டு* உண்டு*உயிர்த்து* உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.”
*குற்றியலுகரங்களாகிய டுகரமும் துகரமும் அலகுபெறா.
குறள் – ௲௱௨ (அச்சில் உள்ளவாறு).
“பிணிக்கு மருந்து பிறம னணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து.”
பிறமன் = ஏனைய. மன் என்பது அசைச்சொல்.
அணியிழைதன் = அழகிய அணிகலன்களை அணிந்தவள்.
நோய் = துன்பம்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிணிக்கு மருந்தாவன அதற்கு மாறான இயல்புடைய பிற பொருள்கள். அழகிய அணிகலன்களை அணிந்த இவளால் உண்டான நோய்க்கு இவளே மருந்து” என்பதாம்.
‘மன்’ என்னும் அசைச்சொல் ‘பிற’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அணியிழைதன்னோய்க்கு’ என்பது ‘அணியிழையினால் உண்டான நோய்க்கு’ எனவிரியும். ‘
‘நோய்க்குத்தானே’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. இப்புணர்ச்சியில் ‘தானே’ என்பது இடைச்சொல்லாயும் உணரும். ‘தானே’ என்பது ‘தலைவியே’ எனவுணர்த்தும் மறுபெயர்ச்சொல். நான்காம்வேற்றுமைவுருபு மறுபெயர்ச்சொல்லுடன் புணராது.
செம்மைவடிவம் —
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து.”
குறள் – ௲௱௩ (அச்சில் உள்ளவாறு).
“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
றாமரைக் கண்ணா னுலகு.”
வீழ்வார் = விரும்புவார்.
மென்றோள் = மென்மையான தோள்.
துயில் = உறக்கம்.
இனிதுகொல் = இனிமையானதோ.
தாமரைக்கண்ணான் = தாமரைமலர் போலும் கண்களையுடைய திருமால்.
தாமரைக்கண்ணானுலகு = வைகுந்தம், பாற்கடல்.
“தாம் வீழ்வார்மென்றோட்டுயிலின் தாமரைக்கண்ணானுலகு இனிதுகொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தலைவன் விரும்பிதுயிலும் தலைவியின் மென்மையான தோளினும் தாமரைக்கண்ணானது உலகு இனிமையானதோ” என்பதாம்.
‘தாம்வீழ்வார்மென்றோட்டுயிலின்’ என்பது பல்லடைபெற்ற நெடுந்தொடரெழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
‘இனிதுகொல்’ என்னும் வினா புணராது தனித்துநின்று வினாப்பொருளை வெளிப்படுத்தும்.
செம்மைவடிவம் —
“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு.”
குறள் – ௲௱௪ (அச்சில் உள்ளவாறு).
“நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
தீயாண்டுப் பெற்றா ளிவள்.”
நீங்கின் = விலகின்.
தெறூஉம் → தெறூம்= சுடும். குறுகுங்கால் = அணுகும்போது.
தண் = குளிர்ச்சி, குளுமை.
யாண்டு = எங்கு.
“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீ இவள் யாண்டு பெற்றாள்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“விலகின் சுடுவதும் அணுகும்போது குளிர்வதுமான தீயை இவள் எங்கு பெற்றாள்” என்பதாம்.
‘நீங்கின்’ என்பதன்கண் வந்த ‘இன் என்னும் ஐந்தாம்வேற்றுமைவுருபு ‘நீங்கல்’ பொருளில் வந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தெறூஉம்’ என்னும் அளபெடுத்த பெயரெச்சத்தையடுத்து ஒருகருத்து முடிந்து மறுகருத்து தொடங்குகிறது. கருத்துமாறுமிடங்கள் விட்டிசைக்கும். விட்டிசைக்குமிடம் புணராது.
‘குறுகுங்கால்’ என்னும் வினையெச்சம் தண் என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘தண்’ என்ற பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘யாண்டு’ என்னும் வினாச்சொல் புணராது தனித்துநின்று வினாப்பொருளை உணர்த்தும்.
‘பெற்றாள் இவள்’ என்பது வினைமுற்று முன்பின் மாறிநின்ற வினைமுற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டு பெற்றாள் இவள்.”
குறள் – ௲௱௫ (அச்சில் உள்ளவாறு).
“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.”
வேட்டபொழுது = விரும்பியபோது.
தோட்டார் (தோடு+ஆர்) = பூவிதழின் சிறந்ந அழகும் மென்மையும்.
கதுப்பு = கன்னம்.
“தோட்டார்கதுப்பினாடோள் வேட்டபொழுதின் அவையவை போலுமே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“பூவிதழின் சிறந்த அழகும் மென்மையுமான கன்னங்களை உடைய தலைவியின் தோள் தலைவன் விரும்பும்போது விரும்பியவாறே இன்பத்தைத்தருகின்றது” என்பதாம்.
‘பொழுதின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பொழுது’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.”
குறள் – ௲௱௬ (அச்சில் உள்ளவாறு).
“உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தி னியன்றன தோள்.”
உறுதோறும் = நிகழும்போதெல்லாம்.
தளிர்ப்ப = செழிப்ப.
பேதைக்கு = பெண்ணுக்கு. இயன்றன = அமைந்தன.
“தீண்டல் உறுதோறும் உயிர் தளிர்ப்ப பேதைக்கு தோள் அமிழ்தின் இயன்றன” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“தீண்டல் நிகழும்போதெல்லாம் உயிர் செழிப்பதால் இப்பெண்ணின் தோள் அமிழ்தினால் அமைந்தன” என்பதாம்.
‘தோறும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது. எனினும் யாப்பின்பொருட்டு வழுவமைதியாக புணர்ந்தது.
‘தீண்டலால்’ என்னும் வினையெச்சம் பேதை என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘பேதைக்கு’ என்னும் நான்காம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘அமிழ்து’ என்னும் வினைசாராது இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல்லுடன் புணராது. நான்காம்வேற்றுமை வினைசார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.
‘அமிழ்தின்’ என்பதன்கண் வந்த ‘இன்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அமிழ்து’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு*
அமிழ்தின் இயன்றன தோள்.”
*குற்றியலுகரமாகிய குகரம் அலகுபெறாது.
குறள் – ௲௱௭ (அச்சில் உள்ளவாறு).
“தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
லம்மா வரிவை முயக்கு.”
தம்மில் ←(தம்+இல்) = தமது இல்லத்தில்.
பாத்து = பகிர்ந்து.
அற்றால் ←(அற்று+ஆல்) = அதுபோல. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
அம்மா = ஆஆ என்னும் வியப்பிடைச்சொல்.
அரிவை = பெண், தலைவி.
முயக்கு = கலவி, புணர்ச்சி.
“அம்மா அரிவைமுயக்கு தம்மில்லிருந்து தமது பாத்துண்டற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“ஆஆ தலைவியைப்புணர்வது தமது இல்லத்திலிருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளைப்பகிர்ந்து உண்பது போன்றது” என்பதாம்.
‘உண்டற்றால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘அம்மா’ என்னும் வியப்பிடைச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“தம்மில் லிருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.”
குறள் – ௲௱௮ (அச்சில் உள்ளவாறு).
“வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.”
வீழும் = விரும்பும்.
இனிதே = மகிழத்தக்கதே.
வளி = காற்று.
போழப்படாஅ → போழப்படா = நுழைந்து பிரிக்கமயியலாத.
முயக்கு = புணர்ச்சி, கலவி.
“வளி இடைபோழப்படாஅ முயக்கு வீழும் இருவர்க்கு இனிதே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“காற்று இடைநுழைந்து பிரிக்கமயியலாத கலவி விரும்பும் இருவர்க்கு மகிழத்தக்கதே” என்பதாம்.
‘வீழும் இருவர்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சத்தொடர். பெயரெச்சத்தொடரில் முடிக்குஞ்சொல்லான இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் புணராது தனித்துநிற்கும்.
‘வளி’ என்பது எழுவாய். எழுவாய் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“வீழும் இருவர்க் கினிதே வளிஇடை
போழப் படாஅ முயக்கு.”
குறள் – ௲௱௯ (அச்சில் உள்ளவாறு).
“ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.”
ஊடல் = பிணக்கு, பிரிவு.
உணர்தல் = ஊடலின் துன்பத்தை உணர்தல்.
புணர்தல் = ஊடலைக்கைவிட்டு கலத்தல், புணர்தல்.
காமங்கூடியார் = காதலால் இணைந்தார்.
இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
“பிணங்கி பிரிதலும் பிரிவின் துன்பத்தை உணர்தலும் பிரிவைக்கைவிட்டு கலத்தலும் காதலால் இணைந்தார் அடையும் பயன்கள்” என்பதாம்.
வேறுவேறு தன்மைகளையுடைய தொழில்கள் தம்முள் புணராது தனித்து நின்று தத்தம் பொருளை உணர்த்தும்.
‘இவை’ என்னும் சுட்டுப்பெயர் புணராது தனித்துநின்று சுட்டுப்பொருளை உணர்த்தும்.
செம்மைவடிவம் —
“ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமங்
கூடியார் பெற்ற பயன்.”
குறள் – ௲௱௰ (அச்சில் உள்ளவாறு).
“அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.”
அறிதோறு = கற்குந்தோறும்.
அறியாமை = அறியாதவை. கண்டற்றறால் = அறிவதைப்போன்றது. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.
காமஞ்செறிதோறும் = காதலால் புணருந்தோறும்.
சேயிழை = சிறந்த அணிகலன்களை அணிந்தவள்.
மாட்டு = இடத்து.
“சேயிழைமாட்டு காமஞ்செறிதோறும் அறிதோறறியாமை கண்டற்றால்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“சிறந்த அணிகலன்களை அணிந்த இவளிடத்து காதலால் புணர்வது கற்குந்தோறும் அறியாதவற்றை அறிவதைப்போன்றது“ என்பதாம்.
‘கண்டற்றறால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘அற்று’ என்னும் உவமவுருபுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘செறிதோறும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“அறிதோ றறியாமை கண்டற்றால் காமஞ்
செறிதோறும் சேயிழை மாட்டு.”
தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்கதமிழ்.



