“ஊழ்வினை” என்பதன் பொருள் என்ன ?
“ஊழ்வினை” என்பதன் பொருள் அறிவோம்..
ஊழ்வினையின் உட்பொருள் கேட்டால் அதற்கு உயிர்மெய்யியலீகம் அறிந்தோரால் மட்டுமே மறுமொழி கூறவியலும். ஒவ்வொருவர் எங்ஙனம் புரிந்துகொண்டுள்ளனரோ அங்ஙனம் அவையவை பொருள் கொடுக்கும் .
நான் உங்களுக்கு “ஊழ்வினை” என்றால் தமிழில் அதற்கு என்ன பொருள் அமைகிறது என்று அதாவது தமிழில் இச்சொற்களின் பயன்பாடானது எவ்வகையில் அறியப்படுகிறது என்று மட்டுமே கூற முடியும் .
நாம் “விதி” என்று ஒரு பிறமொழிச்சொல்லைப்பயன்படுத்துகின்றோம் . “விதி” என்ற சொல்லிற்கான தமிழ்ச்சொல்லே “ஊழ்” எனும் சொல். “விதி” என்பதற்கு ஊழ் மட்டுமன்றி நெறி , முறையை ,வழி , பொழுது , வழக்கு ,தடவை என்பனவும் பொருள்கொள்ளும் தமிழ்சொற்கள் என்பதையும் நினைவிற்கொள்க.
முற்றிய நிலையையும் அதாவது முதிர்வடைந்த நிலையையும்”ஊழ்” என்று சிற்சில கழக இலக்கியப்பாடல்கள் கூறுகின்றன.
எடுத்துக்காட்டாக இங்கொருபாடலைப்பொருளொடு காண்க.
மயில் அடி இலைய மா குரல் நொச்சி ,மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற்றினை 115/6
மயிலின் காலடி போலும் இலைகளை உடைய கரிய கொத்துக்களோடு கூடிய நொச்சியும்மனையில் நட்டு நொச்சியில் படரவிட்டிருக்கும் முல்லையும் முற்றிய அரும்புகள் மலர்ந்து மணம் கமழ என்பது அப்பாடலாகும்.
அதன்வழி “ஊழ்கம்” என்றும் ஒரு சொல்லுண்டு . “ஊழ்கம்“ என்றால் மூச்சுப்பயிற்சி செய்தல் என்று பொருள் .
அதேபோல் “வினை” என்று இவ்விடம் குறிப்பது நாம் செய்த , செய்கின்ற , செய்யப்போகின்ற செயலையே குறிக்கிறது .
“ஊழ்வினை” என்ற தமிழ்ச்சொல் உணர்த்தி நிற்கும் பொருளானது . நாம்மால் செய்யப்படும் செயலுக்கான பயனையே இந்த “ஊழ்வினை” என்ற சொல் பொருள்கொள்கிறது.
இதைப்பற்றி உயிர்மெய்யீகத்தின் கோட்பாட்டாளர்கள் பல்வகையில் கூறியிருப்பர் . நான் கூறியிருப்பது நாம் பயன்படுத்தும் விதிக்கான தமிழ்ச்சொற்களையே .
”ஊழ்வினை கெடுபயனைத்தவிர்த்திட நன்செய் என்றென்றும்”
நன்றி வாழ்க தமிழ் .



