
குறிப்பு:
‘ஊழ்’ என்பது வினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நெறி என்பதாம். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி, இயற்கை என்பன ஒரு பொருட்கிளவிகள்.
நல்வினையானும் துன்பமெய்துவானென்பது காரணவறிவுக்குப்பொருந்தவில்லை. எனவே ‘இருவினை’ என்பதனை நல்வினை, தீவினையென பகுப்பது நெருடலாகும். இருவினையென்பதை தன்வினை, பிறர்வினையெனப்பகுக்கலாம். மாந்தர் தனக்காகவும் பிறர்க்காகவும் வினைப்புரிகின்றனர். தன்வினையும் பிறர்வினையும் நன்மைதீமை கலந்ததே. இஃது எனது தனிப்பட்ட கருத்து.
மேலும் ‘ஊழ்’ என்பதனை ‘முற்பிறவிவினை’ என பிறவியொடு தொடர்புபடுத்த வேண்டா. பிறவியைக்குறித்துப்பேசும்போது ‘பிறவி’ என்றே தெளிவாக தெய்வப்புலவர் திருவள்ளுவனார் குறிப்பிடுகின்றார்.
குறள் – ௩௱௭௰௧ (அச்சில் உள்ளவாறு).
“ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி.”
ஊழ் = வினை.
ஆகூழ் (வினைத்தொகை) = ஆக்கும் வினை.
அசைவின்மை = முயற்சி.
கைப்பொருள் = முயற்சி.
போகூழ் (வினைத்தொகை) = போக்கும் வினை.
மடி = முயற்சியின்மை, சோம்பல்.
“அசைவின்மையால் ஆகூழ் தோன்றும் மடியினால் கைப்பொருள் போகூழ் தோன்றும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘கைப்பொருள்’ என்பது செல்வத்தை மட்டுமே குறிப்பதன்று. செல்வத்திற்கும் காரணமான முயற்சியைக்குறிக்கும். மானிடர் முயற்சியுடன் பிறக்கின்றனர்; கைப்பொருளுடன்று. “முயற்சியால் ஆக்கத்திற்குரிய வினைகள் தோன்றும். சோம்பலினால் கைப்பொருளாம் முயற்சியும் போகும்” என்பதாம்.
‘ஆகூழால்’, ‘போகூழால்’ என்பனவற்றில் வந்த ‘ஆல்’ என்னும் வேற்றுமைவுருபு ‘ஊழ்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தோன்றும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுப்பெயரெச்சம் அசைவின் மை, மடி என்னும் பெயர்களுடன் புணராது. பெயரெச்சம் பெயரை முடிக்கும் சொல்லாக கொள்ளும்; பெயருடன் புணராது.
செம்மைவடிவம் —
“ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.”
குறள் – ௩௱௭௰௨ (அச்சில் உள்ளவாறு).
“பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை.”
பேதை → பேதைமை = அறிவின்மை.
படுக்கும் = சேர்க்கும்.
இழவூழ் = இழக்கும் வினை.
அகற்றும் = பெருக்கும்.
ஆகலூழ் = ஆக்கும் வினை. உற்றக்கடை = அடைந்தபோது.
“பேதை இழவூழ் படுக்கும் அறிவுற்றக்கடை ஆகலூழ் அகற்றும் ” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“அறிவின்மை இழக்கும் வினையில் சேர்க்கும். அறிவினை அடைந்தபோது ஆக்கும் வினைகளைப்பெருக்கும்” என்பதாம்.
‘பேதை’ என்பது எழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘இழவூழறிவகற்றும்’ என்பது பொருள்மயங்குபுணர்ச்சி. ‘இழவூழ்’ என்பது ‘பேதை’ என்பதனைத்தழுவும். தழுவும் சொற்களே புணரும் பொருள்மயங்குபுணர்ச்சி நிகழா.
‘அகற்றும்’ என்னும் செய்யுமென்னும் வினமுற்று ‘ஆகூழ்’ என்னும் பெயருடன் புணராது. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘உற்றக்கடை’ என்பது ‘அறிவு’ என்பதனைத்தழுவும்; ‘ஆகூழ்’ என்பதனையன்று.
செம்மைவடிவம் —
“பேதை படுக்கும் இழவூழ் அறிவு*அகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.”
*முற்றியலுகரமாகிய வுகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௭௰௩ (அச்சில் உள்ளவாறு).
“நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும்.”
உண்மை = இயல்பு.
“நுட்பங்கள் நிறைந்த நூல்கள் பலவற்றைக்கற்றிருந்தாலும், கற்றபின்னும் ஒருவரது இயல்பறிவே மிகும்” என்பதாம். “கொள்ளும் கலத்தின் அளவிற்கே கொள்ளும். கொள்கலன் திரியின் கொள்ளப்படும் பொருளும் திரியும். கொள்கலத்தின் உண்மையே (இயல்பே) மிகும்” என்பதாம்.
‘கற்பினும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
‘பின்னும்’ என்னும் பொருளில் ‘மற்றும்’ என்பதன்கண் புணர்ந்த ‘உம்’ என்னும் இடைச்சொல் ‘மற்று’ என்பதன் பொருளை வேறுபடுத்தி தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘தன்’ என்னும் மறுபெயர்ச்சொல் வருமொழியாகி புணராது.
செம்மைவடிவம் —
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
னுண்மை யறிவே மிகும்.”
குறள் – ௩௱௭௰௪ (அச்சில் உள்ளவாறு).
“இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.”
வேறு = சிறப்பு
இயற்கை = இயல்பு.
திரு = செல்வம்.
“உலகத்து இயற்கை இருவேறு திரு வேறு தெள்ளியராதலும் வேறு” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
“உலகத்தின் இயல்பு இரண்டு சிறப்புகளைக்கொண்டது. செல்வமுடையராதல் ஒரு சிறப்பு. தெள்ளியராதலும் மற்றொரு சிறப்பு” என்பதாம்.
வேறு (சிறப்பு) இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல். இயல்புப்பொருள்தரும் பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“இருவேறு* உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.”
*குற்றியலுகரமாகிய றுகரம் அலகுபெறாது.
குறள் – ௩௱௭௫ (அச்சில் உள்ளவாறு).
“நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.”
எல்லாஅம் → எல்லாம்.
செயற்கு = ஈட்டுதற்கு.
“நல்லன எல்லாம் தீயவாகும். செல்வம் செயற்கு தீயவும் நல்லனவாம்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘எல்லாம்’ என்பது முற்றுப்பொருள்தரும் சொல். முற்றுப்பொருள்தரும் சொல் எதனுடனும் புணராது.
‘தீயவாம்’ (தீயவாகும்) என்பதன்கண் வந்த ‘ஆகும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘நல்லவாம்’ (நல்லவாகும்) என்பதன்கண் வந்த ‘ஆகும்’ என்பது செய்யுமென்னும் வாய்பாட்டுவினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.
‘தீயவும்’ என்பது இழிவுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது.
“செல்வத்தை ஈட்டுதற்கு அசைவின்மையால் தீயனவாகும் தீயனவும் நல்லனவாகும். செல்வத்தை ஈட்டுதற்கு மடியினால் நல்லவையெல்லாம் தீயனவாகும்” என்பதாம். அசைவின்மை (முயற்சி), மடி (சோம்பல்) ஆகிய சொல்லெச்சங்கள் அதிகாரமுறையான் தருவிக்கப்பட்டன.
செம்மைவடிவம் —
“நல்லவை யெல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வஞ் செயற்கு.”
குறள் – ௩௱௭௬ (அச்சில் உள்ளவாறு).
“பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம.”
பரியினும் = மிகுதியாக விரும்பினும்.
பால் = வினை (ஊழ்).
உய்த்து = விலக்கி.
சொரியினும் = நீக்கியும், கொட்டியும்.
“தம்வினையால் உண்டாகாத ஆக்கத்தை மிகுதியாக விரும்பினும் தமக்குரியன ஆகா. தம்வினையால் உண்டான ஆக்கத்தை விலக்கி நீக்கினும் தம்மைவிட்டு நீங்கா” என்பதாம்.
“பாலல்ல பரியினும் ஆகாவாம் (பாலுள்ள) உய்த்துச்சொரியினும் தம போகா” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
‘பரியினும்’ என்பது உயர்வுச்சிறப்பும்மைச்சொல். சிறப்பும்மை எதனுடனும் புணராது
‘பாலல்ல’ என்னும் சொல் ‘ஆகாவாம்’ என்னும் வினைமுற்றுக்குரியது. ‘பாலல்லவுய்த்து’ எனப்புணர்த்தினால் பொருள் எதிர்மறையாகும். பொருள்பொருந்தும் சொற்களே புணரும். தழுவாச்சொற்கள் புணரா.
செம்மைவடிவம் —
“பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.”
குறள் – ௩௱௭௭ (அச்சில் உள்ளவாறு).
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.”
வகுத்தான் = வினைபுரிபவன்.
வகுத்த வகை= ஒருவனது மெய்யியல்பு.
கோடிதொகுத்தார்க்கும் = ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்.
துய்த்தல் = நுகர்தல்.
அரிது = இயலாது.
‘வகையல்லால்’ என்பதில் வந்த ‘ஆல்’ என்னும் இடைச்சொல் ‘அல்’ என்னும் குறிப்புவினைமுற்றுப்பகுதியுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘கோடிதொகுத்தார்க்கும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மைச்சொல் எதனுடனும் புணராது.
“வினைபுரிவான் ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை (பலவற்றை) முயன்று தொகுத்தாலும் அவனது ஐம்பொறிகள் ஏற்குமளவிற்குமேல் நுகரமுடியாது” என்பதாம்.
செம்மைவடிவம் —
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லரிது.”
குறள் – ௩௱௭௮ (அச்சில் உள்ளவாறு).
“துறப்பார்மற் துப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்.”
துப்புரவு = நுகர்ச்சி.
துறப்பார் = துறவியர்.
மன் = அசைச்சொல்.
உறற்பால = நுகரவேண்டியவை.
ஊட்டா = நுகராது.
கழியும் = நீங்கும்.
‘துறப்பார்மன்’ என்பதில் வந்த ‘மன்’ என்னும் அசைச்சொல் ‘துறப்பார்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘இல்லார்’ என்னும் வினையாலணையும்பெயர் ’உறற்பால’ என்னும் வினையெச்சத்துடன் புணராது.
திரிபில்பெயர்ச்சொல் வினையெச்சத்துடன் புணராது.
“நுகரவேண்டியவை நுகராமல் நீங்குமெனின் நுகர்ச்சியில்லாதோர் துறவியர்” என்பதாம்.
“உறற்பால ஊட்டா கழியுமெனின் துப்புரவு இல்லார் துறப்பார்மன்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.
செம்மைவடிவம் —
“துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
வூட்டா கழியு மெனின்.”
குறள் – ௩௱௭௰௯ (அச்சில் உள்ளவாறு).
“நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்.”
அன்று = நன்றல்லாதன (தீயன).
அல்லல் = துயரம்.
எவன் = ஏன்.
“நன்று ஆகுங்கால் நல்லவாக்காண்பவர் அன்று ஆகுங்கால் அல்லற்படுவது எவன்” என்றவாறு சொற்பகுத்து ஆற்றொழுக்காக பொருள்கொள்க.
‘நன்றாங்கால்’ என்பதில் வந்த ‘கால்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நன்றாம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
‘நல்லவாக’ என்பதன் கடைக்குறைவிகாரம் ‘நல்லவா’ என்பதாம். ‘நல்லவாக’ என்னும் வினையெச்சம் காண்பவர் என்னும் வினையாலணையும்பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.
‘காண்பவர்’ என்பது தொடரெழுவாயாம் திரிபில்பெயர்ச்சொல். திரிபில்பெயர்ச்சொல் எதனுடனும் புணராது.
‘அன்றாங்கால்’ என்பதில் வந்த ‘கால்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘அன்றாம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.
செம்மைவடிவம் —
“நன்றாங்கால் நல்லவா காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.”
குறள் – ௩௱௮௰ (அச்சில் உள்ளவாறு).
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.”
ஊழ் = வினை.
மற்றொன்று = பிறிதொன்று.
சூழினும் = தடுத்தாலும்.
“வினையின் மிக்கவலிவுடையது எதுவுமில்லை. அவ்வினையை மற்றொன்று சூழ்ந்து தடுத்தாலும் அவ்வினையே முந்துறும்” என்பதாம். ‘வினையென்பது உயிரின் இயற்கையாதலால் வினையைத்தடுக்க இயலாது’ என்பதாம்.
‘சூழினும்’ என்பது எதிர்மறையும்மை. எதிர்மறையும்மை எதனுடனும் புணராது.
செம்மைவடிவம் —
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.”
அறத்துப்பால் முற்றியது.
தொகுத்தெழுதயவர் :முத்தையா சுப்பிரமணி.
நன்றி.
வாழ்க தமிழ்!




