இலக்கணம்தமிழ்

குறள்களின் பொருள்மயங்குபுணர்ச்சி.

பால் — பொருட்பால். இயல் — உறுப்பியல். தலைப்பு - ௯௰௩. கள்ளுண்ணாமை.

குறள் – ௯௱௨௰௧ (அச்சில் உள்ளவாறு).

“உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.”

உட்கு = மதிப்பு. உட்க = மதிக்க.
உட்கப்படாஅர் → உட்கப்படார் = மதிக்கப்படார்.
ஒளி = பெருமை, புகழ்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
கட்காதல் = கள்ளவா, கள்விரும்பல்.
ஒழுகுவார் = நடப்பார்.

“எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார் உட்கப்படாஅர் ஒளியிழப்பர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“எப்போதும் கள்ளினை விரும்பி உண்டு ஒழுகுவார் மதிக்கப்படார்; புகழை இழப்பர்” என்பதாம்.

‘உட்கப்படார்’, ‘ஒளியிழப்பர்’ என்பன வினைமுற்றுகள். வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.”

குறள் – ௯௱௨௰௨ (அச்சில் உள்ளவாறு).

“உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.”

உண்ணற்க = உண்ணாதே.
உணில் = உண்பதானால்.
எண்ணப்பட = கருதப்பட, மதிக்கப்பட.
வேண்டாதார் = விரும்பாதார்.

“உண்ணற்க கள்ளை. சான்றோரால்
எண்ணப்படவேண்டாதார் உணில் உண்க” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கள்ளை உண்ணற்க. சான்றோரால் மதிக்கப்படுதலை விரும்பாதார் கள்ளை உண்பதானால் உண்க” என்பதாம்.

‘உண்ணற்க கள்ளை’ முன்பின் மாறிநின்ற வினைமாற்றுத்தொடர். முற்றுத்தொடர். வினைமுற்று எதனுடனும் புணராது

‘சான்றோரால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் மூன்றாம்வேற்றுமைவுருபு ‘சான்றோர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்.”

 

குறள் – ௯௱௨௰௩ (அச்சில் உள்ளவாறு).

“ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.”

ஈன்றாள் = ஈன்ற தாய்.
முகத்தேயும் = முன்னேயும்
இன்னாதால் = துன்பமாம்.
என் = யாது.
மற்று = அவ்வாறாயின்.
களி = கள்ளுண்டு களித்தல்.

“ஈன்றாண்முகத்தேயும் களி இன்னாது. மற்று சான்றோர்முகத்து
என்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க. ‘ஆல்’ என்பது அசைச்சொல்.

“ஈன்ற தாயின் முன்னேயும் கள்ளுண்டு களித்தல் துன்பமாம். அவ்வாறிருக்க சான்றோர்முன் யாதாகும்” என்பதாம்.

‘முகத்தேயும்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

‘இன்னாதால்’ என்பதன்கண் வந்த ‘ஆல்’ என்னும் அசைச்சொல் ‘இன்னாது’ என்னும் வினைமுற்றுடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘என்’ என்னும் வினா வருமொழியாக புணர்ந்து தனது வினாப்பொருண்மையில் குன்றாது.

‘மற்றுச்சான்றோர்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி. ‘அவ்வாறாயின்’ என்னும் பொருள்தரும் ‘மற்று’ என்னும் இடைச்சொல் ‘சான்றோர்’ என்னும் பெயருடன் புணராது.

‘முகத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘சான்றோர்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“ஈன்றாண் முகத்தேயும் இன்னாதால் என்மற்று
சான்றோர் முகத்து களி.”

 

குறள் – ௯௱௨௰௪ (அச்சில் உள்ளவாறு).

“நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.”

நல்லாள் = உயர்ந்தவள்.
புறங்கொடுக்கும் = விலகும், நீங்கும்.
பேணா = பேணாது என்பதன் கடைக்குறை.

“கள்ளென்னும் பெருங்குற்றத்தார்க்கு நாணென்னும் நல்லாள் பேணா(து) புறங்கொடுக்கும்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கள்ளுண்ணும் பெருங்குற்றத்தினைப்புரிவாரை நாணமென்னும் உயர்ந்தவள் விரும்பாது விலகும்” என்பதாம்.

‘என்னும்’ என்ற விளக்கயிடைச்சொல் ‘நாண்’ என்னும் பெயருடன் புணர்ந்து அதன் முற்றுப்பொருளை இழக்கச்செய்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘கொடுக்கும்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘பேணாப்பெருங்குற்றத்தார்க்கு’ என்பது ‌பொருள்மயங்குபுணர்ச்சி. ‘பெருங்குற்றத்தை விரும்பாதார்’ என்னும் பொருள்தரும். அவ்வாறானால் நாணென்னும்நல்லாள் புறங்கொடாள். ‘பேணாது’ என்பதன் கடையெழுத்து குறைந்து ‘பேணா’ எனநின்று வேற்றிடஞ்சென்று கூடும்.

செம்மைவடிவம் —
“நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணா பெருங்குற்றத் தார்க்கு.”

குறள் – ௯௱௨௰௫ (அச்சில் உள்ளவாறு).

“கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.”

கையறியாமை = செய்வதறியாமை.
உடைத்தே = கொண்டதே.
பொருள் = கைப்பொருள்.
மெய்யறியாமை = (கள்ளுண்டு) உடம்பின் உணர்வறியாமை.

“பொருள்கொடுத்து
மெய்யறியாமைகொளல் கையறியாமையுடைத்தே” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கைப்பொருளைக்கொடுத்து உடம்பின் உணர்வறியாமையைக்கொள்ளுதல் (மயங்கிக்கிடத்தல்), செய்வதறியாமையை காரணமாக உடையது‌”
என்பதாம்.

குறளின் செம்மைவடிவம் இதுவே.

குறள் – ௯௱௨௰௬ (அச்சில் உள்ளவாறு).

“துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”

துஞ்சினார் = மயங்கினார்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கள்ளுண்டு மயங்கினார் செத்தாரின் வேறல்லர். எப்போதும் கள்ளுண்பவர் நஞ்சுண்பவர்” என்பதாம்.

‘வேறல்லர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.”

குறள் – ௯௱௨௰௭ (அச்சில் உள்ளவாறு).

“உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.”

உள்ளொற்றி = உள்நிகழ்ந்ததை உய்த்துணர்ந்து.
உள்ளூர் = உள்ளூராரால்.
நகப்படுவர் = எள்ளப்படுவர்.
எஞ்ஞான்றும் = எப்போதும்.
கள்ளொற்றி = கள்ளுடன் பொருந்தி, கள்ளுண்டு.
கண்சாய்பவர் = மயங்கி உறங்குவார்.

“கள்ளொற்றிக்கண்சாய்பவர் உள்ளொற்றி உள்ளூர் எஞ்ஞான்றும் நகப்படுவர்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கள்ளுண்டு மயங்கி உறங்குவாரின் உள்நிகழ்ந்ததை உய்த்துணர்ந்து உள்ளூரார் எப்போதும் எள்ளுவர்” என்பதாம்.

‘ஒற்றி’ என்னும் வினையெச்சம் ‘உள்ளூரார்’ என்ப்பொருள்படும் ‘உள்ளூர்’ என்னும் பெயருடன் புணராது. வினையெச்சம் பெயருடன் புணராது.

‘நகப்படுவர்’ என்பது வினைமுற்று. வினைமுற்று எதனுடனும் புணராது.

‘எஞ்ஞான்றும்’ என்பது முற்றும்மைச்சொல். முற்றும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.”

 

குறள் – ௯௱௨௰௮ (அச்சில் உள்ளவாறு).

“களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்‌”

களித்தறியேன் = கள்ளுண்டலை அறியேன்.
நெஞ்சத்து = உள்ளத்து.
ஒளித்ததூஉம் → ஒளித்ததும் = மறைத்ததும்.
மிகும் = வெளிப்படும்.

இக்குறளில் சீர்களமைந்த வரிசையில் ஆற்றொழுக்காக பொருள்கொள்க.

“கரவாக (மறைவாக) கள்ளுண்டு ‌கள்ளுண்ணாதபோது யாம் கள்ளுண்டலை அறியேனென தம்மொழுக்கங்கூறுதலைக்கைவிடுக. மறைத்தது பிறர் அறிய நேரின் என்னாகுமென்ற குற்றவுணர்வு அப்போது உள்ளத்து மிக்கு வெளிப்படும்” என்பதாம்.

‘நெஞ்சத்து’ என்பதன்கண் வந்த ‘அத்து’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘நெஞ்சம்’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘ஒளித்ததூஉம்’ என்பது தெரிநிலைவும்மைச்சொல். தெரிநிலைவும்மை எதனுடனும் புணராது.

செம்மைவடிவம் —
“களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்து*
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்‌”

*குற்றியலுகரமாகிய துகரம் அலகுபெறாது.

குறள் – ௯௱௨௰௯ (அச்சில் உள்ளவாறு).

“களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.”

களித்தானை = கள்ளுண்டவனுக்கு. காரணங்காட்டுதல் = கள்ளுண்ணாமையை அறிவுறுத்தல்.
கீழ்நீர் = நீரின் ஆழத்தில். ‘நீர்க்கீழ்’ என்பது முன்பின்னாக மாறிநின்றது.
குளித்தானை = மூழ்கியவனை. தீத்துரீஇ = தீக்கோல்கொண்டு தேடுதல், தீப்பந்தங்கொண்டு தேடுதல்.(விளக்கினால் நாடுதல் என்பார் பரிமேலழகனார்.)
அற்று = அது போன்றது, ஒக்கும்.

“கள்ளுண்டவனுக்கு கள்ளுண்ணாமையை அறிவுறுத்தல் நீராழத்தில் மூழ்கியவனை தீக்கோல்கொண்டு தேடுதலை ஒக்கும்” என்பதாம்.

‘களித்தானை’ என்பது ‘களித்தானுக்கு’ என்னும் பொருளில் வந்த வேற்றுமைமயக்கம். ‘களித்தானை’ என்னும் நான்காம்வேற்றுமைப்பொருளையேற்ற சொல் வினையைச்சாராது பொருள்தரும் ‘காரணம்’ என்னும் பெயருடன் புணராது. நான்காம்வேற்றுமை வினையைச்சார்ந்து பொருள்தரும் பெயருடன்மட்டுமே புணரும்.

‘குளித்தானை’ என்னும் இரண்டாம்வேற்றுமைவுருபேற்ற சொல் ‘தீ (தீக்கோல்)’ என்னும் பெயருடன் புணராது. இரண்டாம்வேற்றுமை வினையொடுமட்டுமே புணரும்.

செம்மைவடிவம் —
“களித்தானை காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானை தீத்துரீஇ யற்று.”

குறள் – ௯௱௩௰ (அச்சில் உள்ளவாறு).

“கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.”

போழ்தில் = பொழுதில்.
களித்தானை = கள்ளுண்டவனை.
உள்ளான்கொல் = நினையான்போலும்.
சோர்வு = குற்றம்.

“கள்ளுண்ணாப்போழ்தில் களித்தானைக்காணுங்கால் உண்டதன் சோர்வு உள்ளான்கொல்” என்றவாறு கொண்டுகூட்டி பொருள்கொள்க.

“கள்ளுண்ணாத பொழுதில் கள்ளுண்டு மயங்கிவனைக்காணும்போது தான் கள்ளுண்டதன் குற்றத்தை நினையான்போலும்” என்பதாம்.

‘போழ்தில்’ என்பதன்கண் வந்த ‘இல்’ என்னும் ஏழாம்வேற்றுமைவுருபு ‘பொழுது’ என்னும் பெயருடன் புணர்ந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

‘காணுங்கால்’ என்னும் வினையெச்சத்தையடுத்து விட்டிசை நிகழ்ந்து ‘நினையான்கொல்’ என்னும் வினைமுற்றின் பொருளை சிறப்பாக வெளிப்படுத்தும். விட்டிசைக்குமிடம் புணராது.

‘கொல்’ என்னும் இடைச்சொல் ‘நினையான்’ என்னும் வினையுடன் புணர்ந்து ஐயப்பொருளைத்தந்து தன்பணியை முடித்ததால் வருமொழியுடன் புணராது.

செம்மைவடிவம் —
“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.”

தொகுத்தெழுதியவர் : முத்தையா சுப்பிரமணி .
நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button